காணொளி: இரானுடன் ஒப்பந்தம் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
இரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். முன்னதாக, அமெரிக்கா இரானை கடுமையாக தாக்கும் என தெரிவித்திருந்த டிரம்ப், பின்னர் தாக்குதல்களை ரத்து செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால், இரான் தரப்போ ஒப்பந்தம் குறித்த தகவல்கள் ஊக அடிப்படையிலானவை என்றும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறுகிறது. என்ன நடக்கிறது?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28ஆம் தேதி, இரானில் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க கூட்டாளி நாடுகள் மீதும் இரான் தாக்குதல் நடத்தியது. அதோடு, ஹோர்மூஸ் நீரிணையையும் கட்டுப்படுத்த தொடங்கியது.
தற்காலிக போர் நிறுத்தம் ஏப்ரல் மாதத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் இரான் இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடக்கின்றன. இந்த வாரத்தில் மட்டும், இரண்டு முறை தாக்குதல்கள் நடந்தன. அதே நேரம், இரானுடன் ஒப்பந்தம் எட்டுவது குறித்தும் டிரம்ப் பேசி வருகிறார்.
இந்த நிலையில் இரானுடன் நடைபெற்றுவரும் போருக்கு முடிவு காணும் ஒப்பந்தம் அருகில் உள்ளதாக வியாழன் அன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாது என்பதை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை எட்ட நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் முழு நோக்கமும் அதுதான். எனவே இது மிக முக்கியமான விஷயம் என கூறிய டிரம்ப், ஆவணங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு கையெழுத்திடும் நிகழ்வு ஐரோப்பாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
அதை விரைந்து செய்ய வேண்டும் என கூறிய டிரம்ப், ஒப்பந்தம் கையெழுத்தான உடனே ஹோர்மூஸ் திறக்கப்படும் என்றும் கூறினார்.
ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் ஊகமானவை என்றும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் இரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதாக தெரிவித்த டிரம்ப், இந்த விஷயத்தில் மொத்த மத்திய கிழக்கும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஒரு தரப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுதல், செறிவூட்டலுக்கான உட்கட்டமைப்பை அகற்றுதல், ஏவுகணை உற்பத்திக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஆயுத குழுக்களுக்கு இரான் அளித்து வரும் ஆதரவை நிறுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான டிரம்பின் உறுதிப்பாட்டை நெதன்யாகு பாராட்டினார் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த வரைவின் பெரும்பகுதி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்ட போதிலும், அமெரிக்கா அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைத்ததோடு புதிய கோரிக்கைகளையும் சேர்த்துள்ளதாக இஸ்மாயில் பகாயி கூறி உள்ளார். அதே நேரம், தனது அடிப்படை கொள்கைகள் அல்லது வரம்புகளில் இரான் சமரசம் செய்யாது என்றும் அவர் கூறி உள்ளார்.
இதற்கு முன்னரும் ஒப்பந்தத்தை எட்டும் நிலையை நெருங்கிவிட்டதாக டிரம்ப் சிலமுறை கூறி இருக்கிறார். பின்னர் மே 27ஆம் தேதி ஒப்பந்தத்தின் விதிகள் குறித்து தான் திருப்தியடைவில்லை என டிரம்ப் கூறினார். அதன் பிறகும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன.
சமீபத்திய இந்த அறிவிப்பு முன்னதாக, இரவு இரான் மீது அமெரிக்கா மிக கடுமையான தாக்குதலை நடத்தும் என்று டிரம்ப் கூறியிருந்தார். அதோடு, எதிர்காலத்தில் கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உட்கட்டமைப்பு மையங்களை கைப்பற்ற போவதாகவும் எச்சரித்திருந்தார்.
மேலும் வெனிசுவேலாவில் இருப்பதை போல, எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வோம் என்றும் டிரம்ப் கூறி இருந்தார்..
கார்க் தீவு இரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாக உள்ளது. அந்நாட்டின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் இத்தீவு வழியாகவே நடைபெறுகிறது.
இரானுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடந்தால் முன்பை விட கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இரானும் எச்சரித்திருந்தது.
திங்கட்கிழமை வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்திக்கொண்டன.
தெற்கு ஈரானில் உள்ள ராணுவம், கண்காணிப்பு மற்றும் ரேடார் தளங்களை குறிவைத்துத் தொடர் தாக்குதல்களை நடத்தியதாக மத்திய கமாண்ட் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கூறியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



