இந்திய பாதுகாப்பு ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு விற்பனையா? கோவையில் கடற்படை ஊழியர் கைது

- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டதாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேச உளவுப் பிரிவு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
'ஆபரேஷன் ஃபயர்வால்-2026' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, 18 சந்தேக நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் 13 பேர் கடற்படைப் பணியாளர்கள் என்று ஆந்திரப் பிரதேச உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் முதற்கட்டமாகத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சிய சந்தேக நபர்களின் பங்களிப்பு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான ரகசிய தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு அனுப்பப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், விஜயவாடாவில் உள்ள உளவுப் பிரிவு காவல் நிலையத்தில் 2026 செப்டம்பர் 2-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
"இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அக்டோபர் 1 அன்று 'ஆபரேஷன் ஃபயர்வால்-2026' நடத்தப்பட்டது. இதற்காக 12 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கோவா, டெல்லி, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களிலும் இந்தக் குழுக்கள் விசாரணை மேற்கொண்டன.
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீஸாருடன் ஒருங்கிணைந்து, சந்தேக நபர்களின் பங்களிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சில மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று ஆந்திரப் பிரதேச உளவுப் பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் உளவுவேலை
விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு, கடற்படைப் பணியாளர்களுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் முகவர்களுக்கும் இடையே ரகசியத் தொடர்புகள் இருந்ததை விசாரணையில் கண்டறிந்துள்ளதாக ஆந்திரப் பிரதேச உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விஜயவாடாவில் உள்ள உளவுப் பிரிவு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால், சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே அக்டோபர் 1 அன்று 'ஆபரேஷன் ஃபயர்வால்-2026' நடத்தப்பட்டது.
ஒப்பந்த ஓட்டுநர் கைது
விசாகப்பட்டினத்தில் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவரது அடையாளம், சொந்த ஊர் மற்றும் குடும்பப் பின்னணி குறித்த எந்த விவரங்களையும் காவல்துறை வெளியிடவில்லை.
கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான ரகசிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் அவர் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இத்தகவல்களை வழங்கியதற்காக அவர் பணம் பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவையில் கடற்படை ஊழியர் கைது
குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் கடற்படை தொடர்பான முக்கிய தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் முகவர்களிடம் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து டிரான்சிட் வாரண்ட் பெற்று, அவரை விஜயவாடாவுக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர்.
அங்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, இருவருக்கும் அக்டோபர் 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
கோவையில் கைது செய்யப்பட்ட நபர் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் பணியாற்றி வந்தவர். மற்றொருவர் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர்.
மீதமுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிடிஐ செய்தியை மேற்கோள்காட்டி 'எகனாமிக் டைம்ஸ்' இணையதளம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் 'ஹனிடிராப்'
ஏஎன்ஐ செய்தி நிறுவன அறிக்கையின்படி, 'ஹனிடிராப்' முயற்சிகள் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பெண்கள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இந்தியர்களுடன் பழகியதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் உரையாடல்கள், குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் இந்தத் தொடர்புகளை அவர்கள் வளர்த்துக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. ஆபாசப் புகைப்படங்கள், பாலியல் ரீதியான ஆசை வார்த்தைகள் மற்றும் பணம் கொடுப்பதாகக் கூறி, பாதுகாப்பு தொடர்பான தகவல்களைச் சேகரிக்க அவர்கள் முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடியோ அழைப்புகளின்போது கடற்படைத் தளங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் காண்பிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
'ஜோஷிதா பால்', 'அன்வி மேத்தா' என்ற பெயர்களில்...
விசாரணையின்போது, 'ஜோஷிதா பால்', 'அன்வி மேத்தா' ஆகிய பெயர்களில் செயல்பட்ட சமூக வலைதளக் கணக்குகளையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவன அறிக்கையின்படி, 'ஜோஷிதா பால்' என்ற பெயரில் செயல்பட்ட நபர், மும்பையில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண்ணாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஃபேஸ்புக் மூலம் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், வாட்ஸ்அப் மூலம் அவருடன் தொடர்ந்து உரையாடியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் இயக்கம், அவற்றின் எண்ணிக்கை, புகைப்படங்கள் மற்றும் அவற்றின் கட்டளை அதிகாரிகளின் விவரங்களை வழங்குமாறு அந்த நபர் கேட்டுக்கொண்டதாக, ஆந்திரப் பிரதேச உளவுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
அதேபோல், 'அன்வி மேத்தா' என்ற பெயரில் செயல்பட்ட மற்றொரு கணக்கின் பின்னால் இருந்த நபர், டெல்லியில் பணிபுரியும் உளவியலாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் கடற்படைப் பணியாளர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஜோஷிதா பால்', 'அன்வி மேத்தா' என்ற பெயர்களில் செயல்பட்ட நபர்கள் குறித்த வேறு எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

கிரிப்டோ பணப் பரிவர்த்தனையா?
இந்திய மொபைல் எண்களும், வாட்ஸ்அப் கணக்கு தொடங்குவதற்கு தேவையான ஓடிபிக்களும் பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை விசாரணையில் கண்டறிந்துள்ளதாக ஆந்திரப் பிரதேச உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஓடிபிக்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் வாட்ஸ்அப் கணக்குகளைத் தொடங்கி அவற்றின் மூலம் மேலும் பலரைத் தொடர்பு கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கிரிப்டோ கரன்சி மற்றும் இடைத்தரகர்கள் மூலமாகப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றனவா என்ற கோணத்திலும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வெளிநாட்டு கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்கள் மற்றும் உள்ளூர் இடைத்தரகர்கள் மூலம் நிதிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதை விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தொடரும் விசாரணை
இந்த வழக்கில் மொத்தம் 18 சந்தேக நபர்களின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய சந்தேக நபர்களின் பங்களிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பாக என்னென்ன தகவல்கள் கசிந்துள்ளன, சந்தேக நபர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தனர், நிதிப் பரிவர்த்தனைகள் எவ்வாறு நடைபெற்றன என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































