டி.ஜி.மோகன்தாஸ் யார் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்கள் பற்றி சர்ச்சையாகப் பேசியது ஏன்?

பட மூலாதாரம், TG Mohandas/Facebook
"டி.ஜி. மோகன்தாஸ் கைது விவகாரத்தில் கேரள ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு இரட்டை வேடம் போடுகிறது. கேரள காவல்துறையில் இந்துத்துவ ஆதரவு சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவரது கைதைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்தியது. ஆனால் இந்துத்துவ சக்திகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமோ, மகிளா காங்கிரசோ ஒரு போராட்டத்தைக்கூட நடத்தவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கேரள பெண்ணிய செயற்பாட்டாளரும் பேராசிரியருமான தேவகி.
டி.ஜி. மோகன்தாஸ், கேரள பாஜகவின் அறிவுசார் பிரிவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட காணொளி தொடர்பாகக் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்திய நிலையில், இந்த விவகாரத்தில் கேரள அரசு மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை திருப்திபடுத்துவதற்காக காவல்துறையும் சட்டம் ஒழுங்கும் செயலற்றுப் போகும் நிலையை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு உருவாக்கியுள்ளதாக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மோகன்தாஸ் சட்டத்தில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி பிணை பெற்றதாக கேரள அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
யார் இந்த டி.ஜி. மோகன்தாஸ்?
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டம் செர்த்தலாவை சேர்ந்த டி.ஜி. மோகன்தாஸ் (71), பொறியியல் மற்றும் சட்டம் படித்தவர். பத்திரிகைகளில் சமூக, அரசியல் விவகாரங்கள் குறித்து எழுதி வந்த அவர், பின்னர் இந்துத்துவ அரசியல் சார்ந்த கருத்துகளை முன்வைக்கும் ஊடகப் பேச்சாளராகவும் அறியப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் 1982ஆம் ஆண்டு பி. பரமேஸ்வரனால் தொடங்கப்பட்ட பாரதிய விசார கேந்திரத்தில் இணைந்த மோகன்தாஸ், அதன் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பொது மேடைகளில் அவர் முன்வைத்த இந்துத்துவ ஆதரவு கருத்துகள் தொடர்ந்து கவனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தின.
வலதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தும் 'ஜென்மபூமி' நாளிதழின் பொது மேலாளராகவும், அயோத்தியா அச்சக நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். 'கேசரி', 'கலா கௌமுதி' உள்ளிட்ட ஊடகங்களிலும் எழுதியதுடன், மலையாள ஜனம் டிவியின் 'பொளிச்செழுத்து' அரசியல் விமர்சன நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ள மோகன்தாஸ், சபரிமலை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தொடர்பான விவகாரங்கள் உள்பட பல பொதுநல மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்காக ஐந்து கோடி ரூபாய் வழங்க கேரள அரசு எடுத்த முடிவை எதிர்த்து அவர் தொடர்ந்த மனுவும் அவற்றில் ஒன்று.
தற்போது 'பத்ரிகா' என்ற மலையாள யூடியூப் சேனலை நடத்தி வரும் மோகன்தாஸ், அதில் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அந்த சேனலில் வெளியிட்ட ஒரு காணொளியே தற்போதைய கைது நடவடிக்கைக்குக் காரணமானது.
அந்தக் காணொளியில் ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டங்களைக் குறிப்பிடும் அவர், தான் அதிகாரத்தில் இருந்திருந்தால் அந்தப் பகுதியைச் சுற்றி ஊரடங்கு பிறப்பித்து, போராட்டக்காரர்களை மும்முறை எச்சரித்த பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டிருப்பேன் என்று கூறினார்.
"அப்படிச் செய்திருந்தால் மக்கள் ஓடியிருப்பார்கள். சிலர் இறந்திருப்பார்கள். சிலர் கை, கால்களை இழந்திருப்பர். ஆனால் நான்கு மணிநேரத்துக்குள் நிலைமை முற்றிலும் அமைதியாகியிருக்கும்," என்றும் அவர் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்தும் அந்தக் காணொளியில் அவர் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

பட மூலாதாரம், TG Mohandas/Facebook
பேச்சுக்கு எழுந்த கடும் எதிர்ப்புகள்
மோகன்தாஸின் பேச்சுக்கு கேரளத்திலும் தேசிய அளவிலும் எதிர்ப்புகள் எழுந்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலர் வலியுறுத்தினர்.
முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பதிவில், மோகன்தாஸின் கருத்துகள் "மாற்றுக் கருத்துகளை அடக்கும் சங் பரிவார மனநிலையைப் பிரதிபலிப்பதாக" விமர்சித்தார்.
"ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் திருப்திப்படுத்த காவல்துறையையும் சட்டம் ஒழுங்கையும் வெறுமனே வேடிக்கை பார்ப்போராக கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு விட்டுவிட்டது," என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியும் மோகன்தாஸின் பேச்சைக் கண்டித்தது. அக்கட்சியின் சமூக ஊடக பதிவில், அவரது கருத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் "வன்முறையான, பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை" வெளிப்படுத்துவதாக குற்றம் சாட்டியதுடன், அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
காலையில் கைது, மாலையில் பிணை
பல தரப்பிலும் மோகன்தாஸ் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில், கேரள இடது ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), மோகன்தாஸ் மீது காவல்துறையில் புகார் அளித்தது. புகாரின்படி இது தொடர்பாக விசாரிக்குமாறு காவல்துறைக்கு கேரள அரசு உத்தரவிட்டது.
மோகன்தாஸ் கருத்தை, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அது பற்றி ஆர்.எஸ்.எஸ். விளக்கம் அளித்தது. மூத்த ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் கே.பி. ஸ்ரீகுமார், ''மோகன்தாஸ் எந்த நிலையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொறுப்பாளர் அல்ல. சமீபத்திய போராட்டங்கள் குறித்து டி.ஜி. மோகன்தாஸ் கூறியவை அவருடைய தனிப்பட்ட கருத்துகள். அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை. அவருடைய கருத்துகளில் ஆர்.எஸ்.எஸ்-க்கு உடன்பாடு இல்லை, மேலும் அவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்" என்று பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பின், டி.ஜி.மோகன்தாஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டிருந்தார். அதில், ''பத்ரிகா யூடியூப் சேனலில் வெளியான 31 நிமிட முழு விவாதத்தைப் பார்க்காதவர்களால் தான் முகநூலில் இந்த சர்ச்சை உருவாக்கப்பட்டது. அந்த 31 நிமிட வீடியோவில், ஒன்று முதல் ஒன்றரை நிமிட நீளமுள்ள காட்சிகள் மட்டுமே பகிரப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.
வன்முறை கலவரங்களைக் கையாளும்போது காவல்துறையும் சிவில் நிர்வாகமும் பின்பற்றும் பொதுவான நடவடிக்கைகளின் வரிசையை விளக்குவதற்காக ஒரு கற்பனையான உதாரணத்தைக் கொடுப்பதே தன் நோக்கமால இருந்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.
நகைச்சுவை உணர்வுடன் கேலியாக மலையாளத்தில் பகிரப்பட்ட வார்த்தைகள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும்போது நேரடியான கூற்றாகத் தெரிவதாகவும் அவர் தனது கருத்து குறித்து வெளியான தகவல்களை மறுத்துப் பேசியிருந்தார்.
டி.ஜி.மோகன்தாஸின் காணொளிகள் குறித்து விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டார். அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட காணொளிகள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து, மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருப்பதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரம் சைபர் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

பட மூலாதாரம், ANI
ஆகஸ்ட் 9 அன்று எர்ணாகுளம் மட்டாஞ்சேரி சேரளாயியில் உள்ள மோகன்தாஸின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். மறுநாள் காலை அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பிஎன்எஸ், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் கேரள காவல் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அன்றைய தினம் மாலையே திருவனந்தபுரம் கூடுதல் தலைமை நீதிமன்ற நடுவர் அவருக்குப் பிணை வழங்கினார்.
கைதுக்கு முன் அவரது வீட்டில் ஆவணங்கள் மற்றும் கணினிகளை சுமார் இரண்டரை மணிநேரம் காவல்துறை சோதனையிட்டனர். இதையறிந்து அங்கு திரண்ட பாஜகவினர், மோகன்தாஸ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கேரள பத்திரிகையாளர் பிரமோத், "மோகன்தாஸ் தற்போது பாஜகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், அவரது கைதுக்கு எதிராக அக்கட்சி தீவிரமாகப் போராடியது. கேரளத்தில் பாஜகவின் அரசியல் வளர்ச்சிக்கு அவரது கருத்துகளும் பரப்புரைகளும் ஒரு பங்காற்றியுள்ளன," என்றார்.
மோகன்தாஸ் கடந்த காலத்தில் சிபிஎம், பாஜக இடையிலான உறவு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதாகக் கூறிய பிரமோத், ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-சிபிஎம் மோதல் முடிவுக்கு வந்து இரு தரப்பும் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் பேசியதாகத் தெரிவித்தார்.

'கேரள அரசியல் கட்சிகளுக்குள் கருத்து மோதல்'
ஆனால், மோகன்தாஸ் கைது விவகாரத்தில் கேரளத்தின் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிப்பதாக பெண்ணிய செயற்பாட்டாளரும் பேராசிரியருமான ஜே. தேவிகா குற்றம் சாட்டுகிறார். சட்டரீதியாகப் பெரிய விளைவை ஏற்படுத்தாத வகையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜே. தேவிகா, "கேரள அரசு ஒரே நேரத்தில் இரண்டு செய்திகளைத் தெரிவிக்க விரும்புகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், இப்போதும் தனக்கென உருவாக்கிக்கொண்ட மதச்சார்பற்ற, முற்போக்கு பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது. அதேநேரத்தில், கேரளத்திலுள்ள இந்துத்துவ ஆதரவாளர்களுக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதையும் காட்ட விரும்புகிறது," என்றார்.
"கேரளத்தில் கே.ஆர். இந்திரா இதைவிட மோசமான கருத்துகளைக் கூறியுள்ளார். இருப்பினும், இந்துத்துவம் சார்ந்த வெறுப்புணர்வைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு எதிராக கேரள அரசு வழக்குப் பதிவு செய்வது இதுவே முதல் முறை. ஆனால் சட்டரீதியாக மென்மையான அணுகுமுறையையே அரசு கடைபிடித்துள்ளது. வழக்குப் பதிவு செய்யப்படும்; ஆனால் அதனால் எந்த விளைவும் ஏற்படாது. இது பகிரங்கமான இரட்டை நிலைப்பாடு," என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மோகன்தாஸ் கைது நடவடிக்கையை "திட்டமிட்ட பழிவாங்கல்" என்று பாஜக மாநிலத் தலைவர் வி. முரளீதரன் குற்றம் சாட்டினார்.
"மோகன்தாஸின் கருத்துகள் குறித்து மாறுபட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரது தாயார் குறித்து அருவருப்பான கருத்துகளைத் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு, இப்போது மோகன்தாஸை கைது செய்துள்ளது," என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், K Muraleedharan/Facebook
பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளையின் செயலாளருமான கனகசபாபதி, மோகன்தாஸ் மீதான நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று விமர்சித்தார்.
"மோகன்தாஸ் எப்போதும் தனது கருத்தைத் துணிவாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துவார். ஆனால் அதில் தனிப்பட்ட தாக்குதல் இருக்காது. காங்கிரஸ் கருத்து சுதந்திரம் குறித்து தவறான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் இப்போது அவரைக் கைது செய்துள்ளது," என்றார்.
ஆனால், மோகன்தாஸ் போன்றவர்களின் பேச்சை வெறும் கருத்து சுதந்திரமாகப் பார்க்க முடியாது என்கிறார் ஜே. தேவிகா.
"மோகன்தாஸ் போன்றவர்கள் பேசுவது இடதுசாரி பெண்களுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்களுக்கும்கூட பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது. ஒரு பெண் பாலியல் வன்புணர்வை விரும்புகிறாள் அல்லது ரசிக்கிறாள் என்று கூறுவது, அவளுக்கு எதிரான பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் செய்தியை அளிக்கிறது. இதை வெறுப்புப் பேச்சாகக் கருதாமல் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரம் என்று கூறுவதை ஏற்க முடியாது," என்றார் அவர்.
கேரளத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணனும், மோகன்தாஸ் விவகாரத்தை அரசு மென்மையாகக் கையாண்டதாகக் கூறுகிறார். கேரள அரசியலில் முற்போக்குத்தன்மை பேசப்பட்டாலும், நடைமுறையில் அது முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை என்று கூறிய அவர், நாயர் மற்றும் ஈழவ சமூகத்தினரிடையே பாஜகவின் ஆதரவு அதிகரிப்பதில் மோகன்தாஸ் போன்றவர்களின் பரப்புரைக்கும் பங்கு இருந்ததாகத் தெரிவித்தார்.
அரசு மென்மையான அணுகுமுறையைக் கடைபிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டை கேரள அமைச்சர் கே. முரளீதரன் மறுத்துள்ளார்.
"மோகன்தாஸ் கூறிய கருத்துகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, எளிதில் பிணை பெறமுடியாத குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சட்டத்தில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் பிணை பெற்றுள்ளார். வழக்குத் தரப்பின் வாதம் திறம்பட முன்வைக்கப்படாததற்கான காரணங்களை அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































