அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா? அல்சைமர்ஸ் பற்றி மருத்துவர்கள் கூறும் 5 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
அல்சைமர்ஸ் என்று யோசிக்கும்போது, முதிய வயதில் நினைவாற்றலை இழக்கும் ஒருவரைத் தான் நீங்கள் நினைக்கக்கூடும்.
ஆனால், இந்நோய் முதிய வயதில் மட்டுமே ஏற்படுகிறதா அல்லது இதன் தொடக்கம் பல தசாப்தங்களுக்கு முன்பே அமைந்துவிடுகிறதா? உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதற்கான விடையைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
அல்சைமர்ஸ் நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பே, நோயாளியின் மூளையில் மாற்றங்கள் தொடங்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
எனவே, நோய் கண்டறியப்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், இளம் மற்றும் நடுத்தர வயதிலேயே மூளையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது என்பதில் தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது.
முதலில், டிமென்ஷியா என்பது நினைவாற்றல், சிந்தனை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கும் பல்வேறு அறிகுறிகளின் தொகுப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில், அல்சைமர்ஸ் நோய் என்பது டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வகையாகும். உலகம் முழுவதும் பதிவாகும் டிமென்ஷியா பாதிப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அல்சைமர் நோயே காரணமாக உள்ளது.
புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, குறிப்பிட்ட உணவுகளை உண்பது அல்லது உடலில் வைட்டமின் டி அளவை பராமரிப்பது போன்ற விஷயங்களுக்கும் எதிர்கால நினைவாற்றலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பல ஆய்வுகள் தற்போது ஆராய்ந்து வருகின்றன.
இந்த ஆய்வுகள் இன்னும் உறுதியான பதில்களை வழங்கவில்லை என்றாலும், மூளையைப் பராமரிப்பது என்பது ஓய்வு பெற்ற பிறகு அல்லாமல் இளமையிலேயே தொடங்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
எனவே, ஆராய்ச்சியாளர்கள் இன்று மருந்துகளுடன் சேர்த்து உடற்பயிற்சி, உணவு முறை, கல்வி மற்றும் பிற வாழ்க்கை முறை காரணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
'அறிவாற்றல் சேமிப்பு' என்பது இதில் ஒரு முக்கியமான கருத்தாகும். சிலரின் மூளையில் அல்சைமர்ஸ் தொடர்பான மாற்றங்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு நினைவாற்றல் இழப்பின் அறிகுறிகள் தாமதமாகவே தென்படுகின்றன.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தொடர்ச்சியான கற்றல், வாசிப்பு, புதிய திறன்களைப் பெறுதல் மற்றும் சமூகத்தில் சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவை மூளையில் உள்ள நரம்பு வலைப்பின்னல்களை வலுப்படுத்துகின்றன.
எனவே, மூளை ஓரளவு சேதமடைந்தாலும், மாற்றுக் பாதைகளைப் பயன்படுத்தி அது தொடர்ந்து செயல்பட முடியும்.
உடற்பயிற்சி மூளையின் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சமீபத்திய ஆய்வுகள் 'GPLD1' என்ற புரதத்தில் கவனம் செலுத்தியுள்ளன.
விலங்குகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், உடற்பயிற்சிக்குப்பிறகு உற்பத்தி செய்யப்படும் இந்த புரதம், மூளையைப் பாதுகாக்கும் 'ரத்த-மூளை அரணை' சீராக வைத்திருக்க உதவும் என்று தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது நினைவாற்றலைப் பாதுகாக்கவும், வயது முதிர்வால் ஏற்படும் சில மாற்றங்களைக் குறைக்கவும் உதவும்.
1. உணவு முறைக்கும் உடற்பயிற்சிக்கும் இடையே தொடர்பு உள்ளதா?
ஆராய்ச்சியாளர்கள் உடற்பயிற்சியுடன் சேர்த்து, உணவு மற்றும் ஊட்டச்சத்தும் மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
சில ஆராய்ச்சியாளர்கள் மெடிட்டரேனியன் மற்றும் டேஷ் (DASH) உணவு முறைகளின் கலவையான 'மைண்ட் டயட்' (MIND Diet) மீது கவனம் செலுத்தியுள்ளனர். இது பச்சை இலை காய்கறிகள், பெர்ரி பழங்கள், கொட்டைகள் (nuts), மீன் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்த உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு அல்சைமர்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, இருப்பினும் இது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
சமீபகாலமாக ஆராய்ச்சியாளர்களிடையே வைட்டமின் டி ஒரு விவாதப் பொருளாக உள்ளது. 2026-இல் வெளியிடப்பட்ட ஒரு நீண்டகால ஆய்வில், நடுத்தர வயதில் உடலில் அதிக வைட்டமின் டி அளவைக் கொண்டிருந்தவர்களுக்கு, பிற்காலத்தில் அல்சைமர்ஸுடன் தொடர்புடைய 'டாவு' புரதத்தின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், இது ஒரு தொடர்பு மட்டுமே தவிர, காரணியும் அதன் விளைவும் அல்ல என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். வைட்டமின் டி நேரடியாக அல்சைமர்ஸைத் தடுக்கிறது என்று இன்னும் கூற முடியாது.
இந்த அனைத்து ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்தச் செய்தி என்னவென்றால், அல்சைமர்ஸுக்கு இன்னும் உறுதியான சிகிச்சை இல்லை என்றாலும், ஆரம்ப மற்றும் நடுத்தர வாழ்க்கையின் பழக்கவழக்கங்கள் மூளையின் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதாகும்.
2. சாதாரண மறதிக்கும் அல்சைமர்ஸுக்கும் என்ன வித்தியாசம்?
பலருக்கு அல்சைமர்ஸ் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லை. நீங்கள் எப்போதாவது விஷயங்களை மறந்தால், உடனடியாக உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ அல்சைமர்ஸ் இருப்பதாக முத்திரை குத்தக்கூடாது. இதை ஒரு நிபுணத்துவம் பெற் மருத்துவர் மட்டுமே கண்டறிய வேண்டும்.
எப்போதாவது ஒரு பெயரை மறப்பது, சாவியை எங்கு வைத்தோம் என்று யோசிக்க சிறிது நேரம் எடுப்பது, அல்லது ஒரு வார்த்தையை நினைவில் கொள்வதில் சிரமம் இருப்பது போன்றவை வயது முதிர்வால் ஏற்படும் சாதாரண விஷயங்களாக இருக்கலாம். அதனால் உங்களுக்கு அல்சைமர்ஸ் இருக்கிறது என்று அர்த்தமல்ல.
இருப்பினும், நினைவாற்றல் பிரச்னைகள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கும் போது, அதாவது முக்கியமான விஷயங்களை அடிக்கடி மறப்பது, பழகிய இடங்களில் வழி தவறுவது, அன்றாடப் பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்படுவது, அல்லது முடிவெடுப்பதிலும் நடத்தையிலும் மாற்றங்களைக் காண்பது போன்ற நிலை உருவாகும்போது கவனமாக இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
நரம்பியல் மருத்துவர் ஜெயேந்திர யாதவ் அல்சைமர்ஸ் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கேள்வி: நினைவாற்றல் பிரச்னைகளை எப்போது மருத்துவரிடம் காட்ட வேண்டும்?
பதில்: நினைவாற்றல் மாற்றங்கள் தொடர்ந்து இருந்து, காலப்போக்கில் அதிகரித்து, அல்லது அன்றாட செயல்பாடுகளைப் பாதித்தால், நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
ஒரே கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பது, நிதிப் பரிவர்த்தனைகள் அல்லது மருந்துகளை நிர்வகிப்பதில் புதிய சிரமங்கள், நேரம் அல்லது இடம் குறித்த குழப்பம், ஆளுமையில் மாற்றங்கள், அல்லது முன்பு எளிதாகச் செய்த பணிகளைக் கடினமாக உணர்வது போன்றவை சில முக்கிய அறிகுறிகளாகும்.
ஆரம்பத்திலேயே கண்டறிவது, இந்த மாற்றங்கள் அல்சைமர்ஸால் ஏற்படுகிறதா அல்லது மன அழுத்தம், தூக்கப் பிரச்னைகள் அல்லது வைட்டமின் குறைபாடு போன்ற பிற மருத்துவ நிலைமைகளால் ஏற்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க உதவும்.
கேள்வி: அல்சைமர்ஸ் முதன்மையாக ஒரு மரபணு நோயா, அல்லது வாழ்க்கை முறையும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?
பதில்: மரபணுக் காரணிகள் ஓரளவு பங்களிக்கக்கூடும், ஆனால் அல்சைமர்ஸ் என்பது மரபணுக்களை மட்டுமே பொறுத்த ஒரு நோய் அல்ல. வாழ்நாள் முழுவதும் ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள், இதய ஆரோக்கியம், வழக்கமான உடற்பயிற்சி, தூக்கத்தின் தரம், உணவு முறை, கல்வி, சமூகப் பங்களிப்பு, மற்றும் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.
ஆரோக்கியமான இதயம் மூளைக்கு நல்ல ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. எனவே, இதய ஆரோக்கியத்தைப் பேணுவதும் மூளை ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான ஒரு முக்கியமான பகுதியாகும்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு அல்சைமர்ஸ் இருந்தால், குழந்தைகள் அல்லது பேரக்குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு எவ்வளவு அதிகரிக்கிறது?
பதில்: நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு அல்சைமர்ஸ் இருந்தால், அதற்கான ஆபத்து ஓரளவு அதிகரிக்கலாம். இருப்பினும், அந்த நபருக்கு நிச்சயம் அல்சைமர்ஸ் வரும் என்று இதற்கு அர்த்தமல்ல. பெரும்பாலான நேர்வுகளில், மரபணு, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் ஒன்றாக இணைந்தே செயல்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: அல்சைமர்ஸ் பற்றிய சில தவறான கருத்துக்கள் யாவை?
பதில்: அல்சைமர்ஸ் முதியவர்களை மட்டுமே பாதிக்கும் என்பது மிகவும் பொதுவான தவறான கருத்தாகும். வயது ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும், அரிதான நேர்வுகளில், இளைஞர்களுக்கும் அல்சைமர்ஸ் பாதிப்பு வரலாம். மற்றொரு தவறான கருத்து என்னவென்றால், அல்சைமர்ஸ் இருப்பது கண்டறியப்பட்டால், அனைத்து நம்பிக்கையும் போய்விட்டது என்பதாகும்.
தற்போது முமுமையான சிகிச்சை இல்லை என்றாலும், ஆரம்பகால கண்டறிதல், பொருத்தமான மருத்துவ சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தேவையான ஆதரவு ஆகியவை அறிகுறிகளை நிர்வகிக்கவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
மேலும், அல்சைமர்ஸ் என்பது வயதாவதன் இயல்பான பகுதி அல்ல, அது சிகிச்சையும் கவனிப்பும் தேவைப்படும் ஒரு மருத்துவ நிலை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: முறையான நோயறிதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சில ஆரம்பகால அறிகுறிகள் தோன்றுமா?
பதில்: ஆம். ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் நுட்பமானவையாக இருக்கும், மேலும் நோய் கண்டறிதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றக்கூடும்.
சமீபத்திய உரையாடல்களை அடிக்கடி மறப்பது, ஒரே கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பது, திட்டமிடுவதில் அல்லது சிக்கல்களைத் தீர்ப்பதில் சிரமம், ஆளுமை அல்லது மனநிலையில் மாற்றங்கள், மற்றும் முன்பு ரசித்துச் செய்த விஷயங்களில் ஆர்வத்தை இழப்பது போன்றவை சில ஆரம்பகால அறிகுறிகளாகும். இருப்பினும், எப்போதாவது ஏற்படும் மறதி உங்களுக்கு அல்சைமர்ஸ் இருக்கிறது என்று அர்த்தமல்ல.
கேள்வி: காது கேளாமைக்கும் டிமென்ஷியா ஆபத்திற்கும் என்ன தொடர்பு?
பதில்: சிகிச்சை அளிக்கப்படாத காது கேளாமை, அறிவாற்றல் திறன் குறைவது டிமென்ஷியா ஆபத்து அதிகரிப்பதோடு தொடர்புடையது. ஒருவரால் சரியாகக் கேட்க முடியாதபோது, ஒலிகளையும் பேச்சையும் புரிந்துகொள்ள மூளை கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
இது காலப்போக்கில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இது மூளையைச் சென்றடையும் மற்றும் செயலாக்கப்படும் தகவல்களின் அளவையும் குறைக்கலாம். எனவே, காது கேளாமையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நிர்வகிப்பது தகவல்தொடர்பை மேம்படுத்தவும், மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், அறிவாற்றல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி - மூளை ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்ன?
பதில்: மூளை ஆரோக்கியம் என்பது வாழ்நாள் முழுவதக்குமான முதலீடு. இளமைப் பருவத்தில் எடுக்கப்படும் முடிவுகளும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களும் வயது முதிரும்போது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, நல்ல தூக்கம், இதய ஆரோக்கியத்தைப் பேணுதல், தொடர்ச்சியான கற்றல் மற்றும் வலுவான சமூக உறவுகளைப் பராமரித்தல் ஆகியவை மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
அல்சைமர்ஸை முற்றிலும் தடுப்பதற்கு நிச்சயமான வழி எதுவுமில்லை என்றாலும், குழந்தைப்பருவம் அல்லது இளமைப் பருவத்திலிருந்தே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது அறிவாற்றல் குறைபாட்டின் சாத்தியத்தைக் குறைக்கும்.
3. இளைஞர்களின் வாழ்க்கை முறையும் அல்சைமர்ஸ் தொடர்பும் என்ன?
அல்சைமர்ஸ் நோய் முதிய வயதுடன் மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும், மூளை ஆரோக்கியத்தையும் எதிர்கால நினைவாற்றல் திறனையும் வளர்க்கும் செயல்முறை இளம் வயதிலேயே தொடங்குகிறது. எனவே, 20 மற்றும் 30 வயதில் உள்ள இளைஞர்களும் தங்களது மூளை ஆரோக்கியத்தைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
நரம்பியல் மருத்துவர் நிதின் சக்வேகர் இது குறித்து கூடுதல் தகவல்களை வழங்குகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "நினைவாற்றல் இழப்பு அல்லது டிமென்ஷியாவின் ஆபத்து ஒரே இரவில் உருவாகிவிடாது. இளமையில் கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை மற்றும் சுகாதார முடிவுகளின் விளைவுகளை பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் காண முடியும். எனவே, ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது முதிய வயதில் மூளையின் செயல்பாட்டைப் பராமரிக்க உதவும்" என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், "டிமென்ஷியாவுடன் தொடர்புடைய பல ஆபத்துக் காரணிகள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே உருவாகத் தொடங்குகின்றன என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு, தரமான தூக்கம், ஆரோக்கியமான உடல் எடை, மற்றும் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது மூளை ஆரோக்கியத்திற்கு நீண்டகால நன்மைகளைத் தரும்." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
குறிப்பாக, உடற்பயிற்சியின்மை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், ரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு, மனச்சோர்வு, சமூக தனிமை மற்றும் காது கேளாமை ஆகியவை டிமென்ஷியா ஆபத்துடன் தொடர்புடைய காரணிகளாகக் கருதப்படுகின்றன.
இவை கட்டுப்படுத்தப்படாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நிலைகள் ரத்த நாளங்கள் மற்றும் ரத்த ஓட்டத்தைப் பாதித்து, மூளைக்கான ரத்த ஓட்டத்தைக் குறைத்து, எதிர்காலத்தில் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் குறைபாட்டின் சாத்தியத்தை அதிகரிக்கும்.
மூளை ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வழக்கமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது, மேலும் மூளைச் செல்களுக்கு இடையிலான இணைப்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஏரோபிக் பயிற்சிகள், வலிமைப் பயிற்சிகள் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் பழக்கம் ஆகிய அனைத்தும் இணைந்து நன்மையைத் தரும்.
மூளை ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் அவசியம். நினைவாற்றலை வலுப்படுத்தவும், உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், அன்றாட மூளை செயல்பாட்டைப் பராமரிக்கவும் போதுமான மற்றும் தரமான தூக்கம் அவசியம்.
4. மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
டாக்டர் சக்வேகர் இக்கேள்விக்குப் பதிலளிக்கிறார். அவர் கூறுகையில், "புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, புத்தகங்களைப் படிப்பது, இசைக்கருவியை வாசிப்பது அல்லது ஒரு புதிய திறனைப் பெறுவது போன்ற மூளைக்கு சவாலளிக்கும் செயல்பாடுகள் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க வைக்கின்றன. இது மூளையின் செயல்பாட்டைப் பராமரிக்கும் திறனை அதிகரிக்கும். அல்சைமர்ஸை முழுமையாகத் தடுக்க முடியுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை என்றாலும், மூளைக்கு தொடர்ந்து சவால் விடுப்பது நிச்சயம் பலனளிக்கும்" என்கிறார்.
உங்கள் உடலையும் மனதையும் மட்டும் கவனித்துக் கொள்வதால் உங்கள் பொறுப்பு முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. டாக்டர் நிதின் சக்வேகர் நமது உறவுகள் மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகிய முக்கியமான விஷயங்களின் மீது கவனம் செலுத்த பரிந்துரைக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"மனித உறவுகளும் சமூகப் பங்களிப்பும் மூளையின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது," என்று அவர் கூறுகிறார்.
"குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்துடன் தொடர்பில் இருப்பது, அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுவது மற்றும் குழு நடவடிக்கைகளில் பங்கேற்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தனிமையைக் குறைக்கவும் உதவும்.ஆரோக்கியமான முறையில் வயதாவதற்கு வலுவான சமூக உறவுகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன." என்று தெரிவித்தார்.
5. இளைஞர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
இன்றைய இளைஞர்களிடையே திரை நேரம் அதிகரிப்பது பெரும்பாலும் விவாதப் பொருளாக உள்ளது. இருப்பினும், கவலை திரை பயன்பாட்டைப் பற்றி மட்டுமல்ல, அது உடற்பயிற்சி, தூக்கம், சமூக தொடர்பு மற்றும் மூளைக்கு சவாலளிக்கும் செயல்பாடுகளைக் குறைக்க வழிவகுக்கிறதா என்பது பற்றியது தான்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, மோசமான உணவு முறை, போதிய தூக்கமின்மை, புகையிலை மற்றும் மது பயன்பாடு ஆகியவற்றின் கலவை நீண்டகால சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும்.
டாக்டர் சக்வேகர் கூறுகையில், "இளம் வயதிலேயே சில எளிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது எதிர்காலத்தில் மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். வழக்கமான உடற்பயிற்சி, நல்ல இதய ஆரோக்கியத்தைப் பராமரித்தல், புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்த்தல், நல்ல தூக்கம் பெறுதல், சமூக உறவுகளைப் பராமரித்தல் மற்றும் தொடர்ந்து புதிதாக எதையாவது கற்றுக்கொள்வது ஆகியவை மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கியமான வழிகளாகக் கருதப்படுகின்றன. இதன் பின்னணியில் உள்ள முதன்மைச் செய்தி என்னவென்றால், அல்சைமர்ஸ் என்பது முதிய வயதில் மட்டுமே யோசிக்க வேண்டிய ஒன்றல்ல, அதற்கான தயாரிப்பு இளமையிலேயே தொடங்குகிறது என்பதாகும்."

பட மூலாதாரம், Getty Images
உங்கள் வாழ்க்கை முறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய விரும்பினால், உணவை மாற்ற, மருந்து சாப்பிட அல்லது உடற்பயிற்சியைத் தொடங்க விரும்பினால், ஒரு மருத்துவர் மற்றும் தகுதியான பயிற்சியாளரின் உதவியைப் பெறுவது முக்கியம்.
உங்கள் உடலையும் அறிகுறிகளையும் ஒரு மருத்துவரால் சரியாகப் பரிசோதித்து, அவர்களின் ஆலோசனையுடன் மட்டுமே வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது சிறந்தது. மருத்துவரை ஆலோசிக்காமல் சுய மருத்துவம் செய்து கொள்வது ஆபத்தானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































