You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய கிழக்கில் இந்திய கப்பல் தாக்கி மூழ்கடிப்பு - என்ன இருந்தது? மாலுமிகள் கதி என்ன?
ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 14) அன்று கண்டனம் தெரிவித்துள்ளது, இது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில், கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பு முகமைகளும் இந்தியாவும் இந்த சரக்குக் கப்பல் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளன.
புதன்கிழமை அதிகாலை நடந்த இந்தத் தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களை இந்திய அரசு வழங்கவில்லை.
இந்திய வெளியுறவு அமைச்சகம் கப்பலின் பெயரை வெளியிடவில்லை மற்றும் கப்பல் மீதான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.
ஆனால் இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் அந்த கப்பலின் பெயர் 'ஹாஜி அலி' (Haji Ali) என்று கூறியுள்ளது.
புதன்கிழமை காலை ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"கப்பலில் இருந்த அனைத்து இந்தியக் குழுவினரும் பாதுகாப்பாக உள்ளனர், அவர்களை மீட்ட ஓமன் அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அமைச்சகம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பாக அமைச்சகம் கூடுதல் தகவல்களை வழங்கவில்லை.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கூறியது என்ன?
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கள் இந்தச் சம்பவம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
"ஒரு சோகமான சம்பவம் குறித்து நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். 'ஹாஜி அலி' என்று பெயரிடப்பட்ட மரத்தாலான, மோட்டார் பொருத்தப்பட்ட அந்தக் கப்பல் சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவிற்குச் சென்று கொண்டிருந்தது. 2026 மே 13 அன்று காலையில், அது ஓமன் கடல் பகுதியில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கப்பலில் தீப்பிடித்தது, அதைத் தொடர்ந்து அது மூழ்கியது." என்று முகேஷ் மங்கள் கூறினார்.
"கப்பலில் இருந்த மொத்தம் 14 பணியாளர்களும் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஓமனில் உள்ள திப்பா (Dibba) துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன." என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தவிர, கடந்த 72 மணி நேரத்தில் எந்தவொரு இந்தியக் கப்பல் அல்லது இந்தியக் குழுவினரைக் கொண்ட கப்பல் மீதும் தாக்குதல் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.
இந்திய மற்றும் பிற கப்பல்களில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறினார்.
இதுவரை தெரியவந்துள்ளது என்ன?
14 பணியாளர்களைக் கொண்ட குழுவினருடன் இருந்த சரக்குக் கப்பலின் பெயர் 'ஹாஜி அலி' என்று கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான வான்கார்டை (Vanguard) மேற்கோள் காட்டி செய்தி முகமையான ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, ஹோர்மூஸ் நீரிணைக்கு தெற்கே, ஓமனின் லிமா கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து கப்பல் மூழ்கியது.
சோமாலிலாந்தின் பெர்பெராவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவிற்கு அந்தக் கப்பல் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக வான்கார்ட் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 'ஹாஜி அலி' என்று பெயரிடப்பட்ட அந்தக் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு "டிரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது".
வான்கார்ட் கூற்றுப்படி, "கப்பல் தீப்பிடித்தது, இதனால் பணியாளர்கள் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பின்னர் கப்பல் மூழ்கியது."
இந்தியா டுடே தகவலின்படி, ஹாஜி அலி கப்பல் குஜராத்தின் 'தேவ்பூமி துவாரகா' மாவட்டத்தில் உள்ள சலாயா துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3:30 மணியளவில் ஓமனின் வடக்குக் கடற்கரையில் உள்ள லிமா அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வெடிபொருள் மீது மோதியது.
அந்த வெடிப்பு கப்பலில் தீப்பிடிக்கவும், அதன் சமநிலையை இழக்கவும் காரணமானது. அதைத் தொடர்ந்து கப்பல் மூழ்கியது.
இதற்கு முன் தாக்கப்பட்ட கப்பல்கள்
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து, இந்தச் சம்பவம் தவிர்த்து குறைந்தது இரண்டு இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.
இந்தியா கடந்த மாதம் டெல்லியில் உள்ள இரானியத் தூதரை அழைத்து இந்தச் சம்பவங்கள் குறித்து தனது 'ஆழ்ந்த கவலையை' வெளிப்படுத்தியது.
இரான் போர் வளைகுடா பிராந்தியத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மோதல் தொடங்கியதில் இருந்து பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் நடமாட்டத்தை இரான் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 8 அன்று நடைமுறைக்கு வந்த பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா இரானியத் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையைத் தொடர்கிறது.
வளைகுடா பிராந்தியத்தின் கடல் வழிகள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான இடையூறுகள் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
இது இந்தியாவைப் போன்ற எரிசக்தி இறக்குமதி நாடுகளின் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
பிரிக்ஸ் (BRICS) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்காக இந்தியா வந்த இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்தத் தாக்குதலைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் இரானியக் கடற்படையுடன் ஒத்துழைக்கும் அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹோர்மூஸ் நீரிணை திறந்திருக்கும் என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு