'நாயகிக்கு ஒரு எழுத்துதான் வசனம்': மிஷ்கின் இயக்கிய 5 முக்கிய திரைப்படங்கள் மற்றும் புதுமை காட்சிகள் ஒரு பார்வை

இயக்குநர் மிஷ்கின், திரைப்படங்கள், அகிரா குரோசாவா, கோலிவுட்

பட மூலாதாரம், Mysskin/Facebook

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'செவன் சாமுராய்'- என்ற ஜப்பானிய திரைப்படத்தின் பெயரைக் கேட்டதும், உலக சினிமா ரசிகர்களுக்கு அகிரா குரோசாவாவின் பெயரும், டோஷிரோ மிஃபுனே நடித்த 'கிகுச்சியோ' கதாபாத்திரமும், அந்த சிறிய ஜப்பானிய மலைக்கிராமமும் நினைவுக்கு வரலாம்.

ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குநர் மிஷ்கினின் பெயர் நினைவுக்கு வரும். தனது பல நேர்காணல்களில் 'செவன் சாமுராய்' குறித்து அவர் பேசியுள்ளார். 'அந்தப் படத்தை கிட்டத்தட்ட 1000 தடவை பார்த்துவிட்டேன், இன்னும் ஒரு 2000 முறை பார்க்க வேண்டும்' என அவர் பேசியிருப்பார்.

உலகப் புகழ்பெற்ற அந்தத் திரைப்படம் மட்டுமல்லாது, இன்னும் பல உலக சினிமாக்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்கள் குறித்து தொடர்ந்து பேசுபவர் மிஷ்கின். இதற்காகவே அவரது நேர்காணல்கள் (அவை நீண்ட உரையாடல்களாக இருந்தாலும்) இணையத்தில் வரவேற்பைப் பெறுகின்றன.

'சித்திரம் பேசுதடி' (2006) தொடங்கி 'சைக்கோ' (2020) திரைப்படம் வரை, வணிக ரீதியிலான வெற்றி தோல்விகளைக் கடந்து, தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக தனித்து தெரியக்கூடியவர்களில் ஒருவர் மிஷ்கின். நாளை (செப்டம்பர் 20) அவரது பிறந்தநாள்.

மிஷ்கின் இயக்கிய ஐந்து முக்கியமான திரைப்படங்கள் குறித்தும், அவர் கையாண்ட வித்தியாசமான கதாபாத்திரங்கள் குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

யுத்தம் செய் (2011)

இயக்குநர் மிஷ்கின், திரைப்படங்கள், அகிரா குரோசாவா, கோலிவுட்

பட மூலாதாரம், AGS Entertainment

தொடர் கொலைகளை மையமாகக் கொண்ட பெரும்பாலான கிரைம் திரில்லர் திரைப்படங்களில் அந்தத் தொடர் கொலைகளை செய்யும் குற்றவாளி 'ஒரு மனநோயாளியாக அல்லது சைக்கோவாக' சித்தரிக்கப்படுவான். அவன் அவ்வாறு கொலைகள் செய்வதற்கு சிறுவயதில் அவனை உளவியல் ரீதியில் பாதித்த ஒரு நிகழ்வு காரணமாக இருக்கும்.

உலகம் முழுக்க எத்தனையோ திரைப்படங்கள் இந்த அடிப்படையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழில் கூட சிகப்பு ரோஜாக்கள் (1978), வேட்டையாடு விளையாடு (2006), மூடுபனி (1980), ராட்சசன் (2018), ஸ்பைடர் (2017) என பல உதாரணங்களை சொல்லலாம். மிஷ்கினே கூட இதே பாணியில் 'சைக்கோ' என்ற திரைப்படத்தை இயக்கியிருப்பார்.

பொதுவாக, இத்தகைய திரைப்படங்களில் கொல்லப்படுபவர்கள் அப்பாவிகளாக இருப்பார்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் அந்தக் கொலைகாரனை எரிச்சல்படுத்தியிருப்பார்கள், அவமானப்படுத்தியிருப்பார்கள். தொடர்ந்து கொலைகளைச் செய்யும் கொலைகாரனை கண்டுபிடிக்க நாயகன் அல்லது ஒரு முக்கிய கதாபாத்திரம் போராடுவதே திரைக்கதையாக இருக்கும்.

ஆனால், 'யுத்தம் செய்' திரைப்படத்தில் ஒரு புதுவகையான பாணியைக் கையாண்டார் மிஷ்கின். இங்கு தொடர் கொலைகளைச் செய்பவர்களே அப்பாவிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், கொலை செய்யப்படுபவர்கள் 'கயவர்கள்' அல்லது மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்பவர்கள்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக சேரன் நடித்திருந்தார். இடைவேளைக்கு முன் ஒரு பாலத்தில் நாயகன் போடும் சண்டையும், அக்காட்சியின் ஒளிப்பதிவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

"முதலில் நான் நாயகனாக மனதில் நினைத்தது ராமராஜனை. என் உதவி இயக்குநர்களிடம் அதைக் கூறிய போது, பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்" என்று ஒரு நேர்காணலில் பேசியிருந்தார் மிஷ்கின்.

இப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறவில்லை என சமீபத்தில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, "ஒருவேளை யுத்தம் செய், இப்போது வெளியாகியிருந்தால், அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். மிகச்சிறப்பான திரைப்படம்" என்றார்.

பிசாசு (2014)

இயக்குநர் மிஷ்கின், திரைப்படங்கள், அகிரா குரோசாவா, கோலிவுட்

பட மூலாதாரம், B Studios

படக்குறிப்பு, பிசாசு திரைப்படத்தில் நடிகர் ராதாரவி
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகி ஒரு கோர விபத்தை எதிர்கொள்வாள், அதைத் தொடர்ந்து சிரித்த முகத்தோடு வீதியில் ரத்தம் சொட்ட கிடப்பாள். நாயகன் பெரும் மிரட்சியோடு அவளை தூக்கிக்கொண்டு, மருத்துவமனைக்கு விரைவான். அடுத்த சில நிமிடங்களில் நாயகனைப் பார்த்து சிரித்தவாறே அவள் இறந்துபோவாள். இறப்பதற்கு முன் கையை உயர்த்தி 'பா…' என்று மட்டும் சொல்வாள். இப்படத்தில் கதாநாயகிக்கான வசனம் என்பது அந்த ஒரு எழுத்து தான்.

திரைப்படத்தின் முழு கதையை இந்த முதல் சில நிமிடங்களில் சொல்லியிருப்பார் மிஷ்கின். இறந்தபிறகு 'பிசாசு' ரூபத்தில் நாயகனின் வீட்டில் இருக்கும் அந்தப் பெண், தனது இறப்பு குறித்த உண்மையை நாயகன் தெரிந்துகொள்ளக்கூடாது என்று தடுப்பாள். காரணம் என்ன என்பதே படத்தின் முடிவு.

'யுத்தம் செய்' போலவே இதிலும் வழக்கமான திரைக்கதை பாணியை உடைத்திருப்பார் மிஷ்கின். அகால மரணமடைந்து பேயாக வரும் ஒரு இளம்பெண், யாரையும் பழிவாங்க வரவில்லை, எதையும் எடுத்துக்கொள்ள அல்லது கட்டுப்படுத்த வரவில்லை. தன்னைக் காப்பாற்ற முயற்சி செய்த கதாநாயகன் வீட்டிலேயே அவனுக்கு துணையாக இருப்பாள். அவளது அப்பா வந்து அழைத்தும் அந்த வீட்டை விட்டு செல்லமாட்டாள்.

"அப்படி ஒரு 'பிசாசு' கதாபாத்திரம் தமிழ் சினிமாவிற்கு புதிது. அதேபோல, இத்திரைப்படத்தில் நடிகர் ராதாரவி ஏற்றிருந்த வேடமும், தன்னை ஒரு அறிவுஜீவியாக காட்டிக்கொண்டு நாயகன் மற்றும் அவனது அம்மாவிடம் அவ்வப்போது பணத்தை பறிக்கும் 'பிளாட்டோ' கதாபாத்திரமும் பெரும் ஆச்சரியம்" என்கிறார் கழுவேத்தி மூர்க்கன், ராட்சசி திரைப்படங்களின் இயக்குநர் கௌதம் ராஜ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மனிதர்களை அதிகம் கவனிக்கும் ஒருவரால் மட்டுமே இத்தகைய வித்தியாசமான கதாபாத்திரங்களை எழுத முடியும். மிஷ்கினின் பாணி என்பது பாலு மகேந்திராவைப் போன்றது, திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிஷ்கினாகவே தோன்றும். சண்டைக்காட்சிகள், பாடல்கள் என ஒவ்வொன்றையும் அவர் மனித எண்ணங்களின் அடிப்படையில் வடிவமைக்கிறார்" என்கிறார்.

இயக்குநர் மிஷ்கின், திரைப்படங்கள், அகிரா குரோசாவா, கோலிவுட்

பட மூலாதாரம், B Studios

படக்குறிப்பு, பிசாசு திரைப்படத்தில் நாயகி பிரக்யா மார்ட்டின்

'பிசாசு' திரைப்படத்தின் முதல் காட்சியில் கதாநாயகி ஏன் சிரித்தபடி இறந்துபோகிறாள் என்பதற்கான காரணத்தை மிஷ்கின் ஒரு நிகழ்வில் கூறியிருப்பார்.

"தனக்கு பிடித்த ஒருவனைப் பார்த்தால் திருமணம் செய்துகொள்கிறேன் என கதாநாயகி அவளது அப்பாவிடம் கூறியிருப்பாள். ஆனால் அப்படி நாயகனைப் பார்த்த சில நிமிடங்களில் அவள் இறந்துபோவாள். 'என் காதலனைப் பார்த்துவிட்டேன், ஆனால் நான் சாகப் போகிறேன். அவன் தான் என்னை அறியாமல் கொலை செய்தவனும் கூட, அதேசமயம் முன்பின் தெரியாத ஒரு உயிரைக் காப்பாற்ற துடிக்கும் நல்லவன் அவன்'. இதுவே அவளின் சிரிப்பிற்கும் தெளிவான பார்வைக்கும் காரணம்."

"அப்பா தான் ஒரு பெண்ணுக்கு முதல் ஹீரோ, எனவே அவள் இறக்கும் முன் 'பா' என்று சொல்வாள்".

அஞ்சாதே (2008)

இயக்குநர் மிஷ்கின், திரைப்படங்கள், அகிரா குரோசாவா, கோலிவுட்

பட மூலாதாரம், Nemichand Jhabak

படக்குறிப்பு, 'லோகு' என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பாண்டியராஜன்

இப்படத்தில் ஒரு காட்சியில், நள்ளிரவில் ஒருவன் வெட்டுப்பட்டு, வீதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பான். காவல்துறை அதிகாரியான நாயகன் சத்யா (நரேன்), அந்த நபரைக் காப்பாற்ற தன்னால் முயன்ற அனைத்தையும் செய்வான். இறுதியில் பூ விற்கும் ஒரு மூதாட்டி மட்டுமே உதவ முன்வருவார்.

ஆனால், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்முன் வெட்டுப்பட்ட அந்த நபர் இறந்துவிடுவார். தனக்கு உதவி செய்ததற்காக அந்த மூதாட்டிக்கு சத்யா பணம் தருவான். அந்த மூதாட்டி அதை மறுத்துவிட்டு, இறந்துபோன நபரின் ரத்தம் உறைந்து கிடக்கும் இடத்தில் பூக்களைத் தூவிவிட்டு செல்வார்.

"அஞ்சாதே திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு, என்னால் அந்தத் தாக்கத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. மீண்டும் மீண்டும் திரையரங்கில் அந்தப் படத்தை பார்த்தேன். அப்போதே ஏதேனும் ஒரு வகையில் நமது எதிர்காலம் சினிமாவை சார்ந்து இருக்கப் போகிறது என முடிவு செய்துவிட்டேன். அப்போது எனக்கு 17 வயது தான்" என்கிறார் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் நிவேதா.

"அவரது எந்தத் திரைப்படத்திலும் வழக்கமான ஒரு காட்சியை உங்களால் பார்க்க முடியாது, சண்டை மற்றும் நடனக் காட்சிகள் உள்பட. அவர் நம்பும் சினிமாவை மக்களும் பார்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்" என்று கூறும் நிவேதா 'பிசாசு-2', 'ட்ரெயின்' திரைப்படங்களில் மிஷ்கினுடன் பணியாற்றியுள்ளார்.

'அஞ்சாதே' விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம். அப்படத்தின் திரைக்கதையை ஏழு நாட்களில், ஒரு அறையில் அமர்ந்து எழுதியதாக சில நேர்காணல்களில் குறிப்பிட்டிருந்தார் மிஷ்கின்.

"நாயகன் சத்யா ஒரு ரௌடி. ஆனால், தான் ஒரு நல்லது செய்தும் அப்பா அவமானப்படுத்திவிட்டார் என்பதற்காக, குறுக்கு வழியில் காவல்துறையில் சேர்கிறான். அந்த சீருடை அவனை மாற்றுகிறது, அவன் பண்பானவனாக மாறுகிறான். ஆனால், நேர்மையான முறையில் காவல்துறையில் சேர முயன்று தோற்றுப்போன அவனது நண்பன் கிருபா (அஜ்மல்), தடம் மாறிப் போகிறான்" என்று அவர் கூறியிருப்பார்.

இப்படத்தில் 'லோகு' என்ற எதிர்மறையான, அதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பாண்டியராஜன். அதேபோல, நாயகனின் நண்பனாக வரும் 'குருவி' என்ற கதாபாத்திரமும், பிரசன்னா நடித்த 'தயா' கதாபாத்திரமும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013)

இயக்குநர் மிஷ்கின், திரைப்படங்கள், அகிரா குரோசாவா, கோலிவுட்

பட மூலாதாரம், Lone Wolf Productions

"நான் திரைப்படங்கள் பார்த்து அழுபவன் கிடையாது. ஆனால், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் என்னை சில இடங்களில் அழ வைத்துவிட்டது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் இயக்குநர் பாலா.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே இரவில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கும். பார்வை மாற்றுத்திறன் கொண்ட ஒரு குடும்பத்தை காப்பாற்ற 'உல்ஃப்' (மிஷ்கின்) என்ற கதாபாத்திரம் பல முயற்சிகளை எடுக்கும். அதேசமயம், அந்த உல்ஃப் கதாபாத்திரத்தை காவல்துறை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கும், காரணம் அவன் பல கொலைகள் செய்தவன்.

ஒரு இரவில் அவனை சுட்டுப்பிடிக்கும் முயற்சியில் காவல்துறை தோல்வியடைய, காயம்பட்ட அவனைக் காப்பற்றுவான் சந்துரு (நடிகர் ஸ்ரீ) என்ற மருத்துவ மாணவன். உல்ஃப்-ஐ பிடிக்க சந்துருவை பலிகடாவாகப் பயன்படுத்தும் காவல்துறை.

கொலைகாரனான உல்ஃப் ஏன் ஒரு அப்பாவி குடும்பத்தை காக்கப் போராடுகிறான் என்பதை, எந்த பிளாஷ்பேக் காட்சிகளும் இல்லாமல், இரு மெழுகுவர்த்திகளைப் ஏற்றி வைத்து, ஒரு குழந்தைக்கு கதை சொல்வது போல 'சிங்கள்-ஷாட்' காட்சியாக பார்வையாளர்களுக்கு விளக்கிவிடுவார் மிஷ்கின்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட இத்திரைப்படத்தை தயாரித்ததும் மிஷ்கின் தான்.

"நான் எடுத்த மிகச் சிறந்த திரைப்படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. அது சரியாக ஓடவில்லை, ஓடவும் சிலர் விடவில்லை. ஆனால் அப்படத்தை பார்த்துவிட்டு பலரும் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார்கள். அதைப் பார்த்துவிட்டு தான் பாலா, 'பிசாசு' படத்தை தயாரிக்க முன்வந்தார்" என ஒரு நிகழ்வில் பேசியிருப்பார் மிஷ்கின்.

சித்திரம் பேசுதடி (2006)

இயக்குநர் மிஷ்கின், திரைப்படங்கள், அகிரா குரோசாவா, கோலிவுட்

பட மூலாதாரம், Dreambridge Productions

"இந்தக் கதை நடிகர் விஜய்க்காக எழுதப்பட்டது. ஆனால் அவரிடம் நான் கதை சொல்லவில்லை. பின்னர் அவர் திரைப்படத்தை பார்த்துவிட்டு 'எனக்கு இப்படி ஒரு திரைப்படம் இருந்தால் சொல்லுங்கள், நான் நடிக்கிறேன்' எனக் கூறினார்" என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார் மிஷ்கின். முன்னதாக, விஜய் நடித்த 'யூத்' (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார் மிஷ்கின்.

தனது முதல் திரைப்படமான 'சித்திரம் பேசுதடி' மூலம் தமிழ் சினிமாவில் தனித்து தெரிந்தார் மிஷ்கின். முக்கிய காரணம் அதில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும், 'வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' என்ற பாடலும்.

"அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது, 'மிஷ்கின் என்ன கோமாளி போல ஏதோதோ சொல்கிறார், பாடுபவர் கையை உயர்த்தி சைகை காட்டி பாட வேண்டும், உடன் மைக் பிடிப்பவர் பாடுபவரையே உற்றுப் பார்க்க வேண்டும், வேறு எங்கும் திரும்பக்கூடாது. மாளவிகா இப்படித்தான் ஆட வேண்டும், இந்த உடை தான் உடுத்த வேண்டும்' என எங்களுக்கு தோன்றியது. ஆனால், திரையில் பார்த்தபோது பாடல் மட்டுமல்லாது அந்தத் திரைப்படம் முழுவதுமே பிரமிப்பாக இருந்தது" என்கிறார் இப்படத்தில் நடித்தவரும், திரைக்கதை ஆசிரியருமான அஜயன் பாலா.

"அதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதாபாத்திரங்கள் அப்படத்தில் இடம்பெற்றன. குறிப்பாக நாயகியின் தந்தை கதாபாத்திரம் குறித்து இறுதியில் தெரியவரும் உண்மை, பார்வையாளர்களை உலுக்கியது" என்கிறார் அவர்.

"எளிய மனிதர்கள், வாழ்க்கையில் சில தவறுகள் செய்துவிட்டு அதற்காக வருந்தும் மனிதர்கள் இவர்கள் தான் மிஷ்கின் திரைப்படங்களின் முக்கிய பாத்திரங்கள். மிஷ்கினின் திரைப்படத்தில் எந்தக் காட்சியை தனியாகப் பார்த்தாலும், அதில் அவரது முத்திரை இருக்கும். அதுவே அவரது தனித்துவம்" என்கிறார் அஜயன் பாலா.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு