ராஜஸ்தானுக்கு எதிரான டெல்லி வெற்றி சிஎஸ்கே உள்ளிட்ட 6 அணிகளுக்கு ஒரு வகையில் சாதகம் - எப்படி?

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று (மே 1) நடந்த ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ். முதலில் விளையாடிய ராயல்ஸ் 225 ரன்கள் எடுக்க, அதை 19.1 ஓவர்களில் சேஸ் செய்தது அக்‌ஷர் பட்டேலின் அணி. ஐபிஎல் வரலாற்றில் கேபிட்டல்ஸ் செய்த மிகப் பெரிய சேஸ் இதுதான்.

இந்த ஐபிஎல் சீசனில் முதல் முறையாக அந்த அணிக்கு விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். முதல் ஓவரிலேயே யஷஷ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி தன் அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார் அவர். அதேபோல், பேட்டிங்கிலும் அந்த அணிக்கு நிசன்கா மற்றும் கே.எல்.ராகுல் நல்ல தொடக்கம் கொடுத்தார்கள். அவர்கள் இருவருமே அரைசதம் அடித்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. புள்ளிப் பட்டியலைப் பொறுத்தவரை இந்த வெற்றி அவர்களுக்கு மட்டுமல்ல, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 6 அணிகளுக்கும் ஒருவகையில் சாதகமான முடிவாக அமைந்திருக்கிறது.

16 என்னும் மாய எண்

இதுவரை முடிந்திருக்கும் 18 ஐபிஎல் சீசன்களில் ஐந்தில் 10 அணிகள் பங்கேற்றிருக்கின்றன - 2011, 2022, 2023, 2024 & 2025. இந்த சீசன்களில் ஒவ்வொரு அணியுமே 14 லீக் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அதில் குறைந்தபட்சம் 16 புள்ளிகள் பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறியிருக்கின்றன.

இந்த சீசன்களில் குறைந்தபட்சம் 16 புள்ளிகள் பெற்ற எல்லா அணிகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன என்பது ஒருபக்கமெனில், அதற்குக் குறைவாக புள்ளிகள் பெற்ற அணிகள் பெரும்பாலும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கின்றன என்பது இன்னொரு விஷயம். 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகள் பெற்றிருந்தும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 10 அணிகள் ஆடிய சீசன்களில், 16க்கும் குறைவான புள்ளிகள் பெற்ற ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது இந்த ஒரு தருணத்தில் மட்டும்தான்.

16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இதுவரை அதை எட்டிய அணிகள் அனைத்துமே டாப் 4 இடங்களுக்குள் முடித்திருக்கின்றன. இந்தக் காரணத்தால், லீக் சுற்றில் ஒவ்வொரு அணியின் முதல் இலக்குமே அந்த 16 என்ற மாய எண்ணை அடைவதில் தான் இருக்கும்.

இந்த சீசனில் அந்த இலக்கை நோக்கி ஒருசில அணிகள் படுவேகமாக முன்னேறத் தொடங்கிவிட்டன. பஞ்சாப் கிங்ஸ் 8 போட்டிகளிலேயே 13 புள்ளிகள் பெற்றுவிட்டது. ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரு அணிகளுமே 9 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுமே அதே நிலையில் தான் இருந்தது. இந்த அணிகளுக்கு இதற்கு மேல் தேவைப்படுவது என்னவோ 2 வெற்றிகள் தான்.

முக்கிய கட்டத்தில் டெல்லியின் வெற்றி

அந்த 2024 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆதிக்கம் செலுத்தின. இந்த அணிகளுக்கும் மற்ற அணிகளுக்குமான செயல்பாட்டில் பெரும் வித்தியாசம் இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஆர்சிபி, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் (அனைத்து அணிகளும் 14 புள்ளிகள்) ஆகிய அணிகள் சரிசமமாக புள்ளிகள் எடுத்திருந்தன. அதனால் தான் நிகர ரன் ரேட் அடிப்படையில் 14 புள்ளிகள் பெற்றும் ஆர்சிபி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஆனால், இம்முறை சூழ்நிலை வேறு மாதிரியாக இருந்தது. நேற்று நடந்த போட்டியில் ராயல்ஸ் வென்றிருந்தால் 10 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்றிருக்கும். அதன்பிறகு அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒரு வெற்றியே ஏறத்தாழ போதுமானதாக இருந்திருக்கும். ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு தலா 5 போட்டிகளில் 2 வெற்றிகளும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 6 போட்டிகளில் 2 வெற்றிகளுமே தேவை என்ற நிலை ஏற்பட்டிருக்கும். அது இந்த 4 அணிகளுக்குமே சாதகமான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். இது மற்ற அனைத்து அணிகளுக்குமே பாதகமானதாக அமைந்திருக்கும்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்கும் டாப் 4 இடங்களில் இருந்த அணிகளுக்கும் குறைந்தபட்சம் 6 புள்ளிகளாவது வித்தியாசம் இருக்கின்றன. இந்த வெற்றிக்கு முன் 8 புள்ளிகள் பெற்றிருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியோ ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்திருந்தது. இப்படியாக 5 அணிகள் வெகுவாகப் பின்தங்கியிருந்த காரணத்தால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. விரைவில் அது முடிவாகிவிட்டால், கடைசி கட்டத்தில் பல லீக் போட்டிகள் எதிர்பார்ப்பு இல்லாத சம்பிரதாய போட்டிகளாக மாறிவிடக் கூடும் என்ற நிலையும் இருந்தது.

பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் மிகச் சிறந்த ஃபார்மில் வேறு இருக்கின்றன. இந்த சீசனில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்திய விதத்தில் இந்த அணிகளுக்கும் மற்ற அணிகளுக்குமான இடைவெளி அதிகமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இப்போது டெல்லி பெற்றிருக்கும் வெற்றி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வாய்ப்பை கொஞ்சம் கடினமாக்கியிருக்கிறது. இனி அந்த அணி 16 புள்ளிகள் என்ற இலக்கை எட்ட 4 போட்டிகளில் 2 வெற்றிகள் தேவைப்படும். அதாவது 50 - 50 வாய்ப்பு. அந்த 4 அணிகளுள் ஒன்றின் பிளேஆஃப் வாய்ப்பு டெல்லி வெற்றியால் கடினமாகியிருக்கிறது. இது மற்ற அணிகளுக்கான வாய்ப்பை தற்போது அதிகப்படுத்தியிருக்கிறது. உதாரணமாக, குஜராத் டைட்டன்ஸ் தங்களின் அடுத்த போட்டியை வென்றுவிட்டால், ராயல்ஸ் போலவே 10 போட்டிகளில் 12 புள்ளிகளுக்கு வந்துவிடும்.

டாப் 4 இடங்களில் ஓரிடத்துக்கான போட்டியை கடினப்படுத்தினாலும், அது பல்வேறு அணிகளின் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதனால், மொத்த லீக் சுற்றுமே சூடுபிடிக்கும். டெல்லி அணியின் இந்த வெற்றி தற்போது செய்திருப்பது அதைத்தான். இதன்மூலம் தங்களுடைய பிளே ஆஃப் கனவை மட்டுமல்லாது, மற்ற 5 அணிகளின் கனவையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது டெல்லி.

ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருந்தால், மற்ற அணிகளின் வாய்ப்புகள் பறிபோயிருக்காது என்றாலும், அது மற்ற அணிகளுக்கான பிளேஆஃப் வாய்ப்பை மேலும் கடினமாக்கியிருக்கும்.

16 புள்ளிகள் பெற யாருக்கு என்ன தேவை?

இந்த சீசனில் 16 புள்ளிகள் பெறவேண்டும் என்றால் ஒவ்வொரு அணிக்கும் எத்தனை புள்ளிகள், எத்தனை வெற்றிகள் தேவை:

  • பஞ்சாப் கிங்ஸ்: 6 போட்டிகளில் 3 புள்ளிகள் அல்லது 2 வெற்றிகள்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 5 போட்டிகளில் 4 புள்ளிகள் அல்லது 2 வெற்றிகள்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 5 போட்டிகளில் 4 புள்ளிகள் அல்லது 2 வெற்றிகள்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்: 4 போட்டிகளில் 4 புள்ளிகள் அல்லது 2 வெற்றிகள்
  • குஜராத் டைட்டன்ஸ்: 5 போட்டிகளில் 6 புள்ளிகள் அல்லது 3 வெற்றிகள்
  • டெல்லி கேபிட்டல்ஸ்: 5 போட்டிகளில் 8 புள்ளிகள் அல்லது 4 வெற்றிகள்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்: 6 போட்டிகளில் 10 புள்ளிகள் அல்லது 5 வெற்றிகள்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 6 போட்டிகளில் 11 புள்ளிகள் அல்லது 6 வெற்றிகள்
  • மும்பை இந்தியன்ஸ்: 6 போட்டிகளில் 6 வெற்றிகள்
  • லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்: 6 போட்டிகளில், 6 வெற்றிகள்

குறிப்பு: லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். முன்பே சொன்னதுபோல், 16 புள்ளிகள் பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்றில்லை. அதேபோல், 16 புள்ளிகள் பெற்றாலே தகுதி பெற்றுவிட முடியும் என்றும் சொல்லிவிட முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு