You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆட்சி மாற்றம் வருமா? கேரளா, மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம் - நேரலை
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
கேரளாவைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்) 89 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 48 இடங்களிலும், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்கத்தைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
அசாமைப் பொருத்தவரையில் காலை 10:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 92 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் ஃபல்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
நட்சத்திர வேட்பாளர் தொகுதிகளின் நிலை என்ன?
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மடம் தொகுதியில் மூன்றாம் சுற்று முடிவில் 15,570 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் அப்துல் ரஷித் 17,647 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி போட்டியிட்ட பபானிபூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்று முடிவில் அவர் 3,666 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் 1,670 வாக்குகள் பெற்றுள்ளார்.
அசாம் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வ சர்மா அவர் போட்டியிட்ட ஜலுக்பாரி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்று முடிவில் அவர் 5,989 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் காங்கிரஸின் பிடிஷா நியோக் 1,010 வாக்குகள் பெற்றுள்ளார்.
அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் போட்டியிட்ட ஜோர்ஹாட் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். மூன்றாம் சுற்று முடிவில் அவர் 9,875 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஹிதேந்திர நாத் கோஸ்வாமி 14,007 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் முரளிதரன் போட்டியிட்ட கேரள மாநிலத்தின் கழக்கூட்டம் தொகுதியில் சிபிஎம் முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் சுற்று முடிவில் சிபிஎம் வேட்பாளர் கடகம்பள்ளி சுரேந்திரன் 5,792 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். முரளிதரன் 4907 வாக்குகளும் காங்கிரஸின் சரத் சந்திர பிரசாத் 4,899 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாஜக கேரள மாநிலத் தலைவர் ராஜிவ் சந்திரசேகர் அவர் போட்டியிட்ட நெமோம் தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் 6,604 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். சிபிஎம் கட்சியைச் சேர்ந்த சிவன்குட்டி 5,397 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் வகித்து வருகிறார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் அவர் போட்டியிட்ட பரவூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். மூன்றாம் சுற்று முடிவில் 13,917 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் சிபிஎம் கட்சியின் டெய்சன் மாஸ்டர் 12,922 வாக்குகள் பெற்றுள்ளார்.
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் போட்டியிட்ட பெராவூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். இரண்டாம் சுற்று முடிவில் சிபிஎம் கட்சியின் ஷைலஜா டீச்சர் 10,689 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். சன்னி ஜோசப் 10,236 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
கேரளா மற்றும் அசாமில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
கேரளா:
140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமான ஏப்ரல் 9-ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஒட்டுமொத்தமாக 79.7% வாக்குகள் பதிவாகியிருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வரும் முனைப்பில் உள்ளது.
இவர்களுக்கு இடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் அதனை தக்கவைத்து பெருக்கும் எண்ணத்தில் பாஜக உள்ளது.
முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கேரள மாநில காங்கிரஸ் தலைவரான சன்னி ஜோசப் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பெராவூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் நேமம் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சரான முரளிதரன் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கம்:
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஃபால்டா தொகுதியில் மட்டும் மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, முதற்கட்ட வாக்குப்பதிவில் 93.19 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 91.66 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மொத்தமாக, 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 92.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் வென்றிருந்த பாஜக கடந்த முறை (2021-இல்) எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
நீண்ட கால ஆட்சிக்கு பெயர் போன மேற்கு வங்கத்தில் நான்காவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. அதே வேளையில் முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாக உள்ளது.
முதலமைச்சர் மமதா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பபானிபூரிலும் நந்திகிராமிலும் போட்டியிடுகிறார். மேற்கு வங்க காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி பஹராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அசாம்:
126 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 85.38% வாக்குகள் பதிவாகியிருந்தன.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக இங்கு ஆட்சியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையே பிரதான போட்டி நிலவுகிறது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜக உள்ள நிலையில் வட கிழக்குப் பகுதியின் முக்கிய மாநிலமான அசாமில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் காங்கிரஸ் உள்ளது.
முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வ சர்மா ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுகிறார். அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகாய் ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு