இயக்குநர் மகேந்திரன் படைப்பில் அதிகம் பேசப்படும் 7 கதாபாத்திரங்கள்

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்
படக்குறிப்பு, இயக்குநர் மகேந்திரன் (கோப்புப் படம்)
    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

உங்களுக்குப் பிடித்த டாப் 5 தமிழ் பட இயக்குநர்கள் பெயரைச் சொல்லுங்கள் என்று தமிழ்த் திரையுலகில் யாரிடம் கேட்டாலும், அதில் பெரும்பாலும் இயக்குநர் மகேந்திரனின் பெயரும் இடம் பெற்றிருக்கும்.

முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'பூட்டாத பூட்டுக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'நண்டு', 'மெட்டி', 'அழகிய கண்ணே', 'கை கொடுக்கும் கை', 'கண்ணுக்கு மை எழுது', 'ஊர்ப் பஞ்சாயத்து', 'சாசனம்' உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.

26 படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 14 படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். 27 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். விஜய் நாயகனாக நடித்த தெறி உள்பட 10 படங்களில் நடித்துள்ளார்.

எம்ஜிஆரின் பாராட்டு

1958-ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவரான மகேந்திரன், அன்றைக்கு விருந்தினராக வந்த எம்ஜிஆர் முன்னிலையில் காதல் பற்றியும் தனது சினிமா காதல் பற்றியும் பேசிய பேச்சு வரவேற்பை பெற்றது.

மகேந்திரன் பேச்சைக் கேட்டு, மாணவர்களையும் கைத்தட்ட சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர். விழா முடிந்து செல்லும்போது "நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன் கூடிய உண்மையான உணர்ச்சியுடன் கூறிய விளக்கம். சிறந்த விமர்சகராகத் தகுந்தவர். வாழ்க! தங்கள் அன்பன் - எம்.ஜி. ராமச்சந்திரன்" என்று தனது கைப்பட ஒரு பேப்பரில் எழுதி மகேந்திரன் சட்டைப்பையில் திணித்துச் சென்றிருக்கிறார்.

அந்தப் பாராட்டு மகேந்திரன் சென்னை வந்து எம்ஜிஆர் இல்லத்திலேயே தங்கி அவருக்காக 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு திரைக்கதை எழுத வைத்திருக்கிறது. அந்த முயற்சி தள்ளிப்போக, எம்ஜிஆர் நாடக மன்றத்துக்காக 'அநாதைகள்' என்ற நாடகத்தை எழுதி கொடுத்திருக்கிறார்.

சென்னையில் கல்லுாரி மாணவராக, பத்திரிகையாளராக, திரைக்கதை ஆசிரியராக வலம் வந்த மகேந்திரன் முள்ளும் மலரும் (1978) படத்தின் படம் மூலமாக இயக்குநரானார்.

"புத்தகங்கள் என் உலகம்"

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்
படக்குறிப்பு, மகன் ஜான் மகேந்திரன் உடன் இயக்குநர் மகேந்திரன்

தனது சினிமா பயணம் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட மகேந்திரன் ''சினிமாவுக்கு வரலைனா எங்கேயாவது எழுத்தர் (Clerk) வேலைக்கு போயிருப்பேன். எஸ்.எஸ்.எல்.சி கூட பெயில் ஆகியிருப்பேன். சினிமா மேல எனக்கு நாட்டமேயில்ல. சினிமாங்கிறது கல்யாணம் மாதிரி. சிலர் விருப்பப்பட்டுப் பண்ணிப்பாங்க. எனக்கு கட்டாய கல்யாணமா சினிமா அமைஞ்சுருச்சு. எம்.ஜி.ஆர் 'கட்றா தாலிய'னு சொன்னாரு. அதுக்குனு நான் சினிமாவக் கொடுமைப்படுத்தல. எனக்கு தெரிஞ்ச சினிமாவ நான் எடுத்தேன். நான் எம்.ஜி.ஆர் கூட இருந்தேன்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதைப் பார்த்துட்டு பல தயாரிப்பாளர்கள் என்ன கூப்பிட்டாங்க. என் கதைகள் ஹிட்டாச்சு. அப்புறம் சென்னையில இருந்து ஓடி போயிட்டேன். எம்.ஜி ஆர் என்னைக் கூப்பிட்டு விட்டாரு. இது மாதிரி 3 தடவ சென்னைல இருந்து ஓடிப் போயிருக்கேன். பிறகு, டைரக்‌ஷன் பண்ண ஆரம்பிச்சேன். எனக்குப் பிடிக்காத விஷயங்களை தள்ளிவச்சிட்டு படம் எடுக்கனும்னு முடிவு பண்ணேன். அது தான் 'முள்ளும் மலரும்'. அர்த்தம் புரியலைனாலும் எல்லா மொழி புத்தகங்களையும் படிக்க ஆரம்பிச்சேன்.

புத்தகம்தான் என் உலகமா மாறுச்சு. கல்கி, சாண்டில்யன், தி.ஜானகிராமன் போன்ற ஆளுமைகளோட படைப்புகளை தேடி தேடி படிச்சேன். சினிமாவில் முதலில் எழுத்தாளரானேன். பிறகு, இயக்குநர் ஆனேன்" 'என்று மனம் திறந்து சொல்லியிருக்கிறார். ஜூலை 25-ஆம் தேதி இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாள்.

மகேந்திரன் படங்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தனித்தன்மை வாய்ந்வை. அந்தக் கதாபாத்திரங்களின் குணம், உடல்மொழி, வசனங்கள் மூலமாக பல்வேறு விஷயங்களை தனது திரைமொழியில் சொல்லியிருப்பார்.

பல கல்லுாரிகளில், பல மேடைகளில், அறைகளில், டீக்கடைகளில் மகேந்திரனின் கதாபாத்திரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அவரது மகனும், இயக்குநருமான ஜான் மகேந்திரனிடம் தனது தந்தையின் படங்களில் அவருக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் பற்றி பேச முடியுமா என்று பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். தந்தை மகேந்திரன் திரையில் வடித்த கதாபாத்திரங்களில் மகன் ஜான் மகேந்திரனுக்குப் பிடித்த கதாபாத்திரங்களின் சிறப்பை அவரது வார்த்தைகளில் பார்க்கலாம்.

லட்சுமி (உதிரிப்பூக்கள்)

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்

பட மூலாதாரம், Super Good Films

படக்குறிப்பு, உதிரிப்பூக்கள் படத்தில் வரும் லட்சுமி கதாபாத்திரம்

அப்பா படங்களின் பெண் கதாபாத்திரங்கள் இயல்பானவை அல்லது புரட்சிகரமானவை. அந்தக் கதாபாத்திரங்கள் இன்றும் பேசப்படுகின்றன.

எனக்குத் தனிப்பட்ட முறையில் உதிரிப்பூக்கள் லட்சுமியைப் பிடிக்கும். அந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல, இந்தக் காலகட்டத்திலும் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் பல குடும்பங்களில் மௌனமாக வாழ்ந்து வருகிறார்கள். அதை சினிமாவில் இயல்பாக காண்பித்து இருப்பார். லட்சுமி கதாபாத்திரத்திற்கு வசனங்கள் மிகவும் குறைவு, கண்களால் பேசுவார். அந்தக் கண்களிலும் சோகம் இருக்கும். ஒரு சாடிஸ்ட் கணவன், சரியில்லாத உடல்நிலை, குழந்தைகள் என ஒரு சிக்கலான உலகில் வாழும் பெண்ணாக அந்தக் கதாபாத்திரத்தை அப்பா வடிவமைத்து இருப்பார்.

அந்தக் கதாபாத்திரத்தில் அஸ்வினியின் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். கணவன் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் குழந்தைகளுக்காகப் பல்லை கடித்துகொண்டு வாழும் பல பெண்களின் பிம்பமாக அவர் இருப்பார். அவர் வாழ்க்கையில் ஒரு சின்ன காதல் அல்லது பாசம் சரத்பாபு கதாபாத்திரம் மீது வரும். அதை கூட நாகரிகமாக கையாண்டிருப்பார்.

ஒரு முக்கியமான காட்சியில், 'உனக்கு உடல்நிலை சரியில்லை, உன் அப்பாவுக்கு வயதாகிவிட்டது, உன் தங்கையை நான் திருமணம் செய்துகொள்ளட்டுமா? அவ உதவியாக இருப்பா' என கணவன் விஜயன் கேட்கும் போது, உடனே அந்தக் கதாபாத்திரம்''நான் இப்படி கேட்டால் நீங்க சம்மதித்து இருப்பீங்களா' எனத் ' திருப்பி கேட்பது போல காட்சி வரும். அது பெண்களின் ஒட்டு மொத்த குரல்.

பல சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட பல கேள்விகளைப் பெண்கள் கேட்க நினைக்கிறார்கள். அதெல்லாம் கேட்கப்படாததால்தான் ஆண்கள் இப்படி ஆடுகிறார்கள் என லட்சுமி மூலமாக அழகாக, அழுத்தமாக சொல்லியிருப்பார் அப்பா.

அர்ச்சனா (ஜானி)

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்

பட மூலாதாரம், Pyramid Glitz

படக்குறிப்பு, அர்ச்சனா - ஜானி

ஜானியை ரீமேக் செய்யலாம் என நினைத்தபோது, ரஜினி, ஸ்ரீதேவிக்கு மாற்றாக யாரும் நடிக்க முடியாது என்று எனது தந்தை கூறியுள்ளார். அந்த அளவிற்கு அர்ச்சனா கதாபாத்திரமாகவே ஸ்ரீதேவி வாழ்ந்தார் என்று அவர் குறிப்பிடுவார்.

ஒரு பிரபலமான பாடகராக இருந்தாலும், தன்னை நேசிக்க, தனக்காக ஒரு உயிர், உறவு இல்லையே என்று தவிக்கும் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி வருவார். ஜானியை (ரஜினி) பார்த்தவுடன், அவனின் அன்பை கண்டவுடன் காதலில் விழுவார். கண்களில், பாடல்களில் அந்த காதலை அப்பா சொல்வார். தன் சூழ்நிலை, தனது தொழில் உணர்ந்து அந்தக் காதலை ஜானி மறுக்க, அதற்கு அர்ச்சனா பேசும் வசனங்கள் மிகவும் இயல்பானவை, உணர்வுபூர்வமானவை.

காதலை சொல்லும்போது ஜானி மறுக்க, அர்ச்சனா உடைகிற இடங்கள் அற்புதமானவை. அதைப் பார்த்து ஜானி மனசு மாற.. அந்தக் காட்சிகளும் பிரமாதம். யாராக இருந்தாலும் நம் மனதிற்குள் ஒரு குழந்தைத்தனம் இருக்கிறது. அது அன்புக்காக ஏங்குகிறது என்பதை இதயப்பூர்வமாக சொல்லிருப்பார்.

பல இடங்களில் ஜானி மீது அன்பைச் செலுத்துவார் அர்ச்சனா. நாம் ஒருத்தரை வைத்து மற்ற பெண்களைத் தவறாக நினைத்துவிட்டோமே என ஜானி கதாபாத்திரத்தில் இருக்கும் வித்யாசாகர் நினைப்பார். தங்களின் நிஜ வாழ்க்கையில் அன்புக்காக ஏங்கும் பெண்களின் பிரதிநிதியாக ஸ்ரீதேவியை காண்பித்திருப்பார். இன்றும் அப்படி ஏங்குபவர்கள் பலர்.

காளி (முள்ளும் மலரும்)

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்

பட மூலாதாரம், AP International

சமீபகாலமாக நான் சந்திக்கும் பல இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முள்ளும் மலரும் காளி (ரஜினி) கதாபாத்திரம் பற்றி அதிகம் பேசுகின்றனர்.

அண்ணன், தங்கை பாசத்துக்கு அந்தக் கதாபாத்திரம் உதாரணமாக இருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் பற்றி அப்பா ஒருமுறை பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு சேனலில் இருந்து அண்ணன் தங்கை பாசத்தை விரிவாக சொன்னது பாசமலரா? முள்ளும் மலரா என்று விவாதம். நீங்கள் பேச வேண்டும் என்று அப்பாவை அழைத்தபோது பதறிவிட்டார்.

'அண்ணன் தங்கை பாசத்தை பாசமலர் சொன்னது. ஆனால், முள்ளும் மலரும் படத்தில் அகம்பாவம் பிடித்த காளி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினேன். என்னை இப்படி பேச அழைத்து குற்ற உணர்வுக்கு ஆளாக்காதீர்கள்' என்றார். அவர் காளி கதாபாத்திரத்தை அப்படிதான் உருவாக்கியிருந்தார்.

'இரண்டு கையும் இரண்டு காலும் போனாக் கூட , இந்த காளி பொழச்சுக்குவான் சார்...கெட்ட பய சார் காளி' என்று பேசுகிற வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்தும்.

கிளைமாக்சில் கல்யாணத்துக்காக ஓடிபோக இருந்த தங்கை ஷோபா ஓடி வந்து கட்டிப்பிடிக்க, 'இத்தனை பேருக்கு முன்னாலும் அண்ணன்தான் முக்கியம்னு சொன்னா பாருங்க. இப்ப எங்க மூஞ்சி வெச்சுகிடுவீங்க. என்ஜினியர் சார் உங்களை பிடிக்கலை. ஆனால், என் தங்கைக்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்' என ரஜினி பேசுவதும் அந்தக் கதாபாத்திரத்தை வலுவாக்கியது. கொஞ்சம் கரடுமுரடான அண்ணன் கதாபாத்திரத்திற்கு ரஜினி மாதிரியான ஹீரோவை பக்காவாக நடிக்க வைத்தது அப்பாவின் திறமை.

எஸ்.பி.சவுத்ரி (தங்கப்பதக்கம்)

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்

பட மூலாதாரம், SPE Music India

படக்குறிப்பு, எஸ்.பி சௌத்ரி கதாபாத்திரம்

எழுத்தாளராக என் தந்தை மகேந்திரன் செதுக்கிய கதாபாத்திரங்களில் தங்கப்பதக்கம் எஸ்.பி.சௌத்ரி (சிவாஜிகணேசன்) கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் இயக்குநர், எழுத்தாளர்தான். ஆனாலும், ஒரு கேள்வியை அப்பாவிடம் கேட்கவில்லையே என இப்போது யோசிக்கிறேன். 'எப்படி அந்தக் காலத்தில் சிவாஜிசாருக்கு சேட் குடும்பத்தில் வைக்கக்கூடிய பெயரை வெச்சீங்க. அதை எப்படி அவரும் ஒத்துகிட்டாரு, மக்களும் ஏன் கேள்வி கேட்கவில்லை' என்பது அந்தக் கேள்வி.

மகன் மீது பாசமாக இருக்கும், அதே சமயம் கடமையில் உறுதியாக இருக்கும் கதாபாத்திரத்தில் சிவாஜி வருவார்.

மகனை அவர் கைது செய்துவி்டடு வீட்டுக்கு வரும்போது 'உனக்கு மகன், அவளுக்கு புருஷன்னு சாப்பிடாமல் இருக்கீங்க. அவன் எனக்கும் மகன்தான் என்பதை மறந்திட்டீங்க' என்பார். படத்தின் கருவும் அதுதான். இறுதிக் காட்சியில் மகனை சுட்டுகொன்றுவிட்டு, மகனை மடியில் கிடத்தி சிவாஜி ரைம்ஸ் பாடுவது பலரையும் உருக வைக்கும். அப்பாவின் மாஸ்டர் பீஸ் கதாபாத்திரங்களில் எஸ்.பி.சௌத்ரியும் ஒருவர்." என்றார்.

வித்யாசாகர் (ஜானி)

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்

பட மூலாதாரம், Tamil Talkies

படக்குறிப்பு, ஜானி படத்தில் வரும் வித்யாசாகர் கதாபாத்திரம்

ஜானி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் ரஜினி. அதில் வித்யாசாகர் என்கிற கதாபாத்திரம் முடி திருத்தும் வேலையில் இருப்பார். மிகவும் கஞ்சத்தனமான ஆளாக வித்யாசாகர் கதாபாத்திரத்தில் ரஜினி வருவார்.

அவர் வீட்டை விட்டு செல்லும்போது பூக்களை எண்ணிவிட்டுச் செல்வார். அந்த வீடு அழுக்காக இருக்கும். ஆனால், அவர் ஸ்டைலாக இருப்பார். அவர் பாடிலாங்குவேஜ் மார்டனாக இருக்கும். ஒரு முடி திருத்தும் வேலை செய்யும் கதாபாத்திரத்தை வைத்து படம் முழுவதும் நிறைய தத்துவங்களைச் சொல்ல வைத்திருப்பார் அப்பா.

தீபா வந்தவுடன் அவர் கதாபாத்திரம் மாறும், தீபா ஆடை வாங்க கடைக்குச் செல்லும்போது மனது அலை பாயும்.

அப்போது 'இந்த உலகத்தில் எப்பவும் ஒன்றை விட ஒன்று பெட்டராகதான் இருக்கும். அதுக்கு முடிவே இல்லை அதுக்காக நாம மனதை மாத்திகிட்டேபோகக்கூடாது' என்று ரஜினி வசனம் பேசுவார். இன்றைக்கும் பல ரீல்ஸ்களில் அந்த வசனம் ஒலிக்கிறது.

அர்ச்சனாவின் அன்பை பார்த்து மனது மாறி, பெண்களை உயர்வாக நினைத்து அவர்களைச் சேர்த்து வைப்பார் வித்யாசாகர் கதாபாத்திரத்தில் வரும் ரஜினி. இப்படி மாறுபட்ட உலகத்தைக் காண்பித்திருந்தார்.

சுந்தரவடிவேலு (உதிரிப்பூக்கள்)

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்

பட மூலாதாரம், Bravo HD Movies

படக்குறிப்பு, உதிரிப்பூக்கள் படத்தில் வரும் சுந்தர வடிவேலு கதாபாத்திரத்தில் விஜயன் நடித்திருப்பார்

என்னிடம் பேசுபவர்கள் உதிரிப்பூக்கள் விஜயன் கதாபாத்திரம் பற்றி நிறைய பேசுகின்றனர்;ம், கேள்வி கேட்கின்றனர்.

அவன் வாழத் தகுதி இல்லாதவன் என கிளைமாக்சில் ஊர் மக்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு மோசமானவன், சாடிஸ்ட். ஆனால், அந்தக் கதாபாத்திரம் சத்தமாக கூட பேசாது. அவ்வளவு நேர்த்தியாக அப்பா காண்பித்திருப்பார். ஓரிடத்தில் அந்த வாத்தியார் கதாபாத்திரத்திற்கு டீ கூட கொடுக்கமாட்டார்.

மாமனார், மனைவியிடம் விஜயன் பேசுகிற இடங்கள் உக்கிரம். கடைசியில் விஜயனை தண்ணீரில் விழுந்து உயிரை விடுமாறு கிராம மக்கள் வற்புறுத்தும் போது தனது குழந்தைகளை கட்டிப்பிடித்து 'அப்பா குளிக்கப் போகிறேன்' என வாட்ச் கழட்டி கொடுத்துவிட்டு, குழந்தைகளை அநாதை ஆக்கிவிட்டு போகிறேன் என்பதுபோல சிம்பதியில் அந்தக் கதாபாத்திரத்தை நகர்த்திச் செல்வார் அப்பா..

படம் முழுவதும் வெறுக்க வைத்த கதாபாத்திரத்தின் முடிவைக் கண்டு பார்வையாளர்களே இறுதியில் கண்கலங்கும் வகையில் அப்பா இயக்கியிருப்பார்.

விஜி (நெஞ்சத்தைக் கிள்ளாதே)

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்

பட மூலாதாரம், MOVIEEZ

படக்குறிப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் வரும் விஜி கதாபாத்திரம்

அந்தக் கால இளைஞர்களின் மனநிலை, திடீரென முடிவெடுக்கும் விதத்தை விஜி கதாபாத்திரம் மூலமாக சொன்னார் அப்பா.

திடீரென மனது மாறி பிரதாப் போத்தனை திருமணம் செய்வார். பின்னர் நிறைய யோசிப்பார். அவர் மனதில் ஒரு தயக்கம் இருக்கும். கடைசியில் சூழ்நிலை, நிஜம், வாழ்க்கையை உணர்ந்து விமான நிலையத்தில் அவருடன் சேருவார்.

முதல் படமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் சுஹாசினி சிறப்பாக நடித்து இருந்தார்.

தனது நண்பர், ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக இருந்த, நிஜத்திலும் துறுதுறுவென இருந்த சுஹாசினியை அந்த படத்தில் கதாநாயகி ஆக்கினார் அப்பா. காதல், காதலன், கணவன், நிகழ்கால வாழ்க்கைக்கு இடையே சிக்கி, கடைசியில் தெளிவு பெறும் விஜி கதாபாத்திரம் அவரும் கலக்கியிருந்தார்.

அந்தக் காலத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி அப்பாவைச் சந்திக்கும் பல பெண்கள் விஜி கதாபாத்திரம் பற்றி அதிகம் பேசியிருக்கிறார்கள். அந்தக் கதாபாத்திரத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். அந்த வயதுக்கே உரிய வேகம், கோபம் அந்த கதாபாத்திரன் பலம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு