மமதாவின் தோல்வி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்கு பலவீனப்படுத்தியுள்ளது?

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்கும் தலைவர்களில் மம்தா பானர்ஜி ஒரு முக்கிய முகமாக இருந்ததால், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் பீகாரின் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அவருக்கு ஆதரவாக நின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவு இருந்தபோதிலும், மமதா பானர்ஜியால் தனது ஆட்சியைத் தக்கவைக்க முடியாமல் போனது.
    • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் 215 இடங்களை வென்றிருந்த கட்சியால், இம்முறை 100 இடங்களைக் கூட வெல்ல முடியவில்லை.

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்கும் தலைவர்களில் மமதா பானர்ஜி ஒரு முக்கிய முகமாக இருந்ததால், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் பிகாரின் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அவருக்கு ஆதரவாக நின்றனர்.

ஆனால் பல எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவு இருந்தபோதிலும், மமதா பானர்ஜியால் தனது ஆட்சியைத் தக்கவைக்க முடியாமல் போனது.

இந்தத் தோல்வி ஒரு முக்கியமான எதிர்க்கட்சிக்கு கிடைத்த பின்னடைவு என்பது மட்டுமல்லாமல், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட 'இந்தியா கூட்டணியின் 'ஒரு முக்கிய முகமாகவும் மமதா பானர்ஜி பார்க்கப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்வியால் மமதா பானர்ஜியின் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்பட்ட பின்னடைவு, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் அரசியலில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், @MamataOfficial

'எதிர்க்கட்சி பலவீனமடைந்துள்ளது'

மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 இடங்களில் 29 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் வென்றிருந்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"இந்த வெற்றியின் மூலம், பாரதிய ஜனதா கட்சி இப்போது மேற்கு வங்கத்தின் அனைத்து 42 தொகுதிகளிலும் தனது தடத்தை பதிக்கும். மமதா பானர்ஜி ஒரு பெரிய தலைவர் மற்றும் அவரது கட்சியின் தோல்வி எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும். இது பாஜகவை வலுப்படுத்தியுள்ளது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய்.

மேலும்,"எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் மமதா பானர்ஜிக்கு 'எஸ்ஐஆர்' ஒரு தலைவலியாக இருப்பதாகக் கருதின. இந்தக் கட்சிகள் அனைத்தும் சித்தாந்த ரீதியாக வேறுபட்டவை, அதே சமயம் பாஜக கடைபிடிக்கும் வலதுசாரி அரசியலுக்கு மாற்று எதுவும் இல்லை"என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளைப் பற்றி நாம் பேசினால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மட்டுமே சற்று ஆதாயம் அடைந்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸின் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது, இருப்பினும் அசாமில் அது மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியை இழந்துள்ளது. கொளத்தூரில் முக ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். அதே போல் மமதா பானர்ஜியும் தோற்கடிக்கப்பட்டார்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் நீர்ஜா செளத்ரி கூறுகையில், "ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் தோல்வியடைந்துள்ளனர். இதன் ஒரு விளைவு என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவை அதிகமாக எதிர்த்தாலோ அல்லது அழுத்தம் கொடுக்க முயன்றாலோ, அவர்களின் கோப்புகள் திறக்கப்படும். இதில் மமதா பானர்ஜி மற்றும் மு.க.ஸ்டாலின் இருவருமே அடங்குவர்" என்றார்.

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, மமதா பானர்ஜி மற்றும் அவரது கட்சி வங்கதேச நாட்டினருக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், ஊழல் செய்வதாகவும் பாஜக தலைவர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல்வேறு மாநிலங்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது (அமித் ஷாவின் கோப்புப் புகைப்படம்)

எதிர்க்கட்சி இல்லாத அரசியல்?

கடந்த சில ஆண்டுகளில் பல மாநிலங்களில் அதிகாரத்தை இழந்த பிறகு, மத்திய அளவில் எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளன.

பாட்னாவின் ஏ.என். சின்ஹா சமூக ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், அரசியல் ஆய்வாளருமான டி.எம். திவாகர், "பாஜக எதிர்க்கட்சிகள் இல்லாத அரசியலை விரும்புகிறது. இந்த வெற்றி அதன் மன உறுதியை அதிகரிக்கும். இந்தத் தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அரசியலில் சந்தர்ப்பவாதம் மிகவும் பரவலாக இருப்பதால், அனைவரும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்" என்கிறார்.

மேலும், "எதிர்க்கட்சிகள் அல்லது பிராந்தியக் கட்சிகள் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற விதத்தைப் பார்த்தால், உத்தரப்பிரதேசத்திலும் அதே நிலைதான் ஏற்படும் என்று தோன்றுகிறது. இப்போது அரசியல் என்பது பாஜகவிற்கும் சிறிய கட்சிகளுக்கும் இடையிலான ஒன்றாக மாறிவிட்டது. இது ஜனநாயகத்திற்கு மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

''எதிர்க்கட்சிகள் முன்னேறிச் செல்வதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், அதன் ஒற்றுமை அல்லது வியூகம் காகிதத்தில் மட்டுமே உள்ளது.'' என்கிறார் ரஷீத் கித்வாய்.

பாட்னாவின் ஏ.என். சின்ஹா சமூக ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், அரசியல் ஆய்வாளருமான டி.எம். திவாகர் கூறுகையில், "பாஜக எதிர்க்கட்சிகள் இல்லாத அரசியலை விரும்புகிறது. இந்த வெற்றி அதன் மன உறுதியை அதிகரிக்கும். இந்தத் தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி மீண்டும் பரிசீலிக்க வேண்டும். நாடாளுமன்ற அரசியலில் சந்தர்ப்பவாதம் மிகவும் பரவலாக இருப்பதால், அனைவரும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான திருத்த மசோதாக்கள் நிறைவேறாமல் தடுக்கப்பட்டபோது, ​​எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வெளிப்பட்டது (கோப்புப் படம்).

எதிரணிக்கு முன் உள்ள தேர்வுகள் என்ன?

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க, ஜூன் 23, 2023 அன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் நடந்த சில மாதங்களிலேயே, மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் குமார் எதிர்க்கட்சி கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்தார்.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஏற்பட்ட முதல் பெரும் பின்னடைவாக இது கருதப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் எஞ்சிய எதிர்க்கட்சிகளிடையே முழுமையான ஒற்றுமை காணப்படவில்லை. டெல்லி முதல் பஞ்சாப் வரையிலும், மேற்கு வங்கம் முதல் பிகார் வரையிலும் இந்த ஒற்றுமையில் விரிசல்கள் தெரிந்தன.

இதுகுறித்து டி.எம். திவாகர் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தோல்வி எதிர்க்கட்சிகளின் மன உறுதியை உடைக்கும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு, பிகார் தோல்விக்குப் பிறகு செயலற்று இருந்தது போல இல்லாமல் இருந்தால் அது அவர்களுக்கு நல்லது" என்கிறார்.

மேலும், "மமதா பானர்ஜியின் விஷயத்தில், ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தது. இதில் எஸ்ஐஆரின் பங்கும் அடங்கும். தேர்தலில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் வேலை, ஆனால் அது அதைக் குறைக்க முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல" என்றும் குறிப்பிட்டார்.

"மமதா பானர்ஜியின் தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் முன்னேறிச் செல்ல இருக்கும் ஒரே வழி காங்கிரஸின் தலைமையைப் ஏற்றுக்கொள்வதும், காங்கிரஸ் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதும் தான். இது நடந்தால், எதிர்க்கட்சிகளால் முன்னேறிச் செல்ல முடியும். எதிர்க்கட்சிகளின் தற்போதைய வியூகம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு, இந்த நேரம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் முக்கியமானதாகும்" என்கிறார் நீர்ஜா செளத்ரி.

இதுகுறித்துப் பேசிய ரஷித் கித்வாய், "பாஜக தோற்றால், தோல்வியிலிருந்து மீள அன்றைய தினமே தயாராகத் தொடங்கும், ஆனால் எதிர்க்கட்சிகள் தோல்விக்குப் பிறகு அலட்சியமாகி விடுகின்றன"என்று குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு