இளையராஜா:"சாதிய படிநிலைகளை இசையால் மீறியவர்" - 50 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் பயணம்

பட மூலாதாரம், ILAYARAJA/X
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, சர்வதேச விவகாரங்கள் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தீவிர ரசிகர்கள் அவரை "மேஸ்ட்ரோ" என அழைக்கின்றனர். அறிமுகமாகி ஐந்து தசாப்தங்களான பிறகும் இந்தியா முழுவதும் வீடுகள், கச்சேரி அரங்குகள் மற்றும் சினிமா திரைகளில் அவருடைய இசை எதிரொலிக்கிறது.
83 வயதான இளையராஜா, 9 மொழிகளில் 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார், இது இந்திய சினிமாவில் எவரோடும் ஒப்பிட முடியாத சாதனையாகும்.
1976-ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் இசையை மாற்றியமைத்த அவர், இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க இசையமைப்பாளர்களுள் ஒருவராக உருவெடுத்தார்.
"இளையராஜாவின் வருகை ஒரு முக்கிய திருப்புமுனை தருணம். தனித்துவமான செவிவழி ஒலிச்சூழலை உள்வாங்கிய, முற்றிலும் வேறுபட்ட சமூக மற்றும் அழகியல் பின்னணி கொண்ட ஒருவரால் ஏற்பட்ட குறுக்கீடு அது," என பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா கூறுகிறார்.
இந்தியாவில் ஜனரஞ்சக சினிமாவின் மையமாக பாடல்கள் திகழ்கின்றன. பின்னணிப் பாடகர்கள் பாடும் பாடல்களுக்கு திரையில் நடிகர்கள் உதட்டசைக்கின்றனர். அதே சமயம் அதே இசையமைப்பாளர்களே பெரும்பாலும் படத்தின் பின்னணி இசையையும் அமைக்கின்றனர்.
இளையராஜாவுக்கு முன்பு, பெரும்பாலான திரை இசை இந்திய செவ்வியல் இசையை அடிப்படையாகக் கொண்டது. மேற்கத்திய சிம்ஃபொனி இசையின் தாக்கம் சினிமாவின் மையமான ஒலிப்பதிவில் அரிதாகவே இருந்தது.
ஆனால், இளையராஜா உலகம் முழுவதிலும் இருந்து பரவலான இசை கலாசார வடிவங்களை கொண்டு வந்ததாக டி.எம். கிருஷ்ணா கூறுகிறார்.
"வெவ்வேறு வித இசையிலிருந்து அவர் கொண்டு வரும் அனைத்து வெவ்வேறு வடிவங்களிலும் ஓர் இணக்கத்தை அவர் உருவாக்கிவிடுவார் என்பதுதான் இங்கு தனித்துவமானது. அதுதான் இளையராஜாவின் மேதைமை," என்கிறார் அவர்.
அன்னக்கிளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, கீதாஞ்சலி, சின்ன கவுண்டர் மற்றும் நாயகன் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு வெற்றி பாடல்களுக்கு இசையமைத்தார். அவர் 8,000க்கும் அதிகமான சினிமா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், அவற்றில் பெரும்பாலும் தமிழ்நாட்டின் நாட்டுப்புற மற்றும் கிராமப்புற பாடல் கலாசாரத்தைக் கொண்டதாகும்.
கடந்தாண்டு இளையராஜா லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா எனும் இசைக்குழுவுடன் இணைந்து மேற்கத்திய செவ்வியல் இசை வடிவமான சிம்ஃபொனியை உருவாக்கி, நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெயரை பெற்றார். இது, "உலகளாவிய இசை வரலாற்றில் மைல்கல் தருணமாக" வர்ணிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Stills Ravi
தமிழ்நாட்டின் பண்ணைபுரத்தில் 1943-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆர்.ஞானதேசிகனாக பிறந்த இளையராஜா, ஏலக்காய் தோட்ட மேற்பார்வையாளரான தன் தந்தை பாடிய நாட்டுப்புற மற்றும் கதைப் பாடல்களை கேட்டு வளர்ந்தார். தந்தை திடீரென இறந்தபோது அவருக்கு வயது ஏழு.
"தந்தை இறந்த பிறகு எங்களின் அம்மா சின்னத்தாயம்மாள் குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமையையும் தாங்கினார். நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்தோம்," என பிபிசியிடம் பேசிய இளையராஜாவின் தம்பியும் பிரபலமான இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறினார்.
ஏழ்மையான, சமூக ரீதியாக விளிம்புநிலை குடும்பத்தில் பிறந்த இளையராஜாவுக்கு முன்னேறுவதற்கு குறைவான வாய்ப்புகளே இருந்தன. ஆனால், அவரைச் சுற்றிலும் இசை நிரம்பியிருந்தது. அவருடைய மூத்த சகோதரரும் பாடகர்-நாடக ஆசிரியருமான பாவலர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சி 1950களில் அப்பகுதியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்திய காலகட்டத்தில் அக்கட்சி சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தினார்.
"எங்கள் அண்ணனுடன் நாங்கள் கிராமம்கிராமமாக பயணித்தோம். அப்படித்தான் நாங்கள் நாட்டுப்புற மற்றும் கிராமப்புற இசை கலாசாரங்களை கற்றுக்கொண்டோம்," என்கிறார் கங்கை அமரன்.
ஒருமுறை நிகழ்ச்சிக்கு முன்னதாக வரதராஜன் உடல்நலமில்லாமல் போனபோது அவருடைய இடத்தில் இளையராஜாவை நிகழ்ச்சியை நடத்துமாறு அவர்களின் தாயார் அறிவுறுத்தினார். அதுதான், இளையராஜா பொது நிகழ்ச்சியில் தோன்றிய முதல் தருணம்.
14 வயதில் பள்ளியிலிருந்து இடைநிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பின்னர், அவர் தன் தம்பிகளுடன் 1968-ஆம் ஆண்டில் சினிமாவில் வாய்ப்பு தேடி மெட்ராஸுக்கு (தற்போது சென்னை) வந்தார். அக்காலகட்டத்தில் பேருந்து கட்டணத்தை மிச்சம் செய்ய பல கிலோமீட்டர் நடந்ததையும் அடிக்கடி பசியுடன் உறங்கச் சென்றதையும் இளையராஜா பின்னர் நினைவு கூர்ந்தார்.
தன்ராஜ் மாஸ்டர் எனும் இசைக்கலைஞரிடம் மேற்கத்திய இசை கற்றுக்கொண்ட அவர், கித்தார் மற்றும் பியானோ போன்ற இசைக்கருவிகளை இசைப்பதில் சிறந்து விளங்கினார். அதே சமயம், பாக் (Bach), பீத்தோவன், மொசார்ட் மற்றும் ஷூபெர்ட் (Schubert) போன்ற கலைஞர்களின் இசையில் மூழ்கினார்.
"இது கடவுளின் அன்பளிப்பு. இசை வாத்தியங்களை கற்பது மற்றும் அதில் சிறந்து விளங்குவது அவருக்கு இயல்பாகவே வந்தது" என்கிறார் கங்கை அமரன்.

பட மூலாதாரம், Stills Ravi
1969-ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷிடம் உதவியாளராக இளையராஜா பணியாற்றத் தொடங்கினார்.
"ஜிகே வெங்கடேஷ் என்னுடைய ஆசிரியர், குரு மற்றும் தாளக் குறிப்புகள் (orchestra scores) எழுத ஊக்குவித்தவர்," என இளையராஜா பின்பொரு சமயம் அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்தார்.
பின்னர் இளையராஜா கித்தார் இசைக்கலைஞராகி, திரைப்படங்களுக்கு சொந்தமாக இசைக் குறிப்புகள் எழுதத் தொடங்கினார்.
மெட்ராஸில் அவருடைய ஆரம்ப காலகட்டம் கடுமையான தினசரி வழக்கங்களை கொண்டதாக இருந்தது: விடியற்காலையில் இசைப் பாடங்கள், நாள் முழுவதும் இசையைப் பதிவு செய்தல் மற்றும் நள்ளிரவில் வீடு திரும்புதல்.
வெங்கடேஷ் மற்றும் மற்றவர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் பணிபுரிந்தார், அக்காலகட்டத்தில் தன் கலையை மெருகேற்றிக் கொள்வதிலும் திரையுலகில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் அவர் கவனம் செலுத்தினார்.
அன்னக்கிளி திரைப்படத்தின் கதாசிரியரும் பாடலாசிரியருமான பஞ்சு அருணாச்சலம், இளையராஜாவை படக்குழுவினர் முன்பு தன் திறமையை வெளிப்படுத்த அழைத்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
"அந்த அறையில் எந்த இசைக்கருவியும் இல்லை. அங்கிருந்த மரத்தாலான மேசையை தாள வாத்தியமாக பயன்படுத்தி பாடினார். ஆனால், தயாரிப்பாளரை அது கவர்ந்துவிட்டது," என்கிறார் கங்கை அமரன்.
தற்போது ராஜா என அழைக்கப்படும் அவருடைய பெயரை இளையராஜா என்று அருணாச்சலம் மாற்றினார்.
அன்னக்கிளி படத்தின் வெற்றி இளையராஜாவுக்கு புகழையும் அதிகமான பட வாய்ப்புகளையும் கொடுத்தது.

பட மூலாதாரம், Ilayaraja/Facebook
1970கள் மற்றும் 1980களின் பிற்பகுதி இந்தியாவில் இசை கேட்கும் முறையை மாற்றியமைத்தது. அதுவரை, அரசு நடத்தும் வானொலி அல்லது கடைகளில் இசையைப் பதிவு செய்து கேட்கப்படும் இசைத்தட்டுகள் (vinyl records) மற்றும் சமூகக்கூடங்களில் மட்டுமே பாடல்கள் கேட்கப்பட்டன.
"கேசட்டுகள் மற்றும் பலராலும் வாங்கத்தக்க இசை அமைப்புகளின் வருகை மக்கள் எப்போதெல்லாம் விரும்புகின்றனரோ அப்போதெல்லாம் பாடல்களை கேட்க வைத்தது. தொழில்நுட்பம் மாறிவந்த காலகட்டத்தில் சரியாக இளையராஜா இசையுலகில் நுழைந்தார்," என்கிறார் இசை விமர்சகர் ஷாஜி சென்.
விரைவிலேயே அவர் தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர் ஆனார். படத்தில் அவருடைய பெயர் வரும்போது ரசிகர்கள் வண்ண காகிதத் துண்டுகளை தூவியும், கைதட்டியும், விசிலடித்தும் ஆர்ப்பரித்தனர். அவருடைய பாடல்களுக்காகவே பலரும் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தனர், அவருடைய உச்ச காலகட்டத்தில் ஓராண்டில் 50 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
பல திரைப்படங்களுக்கு அவருடைய இசையே ரசிகர்களை ஈர்க்கும் அம்சமாக இருந்தது - திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தும் அப்படங்கள் ஓடுவதற்கு அவரின் இசை உதவிபுரிந்தது.
"ஒரு படத்தின் உணர்வு ரீதியான அம்சங்கள் மற்றும் அதன் கருப்பொருளையும் அவர் புரிந்துகொள்வார். அந்த உணர்வுகளை அவர் இசையில் கொண்டு வருவார். அதனால்தான் அவரின் இசை தனித்து நிற்கிறது," என இசை விமர்சகர் சுவான்ஷு குரானா கூறுகிறார்.
மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமான தளபதி (1991) படத்தில் வரும் 'ராக்கம்மா கைய தட்டு' அவருடைய மிகவும் கொண்டாடப்பட்ட பாடல்களுள் ஒன்றாகும்.
தமிழ் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை கலாசாரம், மேற்கத்திய செவ்வியல் இசை வடிவம் மற்றும் போல்கா இசை (polka) ஆகியவற்றை இணைத்தும் இசை வேகத்தை மாற்றியும் அவற்றின் மாறுபட்ட பகுதிகளை இணைக்கும் விரல் சொடுக்குகள் மூலமும் உருவாக்கப்பட்டது அப்பாடல்.
2002-ம் ஆண்டு பிபிசி உலக சேவையால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் நான்காவது இடத்தைப் பிடித்தது.

பட மூலாதாரம், Ananda Vikatan
இடைவிடாத பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும் இளையராஜாவால் கர்நாடக சங்கீதத்தின் ராகங்கள், இந்திய நாட்டுப்புற மெல்லிசை மற்றும் ஷூபெர்ட் அல்லது மொசார்ட்டின் இசையை ஒரே இசையமைப்பில் கலக்க முடிந்தது.
சமீபத்தில் சென்னையில் அவர் நடத்திய வேலியண்ட் சிம்ஃபொனி நிகழ்ச்சியில், ஷூபெர்ட்டின் முற்றுப்பெறாத சிம்ஃபொனியை, 1979-ம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் இடம்பெற்ற இதயம் போகுதே பாடலில் எப்படி இழைத்தார் என்பதை விளக்கினார்.
"அதன் வடிவங்கள் இரு வெவ்வேறு கலாசாரங்களில் இருந்து வந்தவை. ஆனால், அவை வெவ்வேறானவை அல்ல, ஒரே விஷயம் தான் என்பதை நிரூபிக்க விரும்பினேன்," என்றார் அவர்.
1990களின் ஆரம்பகாலத்தில் ஏ.ஆர். ரகுமானின் வருகை வரையிலும் தமிழ் சினிமா இசையில் இளையராஜா ஆதிக்கம் செலுத்தினார். திரையுலகில் இசையமைப்பாளராவதற்கு முன்பாக சில ஆண்டுகள் இளையராஜாவின் இசைக்குழுவில் ஏஆர் ரகுமான் கீபோர்ட் வாசித்தவர் ஆவார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இளையராஜாவிடம் பணியாற்றியது பள்ளியில் படிப்பது போன்றது என்றார் ஏஆர் ரகுமான்.
"அவருடைய வாழ்க்கையே எனக்கு உத்வேகமாக அமைந்திருக்கிறது," என்றார் ரகுமான்.
பண்டைய தமிழ் இலக்கியம் மற்றும் திருவாசகம் உள்ளிட்ட ஆன்மீக படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட இசை ஆல்பங்களை அவர் உருவாக்கினார். 2018-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
83 வயதிலும் கூட ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவில் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் அவர் சென்னை மற்றும் பெங்களூருவில் வேலியண்ட் சிம்ஃபொனி நிகழ்ச்சி நடத்தினார். சர்வதேச அளவிலும் இசை நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
ஓடிடி போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் வைரல் ரீமிக்ஸ் பாடல்கள் மூலம் இளையராஜாவை புதிய தலைமுறையினர் அடையாளம் காண்கின்றனர். உதாரணமாக,1983-ஆம் ஆண்டு வெளியான கிளியே கிளியே பாடல், சமீபத்தில் லோகா சாப்டர் 1: சந்திரா படத்தின் மூலம் இன்றைய இளைய தலைமுறையினரிடையே பிரபலமானது.
சமீப ஆண்டுகளில் தன்னுடைய பாடல்கள் தொடர்பான காப்புரிமை மற்றும் தன் இசையை அனுமதி பெறாமல் பயன்படுத்துவது தொடர்பான சட்டப் போராட்டங்களுக்காக இளையராஜா தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
வரலாற்று ரீதியாக உயர்சாதி கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த, விளிம்புநிலை சமூகங்களிலிருந்து வரும் கலைஞர்களுக்கு பெரிதும் வாய்ப்பு மறுக்கப்பட்ட கர்நாடக இசையில் நீண்ட காலமாக நிலவும் சமூகத் தடைகளுக்கு அவருடைய வளர்ச்சி சவால் விடுத்தது.
இசை வடிவத்தின் மீதான இளையராஜாவின் ஆழ்ந்த தேர்ச்சியே இத்தகைய படிநிலைகளுக்கு சவால்களை விடுக்க உதவியது.
"சமூக மற்றும் சாதிய படிநிலைகளை அவர் தன் இசையின் மூலம் மீறினார்," என்கிறார் டி.எம்.கிருஷ்ணா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































