பெயரை குறிப்பிடுவது முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பெரிய பிரச்னையா? விதிகள், மரபு பற்றிய ஒரு பார்வை

முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், ப.சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ( ஆகஸ்ட் 17) வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் திமுக முன்னாள் முதலமைச்சர் பெயரைப் குறிப்பிட்டு பேசியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சரின் கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அமைச்சர் பேசியது தொடர்பாக திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவை முன்னவரான செங்கோட்டையன் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் " உங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

முதலமைச்சர் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இந்த பெயர் பிரச்னை பெரும் பிரச்னையா? சட்டப்பேரவை பெயர் பிரச்னை எப்போது தொடங்கியது? சட்டப்பேரவை விதிகளில் என்ன உள்ளது? விரிவாக பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் என்ன நடந்தது?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று ( ஆகஸ்ட் 17) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் அதற்கு பதிலளிக்கையில் திமுக முன்னாள் முதலமைச்சரின் பெயரை குறிப்பிட்டு பேசினார். அதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

"முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்களை சொல்லக்கூடாது என்ற உத்தரவு இந்த அவையிலேயே இதற்கு முன் வழங்கப்பட்டுள்ளது அந்த நடைமுறைகளை அமைச்சர்கள் கடைபிடிக்க வேண்டும்" என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.

"முன்னாள் முதலமைச்சரின் பெயரை குறிப்பிட்டது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்று அவை முன்னவர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அமைச்சர் ரஞ்சித்குமார் குறிப்பிட்டதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாயாநாக ஜே.சி.டி பிரபாகரன் அறிவித்தார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கிடையே 110 விதியின் கீழி அறிவிப்புகளை வெளியிட முதலமைச்சர் ஜோசப் விஜய் எழுந்த போது " உங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான். அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார்.

"மூத்தவர் என்பதால் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது"

முன்னாள் சபாநாயகர் தனபால்

பட மூலாதாரம், Dhanapal/FB

படக்குறிப்பு, முன்னாள் சபாநாயகர் தனபால்

முன்னாள் முதலமைச்சர்களின் பெயரை சட்டப்பேரவையில் குறிப்பிடுவது தவறா? என்ற கேள்வி எழும்போது மாண்பு கருதி முன்னாள் முதலமைச்சர்களின் பெயரை சட்டப்பேரவையில் குறிப்பிடக் கூடாது என்கிறார் அதிமுக ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்த தனபால்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர்களின் பெயரை குறிப்பிடக் கூடாது என்று எந்த சட்டப்பேரவை விதிகளிலும் இல்லை" என்றார்.

"முன்னாள் முதலமைச்சர் மூத்தவர் என்ற அடிப்படையில் அவருடைய பெயரை சட்டப்பேரவையில் சொல்லக்கூடாது, பொதுவாக சட்டப்பேரவையில் கலைஞர் என்றே குறிப்பிடுவார்கள் மரியாதையின் காரணமாக யரும் பெயரை குறிப்பிடுவதில்லை." என்றார் அவர்.

மேலும் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களே கலைஞர் என்றுதான் குறிப்பிடுவார் அவரது பெயரை குறிப்பிட்டு அழைக்க மாட்டார். மூத்த நபர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செய்தார்." என்றார்.

"பெயர் வைத்து அழைப்பது அவை மரபை மீறும் செயல்"

முன்னாள் சபாநாயகர் அப்பாவு

பட மூலாதாரம், APPAVU/FB

படக்குறிப்பு, முன்னாள் சபாநாயகர் அப்பாவு
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முன்னாள் சபாநாயகர் தனபாலின் கூற்றை ஏற்றுக்கொண்ட திமுக முன்னாள் சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வதில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தால் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கலாம் என்றார்.

பிபிசி தமிழிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட அவர், "முன்னாள் முதலமைச்சர்களின் பெயரை குறிப்பிடக்கூடாது என்று சட்டத்திலோ, விதிகளிலோ இல்லை, ஆனால் மரபுப்படி அவ்வாறு அழைத்து வருகிறோம்" என்றார்

முன்னாள் முதலமைச்சர்களை பெயர் சொல்லி அழைப்பது அவை மரபை மீறி செயல் என குறிப்பிடும் அப்பாவு, தாய், தந்தை மற்றும் முன்னோரை மதிப்பது போல முன்னாள் முதலமைச்சர்களை மதித்து அவையில் பேச வேண்டும். அதனையே மாண்பாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடைப்பிடித்து வந்தனர்" என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், "இதற்கு முன்பும் கூட சட்டப்பேரவையில் இவ்வாறு நடந்துள்ளது. திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிர் தரப்பு முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களை பெயர் குறிப்பிட்டு பேசியது உண்டு. ஆனால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவோம். சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படாததால் அவை பொதுவெளிக்கு வந்ததில்லை" என்றார்.

"சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வதை சற்று காலதாமதமாக வழங்கினால் அவை மரபுகளை மீறும் வார்த்தைகளை இடம்பெற செய்யாமல் தவிர்த்து விடலாம் என திமுக முடிவு செய்திருந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தற்போதைய அரசு அதனை பின்பற்றினால் அவை குறிப்பில் இடம்பெறாத கருத்துகள் வெளியே செல்வது தவிர்க்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் இதுபோன்ற நிகழ்வு எப்போது நடந்தது?

தமிழ்நாடு சட்டப்பேரவை

பட மூலாதாரம், TNDIPR

கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை பெயர் சொல்லி அழைக்கலாமா என்ற விவாதத்தில் சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து திமுக வெளிநடப்பு செய்தது

2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது அதிமுக திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நரசிம்மன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரை பெயரை குறிப்பிட்டு பேசியது சட்டப்பேரவையில் விவாதத்தை ஏற்படுத்தியது, இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க,' முன்னாள் முதலமைச்சரை பெயர் வைத்து அழைக்கக்கூடாது என்று விதியில்லை' என்று அப்போதைய சபாநாயகர் தனபால் தெரிவித்ததாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

முதலமைச்சர் ஜெயலலிதாவை பெயர் வைத்து நாங்கள் அழைக்கலாம் என்று திமுக உறுப்பினர்கள் கேட்க 'அவ்வாறு அழைக்கக்கூடாது' என அப்போதைய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதால் அதனை எதிர்த்து திமுக வெளிநடப்பு செய்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்து.

முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் இதனை குறிப்பிட்டு பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியபோது "நீண்ட நாட்களுக்கு முன் நடந்ததால் அது என் நினைவில் இல்லை" என்று அவர் பதிலளித்தார்.

திமுக - அதிமுக இடையே எழுதப்படாத ஒப்பந்தம்

"முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்களை குறிப்பிடக்கூடாது என திமுக - அதிமுக இடையே எழுதப்படாத உடன்படிக்கை உள்ளது. ஆனால் அதனை தவெக அரசு உடைத்துள்ளது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பாலசுப்பிரமணியன்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை நிகழ்வுகளை கவனித்து வரும் அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலங்களில் பெரிய அளவில் இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்ததில்லை. அவர்களின் மறைவுக்கு பிறகே இவ்வாறு நடக்கிறது. முதலமைச்சர் மன்னிப்பு கோரியதன் மூலம் திராவிட கட்சிகளின் உடன்படிக்கையில் அவரும் இணைந்துள்ளார்." என்றார் அவர்.

சட்டப்பேரவை விதிகள் சொல்வது என்ன?

முன்னாள் முதலமைச்சர்களின் பெயரை குறிப்பிடக்கூடாது என விதிகளில் இல்லை என்று முன்னாள் சபாநாயகர்கள் தனபால், அப்பாவு ஆகியோர் சொல்வதை ஆமோதிக்கிறார் முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்களின் பெயரை குறிப்பிடக் கூடாது என்று சட்டப்பேரவை விதிகளில் இல்லை. ஆனால், அவை மாண்பை கருதி அவ்வாறு குறிப்பிடப்படுவதில்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு