வீரர்கள் கடலில் குதிக்க முயற்சியா? இரான் போரில் ஈடுபட்ட அமெரிக்க போர்க் கப்பலில் சிக்கல் - வேறு கப்பல் விரைகிறது

யூஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் மே மாதத்தில் பசிபிக் பிராந்தியத்தில் ரோந்துப் பணிக்காகப் புறப்பட்டது. ஆனால் தற்போது அது மேற்கு நோக்கி மத்திய கிழக்குக்குச் சென்று கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யூஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் மே மாதத்தில் பசிபிக் பிராந்தியத்தில் ரோந்துப் பணிக்காகப் புறப்பட்டது. ஆனால் தற்போது அது மேற்கு நோக்கி மத்திய கிழக்குக்குச் சென்று கொண்டிருக்கிறது.
    • எழுதியவர், பெர்னர்ட் டெபுஸ்மேன் ஜுனியர்
    • பதவி, வெள்ளை மாளிகை செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கப்பலான யூஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மாற்றாக மற்றொருஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் அங்கு விரைகிறது.

கிட்டத்தட்ட ஒன்பது மாத காலமாக பணியில் இருக்கும் அந்தக் கப்பலில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மாலுமிகள், நீண்ட கால பணியில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடினமான சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மலேசியா அருகே இருந்த யூஎஸ்எஸ் வாஷிங்டன் கப்பல் சுமார் 9 நாட்களில் இந்தப் பகுதியை வந்தடையக்கூடும் என்பதை பிபிசி ஆய்வு காட்டுகிறது.

அங்குள்ள சூழல்களால் மாலுமிகளின் மனநலன் மோசமடைந்து வருவதாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ள சூழலில் சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதிக்க முயற்சித்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.

விநியோகச் சவால்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட அமெரிக்க கடற்படை, லிங்கன் விமானந்தாங்கி போர்க்கப்பலில் உள்ள மாலுமிகளிடம் மனநலச் சிக்கல் உள்ளதாக வரும் செய்திகளை மறுக்கிறது. அந்தக் கப்பலில் 5,000 பேர் பணியில் உள்ளனர்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்களது உறவினர்களின் நலன் பற்றி குடும்ப உறுப்பினர்கள் கவலை கொண்டிருப்பதாக வரும் செய்திகளை மறுத்தார்.

மேலும் பணிக்காலம் நீளமான ஒன்று என்பதற்கான சாத்தியங்களையும் நிராகரித்த அவர், "போதுமான அளவு நீண்டதாக இல்லை." என்று குறிப்பிட்டார்.

லிங்கன் கப்பலுக்கு மாற்றாக மற்றொரு கப்பல் செல்லும் என்பதை உறுதிபடுத்திய டிரம்ப் அது எந்தக் கப்பல் என்பதைத் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திப்படி, பசிபிக் பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட கடந்த மே மாதம் ஜப்பானின் யோகோசுகாவில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட யூஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் தற்போது லிங்கன் கப்பலுக்கு மாற்றாக செயல்பட சென்று கொண்டிருக்கிறது.

பிபிசி வெரிஃபை ஆராய்ந்த கண்காணிப்புத் தரவுகளின்படி, அந்தக் கப்பல் கடைசியாக பதிவு செய்யப்பட்ட வேகத்தில் பயணித்தால் இரான் கரையிலிருந்து 500 மைல் தொலைவில் ஓமனில் இருக்கும் துக்ம் துறைமுகத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி வந்தடையும்.

யூஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன்

பட மூலாதாரம், U.S. Navy via Getty Images

படக்குறிப்பு, யூஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன் (கோப்புப் படம்)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அந்தக் கப்பல் மத்திய கிழக்கிற்கு வந்த பிறகு அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலாக இருக்கும். யூஎஸ்எஸ் ஜார்ஜ் ஹச்.டபிள்யு புஷ் கப்பலும் அங்கு உள்ளது. பசிபிக் பிராந்தியத்தில் எந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பலும் இருக்காது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் கடலில் இருக்கும் லிங்கன் கப்பலின் பணிக்காலம் மே மாதத்துடன் முடிவடைய இருந்ததாக பிபிசி வெரிஃபை தொகுத்த கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.

முன்னதாக, கப்பலில் உள்ள சூழ்நிலையில் பல மாலுமிகள் அதிலிருந்து குதித்து விடலாம் என்று பரிசீலனையில் இருந்தனர் என அவர்களின் குடும்பங்கள் கூறுவதாக தி மிலிட்டரி டைம்ஸ் மற்றும் ஸ்டார்ஸ் & ஸ்ட்ரைப்ஸ் ஆகியவை இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமான சுகாதார வசதிகள், அரிதாக மேற்கொள்ளப்படும் துறைமுக வருகைகள், பழுதடைந்த குழாய் அமைப்புகள், கடும் சோர்வு மற்றும் புதிய உணவிற்கான தட்டுப்பாடு ஆகிய சூழ்நிலைகள் அங்கு நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிங்கன் கப்பலில் பணியில் இருக்கும் மாலுமியின் உறவினர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "கப்பல் கடலுக்குச் சென்றதில் இருந்து எனது அவர் சுமார் 29 கிலோ எடை குறைந்துவிட்டார். விமானங்களின் இடைவிடாத இரைச்சல் மற்றும் கப்பலின் அதிர்வுகள் காரணமாக கடும் சோர்வால் அவர் அவதிப்பட்டு வருகிறார்." என்றார்.

யூஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன்

பட மூலாதாரம், U.S. Navy via Getty Images

படக்குறிப்பு, யூஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன் (கோப்புப் படம்)

பதில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிற கவலையால் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அந்த நபர், மாலுமிகள் கப்பலில் இருந்து குதிக்க முயற்சித்ததை அவர்களுடைய உறவினர்கள் உறுதி செய்ததாகத் தெரிவித்தார்.

லிங்கன் கப்பலில் பணியில் இருக்கும் ஜேக்சன் என்பவரின் தந்தையான ஜெஃபர்சன் கெல்லி சிபிஎஸ் நியூசிடம் பேசுகையில், பணிக்காலம் வழக்கமாக 6 மாதங்கள் நீடிக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக கடலில் இருக்கும் தனது மகனை நினைத்து கவலைப்படுவதாகத் தெரிவித்தார்.

"அவர்கள் இவ்வளவு நீண்டகாலம் பணியில் இருக்கக்கூடாது. இவை பழைய கப்பல்கள். அவை ஒன்றும் அதிநவீனமானவை அல்ல, அவற்றைப் பராமரிக்கவும் நிறைய வேலையும் தேவைப்படுகிறது. இது ஒரு முழு நேரப் பணியாகவே இருக்கிறது. அவனை வீட்டிற்கு அவனது அம்மாவிடம், உடன்பிறந்தவர்களிடம், குடும்பத்தினரிடம் அழைத்து வர முடியுமென்றால் ஒரு விமானம் அல்லது ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்," என்றும் அவர் கூறினார்.

லிங்கன் கப்பலில் பணியில் இருக்கும் மாலுமிகள் மத்தியில் தற்கொலை எண்ணங்கள் அதிகரிப்பதாக வரும் செய்திகளை மறுத்த அமெரிக்க கடற்படை, இரான் உடனான போரின்போது. "போர் நடவடிக்கைகளால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது." என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கப்பலின் நிலை பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர்.

யூஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன்

பட மூலாதாரம், Nhac NGUYEN / AFP via Getty Images

புதன்கிழமை பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் கடற்படை செயலாளர் ஹங் காவோ ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கனெக்டிகட் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்தல், பற்றாக்குறைகள் மற்றும் மோசமான நிலைமைகள் குறித்த செய்திகளுக்கு "உடனடி கவனம் தேவை" என்று கூறினார்.

மேலும் அவர், "ஆனால், அவை ஒரு பரந்த கேள்வியையும் எழுப்புகின்றன: அதாவது, தனது விமானம் தாங்கி கப்பல் படைக்கு தற்போது தேவைப்படும் செயல்பாட்டு வேகத்தை கடற்படையால் தொடர்ந்து தக்கவைக்க முடியுமா என்பதே அது," என்று கூறினார்.

சில ஊடகச் செய்திகள் "முற்றிலும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன" என்று ஹெக்ஸெத் கூறியுள்ளார்.

ஒவ்வொரு கப்பலுக்கும், ஒவ்வொரு குழுவினருக்கும் மற்றும் ஒவ்வொரு கப்பல் கேப்டனுக்கும் தாங்கள் வழங்கக்கூடிய அனைத்தையும் ஒவ்வொரு கணமும் கிடைப்பதை அமெரிக்க அரசாங்கம் உறுதி செய்து வருவதாக அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு