You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டின் கஜானா காலியா? விஜய் கூறுவது போல் நிதிநிலை மோசமாக உள்ளதா?
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் மே 10ஆம் தேதியன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்புக்கு ''சிங்கப்பெண் அதிரடிப் படை'' என முதலமைச்சராகத் தனது முதல் மூன்று உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சராகத் தனது முதல் உரையை ஆற்றியபோது, தமிழ்நாட்டின் கடன் அளவு குறித்தும், நிதி நிலைமை குறித்தும் முந்தைய அரசை விமர்சித்து அவர் சில விஷயங்களை பேசினார்.
இது பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிக் கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாகக் கூறிவிட்டோம். உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள்" என்று விமர்சித்திருந்தார்.
அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தனது அறிக்கையில், "தமிழ்நாட்டின் கடன் அளவு 10 லட்சம் கோடி ரூபாய் என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
உண்மையில், முதலமைச்சர் விஜய் 'கஜானா காலி' என்று கூறுவது போன்ற நிலை ஏற்படுவது சாத்தியமா? முந்தைய திமுக அரசாங்கம் விட்டுச் சென்றுள்ள தமிழ்நாட்டின் நிதி நிலைமை என்ன? தவெக அரசாங்கத்தால் மாநிலத்தின் கடன் அளவைக் குறைக்கவும், மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும் முடியுமா?
முதலமைச்சர் விஜய் உரையும், மு.க.ஸ்டாலின் விமர்சனமும்
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் ஆற்றிய முதல் உரையில், "முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டுப் போயுள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்தப் பொறுப்பை எடுத்திருக்கிறோம். உள்ளே சென்று பார்த்தால்தான், என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது தெரியும். அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
மேலும், "மக்கள் எனக்குக் கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும்" என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் நிதிநிலை குறித்து அவர் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்வினையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "பதவியேற்ற உடனேயே அரசிடம் பணம் இல்லை என்று பேசத் தொடங்காதீர்கள். அதெல்லாம் இருக்கிறது. மக்களுக்குக் கொடுப்பதற்கு மனதும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும்" என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ஐந்து ஆண்டுகளாக கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்னைகளையும், மத்திய பாஜக அரசின் ஓரவஞ்சனையையும் சமாளித்துதான் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'முந்தைய அரசு ரூ.10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவை துடைத்துவிட்டுச் சென்றுள்ளது' என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே கூறி இருக்கிறீர்களே!
அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே தமிழகத்தின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிக் கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாகக் கூறிவிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதற்குப் பிறகுதானே நீங்கள் பல வாக்குறுதிகளைக் கொடுத்தீர்கள்? உங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் 'கஜானா காலி' என்பது உண்மையா?
முதலமைச்சர் விஜய் கூறுவது போன்ற கடுமையான நெருக்கடியில் மாநிலத்தின் நிதி நிலைமை இல்லை என்றும், 'கஜானா காலி' எனக் கூறுவது அடிப்படையற்ற, எதார்த்தத்துடன் முரண்பட்ட கூற்று என்றும் கூறுகிறார் பொருளாதார நிபுணர் கிருஷ்ணமூர்த்தி பிரபாகரன்.
அதேவேளையில், தமிழ்நாட்டின் கடன் மேலாண்மை முழுமையாக சவாலற்றது என்றும் கூற முடியாது. வட்டி செலவுகள், மின்வாரிய இழப்புகள், நலத்திட்டச் செலவுகள் மற்றும் ஊதிய-ஓய்வூதியச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மாநிலத்தின் நிதி மேலாண்மைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், அடிப்படையில் "ஒரு மாநிலத்தின் செலவுகள் பட்ஜெட்டில் ஆலோசிக்கப்பட்டு அதற்கான நிதி முறையாகத் திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 28.5% வரை தமிழ்நாடு கடன் வாங்கலாம். ஆனால் இதுவரை அதற்கு உட்பட்ட அளவிலேயே மொத்த கடன் அளவு இருக்கிறது" என்றும் கிருஷ்ணமூர்த்தி பிரபாகரன் தெரிவித்தார்.
அரசின் நிதிச்சூழல் குறித்த அடிப்படைப் புரிதல் இருந்தால், விஜயின் கூற்றுக்கு எவ்வித அர்த்தமும் இல்லை என்பது புரியும் என்கிறார் மெட்ராஸ் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஓய்வுபெற்ற தலைவர் ஜோதி சிவஞானம்.
இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "நிதி என்பது வருவாய் மற்றும் செலவினத்தின் தொடர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மாநிலத்திற்கான செலவினங்களுக்குத் தேவைப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சட்டப்பேரவையில் பட்ஜெட் போடப்படும். அந்த நிதி அனைத்தும் ஒருங்கிணைந்த நிதி என்பதன் கீழ் கொண்டு செல்லப்படும். அதில் இருந்து ஒரு ரூபாயை எடுத்து செலவழிப்பதாக இருந்தாலும், சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற வேண்டும். அதுவே, மத்திய அரசாக இருந்தால் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் விவரங்கள் அனைத்தும் விரிவாக பட்ஜெட் ஆவணங்களில் குறிப்பிடப்படும். அதில் முந்தைய ஆண்டின் நிதிநிலை, நடப்பு ஆண்டு மற்றும் வரவிருக்கும் ஆண்டுக்கான நிதிநிலை மதிப்பீடுகள், தீட்டப்பட்டுள்ள திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு என அனைத்தும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இவை அனைத்திற்கும் ஒப்புதல் பெற்ற பிறகே, மாநிலத்திற்கான செலவினங்களைச் செய்ய முடியும்," என்று விளக்கினார்.
அதுமட்டுமின்றி, "பின்னர் இந்தக் கணக்குகள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்பதை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் தணிக்கை செய்யும். தற்போது முதலமைச்சரின் கூற்று, இந்த நிதி நடைமுறைகளின் முழு பின்னணியையும் கருத்தில் கொள்ளாத கூற்றாகத் தெரிகிறது," எனவும் குறிப்பிட்டார் ஜோதி சிவஞானம்.
தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமை எப்படி இருக்கிறது?
கடந்த 15 ஆண்டுகளாக, அடுத்தடுத்து அமைந்த அரசுகளின் கீழ் தமிழ்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2011 மற்றும் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தக் கடன் கணிசமாக உயர்ந்தது.
பின்னர், கோவிட் பேரிடர்க் காலத்தில் அதிகரித்த நலத்திட்ட செலவுகள், ஊரடங்கின்போது குறைந்த வருவாய், உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக அதன் அளவு வெகுவாக உயர்ந்தது. இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தின் பொருளதாரமும் கணிசமாக வளர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதோடு, மாநில அரசின் கடன் நிலைமையை மதிப்பிடும்போது, மொத்தக் கடன் அளவு மட்டுமல்லாமல், வட்டி செலவுகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறனும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின் அடிப்படையில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 40 லட்சம் கோடி முதல் 40.6 லட்சம் கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, தமிழக அரசின் நிலுவைக் கடன் ₹10.71 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 2025-26ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, மாநிலத்தின் மொத்த கடன் 9.52 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசு, 2026-27ஆம் ஆண்டில், ரூ.1.79 லட்சம் கோடி கடன் பெறவும், ரூ.60,413 கோடியைத் திருப்பிச் செலுத்தவும் திட்டமிட்டிருந்தது. அதோடு, கடன்- மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் 26.12-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, 2026-27ஆம் ஆண்டுக்கான வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டின் மதிப்பீடுகளில் 41,635 கோடியாக இருந்த பற்றாக்குறை, அதே ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 69,219 கோடியாக உயர்ந்திருந்தது.
ஜி.எஸ்.டி வரி விகித குறைப்புகள், மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தல், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளை ஈடுகட்டுவதற்கான செலவின அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே இந்த உயர்வுக்குக் காரணம் என்று முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாத இடைக்கால பட்ஜெட் உரையின்போது, "மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிதிசார் சவால்கள் இல்லாமல் இருந்திருந்தால், நடப்பு ஆண்டின் வருவாய் பற்றாக்குறையை பட்ஜெட் மதிப்பீடுகளுக்கு உட்பட்ட அளவிலேயே கட்டுப்படுத்தியிருக்க முடியும்," என்றும் கூறினார்.
இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளில், மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2025-26ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, இந்தப் பற்றாக்குறை ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது.
உண்மையில், "கடன் என்பது மாநிலத்தின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது. அதாவது, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட அளவிலான சதவிகிதம் வரைதான் கடன் வாங்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அந்த அளவு 28.5%. ஆனால் அதைவிடக் குறைவாக 2025-26ஆம் ஆண்டின்படி 26.43% என்ற அளவிலேயே கடன் இருக்கிறது.
மாநிலத்தின் கடன் அதிகமாகிவிட்டதுதான். ஆனால், கடன் ஐந்து லட்சம் கோடியாக இருந்தபோது, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு சுமார் 20 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது அந்த மதிப்பீடு 40 லட்சம் கோடி, அதாவது இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதனுடன் கடன் அளவை ஒப்பிட்டுப் பார்த்தால், அதில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்," என்கிறார் ஜோதி சிவஞானம்.
அவரது கூற்றுப்படி, பொருளாதாரம் இரண்டு மடங்காக வளரும்போது, கடன் அளவும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். ஆனால், "கடன் மற்றும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு இடையிலான விகிதம் அதே நிலையில் நீடித்து வருகிறது."
கடன் அளவை வைத்து நிதிநிலையை தீர்மானிக்க முடியுமா?
வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு கல்வியைப் பரவலாகக் கொண்டு செல்வதையும், மாவட்டந்தோறும் தொழில்துறை முதலீட்டை ஊக்குவிப்பதையும் மையமாகக் கொண்ட நலத்திட்டங்களில் முதலீடு செய்து வந்துள்ளது. இதன் விளைவாக அதன் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளதைத் தரவுகள் காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
உதாரணமாக, 2005-2006 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு 10.3% வளர்ச்சியைக் கண்டது. பின்னர், 2012-13 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில், 6.2% வளர்ச்சியைப் பதிவு செய்தது. மேலும், 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.2 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
"பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட பல நாடுகள் அதிகளவிலான கடன்களையும் வைத்திருக்கின்றன. இதில் அமெரிக்காவும் சீனாவும் உள்ளன. ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் ஆண்டுதோறும் அதிகரிக்கும், அதேபோல ஒட்டுமொத்த கடன் அளவும் அதிகரிக்கும்.
எனவே, ஒரு நாட்டின் கடன் அளவை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வருவாய், பொருளாதார வளர்ச்சி விகிதம், நீண்டகால எதிர்கால வளர்ச்சி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அளவிட இயலும். தமிழ்நாட்டின் 'கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2011ஆம் ஆண்டில் 16.5 சதவிகிதமாக இருந்தது. அது 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 28.3 சதவிகிதமாக உயர்ந்தது. பின்னர் தற்போது சுமார் 26% என்ற அளவில் நிலைபெற்றுள்ளது" என்று கூறுகிறார் திமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சேலம் தரணிதரன்.
அதுமட்டுமின்றி, "நார்வே போன்ற குறைவான மக்கள் தொகையையும் அதிகமான இயற்கை வளங்களையும் கொண்டுள்ள அரசுகளே கடன் வாங்காமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியும். மற்றபடி, உலகில் வேறு எந்த அரசு நிர்வாகத்திற்கும் கடன் என்பது ஆட்சிமுறையில் அவசியமான ஒன்றாக உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் மொத்த கடன் ஒரு சுமையாக மாறியுள்ளதா?
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாட்டின் மொத்த கடன் அளவுக்கும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே நெருக்கமான தொடர்பு உள்ளது.
அதேவேளையில், மாநில அரசுகள் அதிகப்படியாக கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2004ஆம் ஆண்டு, நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட மேலாண்மைச் சட்டம், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, மத்திய அரசிடம் ஏற்கெனவே நிலுவையில் உள்ள கடன்களைக் கொண்டிருக்கும் மாநிலங்கள், சந்தையின் வாயிலாகக் கடன் பெறுவதற்கு மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
"தமிழக அரசு எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கு மத்திய அரசின் நிதி அமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதாவது ஒரு மாநிலம், தனக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக கடன் வாங்க முடியாது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3% அளவைவிட அதிகமாக நிதிப் பற்றாக்குறை சென்றுவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்த விகிதம், ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதனதன் பொருளாதார அளவைப் பொறுத்து மாறுபடும். தமிழ்நாடு, பெரிய பொருளாதாரம் கொண்ட இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால் அதற்குரிய வகையில் கடன் பெறுவதற்கான அளவு நிர்ணயமும் இருக்கிறது," என்று விவரித்தார் ஜோதி சிவஞானம்.
எனவே, மாநிலத்தின் கருவூலம் காலியாகிவிட்டதாகவோ, கடன் பெரிய சுமையாக மாறிவிட்டதாகவோ கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாகப் பேசிய கிருஷ்ணமூர்த்தி பிரபாகரன், "முதலீடுகள் தொடர்ச்சியாக நீடித்துக்கொண்டே இருப்பதற்கு கடன்களின் ஓட்டமும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இதுவொரு வகையான சுழற்சி முறை செயல்பாடு என்று கூறலாம். உதாரணமாக, ஒரு சிறு தொழிலாக இருந்தாலும், அதில் தொடர்ச்சியான முதலீடுகளை உறுதி செய்வதற்கு கடன் என்பது தேவையான ஒன்றாகவே இருக்கிறது.
அதேபோலத்தான், மாநில நிர்வாகத்திலும், உள்கட்டமைப்பு, நலத் திட்டங்கள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதற்கு கடன் தேவையாக இருக்கிறது. ஆயினும், அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, பல்வேறு வடிவங்களில் முதலீடுகள் அவசியமாக இருப்பதால், அதில் நிதிப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. அதே வேளையில், அந்த நிதிப் பற்றாக்குறை குறிப்பிட்ட விகிதத்தைத் தாண்டிவிடாமல் கவனித்துக் கொள்வது அவசியம். அத்தகைய கோணங்களில் பார்த்தால், தமிழ்நாடு மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது என்றோ, கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது என்றோ கூறிவிட முடியாது," என்கிறார் அவர்.
முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ள நிதிநிலை தொடர்பான விமர்சனம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "மு.க.ஸ்டாலின் நிதி நெருக்கடிகளையும் பேரிடர்களையும் திறம்படக் கையாண்டு, மாநிலத்தின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்குக் கொண்டு சென்றார்.
அதைச் சான்றாகக் கொண்டு, மாநிலத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு உள்ளேயே இருப்பதை உணர்ந்து, 'நிதி இல்லை' என்பதைப் போன்ற காரணங்களைத் தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே சரியாக இருக்கும்." என்று தெரிவித்தார்.
தவெக அரசாங்கத்தால் கடனே வாங்காமல் ஆட்சி நடத்த முடியுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தார். அவற்றில் ஒன்றான "தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம்" என்ற வாக்குறுதியைத் தனது முதல் கையெழுத்தின் மூலம் நிறைவேற்றினார்.
அதன்படி, இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு உள்ளாகப் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோக, 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் அவர்கள் 60 வயதை எட்டும் வரை, வங்கிக் கணக்கில் மாதம் 2,500 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும், மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, மாவட்டங்களுக்கு இடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் 'வெற்றிப் பயணம்' திட்டம், 'அண்ணன் சீர் திட்டம்' என்ற பெயரில் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்குவது, 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' என்ற பெயரில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் துணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்குவது போன்ற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இவை மட்டுமின்றி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளையும் விஜய் வழங்கியிருந்தார்.
இப்படியான நலத்திட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றுவதற்கே குறைந்தபட்சம் "சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படக்கூடும். அந்த நிதியைத் திரட்டுவதற்கான வழிகளைக் கண்டறிவதே விஜய் முன் இருக்கும் முதன்மையான சவால்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்.
ஆனால், "அவர் கூறும் அனைத்தையும் நடைமுறையில் சாத்தியப்படுத்தினால், அது நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட மேலாண்மை சட்டம் நிர்ணயித்துள்ள வரம்புகளை அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடும். இதை மத்திய அரசு மட்டுமல்ல, இந்திய ரிசர்வ் வங்கியும் அனுமதிக்காது. ஒருவேளை யாராவது இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் உச்ச நீதிமன்றமே அனுமதிக்காது." என்று தெரிவித்தார் பொருளாதார நிபுணர் கிருஷ்ணமூர்த்தி பிரபாகரன்.
மேலும் பேசிய அவர், "இப்போது வெள்ளை அறிக்கை வெளியிடுவதாகக் கூறும் விஜய், இப்போதல்ல கடந்த ஆறு மாதங்களாகவே மாநிலத்தின் கடன் அளவு குறித்துப் பேசி வருகிறார். இவையனைத்தும் தெரிந்திருந்தும் அவர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். அவர் கூறுவது போன்ற நிதி நெருக்கடி இருந்தால், அந்தச் சூழலில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமா இல்லையா என்பதைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும்," என்று கூறினார் அவர்.
ஓர் அரசாங்கம் முற்றிலுமாக கடன் எதுவுமே வாங்காமல் ஆட்சியை நடத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், "விஜய் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே அவருக்கு மிகப்பெரிய அளவிலான நிதி திரட்டல் தேவைப்படும்.
அதோடு, ஒருவேளை அவர் அதைச் சாத்தியப்படுத்துவதற்காக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வுடன் இணக்கமான அணுகுமுறையைக் கடைபிடிக்க நினைத்தால், மாநில உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் திமுக அரசு கடைபிடித்து வந்த கடுமையான நிலைப்பாட்டை அவரால் கடைபிடிக்க முடியாமல் போகலாம்." என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு