You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு வினாத்தாள் எங்கிருந்து கசிந்தது? - அடுத்து என்ன நடக்கும்?
- எழுதியவர், ஷுபாங்கி மிஷ்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மே 3 அன்று இந்தியா முழுவதும் உள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையில் நீட் தேர்வெழுதினர்.
9 நாட்கள் கழித்து தேசிய தேர்வு முகமை (NTA) முதன்முறையாக இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கான நீட் தேர்வை ரத்து செய்தனர்.
மறுதேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, அதுவும் சேர்க்கை நடைமுறையில் தாமதத்தை ஏற்படுத்தலாம் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலையை அதிகரித்துள்ளது.
செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் NTA பொது இயக்குனர் அபிஷேக் சிங் கூறுகையில், தேர்வு நடந்த நான்கு நாட்கள் கழித்து மே 7 அன்று 'மாதிரி தாள்' (guess paper) ஒன்றின் பிடிஎஃப் வாட்ஸ்ஆப்பில் பரவியதாகவும் அது உண்மையான வினாத்தாளை ஒத்திருந்ததாகவும் ஒருவரிடமிருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.
மேலும், "தேர்வில் எந்தவித விதிமீறலும் எங்களின் சகிப்பின்மை கொள்கைக்கு எதிரானது, மேலும் இந்த தேர்வுக்காக கடுமையாக உழைத்த 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தையும் அது மிக மோசமாக பாதிக்கும்." என்றார்.
நீட் தேர்வு இந்தியாவின் ஒரே ஒருங்கிணைந்த மருத்துவ நுழைவுத்தேர்வாக உள்ளது. இது நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை தீர்மானிக்கிறது.
இந்த தேர்வு மற்ற மாநில அளவிலான அனைத்து மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு பதிலாகவும் நடத்தப்படுகிறது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இது செல்லுபடியாகும்.
ஆனால், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு என்பது இத்தகைய பெரியளவிலான தேர்வை தேசிய தேர்வு முகமையால் நியாயமாகவும் தடையின்றியும் நடத்துவதற்கான திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேர்வு ரத்து செய்யப்பட்ட மறுநாளே, அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் மறுதேர்வு நடத்தவும், NTA அமைப்பை மாற்றியமைக்கவோ அல்லது அதன் கட்டமைப்பை அடிப்படையிலிருந்து சீரமைக்கவோ கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
2024-ஆம் ஆண்டிலும், வினாத்தாள் கசிவு மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளால் தேர்வு சர்ச்சைக்குள்ளானது; ஆயிரக்கணக்கான தேர்வர்கள் வழக்கத்துக்கு மாறாக மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இந்தச் சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறையான சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் இதுதொடர்பாகப் பல கைதுகளும் தடுப்புக் காவல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீட் தேர்வை நடத்துவது மிகவும் கடினமானதா?
தேசிய தேர்வு முகமைக்கு முன்பு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மருத்துவத்துக்கான நீட் மற்றும் பொறியியலுக்கான ஜேஇஇ போன்ற தேர்வுகளை நடத்தி வந்தது. அதே நேரத்தில், மாநில வாரியங்களும் பல்கலைக்கழகங்களும் தங்களின் சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன.
இந்தியாவின் உயர்கல்வி நுழைவுத் தேர்வு முறைக்குக் கடுமை, தரப்படுத்தல் மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதையும், பல தேர்வுகளின் சுமையிலிருந்து மாணவர்களை விடுவிப்பதையும் நோக்கமாகக்கொண்டு, தேசிய தேர்வு முகமை நவம்பர் 2017-ல் நிறுவப்பட்டது.
இந்த அமைப்பு 15-க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்துகிறது.
ஆனால், தேசிய தேர்வு முகமை தொடர்ச்சியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுப் பொறுப்புக்கூறல் இல்லாததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2024-ல், தேர்வின் நேர்மை பாதிக்கப்படுவதாகக் கவலைகளைக் காரணம் காட்டி, யுஜிசி-நெட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளும் வெளிவந்து, பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்தன.
ஊழல் நடைமுறைகளை ஒடுக்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், தீர்க்கப்பட வேண்டிய ஆழமான கட்டமைப்புச் சிக்கல்கள் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தேர்வு மையங்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்காக முகமையானது வெளியிலிருந்து ஆட்களை பணியமர்த்துவதை (outsourcing) பெரிதும் சார்ந்திருப்பதே மிகப்பெரிய பிரச்னை என்றும், NTA தனது தேர்வு கட்டமைப்பின் பெரும்பகுதியை நேரடியாகக் கட்டுப்படுத்தாததால் இது பலவீனங்களை உருவாக்குகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அபிஷேக் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம், "தேர்வு சுமுகமாக நடத்தப்பட்டது. மே 3 அன்று எந்தப் பிரச்னையும் இல்லை. தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வுக்குப் பின்னரோ உடனடியாக எந்தப் புகாரும் வரவில்லை. நாங்கள் ஓ.எம்.ஆர் (OMR) தாள்களை சரிபார்க்கத் தொடங்கினோம், அனைத்தும் சரியாக இருந்தன. போக்குவரத்திலோ அல்லது தேர்வு நடத்துவதிலோ எந்தப் பிரச்னையும் இல்லை," என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாத, மோசடிகளற்ற ஒரு தேர்வை நடத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது, அதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்றார்.
'பேனா மற்றும் தாள்'
ஜேஇஇ போன்ற பொறியியல் தேர்வுகள் இப்போது இணையவழியில், பல கட்டங்களாக நடத்தப்படுகின்றன; ஆனால், இதற்கு மாறாக நீட் தேர்வு இன்றும் ஒரு பாரம்பரியமான 'பேனா மற்றும் தாளை' (pen and paper) அடிப்படையாகக் கொண்ட தேர்வாகவே உள்ளது.
இது மிகப்பெரிய நிர்வாக மற்றும் ஏற்பாடு சார்ந்த சிக்கல்களை உருவாக்குவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பான வாகனங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 5,500 தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளது; இதனால், இந்த முழுப் போக்குவரத்துச் சங்கிலியும் பாதுகாப்பு மீறல்களுக்கு ஆளாகக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.
அபிஷேக் சிங் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், "இதை (கணினி வழித் தேர்வு முறையை) முடிவு செய்வது தேசிய தேர்வு முகமையின் பணியல்ல. இந்த முடிவை சம்பந்தப்பட்ட அமைச்சகமே எடுக்க வேண்டும்," என்று கூறினார்.
தேசிய தேர்வு முகமை சில குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. வினாத்தாள்கள் பாதுகாப்பான 'டிஜிட்டல் பூட்டு' கொண்ட பெட்டிகளில் வைக்கப்படுவதாகவும், தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு அவை தானாகவே திறக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டிகள், தேர்வு மையங்களில் உள்ள மிக உயர்ந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட 'ஸ்டிராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அறைகளில் வைக்கப்படுகின்றன.
இருப்பினும், தேசிய தேர்வு முகமை இப்போதும் ஏற்பாடுகள் தளவாட ரீதியான சவால்களை எதிர்கொள்வதாகப் பலர் கருதுகின்றனர்.
கோட்டாவில் (Kota) உள்ள மோஷன் எஜுகேஷன் என்ற பயிற்சி மையத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நிதின் விஜய் இதுகுறித்து தெரிவிக்கையில், "உலகில் வேறு எங்கும், லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஒரே நாளில், ஒரே நேரத்தில் 'பேனா மற்றும் காகித' முறையில் தேர்வுகள் நடத்தப்படுவதாக நான் கருதவில்லை," என்றார்.
"5,500 தேர்வு மையங்கள் மற்றும் 550 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவ்வளவு பெரிய அளவில் தேர்வை நடத்துவது, நிர்வாகக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது."
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தேர்வு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும் தேசிய தேர்வு முகமை முயற்சிகளை மேற்கொண்டதாக நிதின் விஜய் கூறினார்; இருப்பினும், "வினாத்தாள் தேர்வு மையத்தை வந்தடைவதற்கு முன்பாகவே அது கசிந்துவிட்டதாகத் தெரிகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடக செய்திகளின்படி, வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், தேர்வு நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் தொடங்கியிருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
கரியர்ஸ் 360 என்ற கல்வி இணையதளத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மகேஷ்வர் பெரி இதுகுறித்து தெரிவிக்கையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை உள்ளது; அதேவேளையில், தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ. 1 கோடி வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மற்றும் தனியார் இடங்களுக்கான கட்டணத்தில் ரூ. 85 முதல் 90 லட்சம் வரை வித்தியாசம் இருக்கும்போது, வினாத்தாளை விலைக்கு வாங்குவதற்காக ரூ. 30 லட்சம் வரை செலவழிக்க மாணவர்கள் தயங்குவதில்லை," என்றார்.
"வினாத்தாளைக் கசியவிட்டவர்களுக்கு, இவ்வளவு அதிகமான விலையிலும் அதை வாங்கத் தயாராக இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும்."
ஏழை அல்லது கிராமப்புற மாணவர்களுக்குக் கணினிகள் எளிதில் கிடைக்காமல் போகலாம் என்பதால், அனைத்துப் பொருளாதார மற்றும் புவியியல் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், நீட தேர்வு இன்றும் 'பேனா மற்றும் தாள்' முறையிலேயே நடத்தப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போது இந்தக் கருத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, பேனா மற்றும் தாள் சார்ந்த தேர்வு முறையிலிருந்து கணினி சார்ந்த தேர்வு முறைக்கு படிப்படியாக மாறுவதற்குப் பரிந்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"கணினி சார்ந்த தேர்வு முறை கிராமப்புற மாணவர்களுக்கு நியாயமற்றதாக அமையும் என்று கூறப்படுகிறது; ஆனால், கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் இணைய வசதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. எனவே, நாம் தேர்வு நடத்தும் வடிவத்தை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும்," என்று நிதின் விஜய் கூறுகிறார்.
எனினும், தேர்வை இணையவழியில் நடத்துவது, தேர்வில் பங்கேற்போரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் குறைத்துவிடக்கூடும் என்று மகேஷ்வர் பெரி எச்சரித்துள்ளார்.
தேர்வு சிக்கல்கள்
பணியாளர் பற்றாக்குறை மற்றொரு பிரச்னையாகும். இந்த முகமை ஏராளமான தேர்வுகளை நடத்தி வந்தாலும், டிசம்பர் 2024 நிலவரப்படி, இதில் 22 நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்; இவர்களுடன் 38 ஒப்பந்தப் பணியாளர்களும், வெளியிலிருந்து பணியமர்த்தப்பட்ட (outsourced workers) 138 பேரும் பணியாற்றினர்.
"இத்தனை தேர்வுகளையும், இத்தனை தேர்வு மையங்களையும் இந்த முகமை எவ்வாறு நிர்வகிக்கப்போகிறது என்பதே இங்கு எழும் கேள்வியாகும்," என்று டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் குறிப்பிட்டார்.
"நாடு தழுவிய அளவில் இத்தனை தேர்வுகளை நடத்துவதற்குத் தேவையான போதிய தயார்நிலையுடன் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை."
தேசியத் தேர்வு முகமையை மறுசீரமைக்கவும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளைப் பல அமர்வுகளாக நடத்தவும் ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைத்திருந்தது.
இந்தப் பரிந்துரைகளில் சிலவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது; இதில், 16 நிரந்தரத் தலைமைப் பொறுப்புகளைப் புதிதாக உருவாக்கியதும் அடங்கும்.
அதிகப்படியான மையப்படுத்தல் ஒரு பிரச்னையா?
செயல்பாட்டு ஏற்பாடுகளுக்கு அப்பால், மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை ஒரு குறைபாடுள்ள மாதிரி என்று பல கல்வியாளர்களும் விமர்சகர்களும் ஒரு அடிப்படைக் கருத்தை எழுப்பியுள்ளனர்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, இந்தியாவின் பரந்த மற்றும் விலையுயர்ந்த பயிற்சி துறைக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதாகவும், அதற்கான செலவை ஏற்க முடியாத மாணவர்களுக்குப் பாதகமாக அமைவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
மகேஷ்வர் பெரி, "பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வசதியில்லாத மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பாதகமாக அமைகிறது" என்றார்.
"மாணவர்களின் எதிர்காலம் ஒரே ஒரு நுழைவுத் தேர்வைச் சார்ந்திருப்பதை நாம் குறைக்க வேண்டும். பள்ளித் தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்."
புகழ்பெற்ற கல்வியாளர் அனிதா ராம்பாலும், மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வசதி உள்ள குழந்தைகளுக்குப் பயனளிக்கின்றன என்று கூறினார்.
நிதின் விஜய் கூறுகையில், தேசிய தேர்வு முகமையின் இருப்பு ஒரு பிரச்னையல்ல, ஆனால் அதன் செயல்முறைகளுக்கு உடனடி சீர்திருத்தம் தேவை என்றும், அதில் அதிக நிரந்தரப் பணியாளர்கள், வலுவான நிறுவனத் திறன் மற்றும் கணினி அடிப்படையிலான தேர்வை நோக்கிய தீவிர நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்றும் கூறுகிறார்.
இந்தியா, சமூக முன்னேற்றத்துக்கான ஒரு வழியாகத் தேர்வுகள் பெரிதும் நம்பப்படும் ஒரு நாடு. இப்போதைக்கு, மாணவர்கள் மீண்டும் காத்திருக்க வேண்டியிருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு