You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவும் சீனாவும் நெருங்குவது இந்தியாவுக்கு சவாலாக மாறுமா? நிபுணர்கள் பார்வை
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பெய்ஜிங்கிற்குச் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற அந்தஸ்துடன் டொனால்ட் டிரம்ப் அங்கு சென்றடைந்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவில் போதிய நெருக்கம் இல்லாத சூழலிலும், இரான் உடனான போரில் அமெரிக்கா சிக்கியுள்ள நிலையிலும் இந்தப் பயணம் நடைபெறுகிறது. மறுபுறம், சீனாவுடனான இந்தியாவின் உறவிலும் பெரிய அளவில் பரஸ்பர நம்பிக்கை இல்லை.
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக வரி தொடர்பான பல மாத கால பதற்றம், வியூக ரீதியிலான போட்டி மற்றும் கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு இந்தப் பயணம் அமைந்துள்ளது. இருப்பினும், ஷி ஜின்பிங்கை ஒரு 'சிறந்த தலைவர்' மற்றும் 'நண்பர்' என்று அழைத்ததன் மூலம் டிரம்ப் தனது இணக்கமான போக்கை வெளிப்படுத்தினார்.
உலகின் இரு பெரும் சக்திகளும் மிகவும் சீரான மற்றும் நிலையான உறவை விரும்புகின்றன என்ற செய்தியை இது உலகுக்கு உணர்த்தியுள்ளது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த நெருக்கத்தை இந்தியாவிற்கு எதிரானது என்று நேரடியாகக் கருத முடியாது. ஆனால் அதன் தாக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் சமநிலையைப் பேணவே இந்தியா எப்போதும் முயற்சிக்கிறது. ஒரு நாட்டுடனான உறவு மற்றொரு நாட்டிற்கு எதிரானது என்ற செய்தி சென்றுவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகள். பல முக்கிய விவகாரங்களில் இந்தியா இவ்விரு நாடுகளையுமே சார்ந்துள்ளது. 'பன்முனை உலகம்' மற்றும் 'பன்முனை ஆசியா' பற்றியே இந்தியா தொடர்ந்து பேசி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் நிலவும் அதே வேளையில், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் உள்ளது. இத்தகைய சூழலில், இந்தியா இவ்விரு நிலைகளுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
இந்த இக்கட்டான பின்னணியில், டிரம்பின் சீனப் பயணத்தை இந்தியா எவ்வாறு பார்க்க வேண்டும்?
இந்தியா மீதான தாக்கம்
இந்தியா டுடேவின் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் பேசிய பாதுகாப்பு மற்றும் வியூக விவகாரங்களுக்கான நிபுணர் பிரம்மா செல்லானி, "டிரம்ப் பெய்ஜிங்கிற்கு ஒரு பலவீனமான நிலையிலேயே சென்றிருக்கிறார். இதற்கு ஒரு முக்கியக் காரணம், அவர் முன்னெடுத்த இரான் போர். அது அவராகவே தேடிக்கொண்ட ஒரு தோல்வியாக மாறியுள்ளது. அமெரிக்கா தன்னைவிட மிகவும் பலம் குறைந்த ஒரு சக்தியுடன் மோதி சிக்கலில் மாட்டியுள்ளது" என்று தெரிவித்தார்.
"மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இந்தப் போர் அமெரிக்காவின் ஆழமான பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, சீனாவுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில் அமெரிக்காவின் தயார்நிலை குறித்து தைவான், ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற கூட்டாளிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது''
"அமெரிக்கா இன்னும் சீனப் பொருட்கள், குறிப்பாக அரிய வகை தனிமங்களின் விநியோகத்தையே ஆழமாக நம்பியுள்ளது. இந்தச் சார்ந்துள்ள நிலையை ஒரு ஆயுதமாக மாற்ற முடியும் என்பதை சீனா நிரூபித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான் டிரம்ப் தனது சீனக் கொள்கையில் ஒரு வியத்தகு மாற்றத்தைச் செய்துள்ளார். அவரது கொள்கை மோதல் போக்கிலிருந்து சமரசத்தை நோக்கித் திரும்பியுள்ளது," என்றார் செல்லானி.
"இது டிரம்பின் சீனக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம். இந்தியாவைப் பொறுத்தவரை, டிரம்பின் இந்தக் கொள்கை மாற்றம், சீனாவிற்கு எதிரான ஒரு தடுப்புச் சக்தியாக இந்தியாவின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. இதன் ஒரு விளைவாக, குவாட் அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்த அமைப்பு தனது வியூக ரீதியான முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், குவாட் அமைப்பு தற்போது திசை தெரியாமல் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
சீன விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் முக்கியத்துவம்
சீனாவை எதிர்கொள்வதில் இந்தியாவை ஒரு முக்கியமான நாடாக அமெரிக்கா நீண்டகாலமாகக் கருதி வருகிறது. ஆனால், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்காவின் இந்த அணுகுமுறை மாறியுள்ளதாகப் பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.
புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் தன்வி மதன், இந்த ஆண்டு மார்ச் மாதம் கார்னகி எண்டோமென்ட்-ல் எழுதிய கட்டுரையில், "சீனாவுடனான இந்தியாவின் உறவு என்பது அமெரிக்கக் கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, தனக்கென ஒரு தனித்துவமான வியூகத்தைக் கொண்டது. இருப்பினும், உள்நாட்டிலும் உலக அளவிலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைப்பிடிக்கும் அணுகுமுறை, இந்தியா மற்றும் சீனாவை நோக்கிய அவரது கொள்கைகள் போன்றவை இந்தியா சீனாவுடன் தனது உறவை நிர்வகிக்கும் சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன'' என குறிப்பிட்டுள்ளார்.
"சீனாவுடனான வியூகப் போட்டியே, அமெரிக்காவுடனான ஒத்துழைப்பைத் தொடர இந்தியா முயற்சிப்பதற்குக் காரணம். அதே சமயம், அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கவும், அதனுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகளைத் தவிர்க்கவும் இந்தியா தனது சொந்தத் திறன்களையும் மற்ற நாடுகளுடனான கூட்டாண்மையையும் வலுப்படுத்தி வருகிறது," என்று அவர் கருதுகிறார்.
கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்காகப் பிரதமர் நரேந்திர மோதி சீனா சென்றிருந்தார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இந்தியாவிடம் மற்ற விருப்பத்தேர்வுகளும் உள்ளன என்பதை டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகார வர்க்கத்திற்கு உணர்த்தும் நோக்கில் அமைந்திருந்தன.
அந்தப் புகைப்படத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், ''இந்தியா மற்றும் ரஷ்யா சீனாவுடன் மிகவும் நெருக்கமாகி வருகின்றன போல தெரிகிறது. அவர்கள் இணைந்து வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்கள்'' என பதிவிட்டிருந்தார்.
இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் விதித்த கடுமையான வர்த்தக வரிகள், சீனாவுடனான உறவைச் சீராக்க மோதி அரசாங்கத்தைத் தூண்டின.
அமெரிக்கச் சந்தையை மட்டும் சார்ந்து இருப்பதைத் தவிர்க்க, சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தனது ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா முயன்று வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தியா பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
"அமெரிக்க - இந்திய உறவில் அதிகரித்து வரும் பதற்றமும், சீனாவுடன் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள டிரம்பிற்கு இருக்கும் வெளிப்படையான விருப்பமும், அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்து இந்தியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியா - சீனா இடையே ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் அமெரிக்கா எவ்வாறு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தகைய சூழல், எல்லைப் பகுதியில் எந்தவொரு மோதலும் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை மேலும் வலுப்படுத்துகிறது," என்று தன்வி மதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கவலைகள்
இந்திய - அமெரிக்க உறவுகள் குறித்து நன்கு அறியப்பட்ட அறிஞரான ஏஷ்லே டெல்லிஸ், அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
2025 அக்டோபரில், கார்னகி எண்டோமென்ட்-ல் ஏஷ்லே டெல்லிஸின் நீண்ட கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரையில், இந்தியா தொடர்பான டிரம்பின் அணுகுமுறை குறித்து அவர் விரிவாக விவாதித்திருந்தார்.
"டிரம்பின் சமீபத்திய நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மைகள், இயல்பாகவே இந்தியாவைத் திசைதிருப்புகின்றன. மேலும் அமெரிக்காவுடனான நெருக்கமான கூட்டாண்மையை நோக்கி இந்தியா நகர்வதைத் தடுக்கக்கூடும். இது இந்தியாவின் நீண்டகால நலன்களுக்கும் உகந்தது," என்று டெல்லிஸ் எழுதியிருந்தார்.
" அமெரிக்காவுடன் ஒத்துழைப்பது, அதே சமயம் அதன் முழு செல்வாக்கின் கீழ் வந்துவிடக் கூடாது என்பதில் இந்தியாவுக்கு இருக்கும் தயக்கம் டிரம்பின் காலத்திற்கு முந்தையது. இது இந்தியாவின் ஆழமான கலாசார மற்றும் வியூக ரீதியிலான பின்னணிகளைக் கொண்டது. இது ஒரு வல்லரசாக உருவாக வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்துடன் தொடர்புடையது."
"டிரம்ப் குறித்த இந்தியாவின் தற்போதைய கவலைகளை கருத்தில் கொண்டாலும், இது அவரது கடைசிப் பதவிக்காலம் என்ற உண்மையை நாம் மறக்க முடியாது. மறுபுறம், சீனா தொடர்பான இந்தியாவின் வியூகச் சிக்கல்கள் மிகப்பழமையானவை. எனவே, அமெரிக்காவுடன் ஒரு தனித்துவமான கூட்டாண்மையை உருவாக்க வேண்டிய அவசியத்தைப் புறக்கணிக்க முடியாது. குறிப்பாக, இந்தியாவால் தனித்து நின்று சீனாவை எதிர்கொள்ள முடியாத சூழலில் இது மிகவும் அவசியமானது"என அவர் குறிப்பிட்டுள்ளார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு