ஸ்பேஸ்எக்ஸ் பங்கு வெளியீடு: ஈலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனதால் எழும் விவாதம்

ஈலோன் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் பங்கு வெளியீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகின் முதல் டிரில்லியனர் என்ற பெருமையை ஈலோன் மஸ்க் பெற்றுள்ளார்.
    • எழுதியவர், ஆர்ச்சி மிட்செல்
    • பதவி, வணிகச் செய்தியாளர்
    • எழுதியவர், காளி ஹேய்ஸ்
    • பதவி, தொழில்நுட்பச் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வரலாறு காணாத பங்குச்சந்தை அறிமுகம் கண்ட ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்வால் உலகின் முதல் டிரில்லியனர் (ஒரு லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடையவர்) என்ற பெருமையை ஈலோன் மஸ்க் பெற்றுள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற தனது அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 1.11 டிரில்லியன் டாலர் (828 பில்லியன் பவுண்டு) எனக் கூறப்பட்டுள்ளது.

ராக்கெட், தொலைத்தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் செயல்படும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், நாஸ்டாக் பங்குச் சந்தையில் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பட்டியலிடப்பட்டது.

அந்நிறுவனம் தனது பங்குகள் 135 அமெரிக்க டாலர் விலையில் வெளியிடப்படும் என அறிவித்தது. ஆனால் வர்த்தகம் 150 அமெரிக்க டாலரில் தொடங்கி, 176.50 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது.

விண்வெளி தொடர்பான எதிர்கால வணிக வாய்ப்புகள் மற்றும் மஸ்க்குடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் காட்டிய அதிக ஆர்வமே இந்த உயர்வுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்பு சுமார் 161 அமெரிக்க டாலராக இருந்தது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் மஸ்க் 42% பங்கை வைத்திருப்பதால், நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் அவருக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. முதலீடு செய்யப்பட்ட பணத்தை அவர் விரும்பியபடி பயன்படுத்த முடியும்.

ப்ளூம்பெர்க் தகவலின்படி, வர்த்தக முடிவில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அவர் வசமுள்ள பங்குகளின் மதிப்பு 767.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

டெஸ்லா நிறுவனத்தில் அவருக்கு 168 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகள் உள்ளன.

விவாதத்தை தூண்டியுள்ள மஸ்க்கின் அந்தஸ்து

ஈலோன் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் பங்கு வெளியீடு

பட மூலாதாரம், Reuters

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உலகின் முதல் டிரில்லியனர் என்ற மஸ்க்கின் அந்தஸ்து, உலகளாவிய செல்வ சமத்துவமின்மை குறித்து உடனடியாக பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது அவரது செல்வ மதிப்பு, முழு போலந்து அல்லது சுவிட்சர்லாந்து நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்திக்கு சமமாக உள்ளது.

இதுபோன்ற இதுவரை இல்லாத அளவிலான செல்வம், மஸ்க்கை ஏற்கனவே உலக அரசியலில் சக்திவாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய நபராக மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் தலைமைத்துவத்தை விமர்சித்த பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் பிரசாரத்திற்கு அவர் பல நூறு மில்லியன் டாலர்கள் வழங்கினார். கடந்த ஆண்டு பல மாதங்கள், அரசின் செயல்திறன் துறை அமைப்பை மஸ்க் வழிநடத்தினார்.

அரசு செலவினங்களைக் கடுமையாக குறைத்ததன் மூலம், அமெரிக்காவின் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமை (USAID) அமைப்பை மூடுவதற்கும் மஸ்க் காரணமாக இருந்தார்.

இத்தகைய செலவுக் குறைப்புகள், 2030ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 1.4 கோடி உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று லான்செட் மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் தலைமைத்துவத்தையும் அவர் விமர்சித்துள்ளார். குறிப்பாக குடியேற்றம் மற்றும் இன அடிப்படையிலான பிரிவினைகளை ஊக்குவிப்பது போன்ற விஷயங்களில் அவர் கருத்து தெரிவித்தார்.

18 வயது பிரிட்டிஷ் மாணவர் ஹென்றி நோவாக் கொலை உள்ளிட்ட பல விஷயங்களில், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் மஸ்க் பலமுறை மோதலில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், மஸ்கின் இந்த டிரில்லியனர் நிலையை கடுமையாக விமர்சித்தனர்.

வாரன் இதை "எச்சரிக்கை மணி" என்று கூறி, செல்வ வரி விதிப்பின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது என்றார்.

ஆனால், மஸ்க் பெயரளவுக்கு மட்டுமே டிரில்லியனராக உள்ளார்.

ஏனெனில் அவரது செல்வம் பெரும்பாலும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு ஆண்டு காலத்திற்கு அவர் தனது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை விற்க முடியாது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிமுகம், அந்நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் மற்றும் முன்னாள் ஊழியர்கள் உள்பட 4,400-க்கும் மேற்பட்ட நபர்களையும் கோடீஸ்வரர்களாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், சம்பளத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கு நிறுவன பங்குகள் வழங்கப்பட்டிருந்தன.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு, இதுவரை நிரூபிக்கப்பட்ட நிதி செயல்திறனை விட, எதிர்கால வருவாய் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. தற்போது அந்த நிறுவனம் லாபகரமாக இல்லை. அதாவது அதன் செயல்பாடுகளால் கிடைக்கும் வருமானத்தை விட, செலவு அதிகமாக உள்ளது.

ஈலோன் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் பங்கு வெளியீடு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற தனது அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்தினார்.

நிறுவனத்தின் நிதி ஆவணங்களின்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற கட்டமைப்பு முதலீடுகளுக்காக அதிகமாக செலவழிக்கப்பட்டதால், 2025 மற்றும் 2026 காலத்தில் இதுவரை 9 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இழப்பைச் சந்தித்துள்ளது.

அதன் வணிகத்தின் மிகப்பெரிய கவனம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாகங்களுடன் ராக்கெட்டுகளை தயாரித்து ஏவுவதில்தான் உள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களையும் தயாரித்து ஏவுகிறது.

இந்த ஆண்டில் மஸ்க் சொந்தமாக வைத்திருந்த மற்றொரு நிறுவனமான எக்ஸ்ஏஐ(xAI)-ஐ கையகப்படுத்தியதன் மூலம், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையிலும் தடம் பதித்துள்ளது.

ராக்கெட்டுகள், வளர்ந்து வரும் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான செயற்கைக்கோள்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளியில் தரவு மையங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு "தனது வளர்ச்சி திட்டத்திற்கு" இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

லாஃபர் டெங்லர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும், ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை வாங்க ஆர்டர் செய்தவருமான நான்சி டெங்லர், மஸ்க்கின் பெரிய கனவுகள் இருந்தபோதிலும், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு வணிகத்தை "பணத்தை எரிக்கும் இயந்திரம்" என்று குறிப்பிட்டார்.

"சில கணிப்புகளை முழுமையாக நம்பாமல் கவனமாக அணுக வேண்டும்" என்று டெங்லர் கூறினார்.

இருப்பினும், நிறுவனத்தின் நீண்டகால திறனை நம்பி அவர் முதலீடு செய்து வருகிறார்.

"எங்களின் முதலீட்டு காலம் மூன்று, ஐந்து, பத்து ஆண்டுகள் கூட இருக்கலாம்" என்று டெங்லர் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்பேஸ்எக்ஸ் டெஸ்லாவுடன் இணையும் என்றும், அது தனித்தனியாக இருக்கும் இரு நிறுவனங்களின் மதிப்பையும் விட பெரிய நிறுவனமாக மாறக்கூடும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.

ஆனால் தற்போதைக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இலக்குகள், செயற்கைக்கோள்கள் அல்லது இணைப்புகளை விட மிகவும் உயர்ந்தவையாக உள்ளன.

அதன் ஐபிஓ ஆவணத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நோக்கம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

"மனித வாழ்க்கையை பல கோள்களில் பரவச் செய்ய தேவையான அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது, பிரபஞ்சத்தின் உண்மையான இயல்பை புரிந்துகொள்வது, மற்றும் விழிப்புணர்வின் ஒளியை நட்சத்திரங்கள் வரை கொண்டு செல்வது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது எதிர்கால வளர்ச்சியும் வெற்றியும், "சந்திர பொருளாதாரம்" (lunar economy) என அந்நிறுவனம் குறிப்பிடும் அமைப்பை உருவாக்குவதில் பெரும்பாலும் சார்ந்திருக்கும் என்றும் ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

அதாவது, மனிதர்களையும் சரக்குகளையும் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு தொடர்ந்து கொண்டு செல்லும் கட்டமைப்பு உருவாக வேண்டும். உண்மையான பொருளாதார அமைப்பு உருவாக இது தொடர்ச்சியான செயல்பாடாக இருக்க வேண்டும்.

இத்தகைய திட்டம் வெற்றி பெறுமா என்பது குறித்து தங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

"எங்களின் பல திட்டங்கள் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சிக்கல்கள், நிரூபிக்கப்படாத தொழில்நுட்பங்கள் அல்லது இன்னும் உருவாக்கப்படாத தொழில்நுட்பங்களை உள்ளடக்கியவை. இத்தகைய திட்டங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாமல் போகலாம்" என்று நிறுவனம் தனது ஐபிஓ ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஈலோன் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் பங்கு வெளியீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு முன்னதாக, நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் மஸ்க்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்த அளவிலான நிச்சயமின்மை, வெள்ளிக்கிழமை முதலீட்டாளர்களை பெரிதாக பாதித்ததாக தெரியவில்லை.

சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தி நிபுணரான சூசன்னா ஸ்ட்ரீட்டர், பங்கு விலையின் இந்த திடீர் உயர்வு "ஈலோன் மஸ்க்கின் எதிர்கால பார்வை மீது மிகப்பெரிய ஆர்வம் இருப்பதைக் காட்டுகிறது" என்று கூறினார்.

"பூமிக்கு அப்பாற்பட்ட தனது கனவுகளுடன் அவர் நீண்ட காலமாக நட்சத்திரங்களை நோக்கி பயணித்து வருகிறார். எதிர்காலம் குறித்த அவரது ஆர்வத்தை ஏராளமான முதலீட்டாளர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த பங்கு உயர்வு, "நிறுவனத்தின் அடிப்படை நிதி வலிமையை விட, மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பும் பங்குகளின் பற்றாக்குறை ஆகியவற்றால் உந்தப்படுகிறது" என்றும் அவர் எச்சரித்தார்.

பல தனிநபர் முதலீட்டாளர்கள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிமுகத்தில் பங்கேற்று பங்குகளை வாங்க ஆவலாக இருந்த நிலையில், சிலர் வேறு விதமான கவலையையும் வெளிப்படுத்தினர்.

அதாவது, பல முதலீட்டாளர்கள் தாங்களே அறியாமல் இந்த நிறுவனத்தின் பாதிப்புக்குள் செல்லக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஓய்வூதிய நிதிகள் மற்றும் சேமிப்பு கணக்குகள் பெரும்பாலும் குறியீட்டு நிதிகளில் முதலீடு செய்கின்றன. அவை பெரிய நிறுவனங்களில் பங்குகளை வாங்குவதால், நிறுவனத்தின் பங்கு விலை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படலாம்.

இப்படிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, இனி ஸ்பேஸ்எக்ஸ் பங்கு விலை எவ்வாறு நகர்கிறது என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கும்.

"ஸ்பேஸ்எக்ஸ் குறித்து முக்கியமான கேள்வி, பங்கு வெளியீட்டிற்கு பிறகு உடனடியாக பங்கு வர்த்தகம் எப்படி நடந்தது என்பது பற்றியது அல்ல " என்று கூறும் மெர்ஜர்மார்க்கெட் நிறுவனத்தின் ஈக்விட்டி மூலதனச் சந்தை ஆராய்ச்சியை வழிநடத்தும் சாமுவேல் கெர், "நீண்ட காலத்தில் இந்த பங்கு விலை எவ்வாறு நிலைத்து நிற்கும் என்பது தான் " என்கிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு