You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாக உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார், ஆனால் துல்லியமான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இரான் கூறுகிறது.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் எட்டப்பட்டவுடன், முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' "அனைவருக்கும் திறக்கப்படும்" என்று தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானும், இந்த ஒப்பந்தம் 24 மணி நேரத்திற்குள் இறுதி செய்யப்பட "அதிக வாய்ப்புள்ளது" என சனிக்கிழமையன்று தெரிவித்திருந்தது. "மின்னணு முறையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான ஆயத்தங்களை தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும்" பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்த ஒப்பந்தம் கையொப்பமாவது தொடர்பான காலக்கெடு குறித்து சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிடுவதற்கு முன்னதாக, இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி இந்த காலக்கெடு குறித்து எச்சரிக்கையுடன் பேசினார்.
"புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் சரியான தேதி என்ன என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் அது நாளை (ஞாயிற்றுக்கிழமை) இருக்காது" என்று கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகித்த கத்தார் நாட்டைச் சேர்ந்த ஒரு தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமையன்று தெஹ்ரானுக்கு வந்தடைந்ததாக இரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வருகையானது இரான் கையெழுத்திடவிருக்கும் ஒப்பந்தத்தின் கால அட்டவணையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை.
சனிக்கிழமையன்று 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் டிரம்ப் எழுதிய பதிவில்: "ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது, அது கையெழுத்தான உடனே, ஹோர்முஸ் நீரிணை அனைவருக்கும் திறக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைக் குறிப்பிடும் வகையில் பேசிய டிரம்ப், "சரியான நேரத்தில், அனைத்தும் அமைதியடைந்த பிறகு, நாங்கள் உள்ளே சென்று அணு துகள்களை கைப்பற்றுவோம்" என்றும், பின்னர் அது அழிக்கப்படும் என்றும் கூறினார்.
இரான் அணு குண்டை தயாரிக்க முயல்வதாக மேற்கத்திய நாடுகள் பல தசாப்தங்களாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், தனது அணுசக்தித் திட்டம் மின்சாரம் தயாரிப்பதற்கும் ஆராய்ச்சி நோக்கங்களுக்குமான அமைதியான நோக்கங்களைக் கொண்டது என்று கூறி இரான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
விவகாரங்கள் "விரைவாகவும், எளிதாகவும், சுமுகமாகவும்" நடைபெறாவிட்டால், அமெரிக்காவிடம் "இறுதி மாற்று வழி உள்ளது, அதை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டியிருக்காது என்று நம்புவதாகவும் டிரம்ப் எச்சரித்தார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறுகையில், "நாம் முன்னெப்போதையும் விட இப்போது அமைதி ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம்" என்றார்.
"அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உடனடியாக அமைதி ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திடுவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது, அதைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்" என்று ஷெரீப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் லெபனானில் உள்ள ஹெஸ்பொலா அமைப்பிற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
இரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள், இரானுக்கான பொருளாதார நன்மைகள் என்பது, அந்நாடு தனது கடமைகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தே அமையும் என்று கூறினர்.
சமீபத்திய மாதங்களில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பலமுறை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இறுதியில் எதுவும் நடைபெறவில்லை.
கடந்த பிப்ரவரி 28 அன்று இரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது, இது இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்த இரானைத் தூண்டியது - அத்துடன் உலக எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணையை' மூடவும் வழிவகுத்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த போதிலும், அமெரிக்காவும் இரானும் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹெஸ்பொலாவுக்கும் இடையிலான மோதல் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்காது என்று அமெரிக்காவின் முந்தைய அறிக்கைகள் தெரிவித்தன. ஆனால் இரான் அதைச் சேர்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அங்கம் வகிக்கவில்லை. மேலும் வடக்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஹெஸ்பொலா மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தப்போவதாகவும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது இரண்டு பதவிக்காலங்களிலும் பொதுவாக இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராகவே இருந்துள்ளார். இருப்பினும் மத்திய கிழக்கில் நீண்டகாலம் நீடிக்கக்கூடியதும் அதிக செலவு பிடிக்கக்கூடியதுமான மோதலில் இருந்து விலகிச் செல்லும் அவரது முயற்சிகளுக்கு, லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் ராணுவ நடவடிக்கை முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று, லெபனான் தலைநகரில் ஹெஸ்பொலாவின் கோட்டையாகக் கருதப்படும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான 'தாஹியே' மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து பெரும் புகை மண்டலம் எழுவதைக் காட்டும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய எல்லைக்குள் ஹெஸ்பொலா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதைத் டிரம்ப் தடுத்து நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத் தொடக்கத்தில், லெபனான் தலைநகர் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் முறையாக இரான் மீதும் இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த இஸ்ரேலியத் தாக்குதல்கள், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இரானின் திட்டங்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு