'நான் ஏன் பர்கர் சாப்பிட்டேன்?' - காக்ரோஜ் ஜனதா கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விஜேதா தஹியாவின் விளக்கம்

பட மூலாதாரம், ANI
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடந்த மறுநாளான செவ்வாய்க்கிழமை, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) விஜேதா தஹியாவை செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. சிஜேபி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவின் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடந்தபோது, சிஜேபியை சேர்ந்த போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை தடியடி நடத்தியது.
இந்த நேரத்தில் விஜேதா தஹியாவை காட்டுவதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இருப்பினும், பிபிசி இந்த வீடியோவை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.
கடந்த ஜூன் மாதத்தில் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காக்ரோச் ஜனதா கட்சி, தன் மூன்று செய்தித் தொடர்பாளர்களை அறிவித்திருந்தது.
புலனாய்வு பத்திரிகையாளர் சௌரவ் தாஸுக்கு முதன்மை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது, அதே நேரத்தில் அரசியல் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜேதா தஹியா மற்றும் ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவர் அசுதோஷ் ரான்கா ஆகியோர் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
சர்ச்சை என்ன; விஜேதா தஹியா என்ன கூறினார்?

பட மூலாதாரம், ANI
இந்த சர்ச்சை தொடங்குவதற்கு காரணமான வீடியோவின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
திங்கட்கிழமை அன்று சிஜேபி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தின்போது, டெல்லியின் பிரபலமான துரித உணவகம் ஒன்றில் விஜேதா தஹியா இருப்பதை இந்த வீடியோ காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சமூக ஊடகங்களில் பல பயனர்கள், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கொண்டிருந்த போது தஹியா ஏன் போராட்டக்களத்தில் இல்லை என்று கேள்வி எழுப்பினர்.
தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தஹியா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தான் போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், ஆனால் போராட்டம் முடிந்துவிட்டது என்று தோன்றியதால் தான் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
"நான் ஏன் பர்கர் சாப்பிட்டேன்? இன்று இதுதான் மிகப்பெரிய விவகாரமாக மாற்றப்பட்டுள்ளது. ஒருவர் ஏன் பர்கர் சாப்பிடுகிறார்? அவருக்குப் பசி எடுக்கும் போதுதான். அவர் பர்கர் சாப்பிட விரும்புகிறார். அவ்வளவுதான், எனக்கும் மிகவும் பசித்தது. மேலும் நீங்கள் ஏதாவது நல்லதைச் சாப்பிடும்போது, உங்கள் மனமும் நன்றாக இருக்கும்" என்று கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தியாகங்களை விமர்சகர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
"நான் இரண்டு இரவுகளாகத் தூங்கவில்லை என்பதை மக்கள் பார்ப்பதில்லை. போராட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களும் தூங்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
போராட்டக் களத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, தான் முதலில் குளிப்பதற்காக வீட்டுக்குச் சென்றதாகவும், அதன் பிறகே சாப்பிடுவதற்காக உணவகத்துக்கு சென்றதாக தஹியா விளக்கமளித்தார்.
சிஜேபி செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

பட மூலாதாரம், ANI
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை, சிஜேபி விஜேதா தஹியாவை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கியது.
"எங்கள் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியாவின் மிகவும் பொறுப்பற்ற, உணர்வற்ற நடத்தைக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அமைதியான முறையில் போராடியவர்களும் எங்கள் குழுவினரும் காவல்துறையின் கொடூரமான வன்முறையை எதிர்கொண்டிருந்த நேரத்தில், அவர் இந்த வீடியோவை வெளியிட்டார், " என சிஜேபி எழுதியுள்ளது.
"இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, இது முற்றிலும் புரிதல் இல்லாததைக் காட்டுகிறது மற்றும் எங்கள் இயக்கத்தின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது."
செய்தித் தொடர்பாளர் பதவியுடன் சேர்த்து, விஜேதா தஹியா மற்ற அனைத்து அதிகாரப்பூர்வ பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சிஜேபி தெரிவித்துள்ளது.
யார் இந்த விஜேதா தஹியா?
"விஜேதா தஹியா செய்தித் தொடர்பாளர் பொறுப்பில், அரசியல் ஆராய்ச்சி மற்றும் வியூகரீதியான பகுப்பாய்வில் தனக்கிருக்கும் வலுவான அனுபவத்துடன் கால் பதிக்கிறார். அவர் ஒரு எழுத்தாளர், கண்டென்ட் கிரியேட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும் பல யூடியூப் கிரியேட்டர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் உள்ளடக்கங்களைத் தயாரிப்பதில் பங்களித்துள்ளார்" என கடந்த மாதம் விஜேதா தஹியாவை செய்தித் தொடர்பாளராக அறிவித்தபோது சிஜேபி தெரிவித்திருந்தது.
"அவர் 'பவர் ஆஃப் யுனிவர்ஸ்' (Power of Universe) மற்றும் 'டூ ஹெல் வித் தட் ஜாப்' (To Hell with that Job) ஆகிய இரண்டு அதிகம் விற்பனையாகும் புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் 'தராரேன்' மற்றும் 'ஓப்ரி பராய்' ஆகிய ஹரியான்வி திரைப்படங்களை எழுதி, இயக்கியுள்ளார். அவருடைய கல்வி உலகப் புகழ்பெற்ற டிடியு டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்துள்ளது."
விஜேதா தஹியா தனது எக்ஸ் (X) சுயவிவரத்தின் முகப்புப் பக்கத்தில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மேற்கோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் "Political democracy cannot last unless there lies at the base of it social democracy. What does social democracy mean? It means a way of life which recognizes liberty, equality and fraternity as the principles of life." என எழுதப்பட்டுள்ளது.
தமிழில் இதன் பொருள்: "அரசியல் ஜனநாயகம், அதன் அடித்தளத்தில் சமூக ஜனநாயகம் இல்லாதவரை நிலைத்திருக்க முடியாது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? அதன் பொருள் என்னவென்றால், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளும் ஒரு வாழ்க்கை நெறியாகும்."
துருவ் ரத்தியுடன் பணியாற்றியது குறித்து என்ன கூறினார்?
விஜேதா தஹியா ஒரு யூடியூப் சேனலுடனான உரையாடலில் தனது தொழில்முறை வாழ்க்கை மற்றும் படிப்பு குறித்துப் பேசியிருந்தார்.
அவர் தனது தொழில்முறை வாழ்க்கை குறித்துக் கூறுகையில், "கல்லூரியில் விப்ரோ மற்றும் ரான்பாக்ஸி (Ranbaxy) நிறுவனங்களில் வேலை கிடைத்தது. நான் ரான்பாக்ஸியில் சேர்ந்து அங்கு வேலை செய்யத் தொடங்கினேன். வேலையின் மூலம் கொஞ்சம் பணம் சேமித்தேன், பிறகு மும்பைக்குச் சென்றேன். அதன் பிறகு அப்படியே வெவ்வேறு விஷயங்களைச் செய்யத் தொடங்கினேன்" என்றார்.
தனது ஆரம்பகால தொழில்முறை வாழ்க்கை பற்றி விஜேதா தஹியா கூறுகையில், "சிறுவயதிலிருந்தே இலக்கியங்களைப் படிப்பது வழக்கம். தாகூர், பிரேம்சந்த், சார்லஸ் டிக்கன்ஸ்... எனவே எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் திரைப்படப் பயிலரங்கில் கலந்துகொண்டேன், அது எனக்குத் திரைப்படங்களை உருவாக்குவது பற்றிய யோசனையைத் தந்தது. அதற்குப் பிறகு 'தராரேன்' படத்தின் திரைக்கதையை எழுதினேன்" என தெரிவித்தார்.
"பின்னர் இதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்பதும், அதை குடும்பத்தினரிடம் கேட்க முடியாது என்பதும் புரிந்தது. இதற்கிடையில் எஸ்எஸ்சி சிஜிஎல் (SSC CGL) தேர்வு எழுதினேன், அதில் தேர்ச்சியும் பெற்றேன். அதன் பிறகு வெளியுறவு அமைச்சகத்தில் மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு 'தராரேன்' படத்தை தயாரித்தேன்."
"காக்ரோச் ஜனதா கட்சியில் இணையுமாறு தனக்கு துருவ் ரத்திதான் ஆலோசனை வழங்கினார்" என்று இந்த நேர்காணலில், விஜேதா தெரிவித்தார்.
துருவ் ரத்திக்காக எழுதுவது பற்றி தஹியா கூறுகையில், "துருவ்வுக்கு எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவந்தது. நான் மின்னஞ்சல் அனுப்பினேன், அதன்பிறகு துருவ்வுடன் இணைந்து எழுதத் தொடங்கினேன். இதற்கு இடையில் 'தராரேன்' திரைப்படம் வெளியாகி நன்றாக ஓடியது. அதன் பிறகு 'ஓப்ரி பராய்' படத்தை தயாரித்தேன். அதுவும் நன்றாக ஓடியது" என்று கூறினார்.
"ஒருவர் தனது வாழ்க்கையில் ஆறு-ஏழு படங்கள் எடுத்திருந்தாலும் அதுவே சிறந்ததுதான். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யுங்கள். எல்லாவற்றையும் பணத்துக்காகவே செய்யக் கூடாது என்று நான் நம்புகிறேன். பணத்துக்காக என்றால் நான் வேறு 70 வேலைகளைச் செய்வேன்" என அந்த நீண்ட நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































