ஆப்கனில் 5 ஆண்டு தாலிபன் ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது?

பட மூலாதாரம், SAMIULLAH POPAL/EPA
- எழுதியவர், பிபிசி ஆப்கன் சேவை
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
எச்சரிக்கை: இந்தப் பகுதி சங்கடத்தை ஏற்படுத்தலாம்
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி சிலரிடம் பேசியது.
பிபிசியிடம் பேசிய பெண்களும் சிறுமிகளும் தங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 2021இல் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தது முதல், தாலிபன் நாட்டின் 2.2 கோடி பெண்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்து வருகிறது. முன்னதாக, இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியால் தாலிபன்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தனர்
தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து ஆப்கனில் தொடர்ந்து செய்திகளைச் சேகரிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள வெகு சில ஊடகங்களில் பிபிசியும் ஒன்று. தலைநகர் காபூல் முதல் தொலைதூர கிராமங்கள் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் நாங்கள் பேசினோம்.
12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதைத் தடை செய்தல், ஆண் துணையின்றி பெண்கள் பயணம் செய்வதற்குக் கட்டுப்பாடு விதித்தல், குழந்தைத் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பது போன்ற சட்டத்தைக் கொண்டு வருதல் ஆகியவற்றை ஆப்கன் பெண்கள் கண்டுள்ளனர்.
இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து பிபிசி ஆப்கன் சேவை, தாலிபன்களிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்களின் வெளியுறவுத் துறை அமைச்சர், "வாழ்வின் அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை" என்றார்.
இருப்பினும், இந்தக் கட்டுப்பாடுகள் பெண்களின் வாழ்வைக் கிட்டத்தட்ட, அதிலுள்ள ஒவ்வோர் அம்சத்தையும் பாதிக்கின்றன. மேலும் தங்கள் அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதையும் பெண்களுக்கு இவை கடினமாக்குகின்றன. தண்டனை அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்கு அஞ்சுவதால், பிபிசியிடம் பேசிய பல பெண்கள் தங்கள் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தவில்லை.
"மக்கள் வறுமை மற்றும் அன்றாட கஷ்டங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் தங்கள் கல்வி, கனவுகள், எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்," என்று காபூலைச் சேர்ந்த ஏலா கூறினார்.
அவரது கூற்றுப்படி, "இன்று, உயிர் வாழ்வதே முதன்மையானதாகிவிட்டது, ஆகையால் எதிர்காலத்தைச் சிந்திப்பதற்கான நேரமோ அல்லது ஆற்றலோ நம்மில் பலருக்கு இல்லை."

பட மூலாதாரம், Getty Images
'ஆகஸ்ட் 15 – மிக மோசமான நாள்'
தற்போது உலகில் பெண்கள் இடைநிலைக் கல்வி, உயர்கல்வி பயில அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான்.
"ஆகஸ்ட் 15, அதாவது ஆப்கன் அரசு வீழ்ந்த அந்த நாள், என் வாழ்வின் மிக மோசமான, மிகவும் வேதனைக்குரிய நாளாக மாறியது," என்கிறார் 18 வயதாகும், காபூலில் நகை செய்பவரான ஷகிபா.
"ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள் வரும்போது, ஒரு பழைய காயம் மீண்டும் கிளறப்படுவதைப் போலவும், தோல்வி உணர்வு என் இதயத்தை ஆக்கிரமிப்பது போலவும் உணர்கிறேன். பல ஆண்டுகளாக நான் என் மனதுக்குள் சுமந்து வந்த பல கனவுகள் அன்று திடீரென பறிபோய்விட்டதாக உணர்ந்தேன்."
ஷகிபாவால் தனது இடைநிலைக் கல்வியை இணைய வழியில் (online) முடிக்க முடிந்தது. இதை அவர் "மிக முக்கியமான வெற்றியாக" குறிப்பிடுகிறார். ஆனால், விமானியாக வேண்டுமென்ற தனது வாழ்நாள் கனவு இப்போது சாத்தியமற்றதாகிவிட்டதாகக் கூறுகிறார் அவர்.
"வானத்தைப் பார்க்கும் போதெல்லாம், நான் விமானத்தை ஓட்டுவதாகவும், மேலிருந்து உலகைப் பார்ப்பதாகவும் கற்பனை செய்து பார்ப்பேன். நான் சுதந்திரமாகப் பறக்கவும், எல்லைகளற்ற உலகை அனுபவிக்கவும் விரும்பினேன்," என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி குறித்து தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியிடம் பிபிசி கேள்வி எழுப்பியது. நாட்டில் சுமார் 26 லட்சம் சிறுமிகள் ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கும் யுனிசெஃப் (UNICEF) அறிக்கையைச் சுட்டிக்காட்டி இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
"பெண்களுக்கு அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல" என்று அமீர் கான் முத்தாகி பதிலளித்தார். "தற்போது முப்பது லட்சம் சிறுமிகள் பள்ளிகளுக்கும் மதரசாக்களுக்கும் [இஸ்லாமியக் கோட்பாடுகளை மையமாகக் கொண்ட மதக் கல்வி நிலையங்கள்] சென்று கொண்டிருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
நாட்டிற்குத் தேவையான மருத்துவர்களை மதப் பள்ளிகள் எப்படி உருவாக்க முடியும் எனக் கேட்டபோது, "வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை (அவர்களின் செயல்பாடுகளில்) ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது" என்று முத்தாகி கூறினார்.

'நாட்கள் வெறுமையாகச் செல்கின்றன'
ஐ.நா சபை தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் தற்போது 7% பெண்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பெண்கள் பல பணித்தளங்களில் பணியாற்றுவதற்கும், பல்வேறு பாடங்களைப் பயில்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாலிபன்கள் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, பம்யன் மாகாணத்தைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜுஹல் தனது வேலையை இழந்தார்.
"எனது வேலையின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதை நான் மிகுந்த விருப்பத்துடன் செய்தேன். கேமரா முன் அமர்ந்து செய்திகளை வாசிக்கும் போதெல்லாம் எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அது என் அடையாளம் மற்றும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. அலாரம் ஒலியில் எழுந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தயாராகும் நாட்களாக இருந்தவை, இப்போது நாள் முழுவதும் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்ற வெறுமையான எண்ணத்துடன் விழித்தெழும் நாட்களாக மாறிவிட்டன" 32 வயதாகும் முன்னாள் பத்திரிகையாளரான ஜுஹல்.
கடந்த, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் 30,000 பெண்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி தெரிவித்தார். தற்போது அந்த எண்ணிக்கை 1,20,000 பெண் தொழில்முனைவோராக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"[பெண்கள்] ஆசிரியர்களாகவும், அரசு ஊழியர்களாகவும், தொழில்முனைவோராகவும் உள்ளனர். அனைத்து வகையான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளிலும் பெண்களுக்கு முழுமையான தடை ஏதுமில்லை," என்று முத்தகி கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
தாலிபன்களின் சாட்டையடி
தாலிபன்கள் மீண்டும் பொதுவெளியில் உடல் ரீதியான தண்டனைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். 2021ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கானோர் சாட்டையடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன; ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
தான் 50 முறை சாட்டையால் அடிக்கப்பட்டதாக ஷைமா பிபிசியிடம் கூறினார். பாதுகாப்பு கருதி அவரது இடம் மற்றும் வயது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனை தன் உடலில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியதோடு, தன் குடும்பத்தினரை மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கியதாக அவர் தெரிவித்தார்.
"அவர்கள் ஒரு காகிதத்தைக் கொண்டு வந்து, 'ஆம், நான் மதத்தை விட்டு விலகிய பெண், நான் இறைநம்பிக்கை இல்லாதவர்களுடன் இணைந்து செயல்படுகிறேன், எனக்குத் தொடர்பில்லாத ஆண்களுடன் பேசியுள்ளேன்' என்று ஒப்புக்கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார்கள்.
"அவர்கள் என்னை மிகக் கடுமையாக அடித்ததால், என் தலை தரையை நோக்கிச் சாய்ந்தது. அங்கே ஆண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என சுமார் 200 பேர் கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஆண்களே. நான் என் தவற்றை உணர்ந்து வருந்துவதாக உரக்கச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது."
தனது மூத்த மகள் இப்போது கிட்டத்தட்ட தினமும் பயத்துடன் விழித்தெழுவதாகக் கூறிய ஷைமா, "அம்மா, அவர்கள் உங்களை அடிக்கிறார்கள்" அல்லது "அம்மா, அவர்கள் உங்களைக் கொல்கிறார்கள்" என்று கூறுவதாகத் தெரிவித்தார்.
அதுதான் தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
மற்றொரு பெண்ணான மனிஷா, ஆண் ஒருவருடன் நட்பு வைத்திருந்த காரணத்திற்காகப் பொதுவெளியில் 39 முறை சாட்டையடிக்கு ஆளாக்கப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
"நாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக கைது செய்யப்பட்டோம். தாலிபன் உளவுத் துறையினருக்கு இது எப்படித் தெரிந்தது அல்லது யாராவது எங்களைப் பற்றித் தகவல் கொடுத்திருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
"சிறையில் நான் அனுபவித்த விஷயங்களை என் தாயிடம்கூட நான் சொல்லவில்லை. எனக்குத் தொடர்ந்து வாழ வேண்டுமென்ற விருப்பமே இல்லாமல் போனது. சிறையிலிருந்து வெளியே வந்ததும் நான் செய்யும் முதல் காரியம் என் உயிரை மாய்த்துக் கொள்வதுதான் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவப்பெயரைத் தேடித் தரும் ஒருவளாகிவிட்டேன்... இனி என்னால் திருமணத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது."

பட மூலாதாரம், Getty Images
தாய்மார்களின் இறப்பு விகிதம்
உலகிலேயே அதிக அளவிலான தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெறுவதைத் தடுக்கும் விதிமுறைகளால், பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரால் தங்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சையைப் பெற முடிவதில்லை.
தொலைதூர பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு வந்த 45 வயதான, ஆறு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கண்முன்னே உயிரிழந்த சம்பவம் குறித்து மார்சியா என்ற மருத்துவச்சி பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.
"நாங்கள் குழந்தையைக் காப்பாற்றிவிட்டோம்; ஆனால் இப்போது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும், அந்தத் தாயின் மற்ற ஆறு குழந்தைகளின் எதிர்காலத்தையும் பற்றி நான் சிந்திக்கிறேன். தாயில்லாமல் அவர்களுக்கு என்ன நேரும்? அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் நிலை என்னவாகும்?"
"நாங்கள் அனைவரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானோம். ஒரு நோயாளியை இழப்பது என்பது எங்கள் பணியில் எப்போதும் மிகவும் கடினமான ஒரு விஷயம். அது எங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் சோர்வடையச் செய்கிறது."
எதிர்காலத்தில் சிறுமிகளுக்கு இந்தத் தடைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மார்சியா கவலை தெரிவித்தார்.
"நிலைமை இப்படியே தொடர்ந்தால், அந்தச் சிறுமியின் கதி என்னவாகும்? பல்கலைக் கழகத்திற்குச் செல்வது ஒருபுறம் இருக்கட்டும், நான் படித்தது போல பள்ளிக் கல்வியை முடிப்பதற்கான வாய்ப்புகூட அவளுக்குக் கிடைக்காது."
"ஒருவேளை அவள் திருமணம் செய்துகொண்டு கர்ப்பமானால், பிரசவத்தின்போது அவளுக்கு ஒரு பெண் மருத்துவர் தேவைப்படலாம்; அப்போது அங்கு பெண் மருத்துவர் யாரும் இல்லையென்றால் என்ன செய்வது? இது உயிர் தொடர்பான ஒரு முக்கியமான விஷயம்."

'சர்வதேச கவனத்தை உறுதி செய்யுங்கள்'
பிபிசியிடம் பேசிய சில ஆப்கானிய பெண்கள், சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை இன்னும் தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்தனர்.
பெண்களுக்காகக் குரல் கொடுக்கவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விரும்பியதாலேயே சட்டம் மற்றும் அரசியல் அறிவியலைப் படிக்கத் தேர்வு செய்ததாக 24 வயதான நூரி கூறினார். தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அவரால் தனது பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை என்றாலும், பெண்களுக்கு ஆதரவளிக்க அவர் மற்றொரு வழியைக் கண்டறிந்துள்ளார்.
"நான் நம்பிக்கையை இழக்கவில்லை. வேலை செய்து பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருக்க முடிவு செய்தேன். ஜாம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது, அங்கு பணியாற்றத் தொடங்கினேன். இப்போது மூன்று ஆண்டுகளாக நான் அங்கு பணிபுரிந்து வருகிறேன்.
"இப்போது, மற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் எனது சொந்த நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன். என்னைப் போலவே அவர்களும் சுதந்திரமான, வலிமையான மற்றும் வெற்றிகரமான பெண்களாகத் திகழ்ந்து, சிறந்த எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தற்போது, அங்கு 10 துணிச்சலான பெண்கள் பணிபுரிகின்றனர்."
அஸ்மா என்ற 13 வயது சிறுமி மருத்துவராக வேண்டுமெனக் கனவு காண்கிறார். அதை ஒரு நாள் நிச்சயம் தன்னால் அடைய முடியுமென்றும் அவர் நம்புகிறார்.
"ஒரு நாள் எல்லாம் மாறும்... ஆனால் அதற்கு நாம் பொறுமையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும், நம்பிக்கையை இழக்கக்கூடாது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
பல் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றும் ஏலா, ஆப்கானிய பெண்கள் மற்றும் சிறுமிகளை மறந்துவிட வேண்டாம் என்று சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.
"ஆப்கானிய பெண்களுக்காகக் குரல் கொடுங்கள், கல்வி மற்றும் வேலைக்கான அவர்களின் உரிமையை ஆதரியுங்கள்," என்று அவர் கூறினார்.
"அவர்களுடைய நிலைமையின் மீது உலகின் கவனம் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யுங்கள். எங்களுக்குத் தேவை ஒற்றுமைதான், மௌனம் அல்ல."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































