இளைஞர்களை கரப்பான் பூச்சி என விமர்சித்தேனா? - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நாட்டின் இளைஞர்கள் பற்றிய தமது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று, வழக்கறிஞர் ஒருவர் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் விசாரித்து வந்தார்.

அப்போது, நீதித்துறைக்கு எதிராக அதிகரித்து வரும் 'நியாயமற்ற தாக்குதல்கள்' குறித்து அவர் கருத்துக்களைத் தெரிவித்தார்.

'ஊடகவியலாளர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களின்' "சில பிரிவினர்" நீதித்துறை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறினார்.

தலைமை நீதிபதி கூறுகையில், "சமூகத்தில் அமைப்பைத் தாக்கும் சில ஒட்டுண்ணிகள் உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, தொழில் வாழ்க்கையிலும் எந்த இடமும் கிடைப்பதில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகங்களில் தீவிரமாகவும், சிலர் ஆர்டிஐ ஆர்வலர்களாகவும் மாறி, பின்னர் அனைவரையும் தாக்கத் தொடங்குகின்றனர்" என்றார்.

இந்த விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோரின் அமர்வு அந்த வழக்கறிஞரின் அணுகுமுறையால் அதிருப்தி அடைந்தது போல் தெரிந்தது.

மூத்த வழக்கறிஞர்களைப் பதிவு செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதில் டெல்லி உயர் நீதிமன்றம் தாமதம் செய்வதாகவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டி, வழக்கறிஞர் சஞ்சய் துபே இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

'மூத்த வழக்கறிஞர்' என்ற அந்தஸ்து நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது என்றும், அது ஒன்றும் அந்தஸ்தின் சின்னம் அல்ல என்று கூறிய அமர்வு அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

நீதிபதி சூர்ய காந்தின் அமர்வு கூறுகையில், "சமூகத்தில் அமைப்பைத் தாக்கும் ஒட்டுண்ணிகள் ஏற்கனவே உள்ளனர். நீங்களும் அவர்களுடன் இணைய விரும்புகிறீர்களா?

வேலை வாய்ப்பு இல்லாததாலும், தங்கள் தொழிலில் ஒரு இடத்தை உருவாக்க முடியாததாலும் சிலர் கரப்பான் பூச்சிகளைப் போல எல்லா இடங்களிலும் பரவுகிறார்கள். அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகங்களில் தீவிரமாகவும், சிலர் ஆர்டிஐ ஆர்வலர்களாகவும், சிலர் வேறு வகையான ஆர்வலர்களாகவும் மாறி, பின்னர் அனைவரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்" என்று தெரிவித்தது.

இந்த வழக்கின் பின்னணி என்ன?

பின்னர் , அந்த வழக்கறிஞர் தனது மனுவைத் திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதித்தது.

உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நடைமுறையை உயர் நீதிமன்றம் சரியாகப் பின்பற்றுவதில்லை என்று வழக்கறிஞர் புகார் கூறியபோது, தனது 'மூத்த வழக்கறிஞர்' என்ற தகுதிக்காக போராடுவதைத் தவிர அவருக்கு வேறு வழக்குகளே இல்லையா என்று அமர்வு கேள்வி எழுப்பியது.

நீதிபதி பாக்சி கூறுகையில், "மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்படுகிறது, ஆனால் அதனை கோரிப்பெற முடியாது" என்றார்.

உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை நியமிக்கும் நடைமுறை தற்போது நடைபெற்று வருவதாக நீதிபதிகள் அமர்விடம் தெரிவிக்கப்பட்டபோது, தலைமை நீதிபதி சூர்ய காந்த், "இந்த உலகமே மூத்த வழக்கறிஞர் அந்தஸ்துக்குத் தகுதியானதாக இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் அதற்குத் தகுதியானவர் அல்ல. உயர் நீதிமன்றம் உங்களுக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை வழங்கினாலும், உங்களது தொழில்முறை நடையைக் கருத்தில் கொண்டு நாங்கள் அதை ரத்து செய்வோம்" என்று கூறினார்.

வழக்கறிஞர்களின் சட்டப் பட்டங்களைச் சரிபார்க்கும் செயல்முறை பற்றிக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, சில வழக்கறிஞர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடும் உள்ளடக்கங்களைப் பார்த்த பிறகு, பல வழக்கறிஞர்களின் சட்டப் பட்டங்களின் உண்மைத்தன்மை குறித்துத் தமக்கு கடுமையான சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.

தலைமை நீதிபதி மனுதாரரின் வழக்கறிஞரிடம், "நாங்கள் இதையெல்லாம் கவனிப்பதில்லை என்று நினைக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், டெல்லியைச் சேர்ந்த பல வழக்கறிஞர்களின் சட்டப் பட்டங்களின் உண்மைத்தன்மை குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்தக்கூடிய ஒரு பொருத்தமான வழக்குக்காகத் தாம் காத்திருப்பதாக அவர் கூறினார்.

ஏனெனில் பல காரணங்களால் இந்திய பார் கவுன்சில் அவ்வாறு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கறிஞர் சஞ்சய் துபே என்ன கூறினார்?

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மனுதாரரான வழக்கறிஞர் சஞ்சய் துபே, மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்மையில், இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்குவது தொடர்பானது. மூத்த வழக்கறிஞர் அந்தஸ்துக்கான அறிவிப்பு 2014 இல் வெளியிடப்பட்டது, நானும் ஒரு வேட்பாளராக இருந்தேன். அந்த நடைமுறையில் சில முறைகேடுகள் இருந்தன. சுதீர் நந்திராஜாக் அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தார், அவரும் இந்த முறைகேடுகளைக் கண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதற்குப் பிறகு, இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தோம். இந்த விஷயத்தில் நீதிபதி ஓகாவும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார். தகுதியற்ற சிலருக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டதும், தகுதியான வேட்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதுமே இதில் நடந்த முறைகேடு ஆகும்.

முடிவெடுக்கும் போது சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை மற்றும் ஆவணங்களும் புறக்கணிக்கப்பட்டன" என்று கூறினார்.

மேலும், 'மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கும் போது தகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதியின் கருத்துக்கள் குறித்து வெடித்த விவாதம்

தலைமை நீதிபதியின் இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை எம்பியான மனோஜ் ஜா, தலைமை நீதிபதியின் மொழிநடை குறித்து கவலை தெரிவித்து ஒரு பொதுக் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் இந்தக் கடிதத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "இந்த நாட்டின் பல குடிமக்களைப் போலவே, உங்களுடைய சமீபத்திய கருத்துக்களில் இடம்பெற்ற 'கரப்பான் பூச்சி' மற்றும் 'ஒட்டுண்ணி' ஆகிய வார்த்தைகளால் நானும் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

இந்த கவலை வெறும் வார்த்தைப் பிரயோகம் பற்றியது மட்டுமல்ல, இந்த கருத்துக்களில் பிரதிபலிக்கும் அணுகுமுறை பற்றியதுமாகும்"என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"ஒரு அரசியலமைப்பு ஜனநாயகம் கொண்ட நாட்டின் தலைமை நீதிபதி, வேலையில்லாத இளைஞர்கள், ஆர்டிஐ ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாறுபட்ட கருத்துடையவர்களை 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என்று ஒப்பிடும்போது, அது வெறும் தனிப்பட்ட அதிருப்தி சார்ந்த விஷயமாக மட்டும் நீடிப்பதில்லை. அது ஜனநாயகத்தின் ஆன்மாவையும் அதன் அடிப்படை அரசியலமைப்பு கலாச்சாரத்தையும் புண்படுத்துகிறது"என்று கூறியிருந்தார்.

மேலும், "இந்தியாவின் வேலையில்லாத இளைஞர்கள், ஆர்டிஐ ஆர்வலர்கள், சுயாதீன பத்திரிகையாளர்கள் மற்றும் மாறுபட்ட கருத்துடைய குடிமக்கள் ஆகியோர் ஜனநாயகத்தில் வாழும் பூச்சிகள் அல்ல" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நாட்டில் அரசியல் உரையாடல்களில் ஏற்கனவே கண்ணியம் சரிந்து வரும் வேளையில், நீதித்துறை மட்டுமே அரசியலமைப்பு ரீதியிலான கட்டுப்பாடு மற்றும் கண்ணியத்தின் கடைசி புகலிடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது" என்றும் அவர் எழுதியுள்ளார்.

எதிர்வினை என்ன?

ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுண்ணி, கரப்பான் பூச்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது" என்று கூறியுள்ளார்.

தலைமை நீதிபதியின் கருத்தைப் பகிர்ந்துள்ள அஞ்சலி பரத்வாஜ், "ஐயா, கேள்வி கேட்கும் உரிமை தான் ஜனநாயகத்தின் ஆன்மா. அரசாங்கத்திடம் பதில்களைக் கோரும் குடிமக்கள், அமைப்பைத் தாக்கவில்லை, மாறாக அதை வலுப்படுத்துவதில் தங்கள் பங்கினை ஆற்றுகிறார்கள்" என்று எழுதியுள்ளார்.

"ஊடகங்கள், சமூக ஊடகங்கள், ஆர்டிஐ மற்றும் பிற ஆர்வலர்கள் போன்ற கண்காணிப்புக் குழுக்களை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை நீதிபதி கரப்பான் பூச்சி மற்றும் ஒட்டுண்ணி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவருக்கு அழகல்ல"என்றும் அவரது பதிவு கூறுகிறது.

பல புத்தகங்களின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சபா நக்வி எக்ஸ் தளத்தில் எழுதுகையில், "வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள் என்றும், ஊடகங்கள் மற்றும் ஆர்டிஐ ஆர்வலர்கள், குறிப்பாக வேலையில்லாதவர்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள் என்றும் இந்திய தலைமை நீதிபதி கூறியுள்ளார். இது முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்ட அறிக்கை இல்லை என்றால், இதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், "தங்கள் குரலை உயர்த்தி, கடினமான கேள்விகளைக் கேட்டு, அமைப்பில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தும் இளைஞர்களும் ஆர்டிஐ ஆர்வலர்களும் 'கரப்பான் பூச்சிகளா'?

ஐயா? இப்போது நமது 'ஜனநாயகத்தின்' நிலை இதுதானா? உண்மையாகவா? நீதிபதி கிருஷ்ண அய்யர் போன்றவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள் என்பதை எண்ணி நான் வியக்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எக்ஸ் தளத்தில், "இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி தெரிவித்துள்ள இந்த கருத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகவும், ஓரளவு பொதுமைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றுகிறது. அவருக்கு முன்னால் இருந்த அந்த இளைஞர் பொறுப்பற்றவராக இருந்திருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

"ஆனால் இதுபோன்ற பொதுவான கருத்துக்கள் ஆர்வலர்கள் மீதான அவரது விரோதப் போக்கைப் பிரதிபலிக்கின்றன, இது தற்போதைய பாசிச ஆளும் ஆட்சியின் சிந்தனையோடும் ஒத்துப்போகிறது. இது தவறான செய்தியை அனுப்புகிறது. அவர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் விளக்கம் அளிக்க வேண்டும்"என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் அதுல் குல்கர்னி எக்ஸ் தளத்தில் கிண்டலாக எழுதுகையில்,"தேசிய மற்றும் கட்சிசார் கொள்கைகளின் பல ஆண்டுகால தோல்விகளுக்குள் கரப்பான் பூச்சிகளையும் இழுத்துவருவதற்காக, அவை உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளன என்பது உண்மையா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தமது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நிதிபதி விளக்கம் அளித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி முகமை அளித்துள்ள தகவலின்படி, "நான் வாய்மொழியாக வெளியிட்ட கருத்துகளை, ஊடகங்களின் ஒரு பிரிவினர் தவறாகச் சித்தரித்து எழுதியிருப்பதைப் படித்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்." என கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி விளக்கிய அவர்,"போலி மற்றும் போலியான பட்டங்களின் துணையோடு, வழக்கறிஞர் தொழில் (சட்டத் துறை) போன்ற துறைகளில் நுழைந்தவர்களைத்தான் நான் குறிப்பாக விமர்சித்திருந்தேன். இது போன்ற நபர்களே ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற உயரிய தொழில்களிலும் ஊடுருவியுள்ளனர்; ஆகையால், அவர்கள் ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள் ஆவர். நம் நாட்டின் இளைஞர்களை நான் விமர்சித்ததாகக் கூறுவது முற்றிலும் அடிப்படை அற்றதாகும். நம் நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால மனிதவளத்தைக் குறித்து நான் பெருமை கொள்வது மட்டுமல்லாமல், இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரும் எனக்கு உத்வேகம் அளிப்பவர்களாகத் திகழ்கின்றனர். இந்திய இளைஞர்கள் என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர் என்றும், நானும் அவர்களை ஒரு வளர்ந்த இந்தியாவின் தூண்களாகவே கருதுகிறேன் என்றும் கூறுவது சற்றும் மிகைப்படுத்தல் ஆகாது." என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு