ராகுல், மோதியுடன் அடுத்தடுத்த நாட்களில் சந்திப்பு – முதல்வர் விஜயின் நிலைப்பாடு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், CMOTamilNadu/X
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த நிகழ்வுகளில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும், பிரதமர் மோதியுடனும் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
ராகுல் காந்தியுடனான சந்திப்பு, ஏற்கெனவே திட்டமிட்டதாகத் தெரியவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நிர்ப்பந்தித்து ராகுலை வரவழைத்து மோதி வருவதற்கு முதல் நாளில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் திமுக கூறியுள்ளது.
அரசியலில் எல்லோருக்கும் இணக்கமானவராக முதல்வர் விஜய் இருக்கிறார் என்று பாஜக கூறுகிறது.
திமுகவைப் போல எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்க்காமல் முறையாகக் கோரிக்கை வைத்து, மாநிலத்துக்குத் தேவையானதை பெறுவதற்கு முதல்வர் விஜய் முயற்சி செய்வதில் தவறில்லை என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
ராகுலை தவெக கட்சித்தலைவராகவும், பிரதமர் மோதியை தமிழக முதல்வராகவும் விஜய் சந்தித்தாக விளக்கமளித்துள்ளார் தமிழக அமைச்சர் ராஜ்மோகன்.
ராகுலுடன் உணவு; பிரதமர் மோதியுடன் ரயில் பயணம்!

பட மூலாதாரம், Tamil Nadu Congress Committee/X
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 10, 11 ஆகிய இரு தேதிகளில் முதல்வர் விஜய் பங்கேற்ற இரு நிகழ்வுகள் மிகவும் கவனம் பெற்றன.
முதல் நாளில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை அவர் சந்தித்தார். நீலாங்கரையிலுள்ள முதல்வர் விஜய் வீட்டுக்கு ராகுல்காந்தி வந்தார். பின்பு இருவரும் காரில் பயணித்து ஒரு கஃபேயில் கலந்துரையாடினர்.
அடுத்த நாள் அக்டோபர் 11-ஆம் தேதியன்று, சென்னை வந்த பிரதமர் மோதி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து போரூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை 'ரோட் ஷோ' சென்ற அவருடைய காருக்குப் பின்னால் முதல்வர் ஜோசப் விஜய் காரில் பின்தொடர்ந்தார்.
பின்பு, இருவரும் இணைந்து புதிதாகத் துவக்கப்பட்ட பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் ரயிலில் பயணம் செய்தனர். அதன் பின்பு ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோதி பேசினார்.
குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்ததாக அப்போது கூறிய மோதி, "பிரதமர் ஆன பிறகும் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டது" என்றார்.
தமிழ்நாட்டில் அரசுகள் மாறினாலும் இங்குள்ள மக்களுக்கு சேவை செய்யும் மனநிலையில் தொடர்ந்து தான் இருந்து வந்துள்ளதாகவும் இதே நிலைப்பாட்டுடன் ஜோசப் விஜயுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், CMOTamilNadu/X
அவருக்கு முன்பாகப் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், ''மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அது மக்களின் வாழ்வில் நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்." என்று பேசியதுடன், கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டு வருவதைப் பரிசீலிக்குமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.
"ஓசூரிலிருந்து தமிழ்நாடு–கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ திட்டம் குறித்து மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்திய முதல்வர் விஜய், கோதாவரி-காவிரி இணைப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவேண்டும், தமிழக அரசுக்கு வரவேண்டிய ரூ. 5,110 கோடி கல்வி நிதியை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அடுத்தடுத்த நாட்களில் ராகுல் காந்தியையும், பிரதமர் மோதியையும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துப் பேசியது, தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பேசுபொருளாக மாறியது.

பட மூலாதாரம், CMOTamilNadu/X
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் தடம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், ''வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் நான் கொள்கிறேன்.'' எனக் குறிப்பிட்டதுடன், ''தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும்'' என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், தனது தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இத்திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் அடிக்கல் நாட்டப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
மத்திய அரசின் நிதி வராத சூழலிலும் மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்கியதாக அவர் கூறியிருந்தார். அதன்பின்பு, பிரதமரை சந்தித்துக் கோரிய அடிப்படையில் 63,246 கோடி ரூபாயை ஒதுக்க 2024-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை மறுக்கும் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், செய்தித்தொடர்பாளருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ''இந்த வழித்தடத்துக்கு ஒன்றிய பாஜக அரசு எந்த நிதிப்பங்களிப்பும் தரவில்லை. கடன் வாங்குவதற்கு ஒப்புதல் மட்டுமே தந்தது. மாநில அரசின் கீழுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) கடன் வாங்கியுள்ளது. அதைத் திருப்பிச் செலுத்த வேண்டியது இந்த நிறுவனமும், மக்களும்தான். இந்த பணி திமுக ஆட்சியில் 99 சதவீதம் முடிந்துவிட்டது. சோதனை ஓட்டம் நடத்தி துவக்கியது மட்டுமே தவெக. இதில் பிரதமர் மோதியை அழைத்து வந்து துவக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?'' என்றார்.
சென்னை மெட்ரோ திட்டம் 2 வது பகுதியின் (பேஸ் –2) ஒரு பகுதியாக இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேஸ் 2 திட்டத்துக்கு, மத்திய அரசு எந்த நிதிப்பங்களிப்பும் வழங்கவில்லை என்று திமுக குற்றம் சாட்டுகிறது. மொத்தத் தொகைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டதாக அதிமுக தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான நிதி பெரும்பாலும் கடனாகவே வாங்கப்பட்டுள்ளதாக சிஎம்ஆர்எல் குறிப்பு கூறுகிறது.
இதுகுறித்து சிஎம்ஆர்எல் அதிகாரிகள் யாரும் விளக்கமும் அளிக்காத நிலையில், அவர்கள் யாரிடமும் பதிலும் பெறமுடியவில்லை. ஆனால் சிஎம்ஆர்எல் வெளியிட்ட 2024–2025 வருடாந்திர அறிக்கையில் இத்திட்டத்துக்கான நிதி ஆதாரம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிலுள்ள தகவலின்படி, இத்திட்டத்துக்கான மொத்தச் செலவு ரூ.63,246.4 கோடியில் மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.7424.9 கோடி பங்களிப்பாக வழங்குகின்றன.
கையகப்படுத்தப்படும் நிலம், மறுவாழ்வு, மாநில வரிகள் உள்ளிட்ட செலவுகளுக்கான தமிழ்நாடு அரசின் கூடுதல் துணைக்கடன் ரூ.13,339.4 கோடி வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.33,593.5 கோடி நிதி (69.2 சதவீதம்), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் இருந்து கடனாகப் பெறப்படுகிறது.

''இதில் ராகுல் காந்தியுடனான சந்திப்பு, ஏற்கெனவே திட்டமிட்டதாகத் தெரியவில்லை. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நிர்ப்பந்தித்து ராகுலை வரவழைத்து, மோதி வருவதற்கு முதல் நாளில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இன்றைக்கு தவெக அரசு நடந்து கொண்டிருப்பது, பாஜக அரசால்தான். அதற்கு நன்றியாகத்தான் தனது குருவை அழைத்து வந்து முதல்வர் விஜய் முதல் மரியாதை செய்திருக்கிறார்.'' என்றார் கான்ஸ்டன்டைன்.
பிரதமராக 12 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களையே சந்திக்காத ஒரே பிரதமர் மோதி என்றால், இதுவரை பத்திரிகையாளர்களையே சந்திக்காத முதல் தமிழக முதல்வராக விஜய் இருப்பதிலிருந்தே, அவருக்கு யார் அரசியல் வழிகாட்டி என்பது தெரியுமென்றார் எம்.பி.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
மத்திய அரசுடன் இணக்கமான உறவு என்பதெல்லாம் பொய் என்றும், காங்கிரசை விஜய் மதிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கருத்தை மறுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, ''அரசியல் கொள்கை வேறு, அரசு நிர்வாகம் வேறு என்பதில் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமரை வைத்துத் துவக்கி, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தமிழகத்துக்கு கூடுதல் நிதி பெறமுடியுமென்று அவர் நினைக்கிறார். அதேநேரத்தில் மத்திய அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு அவர் பயப்படுவதாகக் கூறுவதை ஏற்கமுடியாது.'' என்றார்.

மேலும் பேசிய கோபண்ணா, ''ராகுல் காந்தியுடன் இருந்தபோது முதல்வர் விஜய் மகிழ்வோடு காணப்பட்டார். ஆனால் பிரதமர் மோதியுடன் இருக்கும் போது மிகவும் இறுக்கமாக இருந்தார். அவர் எந்த நிலையிலும் பாஜக எதிர்ப்பு அணியில்தான் இருப்பார் என்பது என் நம்பிக்கை. இப்போது முதல்வர் விஜய் வைத்த நிதி கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை பாஜகவை கடுமையாக எதிர்த்த திமுகவும் கேட்டது. அப்போதும் கிடைக்கவில்லை. இப்போது இவர் இணக்கமாக இருந்து கேட்கிறார். அவர் கேட்டது கிடைக்காவிட்டாலும் இந்த அரசு நடக்கத்தான் செய்யும்.'' என்றார்.
இரு அரசுகளும் இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சியை அடைய முடியும் என்று பிரதமரும், முதல்வரும் சேர்ந்து கூறியிருப்பதைப் பற்றி பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ''வளர்ச்சி என்பது வேறு. மாநில உரிமை என்பது வேறு'' என்கிறார்.
கல்வி நிதி விடுவிப்பு, கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் உட்பட மாநில அரசின் தேவைகளை முதல்வர் விஜய் பட்டியலிட்டதறகு பிரதமர் மோதி ஏன் எந்த பதிலுமே தராமல் போனார் என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது என்றார்.
''மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும் என்பது பாஜக நிலைப்பாடு. ஒன்று அதை மாநில அரசு ஏற்க வேண்டும் அல்லது இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறோம், நிதி வேண்டாம் என்று கூறவேண்டும். எதிர்க்கவுமில்லை ஏற்கவுமில்லை என்பது என்ன நிலைப்பாடு... சென்னையில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் அவர் பங்கேற்காமல் அமைச்சர்களை அனுப்புகிறார். அவர்கள் சொல்வதை எப்படி கட்சியின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ள முடியுமென்று தெரியவில்லை.'' என்றார் பத்திரிகையாளர் ப்ரியன்.

''ராகுல்காந்தியை விஜய் உடன் சந்திக்க வைத்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஏற்பாடு. ராகுலையும், மோதியையும் அடுத்தடுத்த நாட்களில் சந்திப்பதை வைத்து, தவெக இப்படித்தான் என்று எந்த முடிவுக்கும் வரமுடியாது. இப்போதைக்கு பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல அவர் இருக்கிறார். வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் நினைக்காத ஒரு முடிவை விஜய் எடுக்கவே வாய்ப்பு அதிகம்.'' என்றார் ப்ரியன்.
ஆனால் முதல்வர் விஜயை பொறுத்தவரை, அவர் எல்லாக் கட்சிகளுடனும் இணக்கமாக இருப்பதை விரும்புவதாகவே தெரிகிறது என்கிறார் பாஜக விவசாய அணியின் மாநிலச் செயலாளர் ஜி.கே.நாகராஜ்.
ராகுல் காந்தி, பிரதமர் மோதியுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு, அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

''திமுக செய்ததுபோல, கண்மூடித்தனமாக பாஜகவை, இந்துத்துவத்தை அவர் எதிர்ப்பதில்லை. தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராதவிதமாகத்தான் அவர் முதல்வராகியிருக்கிறார். ஆனால் அவருடைய செயல்பாட்டை வைத்தே எதிர்காலத்தில் மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள். அதனால் திமுகவைப் போல எதற்கெடுத்தாலும் பிரதமர் மோதியையும், மத்திய அரசையும் எதிர்த்துக் கொண்டிருக்காமல் இணக்கமாகச் சென்று, நிதியையும் திட்டங்களையும் வாங்க நினைக்கிறார்.'' என்றார் ஜி.கே.நாகராஜ்.
பிரதமர் மோதி தமிழகத்துக்கு வருவதற்கு முதல் நாளில் ராகுல் காந்தி, இங்கு வந்து முதல்வர் விஜயைச் சந்தித்தது அக்கட்சியினர் செய்த திட்டமிட்ட செயல் என்ற ஜி.கே.நாகராஜ், ''ஸ்டாலின் போல மோதியை விஜய் எதிர்க்க மாட்டார் என்பது ராகுலுக்குத் தெரியும். ஆனால் தங்களுடன் கூட்டணியில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே மோதி வருவதற்கு முதல் நாளில் அவர் வந்திருந்தார்.'' என்றார்.
''ராகுலை சந்தித்தது கட்சித்தலைவராக...மோதியை சந்தித்தது முதல்வராக!''
ஆனால் மத்திய அரசுடனும், காங்கிரசுடனும் இணக்கமாக இருப்பதற்காக, மத்திய அரசு எடுக்கும் முடிவையும் முதல்வர் விஜய் தட்டிக்கேட்காமல் இருக்கிறார் என்கிறார் எழுத்தாளரும் வழக்கறிஞருமான ச.பாலமுருகன்.
இதனால் அவருடன் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளே, தொடர்ந்து பயணிக்க முடியுமா என்ற அச்சத்தில் இருப்பதாகச் சொல்கிறார் அவர்.
பிபிசியிடம் பேசிய ச.பாலமுருகன், ''ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் போராடிய இளைஞர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்ட, இடதுசாரி தலைவர்கள் தாக்கப்பட்ட நாளில், ராகுல்காந்தி தமிழகம் வந்து விஜய் உடன் கைகுலுக்கி, காபி குடிக்க வேண்டிய அவசியமேயில்லை.'' என்றார்.
''மத்திய அரசு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் நிதி, அனுமதி எதுவுமே தரவில்லை. இவற்றைத் தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மோதியுடன் முதல்வர் விஜய் கை கோர்க்க வேண்டிய அவசியம் என்ன? டெல்லியில் போராட்டம் காரணமாக பல மெட்ரோ ரயில் நிலையங்களை மூடிவிட்டு, சென்னையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமர் மோதி துவக்கி வைப்பது நகைமுரண்.'' என்றார் அவர்.
இதுகுறித்து கருத்து கேட்பதற்காக தவெக தரப்பில் பலரை தொடர்பு கொண்டபோதும் யாரிடமும் பதில் பெறமுடியவில்லை.
இந்த சந்திப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ராஜ்மோகன், ''எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை தவெக தலைவராக முதல்வர் விஜய் சந்தித்தார். பிரதமர் மோதியுடனான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக அவர் பங்கேற்றார். நதிநீர் இணைப்பு, பள்ளிக்கல்வி நிதி விடுவிப்பு, தமிழ் வழக்காடு மொழி உள்ளிட்ட தமிழகத்தின் தேவைகளை விரிவாக முன் வைத்தார். இத்தகைய நாகரீக அரசியலை முதல்வர் விஜய்யிடம் மற்ற தலைவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.'' என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































