ஜோர்டானில் இரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கேத்ரீன் ஆம்ஸ்ட்ராங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- இருந்து, வாஷிங்டன் டிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
வெள்ளிக்கிழமை ஜோர்டானில் இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லையென்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு ராணுவ வீரர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது திரும்பி விட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. சிறிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியதாகவும் சென்ட்காம் குறிப்பிட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் பற்றியும் தாக்குதல் நடைபெற்ற இடம் மற்றும் சூழல் பற்றியும் மேலதிக தகவல்களை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வழங்கவில்லை.
சனிக்கிழமை இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி இரான் மீது மீண்டும் ஒரு முறை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Amir Hossein KHORGOOEI / ISNA / AFP via Getty Images
தொடர்ந்து எட்டாவது நாளாக நடைபெறும் இந்தத் தாக்குதல்கள், "ஹோர்மூஸ் நீரிணையில் வணிக கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் இரானின் திறனை மேலும் மட்டுப்படுத்துவதற்கானது." என்று சென்ட்காம் அறிக்கை கூறுகிறது.
இந்தத் தாக்குதல்கள், "ஜோர்டானில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை விரைவாக தண்டிக்கும் நோக்கம் கொண்டவை," என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட பரஸ்பர தாக்குதல்களின் தொடர்ச்சியாக இந்தச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக இரான் அறிவித்ததைத் தொடர்ந்து இரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான முதல்கட்ட போர் நிறுத்தம் தொடங்கிய ஒரு மாதத்திற்கு உள்ளாகவே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
"அமெரிக்காவின் தொடர் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அந்நாட்டு அதிபரின் கையெழுத்து மதிப்பு மற்றும் நம்பகத்தன்மையற்றது என்கிற அடிப்படையான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது," என இரானின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி எழுத்துப்பூர்வ அறிக்கை மூலம் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா இந்த மோதலை தீவிரப்படுத்துவதாக குற்றம் சாட்டிய அவர் அதற்கு மறக்க முடியாத பாடங்கள் இரானிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
போரின் தொடக்கத்தில் அவரது தந்தை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மொஜ்தபா காமனெயி பொதுவெளியில் இன்னும் தோன்றவில்லை.
முன்னதாக தங்களது வான்பரப்பிற்குள் ஏவப்பட்ட 10 இரானிய ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், U.S. Navy via Getty Image
இந்த மாதத்தின் தொடக்கத்தில் காணாமல் போன அமெரிக்க கடற்படை விமானி ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது அமெரிக்க ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை இருமுறை உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை சென்ட்காம் வெளியிட்ட அறிக்கையில், "சென்ட்காம் மற்றும் கூட்டணி நாடுகளின் படைகள் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொண்டபோது ஜோர்டானில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு வீரரைக் காணவில்லை."
"அவர்களது குடும்பங்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக உயிரிழந்த வீரர்களின் அடையாளம் உள்பட கூடுதல் தகவல்களை, குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்த பிறகு 24 மணி நேரம் வரை சென்ட்காம் வெளியிடாது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், "வீரர்களே, உங்கள் பயணம் சிறக்கட்டும். உங்கள் தியாகம் எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது." என்றார்.
இரானிய அரசு ஊடகங்களின்படி, சனிக்கிழமை ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் தளத்தில் இரண்டு அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி தொடர்பாக தகவல்பெற சென்ட்காமை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் கூடுதல் தகவல்கள் எதையும் சென்ட்காம் வழங்கவில்லை.
மறுபுறம் சனிக்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ளவர்கள் "அதிக எச்சரிக்கையுடன்" செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, "முக்கியமான தகவல்களுக்குச் செய்தியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" எனவும் அந்த அறிவிப்பு வலியுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images
"மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றத்தால், பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளது. எதிர்பாராத விதமாக நிலைமை மோசமடையவும் வாய்ப்புள்ளது." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவும் இரானும் முதல்கட்ட ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. ஆனால் ஜூலை 8-ஆம் தேதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்ததால் சில வாரங்களுக்கு உள்ளாகவே ஒப்பந்தம் சீர்குலைந்தது.
கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்க தாக்குதல்களால் குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. இவற்றில் பெரும் அளவிலான உயிரிழப்புகள் இரான் மற்றும் லெபனானில் நிகழ்ந்துள்ளன.
ராணுவ இலக்குகளைப் பொருத்தவரை, சமீப நாட்களில் முக்கியமான உள்கட்டமைப்புகளை இரான் மற்றும் அமெரிக்கா என இரு தரப்பும் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரத்தில் பாலங்கள், ஒரு ரயில் நிலையம் மற்றும் ஒரு விமான நிலையத்தை அமெரிக்கா தாக்கியதாக இரான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுக்கிறது. ராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கியதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. ஆனால் இரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் பாலம் ஒன்று தாக்கப்பட்டதை பிபிசி வெரிஃபை உறுதி செய்கிறது.
கடந்த செவ்வாய்கிழமை பேசிய டிரம்ப், இரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்பவில்லையென்றால் அடுத்த வாரத்தில் அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் தாக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
இதற்கிடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை இரான் வேண்டுமென்றே இலக்கு வைப்பதாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) தெரிவிக்கிறது. அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் வளைகுடா கூட்டாளிகளை இலக்கு வைத்ததாக இரான் கூறிய நிலையில், ஒரு மின் நிலையம் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாக குவைத் குற்றம்சாட்டியுள்ளது.
சௌதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஒமனைப் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்தி ஜிசிசியை தலைமை தாங்கும் ஜாசிம் முகமது அல்புதைவி கூறுகையில், இத்தகைய செயல்கள் "போர் குற்றங்களுக்கு" நிகரானவை என்றார்.
சர்வதேச சட்டத்தின்படி, பொதுமக்கள் அல்லது பொதுமக்கள் வசிக்கும் இடங்களைத் தாக்குவது சட்டவிரோதமானது. எனினும் சில சந்தர்ப்பங்களில் பாலம் அல்லது மின் நிலையம் போன்ற பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் எதிராளியின் போர் முயற்சிக்காக பயன்படுத்தப்பட்டால் அவை பாதுகாப்பை இழக்கின்றன.
இந்த வாரம் இரானிய துறைமுகங்களின் முற்றுகையை டிரம்ப் மீண்டும் அமல்படுத்தினார். அதன் கீழ் சனிக்கிழமை வரை ஐந்து கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஒரு கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதாகவும் சென்ட்காம் தெரிவிக்கிறது.
இதற்கிடையே ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக இரான் அறிவித்தது. இதன்மூலம் உலகின் எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஒரு முக்கியமான கடல்வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும் அனைத்துக் கப்பல்களும், அமெரிக்காவின் கூட்டாளிகள் உள்பட 20% கட்டணம் செலுத்த வேண்டும் என திங்களன்று கூறிய டிரம்ப் பின்னர் அந்த முன்மொழிவை முழுவதுமாக கைவிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























