மதுராந்தகத்தில் விஜய் பேசியது என்ன? திமுக, அதிமுக, இடதுசாரிகள் என்ன சொல்கின்றன?

தவெக மதுராந்தகம் வேட்பாளர் மரகதகம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்தார்.
    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்ததாகக் கூறிய அவர், தவெக ஆட்சி கலையும் என்ற திமுகவினரின் கனவு கலையும் என்று தெரிவித்தார்.

முதல்வர் விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்சி கலையும் என்ற திமுக கனவு கலையும் என்ற அவரது விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள திமுக, "அரசியல் புரிதல் இல்லாமல் முதலமைச்சர் பேசி வருகிறார், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளே இன்று எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் விரைவில் ஆட்சி கவிழும்" என்று கூறியுள்ளது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரி கட்சிகள், 'ஆதாயம் தேடியே மரகதம் குமரவேல் தவெகவில் சேர்ந்துள்ளார். இதில் குதிரை பேரம் நடந்திருக்கிறதா என்பது ரகசியமாகவே உள்ளது.' என்று விமர்சித்துள்ளனர்.

"கட்சிக்கு துரோகமிழைத்த மரகதம் குமரவேலுவுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்" என்று அதிமுக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இவர்கள் தவிர, நாம் தமிழர் கட்சியும் ஆளும் தவெக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

முதலமைச்சர் பேசியது என்ன?

தவெக மதுராந்தகம் வேட்பாளர் மரகதகம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்தார்.
படக்குறிப்பு, தவெக மதுராந்தகம் வேட்பாளர் மரகதகம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்தார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் தலைவர்கள் களத்தில் பிரசாரத்தை முன்னரே தொடங்கிவிட்டனர்.

தவெக மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், திமுக, அதிமுக மீதான கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

"108 இடங்களில் வென்ற நாம் ஆட்சியமைக்க கூடாது என திமுக, அதிமுகவும் ஒரு கூத்து நடத்தினார்கள். அதிமுக பாஜகவின் ஒரு பிரிவு, ஆனால் இப்போது அதிமுக திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. எப்படி பார்த்தாலும் இரண்டே பேருக்கும் இடையேதான் போட்டி. தீய சக்தி திமுகவுக்கும், தூயசக்தி தவெகவுக்கும் இடையேதான் போட்டி. எனது கேள்வி எப்போதும் ஸ்டாலினுக்குதான்.

நான் ஒரு பாலத்தில் ஆய்வு செய்ய சென்றால், அது நாங்கள் கட்டியது என திமுக சொல்கிறது. அந்தப் பாலத்தை உங்கள் வீட்டில் காசில் கட்டினீர்களா ஸ்டாலின் சார்? ஆட்சியமைக்கும் போது மக்களிடம் அவகாசம் கேட்டேன். இப்போது விஜய் அரசும் கடன் தான் வாங்குகிறது என்கிறார்கள். நான் மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன், கொள்ளையடிக்க அல்ல. ஆறு சிலிண்டர் தருவதாக சொன்னேன், இப்போது நிதிநிலையை கருத்தில் கொண்டு 3 சிலிண்டர் தந்துள்ளேன். " என்று அவர் கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும் தொடர்ந்த அவர், "திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க அதிமுக முயற்சி செய்ததால் அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் மனவலி ஏற்பட்டது. இதனால்தான் மரகதம் குமரவேல் நம்மிடம் வந்து சேர்ந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல எனக்கும் திமுக தான் எதிரி.

எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவார்கள். இப்போது என்ன ஆச்சு, பாஜகவே மூச்சுவிட திணறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல. எப்போது தொகுதி மறுவரையறை மசோதா திரும்ப வரும், எப்போது பாஜகவுடன் சேரலாம் என திமுக காத்துக்கொண்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக வென்றுவிட்டால், ஜனவரி மாதத்தில் தவெக ஆட்சி கலையும் என திமுக பேசுகிறது. திமுக, பாஜக, அதிமுக எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்." என்றார்.

"நம் மீது எந்தக் குற்றச்சாட்டு வைக்க முடியவில்லை என்ற விரக்தியில், தமிழக பெண்களை அசிங்கமாக திமுக பேசுகிறது. இதனை ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பார்த்து ரசிக்கிறார்கள்.

தமிழகத்தில் இளம்பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருவன் இத்தனை ஆண்டுகளாக சீரழித்துக்கொண்டு இருந்துள்ளான். அந்த வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளார்கள். இதுபற்றி தமிழகமே கேள்வி கேட்கிறது, வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார். இந்த விவகாரத்தில் அதிமுகவும் வாயை திறக்கவில்லை. இதில் கூடவா கூட்டு?" என்று விஜய் பேசினார்.

விஜய்க்கு ஸ்டாலின் பதில்

வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே தேசிய ஜனநாயக கூட்டணி எம் எல் ஏக்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? என்று விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், "சட்டமன்றத்தில் பா.ஜ.க. என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக் கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென நேரலையில் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை பாஜகவை எதிர்த்து பேசாமல் அமைதிப் புரட்சி மட்டுமே செய்து சரணாகதி ஆகியிருக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.

"பெண்களை தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் விர்ச்சுவல் அப்யூசர்களின் ட்ராக் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள். ஜெம் வீரமணி வழக்கைப் பற்றி வாய திறங்க ஸ்டாலின் சார்" என உரத்த குரலில் பேசிய நீங்கள் உங்கள் ஸ்கிரிப்ட் பேப்பரை அப்டேட் செய்யாமல் வந்துவிட்டீர்களா? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன், பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும். இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூட அதிகாரிகள் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

"கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, "எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்"- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

"முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா? என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் சிஎம் சார்" என்று அவர் குறிப்பிட்டார்.

இடைத்தேர்தலில் திமுக வென்றுவிட்டால், ஜனவரி மாதத்தில் தவெக ஆட்சி கலையும் என திமுக பேசுவதாக முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலளித்துள்ளார். பிபிசியிடம் பேசிய அவர், "தவெகவுடன் இருப்பவர்களே கண்டன குரல்களை எழுப்ப தொடங்கி இருப்பதால் ஆதரவு தெரிவித்தவர்களே ஆட்சி கவிழ காரணமாக இருப்பார்கள்" என்றார்.

இடதுசாரிகள் விமர்சனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்
படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்

இடைதேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள இடதுசாரிக் கட்சிகள் தவெகவுக்கு எதிரான பிரசாரங்களை முன் வைத்து வருகின்றனர்.

இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் சுயேட்சை எம் எல் ஏ வாக இருந்திருக்கலாம் , ராஜிநாமா செய்யவும், தவெகவில் இணைய வேண்டிய அவசியமும் ஏன் வந்தது" என்றார் அவர்.

"தவெகவில் ஐக்கியமானதன் பின்னணியில் என்ன வாக்குறுதி வழங்கப்பட்டது, என்ன பேரம் நடைபெற்றது என்பதெல்லாம் ரகசியமாகவே இருக்கிறது. என்ன வாக்குறுதி தவெகவினரால் வழங்கப்பட்டது என்பது எல்லாம் இன்னும் ரகசியமாகவே உள்ளது. ஆனால், ஆதாயம் இல்லாமல் அங்கே போய் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பே இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், " த.வெ.க-விற்கு வெளியே இருந்து ஆதரவு என்பது கட்சி எடுத்த முடிவு. ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதனையும் கட்சி முடிவு செய்யும்." என்று அவர் கூறினார்.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம் எல் ஏ வாக இருந்தவர்கள் ஏன் ராஜினாமா செய்தார்கள் என்பதை மக்கள் கேட்க வேண்டும்" என்றார்.

'துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்'

மதுராந்தகம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
படக்குறிப்பு, மதுராந்தகம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

"ஒரு கட்சியில் இருந்து எம் எல் ஏ ஆன பிறகு கட்சி தாவியவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் நேற்று ( செப் 24) பிரசாரத்தை தொடங்கிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவின் சார்பில் அத்தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு தவெக கட்சிக்குத் தாவிய மரகதம் குமாரவேலுக்கு, எதிர்காலத்தில் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடத் துணியாத அளவிற்கு வாக்காளர்கள் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் " என்றார் .

கட்சி மாறியவர்களின் முடிவு குதிரைப்பேரத்தின் விளைவு என்று விமர்சனத்தை முன் வைத்த அவர், இதுபோன்ற துரோகிகளுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு