டெல்லி vs பஞ்சாப்: ஒரே போட்டியில் 2 சாதனை – கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் 'மிரட்டல்' அதிரடி

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் இன்று (ஏப்ரல் 25) நடந்த டெல்லி கேபிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் போட்டியில், மிகப் பெரிய டி20 சேஸை அரங்கேற்றி வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.

இதன்மூலம் இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணியாகவும் பஞ்சாப் கிங்ஸ் வலம் வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் அந்த அணி 6 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. ஒரு போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்தது. ஆனால், அந்த ஸ்கோரை 7 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.

மிகப் பெரிய சேஸ் என்பதைத் தவிர்த்து இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. கேட்ச் டிராப்கள், காயங்கள் என பல மறக்கவேண்டிய தருணங்களும் இந்தப் போட்டியில் நடக்கவே செய்தன.

ராகுல் ஆடிய சாதனை ஆட்டம்

டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டர் கேஎல் ராகுல் இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முழுமையாக ஆடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்தார். 67 பந்துகளை சந்தித்த ராகுல் 226.86 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். அவரது இன்னிங்ஸில் 16 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.

ஐபிஎல் வரலாற்றில் இது மூன்றாவது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர். கிறிஸ் கெய்ல் (175*) மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் (158*) ஆகியோர் முதலிரு இடங்களில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலுமே இந்தியர் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இது ஐபிஎல் தொடரில் ராகுல் அடிக்கும் ஆறாவது சதம். டெல்லி அணிக்காக இரண்டாவது. இதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்காகவும் தலா 2 சதங்கள் அடித்திருக்கிறார் அவர். இதன்மூலம் 3 வேறு ஐபிஎல் அணிகளுக்காக 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

வேகம், ஸ்பின் என அனைத்தையும் பந்தாடிய ராகுல், 26 பந்துகளில் அரைசதத்தையும், 47 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். நித்திஷ் ராணாவுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார் ராகுல். அந்த இணை 96 பந்துகளில் 220 ரன்கள் விளாசியது. ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான்.

ராகுல் மற்றும் நித்திஷ் ராணாவின் ஆட்டத்தின் காரணமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். அதேபோல், இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. ஆனால், அது பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்ய வரும் வரைதான்.

பஞ்சாப் செய்த சாதனை சேஸ்

ஐபிஎல் அரங்கில் சேஸ் செய்யப்பட்ட மிகப் பெரிய ஸ்கோர் 262. இதை 2024 பஞ்சாப் கிங்ஸ் அணி செய்தது. இப்போது அதைவிட பெரிய இலக்கை சேஸ் செய்யவேண்டும் என்ற நெருக்கடியோடு களமிறங்கியது அந்த அணி.

ஆனால், அந்த அணியின் ஓப்பனர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் அந்த நெருக்கடி தெரியாத வகையில் அதிரடியாக ஆடினார்கள். பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசிய இந்த ஜோடி பவர்பிளேவில் மட்டுமே 116 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் இரண்டாவது பெரிய பவர்பிளே ஸ்கோர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. பிரியான்ஷ் ஆர்யா 43 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 76 ரன்களிலும் 4 பந்து இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

பத்தாவது ஓவரில் கூப்பர் கானலியும் (17 ரன்கள்) வெளியேற, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நெருக்கடி கூடியது. ஆனால், அதன்பிறகு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேஹல் வதேரா இருவரும் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்து தங்கள் அணியின் ரன்ரேட்டையும் உயர்த்தினார்கள்.

நேஹல் வதேரா 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய சஷாங் சிங், ஷ்ரேயாஸ் உடன் இணைந்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

டெல்லி கேபிட்டல்ஸ் சற்று கம்பேக் கொடுப்பதுபோல் தெரிந்த நிலையில் தன் அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று போட்டியை முடித்துக்கொடுத்தார் ஷ்ரேயாஸ். அவர் 36 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சஷாங்க் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசியில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ். ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 அரங்கிலுமே பெரிய சேஸ் இதுதான்.

அதுமட்டுமல்லாமல், இந்த சீசனில் தங்களுடைய 6வது வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ். இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் தான். அவர்கள் 7 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஒரு போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.

சோதனை மேல் சோதனை

சாதனைகள் பல அரங்கேறிய இந்தப் போட்டியில் பல்வேறு சோதனைகளும் அரங்கேறின.

முன்னதாக கே.எல்.ராகுல் 11 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது கொடுத்த ஒரு கேட்சை பஞ்சாப் கிங்ஸ் அணியின் சஷாங்க் சிங் தவறவிட்டார். அந்தப் பந்தும் பவுண்டரிக்குச் சென்றது. அதன்பிறகு ராகுல் இந்தப் போட்டியில் 141 ரன்கள் குவித்தார்.

அதுமட்டுமல்லாமல், ராகுல் 51 ரன்கள் எடுத்திருந்தபோது வைஷாக் விஜயகுமாரும் ஒரு கேட்சை தவறவிட்டார். தன் பந்துவீச்சில் நேரே வந்த கேட்ச் வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளத் தவறினார்.

அதேபோல் 17வது ஓவரின் கடைசி பந்தில் நித்திஷ் ராணா அடித்த ஒரு பந்தை பாய்ந்து சென்று சிறப்பாகப் பிடித்தார் ஸ்டாய்னிஸ். ராணா வெளியேறிக்கொண்டிருந்த நிலையில், ஸ்டாய்னிஸ் விழுந்தபோது பவுண்டரி எல்லையைத் தொட்டுவிட்டதாகக் கூறி அதை சிக்ஸர் என்று அறிவித்தார் மூன்றாவது நடுவர். சிறப்பாகப் பந்துவீசிய சஹலின் ஒரு விக்கெட்டும் இல்லாம் போனது. மேலும், அது அவுட்டாக இருந்திருந்தால், இந்தப் போட்டியில் 10-க்கும் குறைவான எகானமி வைத்திருந்த ஒரே பௌலர் ஆகியிருப்பார் சஹல்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியுமே பல வாய்ப்புகளைத் தவறவிட்டது. சொல்லப்போனால், அந்த வாய்ப்புகள் இந்த அணியை ரொம்பவே பாதித்தது.

இரண்டாவது ஓவரில் பிரப்சிம்ரன் அடித்த ஒரு கடினமான வாய்ப்பை ஆகிப் நபியால் பிடிக்க முடியவில்லை.

அடுத்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா தூக்கி அடித்த பந்தை மிட் ஆஃப் திசையில் இருந்த லுங்கி எங்கிடி பிடிக்க பின்னாலேயே சென்றார். ஆனால், பந்தை அவர் சரியாகக் கணிக்காமல் கேட்சைத் தவறவிட்டார். அதுமட்டுமல்லாமல், அவர் கீழே விழுந்தபோது தலை தரையில் பலமாக பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அவரால் எழவே முடியாத நிலை ஏற்பட, மைதானத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்து அவரை அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதனால், டெல்லி கேபிட்டல்ஸ் அணி தங்களின் சிறந்த பந்துவீச்சாளரையும் இழந்தது. இது அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்தது.

முதல் இன்னிங்ஸில் ஸ்டாய்னிஸ் செய்தது போலவே இரண்டாவது இன்னிங்ஸில் செய்தார் முகேஷ் குமார். கூப்பர் கானலி அடித்த பந்தைப் பிடித்துவிட்டு எல்லைக் கோட்டைத் தொட்டார் அவர். அதனால், அது சிக்ஸர் ஆனது. ஆனால், கானலி சீக்கிரம் அவுட் ஆகிவிட்டதால் அது பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இவை அனைத்தையும் விட ஆட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இரு தவறுகளைச் செய்தார் கருண் நாயர். 3 பந்துகள் இடைவெளியில் ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்புகளை அவர் தவறவிட்டார்.

முதலில் விப்ராஜ் நிகம் பந்துவீச்சில் லாங் ஆஃப் திசையில் கேட்சை விட்ட கருண் நாயர், அடுத்த ஓவர் குல்தீப் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கேட்சைத் தவறவிட்டார். இந்த கேட்ச்களை அவர் தவறவிட்டபோது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத் தேவைப்பட்ட ரன்ரேட் 12க்கும் மேல் இருந்தது. அதற்கு சில பந்துகள் முன்னர் தான் வதேரா ஆட்டமிழந்திருந்தார். அதன்பிறகு ஷ்ரேயாஸ் கொடுத்த வாய்ப்புகளையும் பிடித்திருந்தால் ஆட்டம் டெல்லியின் கைக்கு வந்திருக்கும். ஆனால், அதைத் தவறவிட்டார் கருண் நாயர்.

இந்தப் போட்டியில், கடும் வெயிலுக்கு நடுவே 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த ராகுல், அடுத்ததாக கீப்பிங் செய்தபோது பெருமளவு அவதிப்பட்டார். அதனால், 7வது ஓவரின்போது அவர் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அவருக்குப் பதிலாக மாற்று வீரராக ஃபீல்டிங் செய்துதான் அந்த இரண்டு கேட்ச்களையும் தவறவிட்டார் கருண் நாயர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு