நேபாளத்தில் கடும் வெள்ளம் - 57 தமிழர்களின் நிலை என்ன?

நேபாளத்தில் கடும் வெள்ளம் - தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேரின் நிலை என்ன?

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட 500 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைலாஷ் யாத்திரரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 57 பயணிகளும் கும்பகோணத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

"மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு 3 வாகனங்களில் சென்றுள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரின் தொலைபேசியும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைத் தொடர்புகொண்ட பிறகே எப்படி உள்ளார்கள் என்பது தெரியவரும்" என கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி கூறியுள்ளார்.

"கடந்த 23-ஆம் தேதி 57 பேர் கிளம்பினர். நேபாளத்தில் 3 பேருந்துகளில் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை ஒரு பேருந்தில் சென்ற ரகு என்பவர் போன் செய்து, 'திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. எங்கள் பேருந்து தப்பித்துவிட்டது. ஆனால், பின்னால் வந்த பேருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்ததைப் பார்த்தோம்' என்றார். இன்னொரு வண்டியின் நிலையும் என்னவென்று தெரியவில்லை'' என சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் சாதிக் கூறினார்.

"ஒரு பேருந்தில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை" என்று நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள திருமலைராஜனின் சகோதரர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

"சுற்றுலா சென்ற இரண்டு பேருந்துகளில் பயணித்த 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து புகைப்படம் அனுப்பியுள்ளனர். ஆனால், மற்றொரு பேருந்து கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதில் பயணித்தவர்கள் எங்கு உள்ளனர், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் தெரிவித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Shaktimaya Tamang

எங்கு வெள்ளம்?

ராசுவா மாவட்டத்தில் போட்டே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு 93 நேபாள நாட்டினர் உட்பட 500 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புகொள்ள முடியாத சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

வடக்கு நேபாளத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் உயிரிழப்புகளும் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வெள்ளத்தில் பல கிராமங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், நீர்மின் அணை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், RSS

தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே, திபெத் எல்லையை ஒட்டியுள்ள ராசுவா பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பகுதி நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளது.

திபெத்தில் இருந்து நேபாளத்துக்குப் பாயும் போட்டே கோஷி ஆற்றில் பனி உருகியதால் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். திரிசூலி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பல மாவட்டங்களில் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலைமை குறித்து பிபிசியிடம் பேசிய ராசுவா மாவட்ட தலைமை அதிகாரி நரேந்திர பரியார், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். சேதத்தின் முழு அளவைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு இது மிகவும் ஆரம்பக்கட்டம் என்றும் அவர் கூறினார்.

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், RSS

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், RSS

படக்குறிப்பு, நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உதவி எண்கள் அறிவிப்பு

நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளலாம்.

அதன்படி அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்:

இந்தியாவிற்குள்: 1800 309 3793

வெளிநாடு: +91 80 6900 9900 ( Missed call )

தொடர்புக்கு: +91 80 6900 9901

தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி: 9289516712 ( கட்டுப்பாட்டு அறை )

பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்

"நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்களது சகோதர, சகோதரிகளுடன் தோள் கொடுத்து நிற்கிறார்கள். நேபாளத்திற்குத் தேவையான அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்களது குழுக்கள் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் உத்தரவில் என்ன உள்ளது?

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியான செய்திகளை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், "இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், "இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'பின்னால் இருந்த பேருந்து கவிழ்ந்தது'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நேபாளத்தில் சிக்கியுள்ள ஓசூரை சேர்ந்த தமிழரான ரகு, களத்தில் நடந்த நிகழ்வுகளை கும்பக்கோணம் வட்டாட்சியர் பூங்கொடியிடம் விளக்கினார்.

அவர் பேசுகையில், "எல்லையை சென்றடைய அரை மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், திடீரென பெரிய சத்தத்துடன் தண்ணீர் வேகமெடுத்து வந்தது, வரிசையாக நின்றுக்கொண்டிருந்த மூன்று பேருந்துகளில் நாங்கள் நடுவில் இருந்தோம், தண்ணீர் சூழும்போது பின்னாளல் இருந்த பேருந்து கவிழ்ந்தது" என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், " கவிழ்ந்த பேருந்தில் இருந்து கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்தனர். வேகமெடுத்த தண்ணீரில் சுற்றியிருந்த குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கிக்கொண்டு இருந்தது" என்று நேரில் பார்த்த வெள்ள பாதிப்பை அவர் விளக்கினார்.

"தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது" என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுவரை 57 பேர் தமிழர்கள் என கண்டறிந்துள்ளோம். அதில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்" என்றார்.

"தொடர்ந்து தகவல்களைச் சேகரித்து வருகிறோம். எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியானதும் அரசுக்கு அறிக்கையாக வழங்குவோம்" என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், "நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புகொண்டு விவரங்களை அறிந்து வருகிறோம்" என்றார்.

'முழு நாடும் அதிர்ச்சியடைந்துள்ளது' - நேபாள பிரதமர்

நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா

"நாட்டில் ஏற்பட்ட கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பிறகு தனது மனம் கனத்த இதயத்துடன் இருப்பதாக" நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

"உயிர் மற்றும் சொத்து சேதங்களால் முழு நாடும் அதிர்ச்சியடைந்துள்ளது மற்றும் ஆழ்ந்த துயரத்தில் ஆழந்துள்ளது" என்று அவர் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் பேரிடர் "திடீரென ஏற்பட்டதாகவும்" மற்றும் "மிகப் பெரிய அளவிலானதாகவும்" உள்ளது என்று கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் தங்களது அன்பானவர்களை இழந்தவர்களுக்கும் அவர் தனது "மனமார்ந்த அஞ்சலிகளையும்" "ஆழ்ந்த இரங்கல்களையும்" தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளுக்காக அரசாங்கம் "எந்தவித தாமதமும் இன்றி தனது அனைத்து வளங்களையும் உடனடியாகக் களமிறக்கியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ள அபாய எச்சரிக்கை எதிரொலி: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்

பீகார் மாநில முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பீகார் மாநில முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி

நேபாளத்திற்குத் தெற்கே அமைந்துள்ள இந்தியாவின் பீகார் மாநில அதிகாரிகள், கண்டக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி கூறுகையில், மாநிலத்தின் பல மாவட்டங்களில் கரைகளைப் கண்காணித்தல், இரவு நேர ரோந்துப் பணிகள் மற்றும் அவசரகாலக் குழுக்களை ஈடுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூன்று மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், இன்று காலை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் மூன்று மாவட்டங்களுக்கு அவசரகாலக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தேவைப்பட்டால் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் இக்குழுக்கள் தயாரித்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு