கோவை கல்லூரி மாணவர் மரணம்: போதைப் பொருட்கள் பற்றி மக்கள் தகவல் கொடுக்க முன்வருவதை பாதிக்குமா?

தமிழ்நாடு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையால் தற்போது வரை 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தெரிவித்தார். உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரை அமைச்சர்கள் சென்று சந்தித்து முதல் கட்ட இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

போதைப் பொருள் பயன்படுத்துவோர் பற்றி தகவல் கொடுத்த காரணத்தாலேயே அமுதன் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மறுத்துள்ளது.

இந்தச் சம்பவம் போதைப் பொருட்கள் கட்டுப்பாடு தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது. போதைப் பொருட்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையில், போதைப் பொருட்கள் தடுப்புக்கு என்றே கூடுதல் ஆள்பலத்துடன் புதிய காவல் பிரிவு உருவாக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவிக்கிறது.

அதே வேளையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிப்பவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

என்ன நடந்தது?

கோவை அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கென்னடி–சுமதி தம்பதியின் மகன் அமுதன் (வயது 19) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 10ஆம் தேதி அவர் சக கல்லூரி மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். அமுதனின் உடலைப் பார்த்து அவர்கள் அழும் உருக்கமான காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. இந்த வழக்கு மாநில அளவில் விவாதப் பொருளானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாணவரின் பெற்றோர், கல்லூரியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோர் பற்றி தகவல் கொடுத்தது வெளியில் கசிந்ததால்தான் தங்கள் மகன் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டை காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் மறுத்தன. மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறால்தான் இந்தக் கொலை நடந்ததாக காவல்துறை கூறியது.

எதிர்க்கட்சியினர் இந்தக் கொலை குறித்தும் போதைப் பொருட்கள் புழக்கம் குறித்தும் அரசாங்கத்தை விமர்சித்துப் பல கேள்விகளை முன்வைத்தனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சரிடம் பேசியதாகத் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "கல்வி நிறுவனங்களில் போதை புழக்கம் அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, அது குறித்து ஆய்வு செய்யவும் அதைக் கட்டுப்படுத்தவும் அதிரடிப்படை ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் வைத்துள்ளதாக," தெரிவித்தார்.

இந்த வழக்கில் முதலில் கொலை உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. அமுதனின் குடும்பத்தினரை தமிழ்நாடு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் சந்தித்தனர். எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது குடும்பத்துக்கு முதல் கட்டமாக ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை, ஆகஸ்ட் 17ஆம் தேதி சட்டப்பேரவையிலும் அனைத்துக் கட்சியினரும் குறிப்பிட்டுப் பேசினர்.

தமிழ்நாடு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images

'சிபிஐ விசாரணை வேண்டும்'

"இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" என்கிறார், மனித உரிமைச் செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர்.

"காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் கூறும் விளக்கங்களில் நிறைய கேள்விகள் எழுகின்றன. அவர்கள் சொல்வதைப் போல ஒரு குழுவினர் சம்பந்தப்பட்டு இருந்தால், ஏன் ஒரு தனி நபரை மட்டும் குறிவைத்து தாக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியதுடன், அதற்கான பதில் அவர்களிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, அங்கு போதைப் பொருள் பயன்பாடு இருந்ததாக பெற்றோர்கள் உறுதியாகக் கூறுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால், "போதைப் பொருள் பயன்பாடு பற்றி விவாதம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கோணத்தையே மறுக்கிறார்கள். காவல்துறை போதைப் பொருட்களை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெறும் ஒன்றுதான். அப்படியிருக்க அங்கு மட்டும் எப்படி இல்லையென்று சொல்லிவிட முடியும்?" எனக் கேள்வி எழுப்பியவர், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை சார்பில் 'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக, தமிழ்நாடு அரசு 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug free Tamil Nadu) என்கிற செயலியை அறிமுகப்படுத்தி இருப்பதுடன் இலவச உதவி எண், வாட்ஸ்ஆப் எண் ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வழிகளிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, "செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி மூலமாக சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் கள விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்யப்படும். இல்லையெனில் அந்தப் பகுதி காவல்துறை கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படும்."

அதோடு, "போதைப் பொருள் புகார் தொடர்பான உதவி எண் 24 மணிநேரமும் இயங்கும். உதவி எண் மற்றும் வாட்ஸ்ஆப் எண் மூலம் பெறப்படும் புகார்கள் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மூலம் விசாரிக்கப்படும். இதில் அனைத்து மாவட்டங்களும் காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டிருக்கும்" என்று அதிகாரிகள் விளக்கினர்.

இவை தவிர, மாவட்ட அளவில் ஒவ்வொரு வாரமும் மாநில அளவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் கண்காணிப்புக் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும், போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் என்ற தன்னார்வலர் திட்டத்தின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுவதாகவும் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் இயங்குவதாகவும், அதற்கென ஒரு திட்ட அதிகாரியும் மாணவ நிர்வாகிகளும் இருப்பார்கள் என்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அரசு அலுவலர் ஒருவர் பெயர் குறிப்பிட வேண்டாமென்ற நிபந்தனையுடன் பேசியபோது தெரிவித்தனர்.

அவரது கூற்றுப்படி, "போதைப் பொருட்களால் ஏற்படும் தாக்கம் மற்றும் அதன் பயன்பாட்டைத் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த தன்னார்வலர்கள் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்கள் போதை மறுவாழ்வு மையங்கள் போன்ற இடங்களுக்குச் செல்வார்கள்."

மேலும் விவரித்த அவர், "உள்ளூர் காவல் நிலைய காவலர்களும் இதில் ஈடுபடுவார்கள். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக போதைப் பொருட்கள் பயன்பாடு பற்றி தகவல் கிடைத்தால் அதையும் மாணவர்கள் பகிர்வார்கள். இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம் அது கிடையாது. ஆனால், அதன் ஓர் அங்கமாக தகவல் பகிர்வும் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களைப் பகிர்வார்கள். அந்தத் தகவல்கள் திட்ட அதிகாரி மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கப்படும். இது ஒரு பங்கு மட்டுமே" என்று விளக்கினார்.

இதுபோக, "அவர் என்சிசி, என்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் தன்னார்வலர்களும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தகவல் அளிப்பவரின் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்?

போதைப்பொருள் குறித்து தகவல் அளிப்பவர் பாதுகாப்பு தொடர்பாக எழும் அச்சங்கள் குறித்து ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி பிபிசி தமிழிடம் பேசினார்.

வழக்கு விசாரணையைப் பொருத்தவரை தகவல் அளிப்பவர் (Informant), சாட்சியம் அளிப்பவர் (Witness) என முக்கியமான இரண்டு தரப்பினர் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

"காவல் சட்டங்களின்படி தகவல் கொடுப்பவர்களின் பெயர்களை வழக்கு ஆவணங்களில் எங்குமே பதிவு செய்யக்கூடாது. அவர்களின் பெயர்களை எங்குமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. தகவல் அளிப்பவராகத் தெரிவிக்காதவரை அது வெளியில் தெரிய வராது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தகவல் அளிப்பவர் பற்றிய பதிவேடு இருக்கும். அது அந்தக் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரியால் மட்டுமே பராமரிக்கப்படும். தகவல் அளிப்பவரின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்க வேண்டுமென்பது இதில் முதன்மையானது" என்று கருணாநிது விளக்கினார்.

மேலும் அவரது கூற்றுப்படி, "இது ஒரு சம்பவத்தையோ அல்லது குற்றத்தையோ உறுதி செய்து வழக்காகப் பதிவு செய்வதற்கு முன் நடக்கக்கூடியது. அதே போல வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் வழக்குகளைப் பொறுத்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும்."

இந்த வழக்கில் என்ன நடந்தது என்பது விசாரணையில்தான் தெரிய வரும் எனக் குறிப்பிட்ட அவர், அதேவேளையில் தகவல் அளிப்பவர்களை பாதுகாப்பதற்கென தனியாக எந்தச் சட்டமும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் கட்டுப்பாடு இரு நிலைகளில் வேலை செய்வதாகக் கூறிய கருணாநிதி, "ஒன்று அதன் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும், இரண்டாவது அதன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இதில் முதல் நிலை மிகவும் பரந்துபட்டது. பல்வேறு துறைகள், பல்வேறு மாநிலங்கள் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இரண்டாவது நிலை, அதன் பயன்பாட்டைக் குறைப்பது, அதை விழிப்புணர்வு மூலம் செய்ய வேண்டும்" என்றார்.

தகவல் சேகரிப்பில் சுணக்கம் ஏற்படலாம்

இதுகுறித்து விரிவாகப் பேசிய கருணாநிதி, "சமீப ஆண்டுகளில் இத்தகைய விழிப்புணர்வு முயற்சிகளில் தன்னார்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களை அதில் ஈடுபடுத்தும் நடைமுறை அதிகரித்துள்ளது. அதற்கு நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. ஆனால் அவர்கள் அச்சமின்றி இருப்பதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் நிலவுகிறது" என்றார்.

போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக ஓரிடத்தில் இருந்து மட்டுமே காவல்துறைக்கு தகவல் கிடைப்பதில்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், "சமீபத்திய முன்னெடுப்புகளில் மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களை ஈடுபடுத்தும் போக்கு அதிகரித்து வரும் சூழலில் இது மாதிரியான விவாதங்கள் மக்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிப்பதைப் பாதிக்கலாம்" எனவும் எச்சரித்தார்.

இந்த வழக்கையொட்டி நடந்த விவாதங்களே மக்களை அச்சப்படுத்தி இருக்கலாம் எனக் கருதும் கருணாநிதி, "அதை முதலில் களைய வேண்டும். தகவல் சேகரிப்புக்கு உறுதியான நம்பகமான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Tamil Nadu Assembly

படக்குறிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு திட்டங்களில் உள்ள சவால்கள் காவல்துறை எடுக்கவுள்ள புதிய முன்னெடுப்புகள் பற்றி மதுவிலக்கு சிஐடி காவல்துறையின் ஏடிஜிபி சங்கர் பிபிசி தமிழிடம் பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக புதிய போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது மதுவிலக்கு அமலாக்கம் 15 போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப் பிரிவுகளால் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு காவல்துறையின் குறிப்பு தெரிவிக்கிறது.

அதை மேலும் விவரித்துப் பேசிய அவர், "உள்ளூர் காவல் நிலைய காவலர்களும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரும் இதனுடன் சேர்த்து மற்ற பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது 37 காவல் மாவட்டங்கள் மற்றும் 8 காவல் ஆணையரகங்களில் 65 அர்ப்பணிக்கப்பட்ட போதைப் பொருள் எதிர்ப்பு காவல்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஆய்வாளர் ஒருவர், நான்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் இருப்பார்கள். இதன் விளைவாக மாநிலம் முழுவதும் 1,625 காவலர்கள் புதிதாக அமைவார்கள், இவர்கள் வேறு எந்தப் பணியிலும் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

அதோடு, போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதில் சில சவால்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

"உள்ளூர் மட்டத்தில் காவல்துறைக்குப் பல்வேறு வழிகளில் தகவல்கள் கிடைக்கின்றன. நேரிலோ அல்லது அலைபேசி மூலமாகவோ தகவல் கொடுப்பவர்கள் அவர்களின் பெயர் கசிந்துவிடுமென அஞ்சுகிறார்கள். அது இயல்பானதுதான்" என்று குறிப்பிட்ட அவர், அதை முன்னிறுத்தியே, "செயலியை ஊக்குவிக்கிறோம். அதில் தகவல் அளிப்பவர்களின் அடையாளம் வெளிப்படாது. இதை டிஜிட்டல் தளங்களில் ஊக்குவிக்க வேண்டும். தகவல் சேகரிப்பை முழுவதுமாக டிஜிட்டல் முறையில் கொண்டு வர வேண்டும்" என்றார்.

இந்தச் செயல்முறை பாதுகாப்பு தொடர்பாக கவலைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்று கூறும் அவர், "அத்துடன் புகார் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் பெரிய இடைவெளி உள்ளது. அதையும் குறைக்க வேண்டும். கோவை வழக்கில் அப்படியொரு கோணம் இல்லை என உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் டிஜிட்டல் முறையில் புகார் அளிக்கும்போது அந்தக் கவலை இருக்காது" என்றார்.

தமிழ்நாடு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Tamil Nadu Assembly

படக்குறிப்பு, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார்

சட்டப்பேரவையில் உதயநிதி குற்றச்சாட்டும் நிர்மல்குமார் விளக்கமும்

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

முன்னதாக சட்டப்பேரவை விவாதத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்தைக் குறிப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஒரு மாணவரை கிட்டத்தட்ட 20 பேர் சேர்ந்து அடித்துள்ளார்கள். எனவே இது ஒரு படுகொலை" என்றார்.

"வழக்கு ஒன்றின் விசாரணைக்காக செட்டிபாளையம் காவல் நிலையம் வரச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது போதை கும்பல் பற்றி அமுதனிடம் தகவலைக் கேட்டு வாங்கியுள்ளார்கள். அந்தத் தகவலைப் பெற்ற காவல்துறை போதை கும்பல் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அமுதன் பற்றிய தகவலை போதை கும்பலிடமே வழங்கியிருக்கிறார்கள். அதுதான் அமுதனின் மரணத்திற்குக் காரணமாக அமைந்ததாக அவரது பெற்றோர் உறுதியாக நம்புகிறார்கள்," என்று தெரிவித்தார்.

அரசின் அலட்சியமும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கும்தான் இந்தக் கொலை நடக்கக் காரணமாக இருந்ததாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின், "இதில் சம்பந்தப்பட்டோருக்கு கடுமையான தண்டனையை வாங்கித் தர வேண்டும். அதேபோல குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிற காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதைத் தொடர்ந்து வெவ்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு