டிரம்ப் புதிய அச்சுறுத்தல் - இரான் பேச்சுவார்த்தைக்கு வருமா?

பட மூலாதாரம், Reuters
இரான் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால், குண்டுவீச்சு நடத்த வேண்டிய நிலை வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்புவதைத் தவிர இரானுக்கு வேறு வழியில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி-க்கு அளித்த நேர்காணலில், அமெரிக்கா இறுதியில் "ஒரு சிறந்த ஒப்பந்தத்தைப் பெறும்" என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஒன்றும் "மிகவும் இனிமையானவர்களுடன் பேசிக் கொண்டிருக்கவில்லை" ஆனால் அதை "வெற்றிகரமாகச்" செய்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்கக் கடற்படை முற்றுகையை "பிரம்மாண்டமான வெற்றி" என்றும் அவர் அழைத்தார்.
பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைவது போல் தெரிந்தால் போர் நிறுத்தத்தை நீட்டிப்பீர்களா என்று கேட்டதற்கு, அமெரிக்க அதிபர், "நான் அதை செய்ய விருப்பமில்லை" என்று பதிலளித்தார்.
ஒப்பந்தத்தை எட்டுவதற்கு "அதிக நேரமில்லை" என்றும், அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டினால் இரான் "மிகவும் நல்ல நிலைக்கு" வர முடியும் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Reuters
புதன்கிழமை முடிவடைய உள்ள போர் நிறுத்தம்
கடந்த 48 மணிநேரம் ஒரு ரோலர்-கோஸ்டர் பயணம் போலத் தத்தளிப்பாக இருந்தது. அமெரிக்க மற்றும் இரானிய தூதர்கள் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளைச் சந்தித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த செரீனா ஹோட்டலைச் சுற்றியுள்ள தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள கட்டடங்களில் வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பேச்சுக்கள் எழுகின்றன.
மீண்டும் வான்ஸ் மற்றும் காலிபாஃப் சந்திப்பார்களா? அல்லது சமூக ஊடகப் பதிவில் அவரே குறிப்பிட்டது போல, அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக வருவாரா?
வெளிப்படையாகப் பார்த்தால், அறிகுறிகள் அவ்வளவு நன்றாகத் தெரியவில்லை. ஆனால் எந்தத் தரப்பும் இஸ்லாமாபாத்திற்கு வந்துவிட்டு, இந்த நுணுக்கமான ராஜதந்திரச் செயல்முறை தங்கள் கண்ணெதிரேயே சிதைந்து போவதை விரும்பவில்லை. தற்போது நடந்து வரும் பரபரப்பான தொடர்புகள், திரைக்குப் பின்னால் ஏதோ ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டுகின்றன.
இரு தரப்பும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தாலும், இருவருமே அதைத் தங்கள் வெற்றியாகக் காட்டிக்கொள்ளக் கூடிய ஒன்றாக அது இருக்கலாம்.
இரண்டு வார கால போர் நிறுத்தம் புதன்கிழமை முடிவடைய உள்ள நிலையில், ஒர் ஒப்பந்தம் எட்டப்பட்டால் அது பேச்சுவார்த்தைக்குக் கூடுதல் கால அவகாசத்தையாவது வழங்கும். இரான் மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர கடற்படை முற்றுகைகள் நீக்கப்படுவதை நாம் பார்க்க முடியுமா? அது ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































