You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எம்.ஜி.ஆர் – விஜய்: வெவ்வேறு வழிகளில் சென்ற இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ராமசந்திரனைப் போலவே கட்சி ஆரம்பித்த முதல் பொது தேர்தலிலே வெற்றி பெற்றிருக்கிறார் விஜய்.
அரசியலில் எம்.ஜி.ஆரை தனக்கு ஆதர்சமாக கட்டமைத்திருக்கிறார் விஜய். திருச்சி கிழக்கில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பரப்புரையை விஜய் தொடங்கினார்.
மதுரை மாநாட்டில் பேசிய விஜய் சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர் தனக்கு தலைவர் என்றார்.
திரை உலகில் இருந்து பலரும் அரசியலுக்கு வந்திருந்தாலும் எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவைத் தொடர்ந்து பெரிய தேர்தல் வெற்றி விஜய்க்கு மட்டுமே சாத்தியமாகியுள்ளது.
எம்.ஜி.ஆர் - விஜய் இருவருக்கும் இடையேயான ஒப்பீடு தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்றாலும் அதில் பரந்துபட்ட வித்தியாசங்களும் இருக்கவே செய்கின்றன.
எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே சுமார் 20 ஆண்டுகளாக அரசியலில் இருந்தவர். காங்கிரஸில் தொடங்கி திமுகவில் பயணித்து எம்.எல்.சி மற்றும் எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார்.
திமுகவில் பொருளாளராக இருந்தபோது அக்கட்சியிலிருந்து பிரிந்து அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். 1977 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்கி அதில் அதிமுக வெற்றியும் பெற்றிருந்தது.
ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கட்சியைத் தொடங்கியிருந்தாலும் அந்த தேர்தலில் விஜயின் கட்சி போட்டியிடவில்லை.
தமிழ்நாட்டில் நடைபெற்ற இரண்டு முக்கியமான தேர்தல்கள் என 1967 மற்றும் 1977 சட்டப்பேரவைத் தேர்தல்களைக் குறிப்பிட்ட விஜய் 2026 அதைப் போலவே அமையும் என்று பேசியிருந்தார்.
"அந்த இரண்டு தேர்தல்களிலும் ஏற்கெனவே இருந்தவர்களின் அதிகாரப் பலம் மற்றும் அசூர பலத்தை எதிர்த்துதான் புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள்," என்று விஜய் தெரிவித்திருந்தார்.
1967 தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து திமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது, 1977-இல் திமுகவை எதிர்த்து அதிமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது.
எம்.ஜி.ஆர் சந்தித்த ஆரம்பகால தேர்தல்கள்
கடந்த 1972-இல் அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆருக்கு முதல் தேர்தல் சவால் இடைத்தேர்தல் உருவில் வந்தது. 1973-ஆம் ஆண்டு அப்போதைய திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த ராஜாங்கத்தின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.
ஆறு மாத காலமே ஆன அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அதிமுகவின் மாயத்தேவர் அக்கட்சிக்கு முதல் தேர்தல் வெற்றியை பரிசளித்தார்.
அதன் பிறகு 1974-இல் கோவை (மேற்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வென்றது.
அதனைத் தொடர்ந்து 1977 தமிழ்நாடு சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்திருந்தது .
விஜய் தவிர்த்த தேர்தல்கள்
2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்குவதாக அறிவித்தார் விஜய். அப்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லையென்றும் விஜய் கூறியிருந்தார்.
"2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு," என அறிக்கையின் மூலம் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை.
"முரண்பட்ட தீர்ப்பு"
"எம்.ஜி,ஆரின் அரசியல் அனுபவம் அவரை உடனடியாக தேர்தலில் போட்டியிட வைத்தது. விஜயின் அனுபவமின்மை அவரைப் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஆனால் இருவர் எடுத்த முடிவும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது," என்கிறார் அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான ராமு மணிவண்ணன்.
"இடைத்தேர்தல் வெற்றிகள் எம்.ஜி.ஆருக்கு உந்துதலை வழங்கியது. ஆனால் ஆரம்பத்தில் விஜயிடம் கட்சிக் கட்டமைப்போ அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளோ இல்லை. எனவே சில பலவீனங்கள் வெளிப்பட்டிருக்கலாம். நேரடியாக பொதுத் தேர்தலைச் சந்தித்தது ஒரு விதத்தில் தவெகவிற்கு ஆதரவாக அமைந்தது," என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை முடிவுகள் ஒரு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதாகக் கூறுகிறார் ராமு மணிவண்ணன்.
"சினிமாவிலிருந்து வந்தார்கள் என்பதைத் தவிர அவர்களிடம் பொதுவான அம்சம் எதுவும் இல்லை. அரசியல், சினிமா என இரண்டிலும் எம்.ஜி.ஆர் என்பது ஒரு வெற்றிகரமான முகம். அவருக்குப் பிறகு வந்த அனைவருமே அதனுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முயன்றனர்.
எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வெற்றி விஜய்க்கு கிடைக்கவில்லை என்கிறார் ராமு மணிவண்ணன்.
"1977 தேர்தலில் பலமுனை போட்டி நிலவியது. அப்போது தேசிய கட்சிகள் வலுவாக இருந்தன. அந்தச் சூழலிலும் எம்.ஜி.ஆரால் பெரும்பான்மை பெற முடிந்தது. 1977 தேர்தலுக்குப் பிறகு தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் வலுவிழந்தன, அவர்களின் தனித்த செல்வாக்கு சரிந்தது."
"ஆனால் தற்போது திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாக சரியவில்லை. இரண்டு கட்சிகளுமே வலுவான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தில் உள்ளன. 1977 தமிழ்நாட்டை திராவிட கட்சிகளின் இரு துருவ அரசியலாக மாற்றியது, 2026 அந்த இரு துருவ அரசியலுக்கு சவால்விடுத்துள்ளது. இந்த முடிவுகளை ஒரு மாற்றம் என்பதைவிட யதார்த்தத்தின் சுய பரிசோதனை என்றே சொல்லலாம்." எனத் தெரிவித்தார்.
'ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்'
எம்.ஜி.ஆருக்கும் விஜய்க்கும் சில ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் இருக்கின்றன என்கிறார் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா பற்றிய புத்தகங்களின் எழுத்தாளர் ஆர்.கண்ணன்.
"ரசிகர் மன்றத்தின் பலம் என்பது எம்.ஜி.ஆருக்கும் விஜய்க்கும் இருக்கின்ற ஒற்றுமை. அதே போல அவர்களின் பிரசாரங்களின் தொனியும் மொழியும் எளிய மக்களை எளிதில் சென்றடையக்கூடிய அவர்களால் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்தது. திமுக எதிர்ப்பு என்பதை மையப்படுத்தி தனது அரசியலை எம்.ஜி.ஆர் மேற்கொண்டார், ஜெயலலிதாவும் அதையே தொடர்ந்தார். தற்போது விஜயும் அதையே செய்தார்," என்று அவர் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆருக்கு கட்சி பலம் இருந்தது எனக் கூறும் ஆர்.கண்ணன், விஜய்க்கு அது இல்லை எனத் தெரிவிக்கிறார். "திமுகவின் வளர்ச்சியில் எம்.ஜி.ஆருக்கும் பங்கு இருக்கிறது. தனிக்கட்சி தொடங்கியபோது அவருக்கும் சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அதனை நிரூபித்தார். அத்தகைய கட்சி கட்டமைப்பு மற்றும் அரசியல் அனுபவம் எதுவும் இல்லாமல் விஜய் இதைச் சாதித்திருப்பது இந்த வெற்றியை முக்கியமானதாக்குகிறது." என்றார்.
சமூக ஊடகம் விஜயின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது எனக் குறிப்பிடும் அவர், "60 ஆண்டுகால இரு துருவ அரசியலால் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். மூன்றாவது தேர்வுக்கான தேடல் எப்போதுமே தமிழ்நாட்டில் இருந்துள்ளது. தற்போது விஜய் மற்றும் தவெக மூலம் ஒரு தெளிவான தேர்வு அவர்கள் முன் இருந்துள்ளது. அனுபவம் என்பது முக்கியமான காரணியாக இல்லை."
"அதோடு தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளின் ஆட்சி முறை, கூடுதலாக சமூக ஊடகத்தின் பலமும் சேர்ந்தது. எம்.ஜி.ஆர் முதல்முறை சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தபோது நான்கு முனை போட்டி நிலவியது. எம்.ஜி.ஆர் மக்களை நேரில் சென்று சந்திக்க வேண்டியிருந்தது, இன்று விஜய்க்கு அதற்கான தேவையில்லை. சமூக ஊடகம் என்கிற ஒரு அம்சத்தால் எம்.ஜி.ஆருக்கு கடினமாக இருந்த தேர்தல் அரசியல், விஜய்க்கு எளிதாக அமைந்துவிட்டது." என்றும் தெரிவித்தார்.
"விஜய்க்கு சாதகமாக அமைந்த அம்சங்கள்"
விஜய் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தன்னுடைய படங்களில் அரசியலைத் தவிர்த்து வந்ததாகக் கூறுகிறார் காமராஜர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் கலாசார ஆய்வுகள் துறையின் தலைவரும் பேராசியருமான தர்மராஜ்.
"எம்.ஜி.ஆர் சினிமாவை தனது அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் விஜய் முழுக்க முழுக்க சினிமாவால் உருவாக்கப்பட்டவர். எம்.ஜி.ஆர் தனது படங்களில் எளிய மக்களுக்கு ஆதரவான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். விஜய் குடும்ப ரசிகர்களைக் கவரும் கதைகளையே தேர்வு செய்து வந்தார். சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் கூட்டத்தை இழுக்கும் கவர்ச்சி இருவரிடமும் இருந்தது. ஆனால் விஜய் தன்னை ஒரு சித்தாந்தத்தோடு இணைத்துக் கொள்ளவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமூக ஊடகம் என்பது ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையை சினிமா, தொலைக்காட்சி என்பதைத் தாண்டி பரவலாக்கியது. அதே வேளையில் அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரு பெரும் தலைமை இல்லாத வெற்றிடம் உருவானது. இங்கு தான் விஜயின் வருகை நடக்கிறது. விஜய் வந்தால் ஏற்பாடு இல்லாமலே கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டம் எந்த அளவிற்கு வாக்குகளாக மாறும் என்கிற கேள்வி இருந்தது. தேர்தல் முடிவுகள் அதனை மாற்றியிருக்கின்றன. சமூக ஊடகத்தின் எழுச்சி, அரசியல் வெற்றிடம், மாற்றத்திற்கான தேடல் உள்ளிட்ட அம்சங்கள் விஜய்க்கு சாதகமாக அமைந்தன." என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு