ஆசிய போட்டிகள்: இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக வீரர்களின் பின்னணி

9-வது இடத்தில் உள்ள இந்தியா, இதுவரை 8 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கலம் உள்பட 55 பதங்கங்களை வென்றுள்ளது.
படக்குறிப்பு, ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்கள் வென்று வரலாறு படைத்துள்ளார். (இடதுபுறத்திலிருந்து முதலாவதாக உள்ளவர்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

செப். 30 காலை 10 மணி நிலவரப்படி, இத்தொடரில் சீனா முதலிடத்தில் நீடித்து வருகிறது.

இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது.

தென்கொரியா, உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, பஹ்ரைன், இரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, 8-வது இடத்தில் உள்ள இந்தியா, இதுவரை 10 தங்கம், 22 வெள்ளி, 31 வெண்கலம் உள்பட 63 பதங்கங்களை வென்றுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பலரும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

அபிநயா ராஜராஜன்

 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் இடம்பெற்றிருந்தார்.
படக்குறிப்பு, அபிநயா ராஜராஜன் (வலது)

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் இடம்பெற்றிருந்தார்.

அபிநயா தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்.

அவரது வெற்றியைப் பாராட்டி தமிழ்நாடு முதல் அமைச்சர் ச. ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது இவ்வெற்றி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நாட்டின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்' எனத் தெரிவித்துள்ளார்".

டி.கே.விஷால்

வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.கே.விஷால், இதேபோன்று தடகளத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
படக்குறிப்பு, டி.கே.விஷால்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

இந்த அணியில் இடம்பெற்றிருந்த 4 பேரில் வித்யா மற்றும் விஷால் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் வேறு மாநிலங்களை சேர்ந்த டி.எஸ்.மனு மற்றும் பூவம்மா ஆகியோரும் இணைந்து இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் தள பதிவில், ''அவர்களின் வேகம், ஒருங்கிணைப்பு மற்றும் மன உறுதி ஆகியவை ஒரு விறுவிறுப்பான பந்தயத்தை உருவாக்கியதுடன், இந்திய தடகளத் துறைக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகவும் அமைந்தன. அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்.'' என்று பிரதமர் மோதி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தன் எக்ஸ் பக்கத்தில், ''இந்திய அணியின் 4 நபர் அடங்கிய இந்தக் கலப்பு தொடர் ஓட்டக்குழுவில் 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமின்றி, தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை'' என்று தெரிவித்துள்ளார்.

22 வயதான டி.கே. விஷால் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த விஷால், இதேபோன்று தடகளத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

ராஜேஷ்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரமேஷ்.
படக்குறிப்பு, ராஜேஷ் ரமேஷ்.

ஜப்பானில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டு வீரர்கள் ராஜேஷ் ரமேஷ், விஷால் தென்னரசு கயல்விழி ஆகியோருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

"ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரமேஷ்.

இதற்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்ற 4 பேர் அணியில் இடம்பெற்றிருந்தார் ராஜேஷ்.

வித்யா ராம்ராஜ்

புதிய தேசிய சாதனையுடன் பதக்கம் வென்றுள்ள வித்யா ராம்ராஜை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர். பி.டி.உஷாவும் தனது நாற்பது ஆண்டுக்கும் மேலான தேசிய சாதனையை முறியடித்தமைக்காக வித்யாவை பாராட்டியுள்ளார்.
படக்குறிப்பு, ஒரே ஆசிய விளையாட்டுப் பதிப்பில் 3 பதக்கங்களை வென்று வித்யா ராம்ராஜ் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்கள் வென்று வரலாறு படைத்துள்ளார்.

  • 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம் - வெண்கலப் பதக்கம் (பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.)
  • 4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டம் - வெள்ளிப் பதக்கம்
  • மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஒட்டம் - தங்கப் பதக்கம். இதன் மூலம் ஒரே ஆசிய விளையாட்டுப் பதிப்பில் 3 பதக்கங்களை வென்று வித்யா ராம்ராஜ் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

புதிய தேசிய சாதனையுடன் பதக்கம் வென்றுள்ள வித்யா ராம்ராஜை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர். பி.டி.உஷாவும் தனது நாற்பது ஆண்டுக்கும் மேலான தேசிய சாதனையை முறியடித்தமைக்காக வித்யாவை பாராட்டியுள்ளார்.

"400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் எனது தேசிய சாதனையை முறியடிப்பது மிகவும் சிறப்பான தருணம்," என பி.டி.உஷா எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் சீனாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

அப்போது பந்தய தூரத்தை அவர் 55.42 விநாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்திருந்தார்.

கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் – மீனா தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள் வித்யா மற்றும் அவரது சகோதரி நித்யா. இவர்களுக்கு சத்யா என்கிற மூத்த சகோதரியும் உள்ளார். இவர்களது தந்தை ராம்ராஜ் ஓட்டுநராகப் பணியாற்றினார். தாய் மீனா மகள்களின் விளையாட்டுக் கனவுக்கு உறுதுணையாக இருந்ததாக இருவரும் பல்வேறு தருணங்களில் பதிவு செய்துள்ளனர்.

தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற இருவரும் தற்போது மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர்.

வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா

வேலவன் செந்தில்குமார்.
படக்குறிப்பு, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர் வேலவன் செந்தில்குமார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

"இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்" என இவர்களை வாழ்த்து தமிழக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜோஷ்னா சென்னையைச் சேர்ந்தவர். இவரது தந்தை அஞ்சன் முன்னாள் ஸ்குவாஷ் வெற்றிவீரராவார், மேலும் இவரது தந்தை தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் உள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் ஸ்குவாஷ் போட்டியில் எட்டு முறை உலக சாம்பியனும், உலகின் முன்னாள் முன்னணி வீரராக இருந்த நிகோல் டேவிட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் ஜோஷ்னா.

ஜோஷ்னா
படக்குறிப்பு, ஜோஷ்னா சென்னையைச் சேர்ந்தவர்

தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர் வேலவன் செந்தில்குமார்.

கடந்த ஆண்டு டேராடூனில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில், ஸ்குவாஷ் இறுதிச்சுற்றில் வேலவன் செந்தில்குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

பரணிகா இளங்கோவன்

 பரணிகா
படக்குறிப்பு, 28 வயதான பரணிகா, தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் கம்பு ஊன்றி தாண்டுதல் (போல் வால்ட்) போட்டியில் தமிழ்நாட்டின் பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தத் தொடரில் கம்பு ஊன்றி தாண்டுதல் (போல் வால்ட்) போட்டி பலோமா மிசுஹோ திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற வீராங்கனை பரணிகா இளங்கோவன் 4.15 மீட்டர் உயரம் தாண்டி கஜகஸ்தானின் போலினா இவனோவாவுடன் வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

28 வயதான பரணிகா, தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மேலும், பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில் ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் பரணிகா படைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிஹரன்

ஹரிஹரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்.
படக்குறிப்பு, ஹரிஹரன்

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய ஆண்கள் அணி சார்பில் கலந்துகொண்ட ஹரிஹரன் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹரிஹரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்.

ஹரிஹரனின் வெற்றி குறித்து அவரது தந்தை அம்சகர்ணன் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "எனது மகன் இந்திய நாட்டுக்காக சர்வதேச அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவரது சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

அடுத்து வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்று பதக்கம் வென்று நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்" என்று தெரிவித்தார்.

மேலும், ஹரிஹரனின் "திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேம்பட்ட வீரர்கKஉக்கான திட்டத்தின் (ELITE Sportsperson Scheme) கீழ் நிதியுதவி பெற்றுவரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது" என முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார்.

கமலினி

மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி
படக்குறிப்பு, கமலினி

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

அந்த அணியில் தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி இடம் பெற்றிருந்தார்.

அவரது சாதனையைப் பாராட்டியுள்ள முதலமைச்சர் விஜய், "கிரிக்கெட் வீராங்கனை கமலினி அவர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும்.

இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினியின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

இளவேனில் வாலறிவன்

உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான இளவேனில் வாலறிவன், கல்வியை முதன்மையாகக் கொண்ட ஒரு குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். இவரது பெற்றோர் இருவருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்றாலும், இளவேனில் விளையாட்டைத் தேர்வு செய்ய அவர்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.
படக்குறிப்பு, இளவேனில் வாலறிவன்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துப்பாக்கிச் சுடுதல் களத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தலான தொடக்கத்தைத் தந்தார்.

உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான இளவேனில் வாலறிவன், கல்வியை முதன்மையாகக் கொண்ட ஒரு குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். இவரது பெற்றோர் இருவருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்றாலும், இளவேனில் விளையாட்டைத் தேர்வு செய்ய அவர்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி, மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு