4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு 4 மரண தண்டனைகள் - முழு பின்னணி

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - மத போதகருக்கு நான்கு மரண தண்டனைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்

நான்கு சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை 47 வயதான மதபோதகர் எஸ். ஆபிரகாமுக்கு நான்கு மரண தண்டனைகள் மற்றும் 52,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளத்தில் ஜெபக்கூடம் நடத்தி வந்த ஆபிரகாம், பைபிள், இசை மற்றும் நன்னெறி வகுப்புகளை நடத்துவதாகவும், விடுமுறைக் காலங்களில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதாகவும் கூறி சிறுமிகளை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

"மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம். அங்கு ஒருவரது வீட்டுக்கு சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். முதலில் மூன்று சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். பிறகு நான்காவதாக மற்றொரு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்."

"அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூற அதன் பிறகே இந்தக் குற்றம் குறித்துத் தெரிய வந்தது. அப்போதுதான் அவர் மற்ற மூன்று சிறுமிகளிடமும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது" என்று திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா தெரிவித்தார்.

சுற்று வட்டாரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மத போதகருக்கு நான்கு மரண தண்டனைகள்

பட மூலாதாரம், Getty Images

நன்கு அறிமுகமானோர் மூலமாகவே பாலியல் துன்புறுத்தல்

தேசிய குற்ற ஆவண காப்பகம் 2024 தரவுகளின்படி, 90% அதிகமான குழந்தை துன்புறுத்தல்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானோர் மூலமாகவே ஏற்படுகிறது.

"குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்கள் பொதுவாக அந்தக் குழந்தைகள் மீது அதிகாரம் செலுத்துவார்கள். அது பள்ளி ஆசிரியராக இருக்கலாம், குடும்பத்தில் ஒருவராகவோ அல்லது உறவினராகவோ இருக்கலாம் அல்லது மத ரீதியான பொறுப்பில் இருப்பவர்களாகவும் இருக்கலாம். அத்தகைய நபர்கள் மீது குழந்தை புகார் தெரிவித்தால், 'அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்' என்பதுதான் பெரும்பாலான நேரங்களில் பெரியவர்கள் கூறும் பதிலாக இருக்கும்" என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் அ. தேவநேயன்.

குழந்தையைத் துன்புறுத்தும் நபர் முதல் நாளிலேயே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட மாட்டார் என்றும் குழந்தைகள் தமக்கு அசௌகரியம் ஏற்படுவதாகக் கூறும்போது அதை புறந்தள்ளக்கூடாது என்றும் கூறுகிறார் தேவநேயன்.

"குழந்தையிடம் பல நாட்கள் பழகி சிரித்துப் பேசி, இனிப்புகள் வழங்கி, தனியாக வரவழைப்பார். முதலில் தொடுவது, தடவிப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார். இந்த நிலையிலேயே குழந்தைகள் பெற்றோரிடமோ, அல்லது தங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடமோ இதை கூறக்கூடும். அப்படிக் கூறும்போது, 'தெரியாமல் கை பட்டிருக்கும். சும்மா இரு' என்று குழந்தைகளின் புகாரை நிராகரிக்கக் கூடாது" என்று அவர் வலியுறுத்துகிறார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் "8 வயது சிறுமி ஒருவரும், அதே குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிகள் இருவரும், 12 வயதுடைய ஒரு சிறுமியும் அடங்குவர். இவர்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கி 2022 வரை அவ்வப்போது நடைபெற்றுள்ளதாக" அரசு வழக்கறிஞர் பி.உஷா கூறுகிறார்.

மத போதகருக்கு நான்கு மரண தண்டனைகள்

பட மூலாதாரம், Devaneyan

'யாரிடமும் சொல்லக்கூடாது' என மிரட்டல்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

எட்டு வயது சிறுமி தனக்கு உடல்நல பாதிப்பு இருப்பதாக தாயிடம் கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மற்ற மூன்று சிறுமிகளும் முன்வந்து தங்களையும் ஆபிரகாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தங்களது தாய்மார்களிடம் தெரிவித்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, 'இந்த விவரத்தை யாரிடமும் கூறக்கூடாது' என ஆபிரகாம் மிரட்டியுள்ளார்.

"சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்ததை பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 2022 ஜூலை 5ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆபிரகாம் கைது செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகத்தின் மேற்பார்வையில், ஆறு மாதங்களுக்கு முன் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. வாரந்தோறும் வழக்கின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பைப் பெறும் அளவுக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி தெரிவித்தனர்.

மத போதகருக்கு நான்கு மரண தண்டனைகள்

பட மூலாதாரம், Getty Images

நான்கு மரண தண்டனைகள்

வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. சுரேஷ்குமார், நான்கு குற்றச்சாட்டுகளிலும் ஆபிரகாம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக மரண தண்டனை விதித்தார்.

இந்த வழக்கு "அரிதினும் அரிதானது" என்ற வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, நான்கு சிறுமிகள் மீது வன்புணர்வு வகையிலான பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டு இருப்பது மிகவும் கொடூரமான குற்றம் எனத் தெரிவித்தார். "குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டிய நிலையில் இருந்த ஆபிரகாம் அவர்களையே தனது இரையாக மாற்றியதுடன், தனது செயலுக்காக எந்தவித உண்மையான வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை" என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

விசாரணை அதிகாரி ராதா சேகரித்த மருத்துவச் சான்றுகள், சிறுமிகள் மீது வன்புணர்வு (penetrative) வகையிலான பாலியல் வன்கொடுமை நடைபெற்றதை நிரூபிப்பதில் முக்கிய ஆதாரமாக அமைந்திருந்தன.

"நீதிமன்றத்தில் சிறுமிகள் கூறிய வாக்குமூலம் இந்தத் தீர்ப்பு கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது. அவர்களின் பெற்றோர்களும் சாட்சியமளித்துள்ளனர்" என்று அரசு வழக்கறிஞர் பி.உஷா தெரிவித்தார்.

இந்த வழக்கில் 2022லேயே சில சாட்சியங்களை விசாரித்து இருந்ததாகக் கூறும் அவர், " பாலியல் வன்புணர்வு ஏற்பட்டது என்பது சிறுமிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். சிறுமிகளை மருத்துவ ஆய்வு செய்த மருத்துவரின் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது" என்றார்.

மத போதகருக்கு நான்கு மரண தண்டனைகள்

பட மூலாதாரம், Getty Images

போக்சோ வழக்குகளில் தண்டனை விகிதம் குறைவு

போக்சோ வழக்குகளில் தண்டனை பெறும் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டும் தேவநேயன், "2024இல் சுமார் 6,900க்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவாகின. மக்கள் முன்வந்து புகார் தெரிவிக்கிறார்கள், வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் போக்சோ வழக்கில் தண்டனை கிடைக்கும் விகிதம் 25% மட்டுமே" என்றார்.

பல்வேறு மட்டங்களில் இதற்கென தனி அலுவலர்கள் இல்லாததே, வலுவான சட்டம் இருந்தும் அதன் அமலாக்கம் பலவீனமாக இருப்பதற்குக் காரணம் என்கிறார் தேவநேயன்.

"போக்சோ வழக்குகள் கூடுதல் பொறுப்பாகவே அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. நாள் முழுவதும் பிற குற்ற வழக்குகளைக் கையாளும் ஒரு காவலர் எப்படி குழந்தைநேய வழிமுறைகளுடன் போக்சோ வழக்குகளைக் கையாள முடியும்? போக்சோ வழக்கில் விசாரணையின்போது சீருடையில் செல்லக்கூடாது. பிரத்யேக அலுவலர் இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும்? போக்சோ சட்டத்தின்படி, மாவட்டத்திற்கு ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றம் இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் 20 மட்டுமே உள்ளன. அதாவது கிட்டத்தட்ட 50% இடங்களில் சிறப்பு நீதிமன்றம் இல்லை" என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இந்த ஆண்டு மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 17 போக்சோ வழக்குகளில் தண்டனைத் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவற்றில் இரண்டு வழக்குகளில் மரண தண்டனையும், நான்கு வழக்குகளில் உயிருள்ளவரை ஆயுள் தண்டனையும், ஒரு வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

மத போதகருக்கு நான்கு மரண தண்டனைகள்

பட மூலாதாரம், K Chandru

படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு

நான்கு மரண தண்டனைகள் ஏன்?

ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே மரண தண்டனை நிறைவேற்ற முடியும் எனும் பட்சத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் வழங்குவதற்குக் காரணமென்று பிபிசி தமிழ் கேட்டபோது, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு அதுகுறித்து விளக்கமாக பதிலளித்தார்.

"உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் ஓர் அமர்வு நீதிபதி, நான்கு மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தார். அவரிடம் விசாரணைக்கு வரவிருந்த 100 கொலை வழக்குகளை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை எமனுடன் ஒப்பிட்டு ஹிந்தி பத்திரிகை ஒன்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டது" என்று கூறும் நீதிபதி சந்துரு, தற்போதைய தண்டனைக்குப் பெரும்பாலும் ஊடக தாக்கம் முக்கியக் காரணம் என்றார்.

"உண்மையில், 'அரிதானவற்றில் அரிதானது' என்ற சொல் இன்னும் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. குற்றமா, குற்றவாளியா, பொது மக்கள் மீதான தாக்கமா அல்லது சமூகத்தின் மீதான தாக்கமா என்பது வரையறுக்கப்படவில்லை" என்றார்.

மதுரை பொத்தும்பு கிராமப் பள்ளி மாணவிகள் வழக்கை குறிப்பிட்ட அவர், "இருபது பேர் தலைமை ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் 55 ஆண்டுகள் மட்டுமே கடுங்காவல் ஆயுள் தண்டனை வழங்கியது" என்று சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், "ஒரு மரண தண்டனையை வழங்குவது அல்லது குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல மரண தண்டனைகளை வழங்குவது, இது போன்ற குற்றங்களில் கடுமையான தண்டனைகளைக் கோரும் மக்களுக்காக வழங்கப்படுவதே தவிர, இதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை" எனக் குறிப்பிட்டார்.

அதோடு, "அரிதிலும் அரிதான குற்றம் எது என்பதை இதுவரை யாரும் விளக்கவில்லை. மறுபுறம், பெரும்பாலான மரண தண்டனைகளில் கீழ் நீதிமன்றம் தவறான சோதனையைப் பயன்படுத்தி இருப்பதை உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. மனிதத் தன்மையற்ற குற்றங்களுக்கு மனிதத் தன்மையற்ற தண்டனைகளை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஏனெனில் நமது தண்டனை முறை சீர்திருத்தத்தின் அடிப்படையிலானது மற்றும் பழிவாங்கும் முறையிலானது அல்ல" என்று அவர் விளக்குகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு