வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறுவாரா? இந்திய டி20 அணி இன்று அறிவிப்பு

பட மூலாதாரம், ANI
மோசமான ஆட்டத்திறன் காரணமாக சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ முகமை கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்குப் பிறகு, சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன. தேர்வுக்குழுவினரின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றிய கணிப்புகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டி20 தொடருக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதற்காகத் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இன்று அறிவிக்கிறது.
அப்போது, சூர்யகுமார் யாதவின் டி20 கேப்டன்சியைத் தொடர வேண்டுமா அல்லது அணியின் பொறுப்பை வேறு ஏதேனும் வீரரிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பதுதான் தேர்வுக்குழு முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாக இருக்கும்.
இந்திய அணி இன்னும் சில நாட்களில் அயர்லாந்தில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது, அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
கடந்த சில மாதங்களாக சூர்யகுமாரின் பேட்டிங் அவர் வழக்கமாக அறியப்படும் அளவிற்கு சிறப்பாக இல்லை. அவர் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக மற்றொரு திறமையான கிரிக்கெட் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
சூர்ய குமாரை அணியில் தக்கவைக்க வேண்டுமா வேண்டாமா?

பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார் யாதவிடமே தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமா அல்லது அவருக்குப் பதிலாக வேறு ஏதேனும் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்பதுதான் தேர்வுக்குழுவினரின் முன் உள்ள மிக முக்கியமான கேள்வியாக இருக்கலாம்.
சூர்ய குமார் யாதவின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில், அவர் 13 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 20.76 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 147.54 ஆகவும் இருந்தது.
ஐபிஎல்-இன் நட்சத்திர வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் சூர்யகுமாரின் இந்த புள்ளிவிவரம் அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது வெளிப்படுத்துகிறது.
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடந்த டி20 உலகக் கோப்பையிலும் சூர்யகுமார் பேட்டிங்கில் தடுமாறினார்.
அவர் ஒன்பது இன்னிங்ஸ்களில் 242 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 136.72 ஆகக் குறைந்தது.
உலகக் கோப்பையில் அவரது சிறந்த ஆட்டம் அவரது சொந்த மண்ணில் வெளிப்பட்டது, ஆனால் அதுவும் அமெரிக்கா போன்ற பலவீனமாகக் கருதப்படும் ஒரு அணிக்கு எதிராகத்தான் அமைந்தது. மும்பையில் நடந்த அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்தார், இதற்காக அவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விளையாட்டுப் பத்திரிகையாளர் போரியா மஜும்தார் கூறுகையில், "விளையாட்டின் இறுதி அளவுகோல் என்பது சிறப்பான ஆட்டத்திறன் தான். துரதிர்ஷ்டவசமாக, சூர்யகுமார் ரன் குவிப்பதை நிறுத்திவிட்டார். அவர் 2022 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் முன்னணி டி20 பேட்ஸ்மேனாக இருந்தார். அதற்குப் பிறகு, சில நல்ல இன்னிங்ஸ்களைத் தவிர, அவரது கணக்கில் பெரிய அளவில் எதுவும் இல்லை."
"அவருக்கு ஒரு நல்ல ஐபிஎல் சீசன் அமைந்திருந்தால், தேர்வுக்குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியிருக்க வாய்ப்புள்ளது"என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூர்யகுமாருக்கு இந்த செப்டம்பரில் 36 வயது நிறைவடையும்.
சுவாரஸ்யமாக, வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஜனவரி மாதம் அனுப்பிய, விளையாட வாய்ப்புள்ள 30 வீரர்கள் கொண்ட பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
அடுத்த உலகளாவிய டி20 தொடர் 2028 ஒலிம்பிக் போட்டியாக இருக்கும், அதில் விளையாடத் தனக்கு விருப்பம் இருப்பதாக சூர்யகுமார் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்வுக்குழுவினர் எதிர்காலத் தொடர்களைக் கருத்தில் கொண்டு ஒரு இளம் வீரரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க நினைப்பார்களா?
கேப்டன் பதவியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, சூர்யகுமாரை அணியில் ஒரு வீரராக மட்டும் தொடர தேர்வுக் குழுவினர் இடம் தருவார்களா?
சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்குமா?

பட மூலாதாரம், ANI
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தனது முதல் முழு ஐபிஎல் சீசனிலேயே பந்துவீச்சாளர்களின் தாக்குதல்களைத் திறமையாக எதிர்கொண்டுள்ளதுடன், போட்டியின் சூழ்நிலைகளையும் முதிர்ச்சியுடன் கையாண்டுள்ளார்.
இதன் காரணமாக, அவருக்கு டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல பிசிசிஐ அதிகாரிகளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவர் பிளேயிங் லெவனில் எவ்வாறு இடம் பிடிப்பார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது
கடந்த மார்ச் மாதம் டி20 உலகக் கோப்பை பட்டத்தை இந்தியா வென்ற போது, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட்டனர்.
சூர்யவன்ஷியும் ஒரு தொடக்க ஆட்டக்காரராக உள்ளார். ஒரு தொடக்க வீரராக அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகப் பல சிறந்த மற்றும் கவனிக்கத்தக்க இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், தேர்வுக்குழுவினர் மற்றொரு சூத்திரத்தை கடைபிடிக்கக்கூடும் என்றும், சுழற்சி முறையில் தொடக்க ஆட்டக்காரர்களை பின்பற்றுவது இதற்கான சாத்தியமான தீர்வாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது சூர்யவன்ஷிக்குத் தனது திறமையை வெளிப்படுத்தவும், சர்வதேச அரங்கில் தன்னை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும்.
ஹர்திக் பாண்டியாவின் நிலை என்ன?

பட மூலாதாரம், ANI
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் தொடர் எதிர்பார்த்தபடி சிறப்பானதாக அமையவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பி, அதன் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து, ஒரு கேப்டனாகவோ அல்லது ஒரு ஆல்-ரவுண்டராகவோ தனக்கே உரிய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை.
ஐசிசி தொடர்களில் இந்தியாவின் முக்கிய வீரர்களில் ஒருவராக அவர் தொடர்ந்து நீடித்தாலும், அவரது உடற்தகுதி தொடர்ச்சியாக கவலைக்குரியதாகவே இருந்து வருகிறது.
காயங்கள் மற்றும் சிறிய அளவிலான உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவர் இதற்கு முன்பும் பலமுறை அணியில் இடம் பெறாமல் வெளியே இருக்க வேண்டியிருந்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான அணியில் தேர்வாளர்கள் அவரைச் சேர்த்துள்ளனர்.
இத்தொடரின் போது, சர்வதேச போட்டிகளில் விளையாட ஹர்திக் உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பதை அவர்கள் பார்க்க விரும்புவார்கள்.
தேவைப்பட்டால் அவரால் முழுமையாக 10 ஓவர்கள் பந்துவீச முடிகிறதா என்பதைப் பார்ப்பது குறிப்பாக மிக முக்கியமானதாக இருக்கும்.
ஸ்ரேயாஸ், பட்டிதாருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

பட மூலாதாரம், ANI
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் சிறந்த கேப்டன்களாக இருந்துள்ளனர்.
தனது அணியை அடுத்தடுத்து இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லச் செய்த கேப்டன்கள் வரிசையில் பட்டிதாரும் இணைந்துள்ளார்.
அதே நேரத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் 2025-இல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகு அதனை மிகச்சிறப்பாக வழிநடத்தி அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இந்த முறை அவரது அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் முன்னேறவில்லை.
இந்த சீசனிலும், ஸ்ரேயாஸ் தனது தலைமைப் பண்பு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இதற்கு முன்பாக, அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். 2024 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியன் பட்டத்தை நோக்கியும் வழிநடத்தினார்.
பட்டிதாரின் சூழ்நிலையும் இதே போன்றது தான்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது ஐபிஎல் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார்.
ஆனால் ஸ்ரேயாஸ் மற்றும் பட்டிதார் ஆகிய இருவருமே மிடில் ஆர்டரில் கிட்டத்தட்ட ஒரே இடத்திற்குப் போட்டியிடுவதால், இவர்களுக்கு இடையிலான போட்டி மிகக் கடுமையானதாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































