201 ரன்கள் இலக்கு - கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸை எப்படி வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 58வது போட்டியில் இன்று (மே 14) பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ். இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஐபிஎல் அரங்கில் பும்ரா கேப்டனாக செயல்படுவது இதுதான் முதல் முறை. இந்த சீசன் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தும் மூன்றாவது வீரர் பும்ரா. இதற்கு முன் இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தியிருந்தார்கள்.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பிரப்சிம்ரன் சிங் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். மும்பை பௌலர்களில் ஷார்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த இலக்கை 19.5 ஓவர்களில் எட்டியது மும்பை இந்தியன்ஸ். அந்த அணிக்கு அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்திருக்கிறது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணி தோற்காமல் இருந்தது.

ஏற்றமும் இறக்கமும் நிறைந்த பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த இன்னிங்ஸ் மூன்று கட்டமாக இருந்தது. ஆரம்பத்தில் நிதானமாகவும் உறுதியாகவும் தொடங்கிய அந்த அணி, மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. அதன்பிறகு கடைசி கட்டத்தில் மீண்டும் அதிரடி காட்டி

பஞ்சாப் ஓப்பனர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா இந்தப் போட்டியில் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தவில்லை. சற்று நிதானமாகவே அவர்கள் இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். இந்த இணை 5.3 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தது. 17 பந்துகளில் 22 ரன்களில் எடுத்த பிரியான்ஷ் ஆர்யா தீபக் சஹார் பந்துவீச்சில் போல்ட் ஆனார். பஞ்சாப் அணி பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகு பிரப்சிம்ரன் உடன் ஜோடி சேர்ந்த கூப்பர் கானலி அதுபோலவே இன்னொரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார். ஆரம்பத்தில் மெதுவாக ஆடியவர்கள், போகப்போக தங்கள் வேகத்தை அதிகப்படுத்தினார்கள். இந்த ஜோடி 57 ரன்கள் எடுத்தது. 32 பந்துகள் சந்தித்த பிரப்சிம்ரன் சிங் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டை ஷார்துல் தாக்கூர் வீழ்த்தினார்.

அதன்பிறகு பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் எடுத்து ஷார்துல் பந்துவீச்சில் போல்டானார். 21 ரன்கள் எடுத்த கூப்பர் கானலியை வெளியேற்றினார் ராஜ் பவா.

அடுத்த வந்த சூர்யான்ஷ் ஷெட்கே 8 ரன்களில், சஷாங் சிங் மற்றும் மார்கோ யான்சன் தலா 2 ரன்களில் வெளியேறினார்கள். அதனால், 16.2 ஓவர்களில் 140/7 என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தது பஞ்சாப் கிங்ஸ். அதனால் அவர்கள் இம்பேக்ட் வீரராக விஷ்ணு வினோத்தை அப்போதே களமிறக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஆனால், கடைசி 3.4 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். இந்த சீசன் தன் முதல் போட்டியில் விளையாடிய அஸ்மத்துல்லா ஓமர்சாய் அதிரடியாக பேட்டிங் செய்து 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய விஷ்ணு வினோத் 15 ரன்களிலும், ஜேவியர் பார்ட்லெட் 18 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ்

201 என்ற இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஒருபக்கம் ரோஹித் ஷர்மா நிதானமாக விளையாட, அதிரடியாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசினார் ரியான் ரிக்கில்டன். அதனால் பவர்பிளேவில் விக்கெட் இழக்காமல் 59 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

ஆனால், பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே ரிக்கில்டன் வெளியேறினார். 23 பந்துகள் சந்தித்த அவர், தலா 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியோடு 48 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து அவர் 61 ரன்கள் எடுத்தார்.

அடுத்த சில ஓவர்களில் நமன் திர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது மும்பை இந்தியன்ஸ். 9 ரன்கள் எடுத்திருந்த நமன் திர், மார்கோ யான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 26 பந்துகளில் 25 ரன்கள் மட்டும் எடுத்திருந்த ரோஹித், சஹல் பந்துவீச்சில் போல்டானார்.

அதன்பிறகு 4வது விக்கெட்டுக்கு திலக் வர்மா மற்றும் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார்கள். ரதர்ஃபோர்ட் மெதுவாக ஆட, தன் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் ரன்ரேட் மிகவும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொண்டார் திலக் வர்மா.

மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்குக் கடைசி 5 ஓவர்களில் 72 ரன்கள் தேவை என்ற நிலையில், 16வது ஓவரை வீச சஹல் கையில் பந்தைக் கொடுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். தன் முதல் ஓவர்களிலும் சேர்த்தே 12 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்த சஹல், அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கொடுத்தார். அதனால் மும்பை அணிக்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மீண்டும் வந்தது.

17வது ஓவரை சிறப்பாக வீசிய அஸ்மத்துல்லா ஓமர்சாய் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அதனால், மீண்டும் மும்பை அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது. ஆனால், யான்சன் வீசிய 18வது ஓவரில் திலக் வர்மா, வில் ஜேக்ஸ் இணைந்து 22 ரன்கள் விளாசினார்கள். அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டன.

கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரில் வில் ஜேக்ஸ், திலக் வர்மா இருவருமே தலா 1 சிக்ஸர் அடிக்க, 1 பந்து மீதம் வைத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். திலக் வர்மா 75 ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 25 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 5வது போட்டியில் தோற்றிருக்கிறது.

பிளேயிங் லெவனில் யார்?

பஞ்சாப் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், யஷ் தாக்கூர் மற்றும் பென் துவார்ஷுய்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், ஜேவியர் பார்ட்லெட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டதாக டாஸின்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். அவர்களுள் ஹர்ப்ரீத் பிரார் சப்ஸ்டிட்யூட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஆனால், அந்த அணி விரைந்து விக்கெட்டுகள் இழந்ததால், பஞ்சாப் பேட்டிங் செய்தபோதே விஷ்ணு வினோத் இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யான்ஷ் ஷெட்கே, சஷாங்க் சிங், அஸ்மதுல்லா ஓமர்சாய், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், ஜேவியர் பார்ட்லட், யுஸ்வேந்திர சஹல்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: பிரவின் துபே, வைஷாக் விஜயகுமார், மிட்செல் ஓவன், ஹர்ப்ரீத் பிரார், விஷ்ணு வினோத்

மும்பை இந்தியன்ஸ்

இந்தப் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. சூர்யகுமார் யாதவ், அல்லா கசன்ஃபர் ஆகியோருக்குப் பதிலாக ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் மற்றும் ஷார்துல் தாக்கூர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். மும்பை பேட்டிங் செய்தபோது ரோஹித் ஷர்மா இம்பேக்ட் வீரராகக் களமிறங்கினார்.

பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கில்டன் (விக்கெட் கீப்பர்), நமன் திர், திலக் வர்மா, ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், வில் ஜேக்ஸ், ராஜ் பவா, கார்பின் பாஷ், தீபக் சஹர், ஷார்துல் தாக்கூர், ரகு ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்).

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராபின் மின்ஸ், மயாங்க் ராவத், ரோஹித் ஷர்மா, டிரென்ட் போல்ட், கிரிஷ் பகத்.