'கடலுக்குள் புதைந்து கிடக்கும் பூம்புகார் நகரம்'- மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வில் தெரிய வந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ்நாடு தொல்லியல் துறையின் மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வு செப்டம்பர் 22ஆம் தேதி நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனால் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த அகழாய்வில், 250க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் பூம்புகார் கடல் பகுதியில் இருந்து கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமான நிலப்பகுதி அகழாய்வுகளுடன் ஒப்பிடும்போது, சவால்கள் நிறைந்த இந்த கடலடி அகழாய்வு எப்படி நடத்தப்பட்டது? பூம்புகார் குறித்த கேள்விகளுக்கு தற்போது கிடைத்துள்ள தொல்லியல் பொருட்கள் மூலம் விடை கிடைக்குமா?

பூம்புகார்- பண்டைய துறைமுக நகரம்
தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு குறித்த விவாதங்களில் கீழடி போன்றே பண்டைய துறைமுக நகரமான பூம்புகாரும் இடம்பெறும்.
இந்தப் பூம்புகார் கி.மு. நான்காம் நூற்றாண்டில் செழிப்பான ஒரு துறைமுக நகரமாக இருந்தது என்றும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சோழர்களின் தலைநகரமாக இது விளங்கியது என்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் பண்டைய காவிரிப்பூம்பட்டினமாக அறியப்படும் பூம்புகார் பற்றி பல விரிவான குறிப்புகள் உள்ளன. இங்கு உயரமான கட்டடங்களும், வைணவ, சைவ, பெளத்த, சமணக் கோயில்களும் இருந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
'காதம் நான்கிலும் கடுங்குரலெழுப்பி
பூதம் புடைத்துண்ணும் பூதசதுக்கமும்' என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
அதாவது, பண்டைய பூம்புகார் நாடு நான்கு காத தூரம் (ஒரு காத தூரம் என்பது சுமார் 7.5 கிலோ மீட்டர்) பரப்பில் விரிவடைந்திருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டினப்பாலை, காவிரிப்பூம்பட்டினம் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது எனக் கூறுகிறது.
'வடமலைப் பிறந்த மணியும், பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும், தென்கடல் முத்தும் குணகடற்றுகிரும், கங்கைவாரியும், காவிரிப்பயனும், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் அரியவும், பெரியவும், நெரியஈண்டி வளர்தலை மயங்கிய நனந்தலை மதுரு…'
பூம்புகாரில் பல நாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக பட்டினப்பாலை இவ்வாறு விவரிக்கிறது.

பட மூலாதாரம், TNSAD
"தாய்லாந்து நாட்டில் தகுவா-பா என்ற இடத்தில் கி.பி. 9- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்து தமிழ் கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டில் நாங்கூர் நாட்டை சேர்ந்த வணிகக் குழுவினரான மணிக்கிராமத்தார் என்பவர்கள் 'அவணி நாரணம்' என்ற ஏரியை வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கூர், மணிக்கிராமம் ஆகிய ஊர்கள் பூம்புகாருக்கு மிக அருகில் உள்ள ஊர்களாகும்" என தமிழ்நாடு தொல்லியல் துறையின் 'பூம்புகார் ஆழ்கடல் அகழ்வைப்பகக் கையேடு' தெரிவிக்கிறது.
'பூம்புகார் நகரில் இரவு பகலாக அங்காடிகள் திறந்து வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. அவை நாளங்காடி, அல்லங்காடி என்று அழைக்கப்பட்டன. அதுபோல், அங்கிருந்த வணிகப் பகுதி பட்டினப்பாக்கம் என்றும் செல்வந்தர்கள் மாளிகைகளில் வாழ்ந்த இடம் மருவூர்ப்பாக்கம் என்றும் வழங்கப்பட்டன.
பொருட்களின் பெருவணிகம், பூம்புகார் நாட்டின் உட்கிராமங்களிலும் வணிகக் குழுக்கள் மூலம் நடை பெற்றுள்ளன. இதற்கு மணிக்கிராமம், தலைச்சங்காடு, வானகிரி, கீழையூர், திருவெண்காடு, நாங்கூர், சாய்காடு போன்ற ஊர்கள் இன்றும் தொன்மைச் சான்றுகளுடன் விளங்கி வருவதால் உணர முடிகிறது' என அந்த நூல் தெரிவிக்கிறது.
பூம்புகார் என்றால் காவிரி கடலில் புகும் இடமாகும். பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம், காகந்தி, சம்பாபதி, பல்புகழ்மூதூர், மண்ணகத்து வான்பதி, சோழப்பட்டினம், கபேரிஸ்எம்போரியம், கோலப்பட்டினம் என்று பல பெயர்களால் இது அழைக்கப்பட்டுள்ளது.
வடஇந்தியாவிலுள்ள பார்குத் என்ற இடத்தில் கி.மு. 2 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த ஸ்தூபி உள்ளது. இந்த ஸ்தூபிக்கு 'காகந்தி'யைச் (பூம்புகார்) சேர்ந்த சோமா என்பவர் கொடை அளித்துள்ளதாக, 'பூம்புகார் ஆழ்கடல் அகழ்வைப்பகக் கையேட்டில்' குறிப்பிடப்பட்டுள்ளது.
"சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள் மூலம் பூம்புகார் குறித்த பல குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே விரிவான அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன" என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகர், பேராசிரியர் கா.ராஜன்.
பூம்புகார் அகழாய்வுகள்

பட மூலாதாரம், TNSAD
பூம்புகாரில் நிலத்திலும் ஆழ்கடலிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நில அகழாய்விலும், கடல் அகழாய்விலும் பண்டையக் கட்டடப் பகுதிகள், பண்டைய நாணயங்கள், பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், மணிகள் போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பூம்புகாரில் 1910ஆம் ஆண்டு முதலே ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவிக்கிறது. 1963-64-ஆம் ஆண்டில் பூம்புகாரில் பல்லவனீச்சுரம் என்ற இடத்தில் புத்தவிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், 1995-96ஆம் ஆண்டில் மணிக்கிராமம் கிழார்வெளி என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் பண்டையப் படகுத்துறை கண்டுபிடிக்கப்பட்டது. சுடுமண்ணாலான புத்தர் திருவடி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இலை, பறவை, குதிரை, படகு உருவம் பொறித்த ரோமானிய பானை ஓடுகள் கிடைத்தன. குறிப்பாக, இந்த படகுத்துறையின் காலம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது.
அதேபோல, இதற்கு முந்தைய கடலடி அகழாய்வுகளில் கட்டடப் பகுதிகளும், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமல்லாது, 'ரோமானிய நாட்டைச் சேர்ந்த ரெளலட்டட், அரிட்டைன், பானை ஓடுகளும், தடித்த ஆம்போரா, மதுஜாடியின் அடிப்பகுதி போன்றவையும், இடைக்கால பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. வானகிரிதோசக்குளம் அகழாய்வில் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. இது பூம்புகார் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவோடும் வெளிநாடுகளுடனும் கொண்டிருந்த தொடர்பை வெளிப்படுத்துகிறது' என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
பூம்புகாரின் தென்பகுதியில் காவிரியாறு கடலினுள் கலக்கும் இடத்துக்கு எதிரே 4 கி.மீ தொலைவில் தரைதட்டி உடைந்தக் கப்பல் மூழ்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. இக்கப்பல் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என தமிழ்நாடு தொல்லியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
"அதுவொரு டேனிஷ் கப்பல். தற்போதைய மூன்றாம் கட்ட அகழாய்வுகளில் அக்கப்பலின் சிதைவுகளையும் ஆராய்ந்தோம்" என்கிறார் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநர் யதீஸ் குமார்.
மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்டது என்ன?

பட மூலாதாரம், TNSAD
இதுவரையிலான தொல்லியல் ஆய்வுகளின்படி, பூம்புகார் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால், அதன் எவ்வளவு பகுதி அழிந்தது, எப்போது அந்த இழப்புகள் ஏற்பட்டன, அந்த அழிவு படிப்படியாக நிகழ்ந்ததா அல்லது ஒரே பெரும் பேரழிவால் ஏற்பட்டதா என்பன குறித்து இன்னும் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கவில்லை.
"பூம்புகார் நகரின் சுமார் 2 காத தூரம் கடலில் மூழ்கியிருக்கலாம். ஒரு நகரத்தின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிவிட்டது என்றால், கடல் மட்டம் உயர்ந்துள்ளதா அல்லது நிலம் தாழ்ந்து அது உள்ளே சென்றுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். அதற்கான விடையைக் கண்டறிவதற்கான தொடக்கமே இது" என்கிறார் பேராசிரியர் கா.ராஜன்.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வில் 250க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார், தொல்லியல் ஆய்வாளர் யதீஸ் குமார்.
"இதுவரைக்கும் இந்த மாதிரியான கடல் அகழாய்வுகளில் செராமிக்ஸ் (மட்பாண்டங்கள்) கிடைக்கவில்லை. இம்முறை நமக்கு 250-க்கும் மேற்பட்ட செராமிக் மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன. இதுதான் நமக்கு மிகப் பெரிய ஆதாரம். பெரிய பெரிய சேமிப்பு ஜாடிகளின் பாகங்கள் கிடைத்துள்ளன. வணிகக் கப்பல்களில் இவை அதிகம் பயன்படுத்தப்படும். இவற்றின் காலம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்கிறார் அவர்.
"இந்தப் பொருட்களை விரிவாக ஆய்வு செய்தால் என்ன மாதிரியான வணிகங்கள் இங்கு நடைபெற்றன என்பது தெரியவரும்".

கீழடி உடனான ஒப்பீடு
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களின் கரிமப் பகுப்பாய்வு, கீழடிப் பண்பாட்டின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதை உறுதிப்படுத்தியது.
கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. கீழடி, தமிழ்நாட்டின் ஆரம்பகால நகரமயமாக்கல் குறித்த விவாதத்தை புதிய அளவுக்கு கொண்டு சென்றது.
இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழ்நாட்டிலும் நகர நாகரீகம் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கீழடி வெளிப்படுத்தியது. எனவே, கீழடி இந்தியா முழுவதும் பேசுபொருளானது.
பூம்புகார் கடலடி அகழாய்வுகளில், கீழடி நாகரிகத்தோடு ஒத்துப்போகக்கூடிய உறைகிணறுகள், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை 'ரிலேடிவ் டேட்டிங்' முறையில் கிமு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டு எனும் சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவிக்கிறது. ஆனால், கரிமப் பகுப்பாய்வு எனும் அறிவியல்பூர்வமான முறையில் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
"பூம்புகாரில் புத்த விகாரங்கள், நீர் மேலாண்மை கட்டமைப்புகள் இருந்தது அகழாய்வுகளில் தெரியவந்தது. அவை எல்லாமே சங்க காலத்தைச் சேர்ந்த செங்கற்களால் கட்டப்பட்டவை. கீழடி, அரிக்கமேடு போன்ற தளங்களில் எப்படி இருக்கிறதோ, அதேபோன்று ஒத்த அமைப்புள்ள செங்கற்கள் தான் இங்கே நமக்கு கிடைக்கின்றன" என்கிறார் யதீஸ் குமார்.
அதேபோல, இங்கே கிடைத்துள்ள உறைகிணறுகள் குறித்துப் பேசிய அவர், "இம்முறையும் உறைகிணறுகளை கண்டறிந்து, ஆய்வு செய்தோம். அவை 65 சென்டிமீட்டருக்கும் மேலான விட்டத்தில் உள்ளன. இது நமக்கு கீழடியில் கிடைக்கும் உறைகிணறுகளுடன் ஒத்துப்போகிறது. உறைகிணறுகள் இருக்கிறது என்றால், அதற்குப் பக்கத்தில் நதி பாய்ந்துள்ளது இருந்துள்ளது என்று அர்த்தம். அதற்கான தடயங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதையும் நாங்கள் ஆராய்ந்தோம்" என்கிறார் அவர்.
கடலடி அகழாய்வுகளில் உள்ள சவால்கள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்தகாலங்களில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், அழகன்குளம், அரிக்கமேடு என பல்வேறு நிலப்பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுகளை செய்துள்ளது.
ஆனால், அதனுடன் ஒப்பிடும்போது இந்தக் கடலடி அகழாய்வும், இதில் தொல்லியல் பொருட்களை கண்டெடுப்பதும் சவாலான ஒன்று தான். கடல்வாழ் உயிரினங்களின் தாக்குதல், கடலடியில் போதுமான சூரிய வெளிச்சம் இல்லாமை, மோசமான வானிலை என சில அபாயங்கள் உள்ளன.
பூம்புகார் கடலடி அகழாய்வு குழுவில் பிரத்யேக பயிற்சி பெற்ற 4 தொல்லியல் ஆய்வாளர்களும், அவர்களை வழிநடத்த ஸ்கூபா டைவிங் வல்லுநர்கள் சிலரும் உள்ளனர்.
"முறையான கருவிகள் மற்றும் பயிற்சிகளுடன் தான் நாங்கள் கடலடி அகழாய்வுகளை மேற்கொள்வோம். 30 மீட்டர் வரை செல்வதற்கான வசதிகள் உள்ளன. கடலடியில் எங்களின் நகர்வுகள் அனைத்தும், மேற்பரப்பில் இருக்கும் படகில் கண்காணிக்கப்படும்." என்கிறார் யதீஸ் குமார்.
"நீரில் மூழ்கும்போது பிரத்யேக கேமராக்களையும் எடுத்துச் செல்வோம். நீருக்குள் வெளிச்சம் குறைவாக இருக்கும், உள்ளே இருக்கும் கட்டமைப்பு எச்சங்களில் மீன் வலைகள் சிக்கி இருக்கும். அவை காலில் மாட்டிக்கொள்ளாதவாறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்."
"கடல்வாழ் உயிரினங்களிடம் கவனமாக இருக்க வேண்டும், உதாரணத்துக்கு ஒரு ஜெல்லி மீன் தீண்டினால், நெருப்பு பட்டது போல இருக்கும், சுறாக்கள் இருக்கும். இந்த உயிரினங்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. அவை அருகில் வந்தாலும், நாம் பதற்றமடையக் கூடாது. இப்படி பல சவால்கள் உள்ளன" என்கிறார் அவர்.
செப்டம்பர் 22ஆம் தேதி நிறைவடைந்துள்ள இந்த கடலடி அகழாய்வு, பருவமழை காலகட்டத்தில் கடலில் கணிக்க முடியாத சூழல் நிலவும் என்பதால் மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. அடுத்தடுத்த கட்ட அகழாய்வுகளில், கடலுக்குள் புதைந்த பூம்புகார் என்ற பண்டைய துறைமுக நகரம் குறித்த ஆச்சரியமூட்டக்கூடிய பல தகவல்கள் வெளிவரலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































