முதலைகள் நிறைந்த நதியில் 'ஆபத்தான' போலீஸ் ஆபரேஷன் – முதலை வயிற்றில் மீட்கப்பட்டது தொழிலதிபர் உடலா?

முதலைகள் நிறைந்த நதியில் ஆபத்தான போலீஸ் ஆபரேஷன் – முதலை வயிற்றில் மீட்கப்பட்டது தொழிலதிபரின் உடல் பாகங்களா?

பட மூலாதாரம், South african police service

    • எழுதியவர், மயேனி ஜோன்ஸ்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தென்னாப்பிரிக்காவில் சடலத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலைகள் நிறைந்த ஆற்றில் ஹெலிகாப்டரிலிருந்து தான் கீழே இறக்கப்பட்ட தருணத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலதிபர் ஒருவரை முதலை ஒன்று விழுங்கிவிட்டதான சந்தேகத்தில், அந்த முதலையைப் பிடிக்கும் பணி கேப்டன் ஜோஹன் போட்ஜிட்டர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

"அந்த முதலை ஒரு தீவில் படுத்துக் கிடந்தது... வான்வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் அதை நெருங்க முடியாது என்ற சூழ்நிலை" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த துணிச்சலான நடவடிக்கையில், 4.5 மீட்டர் நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட அந்த முதலையின் உடலுக்குள் இருந்து மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை யாருடையது என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம், வெள்ளம் பெருக்கெடுத்தோடிய கோமடி ஆற்றில் தாழ்வான பாலத்தைக் கடக்க முயன்றபோது கார் ஒன்று சிக்கிக்கொண்டது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது கார் காலியாக இருந்தது, அதில் யாரும் இல்லை. இதனால் காரில் இருந்தவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.

தேடுதல் பணியில் டிரோன்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் சிறிய தீவு ஒன்றுக்கு சென்றனர். அங்கு பல முதலைகள் வெயிலில் படுத்துக்கிடந்தன. அவற்றில் ஒன்று அந்த மனிதரை உண்டிருக்கலாம் என்று அவர்கள் நம்பினர்.

போட்ஜிட்டர் அழைக்கப்படுவதற்கு முன்பாகவே, சந்தேகத்திற்குரிய அந்த முதலையை அவருடைய சக ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர்.

முதலை, காவல்துறை அதிகாரி

பட மூலாதாரம், Warren Little

படக்குறிப்பு, கோப்புப்படம்

'அசாதாரண துணிச்சல்'

"அடிபட்ட முதலை திரும்பியதைப் பார்த்த அவர்கள், அது இறந்துவிட்டது என்றே நினைத்தார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் அங்கு சென்றபோது, அது நேராகத் திரும்பி நீரோட்டத்திற்கு எதிராகச் சற்றுத் தூரம் நீந்திச் சென்றிருந்தது" என்று போட்ஜிட்டர் விளக்கினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கோமடி ஆற்றில் முதலைகள், நீர்யானைகள் மட்டுமல்ல, பாறைகளும் இருந்ததால், முதலையின் உடலில் இருந்து அந்த நபரின் எச்சங்களை மீட்பதற்குப் படகு அல்லது துடுப்புப் படகைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று உணர்ந்ததாக போட்ஜிட்டர் பிபிசியிடம் கூறினார்.

"தண்ணீரில் ரத்தம் கலந்திருந்ததால் அந்த முதலையின் அருகில் வேறு பல முதலைகளும் இருந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக, ஹெலிகாப்டர் எழுப்பிய சத்தம் மற்றும் அதன் இறக்கைகள் ஏற்படுத்திய வேகமான காற்றினால் அவை அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டன, என்னைத் தொந்தரவு செய்யவில்லை" என்று அவர் கூறினார்.

மீட்பு நடவடிக்கையைச் செய்ய போட்ஜிட்டர் சம்மதித்த நிலையில், அவருக்கு பின்வாங்க வழியே இல்லை.

"நான் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தபோது, விமானியுடன் தொடர்புகொள்ள எனக்கு எந்த வழியும் இல்லை. எனவே, பாதியிலேயே எனது முடிவை மாற்றிக்கொண்டு திரும்ப நினைத்திருந்தாலும், அது நடந்திருக்க வாய்ப்பில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

"ஏற்கனவே திட்டமிட்டபடியே நான் அந்தப் பணியைச் செய்ய வேண்டியிருந்தது... இல்லையெனில் நிலைமை மோசமாகியிருக்கும்."

ஞாயிற்றுக்கிழமை, தென்னாப்பிரிக்காவின் காவல்துறை தற்காலிகத் தலைவர், போட்ஜிட்டரின் "அசாதாரண துணிச்சலை" பாராட்டியதுடன், இந்த நடவடிக்கையை "மிகவும் ஆபத்தானது மற்றும் சிக்கலானது" என்றும் விவரித்தார்.

ஜோஹன் போட்ஜிட்டர்

பட மூலாதாரம், Johan Potgieter

படக்குறிப்பு, ஜோஹன் போட்ஜிட்டர்

தேசிய காவல்துறையின் நீருக்கடியில் தேடுதல் நடத்தும் பிரிவைச் சேர்ந்த உறுப்பினரான போட்ஜிட்டர், ஹெலிகாப்டரில் இருந்து ஆற்றில் இறக்கப்பட்டு அந்த முதலையைச் சுற்றிக் கயிற்றைக் கட்டிய பிறகே அது இறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

"அப்போதுதான் அது இறந்துவிட்டது என்று எனக்கு 100 சதவீதம் உறுதியாகத் தெரிந்தது. ஒருவேளை அது உயிரோடு இருந்திருந்தால், நிச்சயமாக என்னைத் தாக்கியிருக்கும்" என்று அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்க செய்தி நிறுவனமான நியூஸ் 24-யிடம் பேசிய போட்ஜிட்டர், முதலையின் வயிற்றுக்குள் மனித உடல் பாகங்களும் காலணிகளும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த உடல் எச்சங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

தென்னாப்பிரிக்க காவல் துறையில் 38 ஆண்டுகளாக பணியாற்றியிருந்தாலும், இதற்கு முன்பு இதுபோன்ற பணியில் போட்ஜிட்டர் ஈடுபட்டதே இல்லை.

"நிச்சயமாக இதுவே முதல் முறை, இதுவே கடைசி முறையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்... இதற்குத் தயாராவதற்கு உண்மையில் வழியே இல்லை."

இந்த மீட்புப் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை இணையத்தில் வெளியான காணொளியைக் காணும் வரை போட்ஜிட்டரின் குடும்பத்திற்குத் தெரியாது. தான் உயிருடன் வீடு திரும்பியதைக் கண்டு தனது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக தனது பணியில் இத்தகைய அபாயங்களை எதிர்கொள்வது மதிப்புக்குரியது என்று போட்ஜிட்டர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மீது எங்களுக்கு மிகுந்த அனுதாபம் உண்டு. அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒருவரை இழந்து துக்கத்தில் இருக்கிறார்கள். நாம் நேசிக்கும் ஒருவரை இழப்பது எப்போதுமே வேதனையானது, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாதபோது அது இன்னும் மோசமானது. எனவே, அந்தத் குடும்பத்தினருக்கு ஒரு மன நிம்மதியை அளித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உதவுவதே எங்களின் முக்கியமான நோக்கம்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு