'புவிக்கு ஒரு நியாயம், ஷமிக்கு ஒரு நியாயமா?' - இந்திய அணித்தேர்வு குறித்து கேள்வி எழுப்பும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தினேஷ் குமார்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறாதது பேசுபொருளாக மாறியுள்ளது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷமிக்கு, அணியில் இடம் கிடைக்கலாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மெட்டுகளுக்கும் பரிசீலிக்கப்படவே இல்லை என்பது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. உடற்தகுதி, ஃபார்மை நிரூபித்தும் ஷமி ஏன் புறக்கணிக்கப்படுகிறார்? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
கிரிக்கெட்டைப் பொருத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு பெரும்பாலும் வயது பெரிய தடையாக இருந்ததில்லை. 40 வயதில்தான் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வை அறிவித்தார். 35 வயதைக் கடந்த போதும் நட்சத்திர பேட்டர்கள் ரோஹித் சர்மா (39), கோலி (37) ஆகியோர் வயதைக் காரணம் காட்டிப் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த நிலை இல்லை என்பதே கடந்த கால வரலாறாக இருக்கிறது.
பந்துவீச்சாளர்களுக்கு பாரபட்சமா?
இங்கிலாந்து அணிக்காக 704 விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயது வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர். ஆஸ்திரேலிய ஜாம்பவானான வேகப்பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி 38 வயதில்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அப்படியிருக்க இந்தியாவில் வேகப்பந்து வீச்சில் சாதித்த நட்சத்திரங்களில் ஒருவரான ஷமி (36) உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய தேசிய அணியில் அவருக்கு சமீப காலமாக இடம் கிடைக்கவில்லை.
அனுபவம், விக்கெட் வீழ்த்தும் திறன் மட்டுமின்றி நியூசிலாந்து சூழலுக்கு ஏற்ற பொருத்தமான வேகப்பந்து வீச்சாளர் ஷமி. நியூசிலாந்துக்கு எதிராக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 21.15 என்ற பிரமாதமான சராசரியில் 38 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 12 போட்டிகளில் 22.2 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images
ஷமி ஏன் முக்கியமானவர்?
சிடுக்கில்லாத ஓட்டம், பந்தை விடுவிக்கும் போது தையலை நிமிர்ந்தபடி வைத்திருக்கும் நுட்பம், ஆடுவதா, விடுவதா என்ற குழப்பத்தை பேட்ஸ்மேனுக்குள் விதைக்கும் லெந்த் என ஷமியைக் கொண்டாட நிறைய விஷயங்கள் உண்டு. அவரை வெறுமனே ஸ்விங் பவுலர் என்றோ சீம் பவுலர் என்றோ வரையறுப்பது அவருடைய திறமையைக் குறைத்து மதிப்பிடுவதற்குச் சமம்.
ஷமியின் பந்துகள் காற்றிலோ அல்லது பிட்ச்சான பிறகோ அதிகளவுக்கு விலக்கமடைவது இல்லை. பேட்டர்கள் எதிர்பார்க்கும் பாதையில் இருந்து கொஞ்சமே கொஞ்சமாக விலகிச் செல்லும்படி பந்தை வீசுவதில் தான் ஷமியின் வெற்றி இருக்கிறது. தாறுமாறான ஸ்விங்கைக் கூட கணித்து விளையாடி விடலாம். ஆனால், காற்றிலோ அல்லது பிட்ச்சில் பட்டவுடனே கூர்மையாக விலக்கமடையும் பந்தைக் கணித்து விளையாடுவது மிகவும் கடினமானது.
'வேட்டைக்குச் செல்லும் சிறுத்தை'
கடந்த காலத்தில் ஷமியின் வேகப்பந்து வீச்சை தலைசிறந்த பேட்டர்கள் பலர் உச்சிமுகர்ந்து பாராட்டியுள்ளனர். 2023 உலகக்கோப்பையின் போது, "ஷமியின் பந்துவீச்சு ஆக்சன் வேட்டைக்குச் செல்லும் சிறுத்தை போல் உள்ளது" என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்று ஷமி குறித்து தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் உயர்வாக மதிப்பிடுகிறார். 2021 இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக செஞ்சூரியன் டெஸ்டில் ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, "உலகின் சிறந்த மூன்று பந்துவீச்சாளர்களில் ஒருவர்" என்று அன்றைய இந்திய கேப்டன் கோலி புகழ்ந்தார்.
ஆனால், இந்தப் புகழாரங்களுக்கு சொந்தக்காரரான ஷமி, கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

பட மூலாதாரம், Francois Nel/Getty Images
'ஷமி மீது நம்பிக்கை இழந்த தேர்வாளர்கள்'
ஷமி கடைசியாக விளையாடிய டெல்லிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில், இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 35.3 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அந்தப் போட்டியில் பெங்கால் அணி பந்துவீச்சாளர்களில் அதிக ஓவர்கள் வீசி குறைவான ரன்களை விட்டுக்கொடுத்தவர் இவர்தான்.
அதேசமயம், உடற்தகுதி, நீண்ட ஸ்பெல் வீசும் திறன், பீல்டிங் போன்ற காரணிகளின் அடிப்படையில் ஷமி புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த ரஞ்சி போட்டியில் ஷமி 3 ஓவர்கள் கொண்ட ஷார்ட் ஸ்பெல்களாக மட்டுமே வீசினார் என்கிறார் மூத்த விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் ஆரணி பாசு. " ஓய்வுக்காக அடிக்கடி ஷமி ஓய்வறைக்குச் செல்கிறார். அவரது பந்துவீச்சு வேகமும் கணிசமாக குறைந்துவிட்டது." என்பது அவரது கருத்து.
"ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய போதும், முகமது ஷமியின் உடற்தகுதி மீது தேர்வாளர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் நம்பிக்கை இல்லை. நீண்ட நேரம் தொடர்ந்து பந்துவீசும் திறன் அவருக்கு இல்லை என்று அவர்கள் கருதுவதால்தான், இளம் வேகப்பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்கிறார்கள்." என்கிறார் மூத்த விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர் தேவேந்திர பாண்டே.

பட மூலாதாரம், Darrian Traynor - ICC/ICC via Getty Images
'புவிக்கு ஒரு நியாயம், ஷமிக்கு ஒரு நியாயமா?'
ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் ஸ்பெல்கள் வீசுவது ஒன்றும் தவறில்லை என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. "சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் ஸ்பெல் வீசுவது இயல்புதான்" என்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ராம்நாராயண் வெங்கட்ராமன். இவர் ஹைதராபாத் அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஷமி விஷயத்தில் தேர்வுக்குழு பாரபட்சம் காட்டுகிறது. வெயில் வாட்டி வதைக்கும் இந்தியாவில் 35 ஓவர்கள் வரை வீசும் ஷமியால் குளிர்பிரதேசமான நியூசிலாந்தில் பந்துவீச முடியாதா? தற்போது இந்திய அணியில் உள்ள எந்த வேகப்பந்து வீச்சாளரையும் ஷமியுடன் ஒப்பிட முடியாது." என்றார்.
கம்போஜ், ஆகாஷ் தீப் போன்றவர்களை விட ஷமி எந்த விதத்தில் குறைந்து போய்விட்டார்? குறைந்தபட்சம் ஒருநாள் போட்டிக்கான அணியிலாவது அவரை சேர்த்திருக்க வேண்டும். புவனேஷ்வர் குமாரை டி20 அணியில் சேர்க்கும் போது, ஷமியை சேர்ப்பதில் என்ன பிரச்னை? அவருக்கு ஒரு நியாயம், இவருக்கு ஒரு நியாயமா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
'அகர்கர் காலத்தில் ஆரம்பித்த புறக்கணிப்பு'
2023 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய தேர்வுக்குழுவினர் ஷமி மீது பாராமுகமாகவே உள்ளனர் என்று மூத்த கிரிக்கெட் எழுத்தாளர் ஆர்.மோகன் கருத்து தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " அகர்கர் தேர்வுக்குழுத் தலைவரான பிறகே ஷமி மீதான புறக்கணிப்புத் தொடங்கிவிட்டது. ஏன் ஷமி குறிவைக்கப்படுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. அகர்கருடைய பதவிக் காலத்தில் ஷமியுடன் சேர்த்து மேலும் சில மூத்த வீரர்களும் ஓரம் கட்டப்பட்டனர். இளம் வேகப்பந்து வீச்சுப் படையை கட்டமைக்கும் முயற்சியில் தேர்வுக்குழுவினர் உள்ளனர்." என்று கூறினார்.

பட மூலாதாரம், Shubhajit Roy Karmakar/NurPhoto via Getty Images
"இந்தியாவில் எந்த வேகப்பந்து வீச்சாளரும் நீண்ட காலம் விளையாடிய சரித்திரம் இல்லை. கபில்தேவ், ஜாகீர் கான் ஆகியோர் மட்டுமே கிட்டத்தட்ட 16 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட் விளையாடினர். பேட்ஸ்மேனை விட வேகப்பந்து வீச்சாளருக்குப் பணிச்சுமை அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இது முழுக்கமுழுக்கத் தேர்வுக்குழுவின் முடிவு. இதுகுறித்து மேலும் கருத்துக் கூற விரும்பவில்லை." என்றார் அவர்.
ஷமி விவகாரம் மட்டுமின்றி ஒருநாள் அணியில் இருந்து இளம் வீரர் ஜெயிஸ்வால் நீக்கப்பட்டிருப்பதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரதான தொடக்க பேட்டர் கில் விளையாடாத மூன்றாவது, நான்காவது ஒருநாள் போட்டிக்கான அணியில் கூட அவர் சேர்க்கப்படவில்லை.
'ஜெயிஸ்வாலுக்கு இழைக்கப்படும் அநீதி'
இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் ஜெயிஸ்வாலின் தன்னிம்பிக்கையை சிதைக்கிறார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாடியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், "கில் இல்லாத நிலையில் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்காவது ஜெயிஸ்வாலை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவர் ஒரு ரன் மெஷின். ஆனால், தொடர் புறக்கணிப்புகளால் டெஸ்ட் போட்டிகளிலும் அவருடைய தன்னம்பிக்கை குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது." என்றார்.
"ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடினால், அதற்குப் பின் ஜெயிஸ்வால் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதற்கு மட்டும் என்ன உத்தரவாதம்? வைபவ் சூர்யவன்ஷி வேறு இருக்கிறாரே? ஜெயிஸ்வாலுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































