மாலுமிகள் உயிரிழப்பு குறித்து டிரம்ப் முன்னிலையில் பேசிய மோதி - எதிர்க்கட்சிகள் விமர்சனம் ஏன்?

அமெரிக்கா, இந்தியா, பிரதமர் மோதி, மார்கோ ரூபியோ, ஜெய்சங்கர், ஜி7 மாநாடு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேசினார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரான்சில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பாதுகாப்பான கடல் வழித்தடங்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் இந்தியாவின் கூட்டாளிகளுக்கு உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹோர்மூஸ் நீரிணையில் கடல்சார் வர்த்தகத்தில் ஏற்பட்ட இடையூறு ஒட்டுமொத்த உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்த மோதலில் இந்தியக் குடிமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

"உலகளாவிய கடல்சார் வர்த்தகம் மூலம் அனைத்து நாடுகளையும் இணைக்கும் மாலுமிகளின் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. எனவே, மாலுமிகள் அச்சமின்றி வேலை செய்ய, கடல் வழித்தடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்," என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

ஜூன் 9-ஆம் தேதி ஓமன் கரை அருகே "செடெபெலோ" என்கிற வணிக கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர். எனவே கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தை பிரதமர் மோதி எழுப்புவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

செடெபெலோ (Settebello) தவிர மேலும் இரண்டு இந்தியக் கப்பல்களும் தாக்கப்பட்டன, ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை.

பிரான்சில் உள்ள எவியானில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரதமர் மோதி சந்தித்தார்.

'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகளால் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றங்களுக்குப் பிறகு டிரம்பும் மோதியும் முதல்முறையாக நேரில் சந்தித்துக் கொண்டனர்.

இரண்டு நாள் ஸ்லோவாகியா பயணத்தை முடித்துக் கொண்டு ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோதி பிரான்ஸ் சென்றிருந்தார். இந்த மாநாட்டில் விருந்தினர் நாடாக கலந்து கொள்ள இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய உலகின் ஏழு முக்கிய வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய குழுவாகும்.

பரஸ்பரம் புகழ்ந்து கொண்ட மோதி - டிரம்ப்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு முக்கியமானது என்றும் ஹோர்மூஸ் நீரிணை திறந்திருப்பது உலகுக்கு முக்கியமானது என்றும் மோதி தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிகளைத் தான் பாராட்டுவதாக மோதி அவரிடம் தெரிவித்தார்.

இந்திய மாலுமிகள் பற்றி பேசிய மோதி, "கடல்சார் வணிகத்தில் லட்சக்கணக்கான இந்திய மாலுமிகள் வெவ்வேறு கடல்களில் பணியாற்றி வருகின்றனர். உலகின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் முக்கியம் என நான் நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

தலைவர்களின் உரைக்குப் பிறகு டிரம்ப் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார், பிரதமர் மோதியிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.

இந்திய கொடி ஏந்திய கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "இது மிகவும் கடினமான தொழில், இவர்களை எங்களுக்குப் பிடிக்கும். இந்த விவகாரத்தில் நாங்கள் நிச்சயம் இணைந்து பணியாற்றுவோம்." என்றார்.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில், "அதனை நெருங்கிவிட்டோம், பிரதமர் மோதி தேவதை போலத் தெரிகிறார். ஆனால் எதார்த்தத்தில் அவர் மிகவும் கடுமையானவர். மிகக் கடுமையான பேச்சுவார்த்தையாளராக இருக்கிறார். விரைவில் இந்தியாவுக்குச் செல்வோம்." என்று தெரிவித்தார் டிரம்ப்.

மேற்கு ஆசியாவில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்குமா என்கிற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "பிரதமர் மோதி தலைவராக இருக்கும் வரை இந்தியா அனைத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும்." என்றார்.

ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோதி பேசியது என்ன?

அமெரிக்கா, இந்தியா, பிரதமர் மோதி, மார்கோ ரூபியோ, ஜெய்சங்கர், ஜி7 மாநாடு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் பரஸ்பர நம்பிக்கை தான் மிகப்பெரிய சொத்து என்று பிரதமர் மோதி பேசினார்.

கடலில் மாலுமிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னையை எழுப்பிய பிரதமர் மோதி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகத்தின் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கு வேண்டுகோள் விடுத்தார்.

"முன்பு இருந்ததை விட இன்று உலகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. முன்பு இருந்ததைவிட நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒரு நாட்டின் எரிபொருள் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்பு என்பது அதன் எல்லைகளுக்குள் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. இயக்கம், தரவுகள், மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் அனைத்து நாடுகளையும் இணைக்கின்றன," என்றார் மோதி.

தொடர்ந்து பேசிய அவர், "இத்தகைய சூழலில் கூட்டணிகள் என்பது இயற்கையாகவே மிகவும் முக்கியமானதாகிறது. ஆனால் அதன் அடிப்படையில் நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவை வெற்றியடைய முடியும். இன்று மிக முக்கியமான மூலோபாய சொத்து என்பது கனிமங்கள், தொழில்நுட்பம் அல்லது சந்தைகள் அல்ல, பரஸ்பர நம்பிக்கை தான் மிகப்பெரிய சொத்து." என்றும் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலி ஆயுதங்களாக பயன்படுத்தப்படாமல் உலகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படும் என நம்புவதாக பிரதமர் மோதி கூறினார்.

"வளர்ச்சிக்கான வாய்ப்பு ஒரு சில நாடுகளுக்கு மட்டுமானதாக இருக்காது என நாங்கள் நம்புகிறோம். உலகளாவிய நிறுவனங்கள் அனைத்து நாடுகளின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும் என நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்," என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றுன் இரான் தங்களுக்கு இடையேயான நான்கு மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமைதி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. ஹோர்மூஸ் நீரிணையில் விரைவில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"பிரதமர் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்" என காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்கா, இந்தியா, பிரதமர் மோதி, மார்கோ ரூபியோ, ஜெய்சங்கர், ஜி7 மாநாடு

பட மூலாதாரம், Vipin Kumar/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோதி ஆற்றிய உரைக்குப் பிறகு, அவர் நாட்டை ஏமாற்றிவிட்டதாக காங்கிரஸ் கூறியது.

கடலில் மாலுமிகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தை பிரதமர் மோதி எழுப்பிய விதம் குறித்து காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது.

பிரதமர் மோதியின் உரையில் இருந்து ஒரு பகுதியைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா ஶ்ரீநடே, "பிரதமர் மோதி ஜி7 கூட்டத்தில் தனது உரையின் இறுதியில் தேசத்தின் தலையை தாழ வைத்துவிட்டார்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், "அவரின் கோழைத்தனமான கருத்து இந்த நாட்டின் மீது வீசப்பட்ட மிகக் கொடூரமான நகைச்சுவை ஆகும். இது நமது மக்கள் மீது இழைக்கப்பட்ட அவமானம். மூன்று இந்திய மாலுமிகள் அமெரிக்காவால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடக்கூட பிரதமர் மோதிக்கு தைரியம் வரவில்லை.

பல பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று கூறி அதை புறந்தள்ளிவிட்டார். உயிரிழந்தவர்கள், ஆதித்யா ஷர்மா, சிவானந்த் சௌராஸியா, பர்னாலா சுரேஷ் ஆவர். அவர் அத்தகைய மரியாதை கொடுத்திருக்க வேண்டும்." எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக எதிர்வினை ஆற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தனது எக்ஸ் பதிவில், "இது மிகவும் அவமானகரமானது. அமெரிக்க ராணுவம் நமது மூன்று கப்பல்களை ஏவுகணைகளால் தாக்கி மூன்று இந்தியர்களைக் கொன்றுள்ளது. ஆனால் பிரதமர் மோதி கோபத்தைக் காட்டுவதற்குப் பதிலாக டிரம்புடன் இணக்கமாகச் செயல்படுகிறார். டிரம்பும் ஒரு குழந்தை போல மோதியை தட்டிக் கொடுக்கிறார்." என்றார்.

இந்தியா எதிர்ப்பு தெரிவித்தபோது அமெரிக்கா கூறியது என்ன?

அமெரிக்கா, இந்தியா, பிரதமர் மோதி, மார்கோ ரூபியோ, ஜெய்சங்கர், ஜி7 மாநாடு

பட மூலாதாரம், Julia Demaree Nikhinson / POOL / AFP via Getty Images

படக்குறிப்பு, இந்திய மாலுமிகளின் உயிரிழந்த விவகாரத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவிடம் எழுப்பினார்.

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடங்கிய பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு சில தினங்கள் கழித்து தனது கரையை ஒட்டியுள்ள ஹோர்மூஸ் நீரிணையை இரான் முடக்கியது.

இது உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிக்க வழிவகுத்தது. உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த வழித்தடம் வழியாகச் செல்வதால் இந்த நெருக்கடி மேலும் தீவிரமானது.

இதற்கிடையே இரான் உடன் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்த அமெரிக்கா, இரான் கரையை முற்றுகையிட தனது கடற்படையை அனுப்பியிருந்தது.

தனது உத்தரவுகளைப் பின்பற்றாத கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

ஜூன் 9-ஆம் தேதி ஓமன் கரை அருகே 'செடெபெலோ' என்கிற வணிக கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது.

அந்தக் கப்பலில் 24 இந்திய பணியாளர்கள் இருந்த நிலையில் 21 பேர் மீட்கப்பட்டனர். மூன்று மாலுமிகள் உயிரிழந்தனர்.

இது போக வளைகுடா பிராந்தியத்தில் இந்தியப் பணியாளர்கள் இருந்த இருவேறு கப்பல்களும் தாக்கப்பட்டன.

ஆனால் யாரும் உயிரிழக்காமல் அனைத்து மாலுமிகளும் மீட்கப்பட்டனர்.

மூன்று மாலுமிகள் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்காவிடம் இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

மார்கோ ரூபியோ உடனான தனது உரையாடலில் 'வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ததாகத் தெரிவித்த ஜெய்சங்கர், இத்தகைய கடுமையான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கையில், "வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் முற்றுகையை மீறுவது மற்றும் இரானிய எண்ணெயின் சட்டவிரோத போக்குவரத்து பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாலுமிகளின் இறப்பு குறித்து இந்தியா எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அமெரிக்காவின் வலுவான பதிலடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் குறி வைக்கின்றன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டு நாட்கள் கடந்த பிறகும் எந்த வருத்தமும், மன்னிப்பும் இல்லை. அதற்கு மாறாக அமெரிக்கா தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

அவர்களின் வார்த்தைகளைப் படியுங்கள், 'அமெரிக்க ராணுவத்தின் உத்தரவுகளை உடனடியாகப் பின்பற்றுங்கள், எந்த விதிமீறலும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது.' எந்தச் சுதந்திர நாடும் இத்தகைய மொழியை பொறுத்துக் கொள்ளாது. ஆனால் சமரசமான நமது பிரதமர் நமது நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற மாட்டார்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு