வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை கொன்று டிரம்மில் மறைத்த மனைவி, காதலனுக்கு மரண தண்டனை

பட மூலாதாரம், SHIV PRAKASH
(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில விவரங்கள் சங்கடம் ஏற்படுத்தக்கூடும்.)
சௌரப் ராஜ்புத் என்பவரைக் கொலை செய்து அவரது உடலை ஒரு டிரம்முக்குள் அடைத்த வழக்கில், அவரது மனைவி முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹில் ஆகிய இருவருக்கும் உத்திர பிரதேசத்தின் மீரட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மாவட்ட நீதிபதி அரவிந்த் குமார் இந்தத் தீர்ப்பை வழங்கினார். சிறையில் இருந்து காணொளி வாயிலாக இரு குற்றவாளிகளும் விசாரணையில் பங்கேற்றனர். விசாரணை முழுவதும் அவர்கள் அமைதியாக இருந்தனர்.
கொலை வழக்கில் சாஹில் மற்றும் முஸ்கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் பகதூர் தெரிவித்தார்.
மேலும், மற்ற பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் செய்தியாளரிடம் பேசிய சிறைத்துறை மூத்த கண்காணிப்பாளர் வீரேஷ் ராஜ் சர்மா, "முதலில் விசாரணை நடைபெற்றது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் தனித்தனியாக ஆஜர்படுத்தப்பட்டனர். தடயவியல் அறிக்கை தொடர்பான கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினார். கேட்கப்பட்ட கேள்விகளின் விவரங்களை வெளியிட விரும்பவில்லை" என்றார்.
சிறைத்துறை மூத்த கண்காணிப்பாளர் வீரேஷ் ராஜ் சர்மா மேலும் கூறுகையில், "இருவரும் கவலையுடனும் மன உளைச்சலுடனும் இருந்தனர். இரவு உணவையும் காலை உணவையும் மிகக் குறைவாகவே சாப்பிட்டிருந்தனர். கடந்த சில நாள்களாக அவர்களால் சரியாகத் தூங்கவும் முடியவில்லை. சுமார் ஏழு வயதான தனது மூத்த மகளைச் சந்திக்க வேண்டும் என்று முஸ்கன் கடந்த மூன்று அல்லது நான்கு நாள்களாகக் கோரி வருகிறார். ஆனால், இதுவரை அந்தச் சிறுமி அவரைச் சந்திக்க அழைத்து வரப்படவில்லை" என்றார்.
தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பு பேசிய கொல்லப்பட்ட சௌரப்பின் சகோதரர் ராகுல், "இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது" என்றார்.
வழக்கின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், @meerutpolice
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், 2025 மார்ச் மாதம் இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் பதிவானது. காவல்துறையின் தகவலின்படி, சௌரப் ராஜ்புத் என்பவரை அவரது மனைவி தனது காதலருடன் இணைந்து கொலை செய்தார்
29 வயதான சௌரப் ராஜ்புத் லண்டனில் வேலை செய்து வந்தார். அவர் 2025 பிப்ரவரி மாதத்தில்தான் இந்தியா திரும்பியிருந்தார்.
சௌரப்பைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் மீரட் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அப்போது இந்தக் கொலை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின.
மீரட் காவல்துறையின் தகவல்படி, 28 வயதான முஸ்கான் ரஸ்தோகி தனது காதலன் சாகில் சுக்லாவுடன் இணைந்து மார்ச் 3-ஆம் தேதி இரவில் தனது கணவர் செளரப் ராஜ்புத்தைக் கொலை செய்தார்.
செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் கூறுகையில், சௌரப்பின் உடலை ஒரு டிரம்மில் வைத்து, அதில் சிமென்ட் கலவையைக் கொட்டி மூடியதாகத் தெரிவித்தனர்
காவல்துறையினர் அந்த டிரம்மைக் கைப்பற்றி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர், கட்டர் கருவியைக் கொண்டு வெட்டி, அதிலிருந்து உடலை வெளியே எடுத்தனர்.
செளரப் ராஜ்புத்தின் மூத்த சகோதரர் ராகுல் என்ற பப்லுவின் புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மீரட்டின் அப்போதைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மார்ச் 4ஆம் தேதி முதல் சௌரப் ராஜ்புத்தைக் காணவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி முஸ்கன் மற்றும் அவரது காதலர் சாஹில் சுக்லா ஆகியோரை விசாரணைக்கு அழைத்தோம். விசாரணையின்போது, முஸ்கனும் சாஹிலும் இணைந்து சௌரப்பைக் கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்குப் பிறகு உடலைத் துண்டுகளாக்கி, ஒரு டிரம்மில் வைத்து, அதில் சிமென்ட் மற்றும் மணல் கலவையைக் கொட்டியுள்ளனர். இதையடுத்து, இருவரும் சுற்றுலா செல்வதற்காக சிம்லா, மணாலி மற்றும் கசௌலி ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர்" என்றார்.
மீரட்டின் பிரம்மபுரி பகுதியைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத், தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த முஸ்கன் ரஸ்தோகியை 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இரு குடும்பத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். 2019-ஆம் ஆண்டு முஸ்கனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
விவாகரத்து முயற்சி

பட மூலாதாரம், @meerutpolice
காவல்துறையின் கூற்றுப்படி, பண நெருக்கடி காரணமாக சௌரப்புக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனது மனைவி முஸ்கானுடன் அருகிலுள்ள இந்திரா நகரில் தனியாக வசித்து வந்தார்.
சௌரப் உடனில்லாத காலகட்டத்தில், முஸ்கனுக்கும் சாஹில் சுக்லாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது
மீரட்டின் அப்போதைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், "27 வயதான சாஹில், சௌரப்பின் வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்தார். அவரும் முஸ்கனும் ஒன்றாகப் படித்தவர்கள். பி.காம் வரை படித்துள்ள சாஹில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார்" என்றார்.
காவல்துறையின் தகவலின்படி, தனது மனைவிக்கும் சாஹிலுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதை அறிந்த சௌரப், 2021-ஆம் ஆண்டு விவாகரத்து கோரி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், தம்பதியருக்கு ஒரு சிறுமி இருந்ததால், குடும்பத்தினர் சமரசம் செய்துவைத்தனர். இதையடுத்து, அவர் தனது விவாகரத்து முயற்சிகளை திரும்பப் பெற்றார்.
இருப்பினும், சௌரப்புக்கும் முஸ்கானுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
நடந்தது என்ன?
காவல்துறையின் கூற்றுப்படி, விசாரணையின்போது முஸ்கான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சௌரப் வேலைக்காக லண்டன் சென்றதாகவும், அந்தக் காலகட்டத்தில் தனக்கும் சாஹிலுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாகவும் முஸ்கான் காவல்துறையிடம் தெரிவித்தார்.
சௌரப்பின் கடவுச்சீட்டு காலாவதியாகவிருந்ததால், அதைப் புதுப்பிப்பதற்காக அவர் பிப்ரவரி 24-ஆம் தேதி இந்தியா திரும்பவிருந்ததாகவும் முஸ்கான் கூறினார்.
கொலை செய்வதற்காக முஸ்கானும் சாஹிலும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததாகவும், இதற்காகக் கத்திகளையும் மயக்க மருந்துகளையும் வாங்கியிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
கொலை நடந்த மார்ச் 3-ஆம் தேதி இரவு, சௌரப்பின் உணவில் முஸ்கான் மயக்க மருந்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மயக்கமடைந்ததும், சாஹில் அவரது கைகளைப் பிடித்துக்கொள்ள, முஸ்கான் அவரைக் கத்தியால் பலமுறை குத்தியதாகக் காவல்துறை தெரிவித்தது.
கொலைக்குப் பிறகு தடயங்களை அழிக்கும் நோக்கில், இருவரும் அந்த அறையைப் ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ததாகவும் காவல்துறை கூறியது.
மார்ச் 4ஆம் தேதி, முஸ்கன் கடைக்குச் சென்று ஒரு டிரம்மையும் சிமென்ட்டையும் வாங்கினார். பின்னர், சௌரப்பின் உடலை டிரம்மில் வைத்து சிமென்ட் கலவையால் மூடியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உண்மை எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தது?

பட மூலாதாரம், SHIV PRAKASH
காவல்துறையின் கூற்றுப்படி, சௌரப்பின் உடலை டிரம்முக்குள் அடைத்த பிறகு, முஸ்கான் தனது மகளைத் தாயிடம் விட்டுவிட்டு சாஹிலுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு சௌரப்பை அவரது குடும்பத்தினர் ஒதுக்கி வைத்திருந்ததாகவும், அவருடன் அதிக தொடர்பில் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்தது. இதனால், இந்தக் கொலைச் சம்பவம் பல நாட்களாக வெளியில் தெரியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மார்ச் 17ஆம் தேதி முஸ்கன் வீடு திரும்பியபோது, ஆறு வயதான அவரது மகள் தனது தந்தை சௌரப் குறித்து விசாரித்தார்.
பின்னர், தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்ற முஸ்கன், சௌரப்பின் கொலைக்கு அவரது குடும்பத்தினரே காரணம் என்று குற்றம்சாட்டத் தொடங்கினார். ஆனால், முஸ்கனின் குடும்பத்தினர் அவரது பேச்சை நம்பவில்லை. அவர்களே முஸ்கனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையின்போது முஸ்கன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சௌரப்பின் உடல் வைக்கப்பட்டிருந்த டிரம்மை காவல்துறையினர் மீட்டனர்.
சௌரப்பின் சகோதரர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Shiv Prakash
சௌரப் மூன்று உடன்பிறந்தவர்களில் இளையவர். அவரது சகோதரர் ராகுல் என்ற பப்லு, பிபிசியிடம் கூறுகையில், "எனது சகோதரரை இரக்கமற்றவர்கள் கொன்றுவிட்டனர். முஸ்கன்தான் எனது சகோதரரை எங்கள் குடும்பத்திடமிருந்து பிரித்தவர். இதில் பெரிய சதித் திட்டம் ஏதேனும் இருக்கலாம். முஸ்கனின் குடும்பத்தினருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்றார்.
சௌரப் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் ஓம்பால் சிங், பிபிசியிடம் கூறுகையில், "முஸ்கான் இப்படியொரு செயலில் ஈடுபடுவார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என்றார்.
மறுபுறம், முஸ்கானின் குடும்பத்தினரும் அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
முஸ்கன் ரஸ்தோகியின் தாயும் தந்தையும் தங்கள் மகளைச் சமூகத்துக்கு ஆபத்தானவர் என்று குறிப்பிட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர்கள் கூறுகையில், "எங்கள் மகள் தனது நண்பருடன் சேர்ந்து, தனது சொந்த வீட்டிலேயே கணவரைக் கொலை செய்துவிட்டாள். அவள் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவள். மற்றவர்களுக்கும் ஆபத்தானவள்." என்றனர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் முஸ்கானின் தாயிடமும் பேசியது.
அப்போது, சௌரப் மிகவும் நல்லவர் என்றும், தங்கள் மகள் அவருக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
புதன்கிழமை அன்று சாஹில் சுக்லாவையும் முஸ்கான் ரஸ்தோகியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, சில வழக்கறிஞர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.
இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை அந்தக் கூட்டத்திடமிருந்து பாதுகாப்பாக மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































