பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரும் முஸ்லிம் தலைவர்கள் - பாஜகவின் பதில் என்ன?

பட மூலாதாரம், ANI
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என முஸ்லிம் மத தலைவர்கள் வைத்துள்ள கோரிக்கைக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் அந்தக் கோரிக்கையை யாருமே ஆதரிக்கவில்லை.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக பேசுகையில், "பசு நமது தாய், ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே எதையும் அறிவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை." என்றார்.
அதே வேளையில் பசுவுக்கு தேசிய விலங்கு அந்தஸ்து கொடுப்பது தொடர்பான முன்மொழிவு எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
ஹிந்து மத தலைவர் ராம்பத்ராச்சாரியா யோகி ஆதித்யநாத்தின் கருத்தை ஆதரித்து பேசியுள்ளார். பசு வதையை தடுப்பதற்கு ஒரே வழி, "ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் அடுத்த மக்களவை தேர்தலில் 370 இடங்கள் பெற வேண்டும்." என்பதே எனத் தெரிவித்துள்ளார்.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை அரசியல் மற்றும் பரப்புரை நோக்கத்துடன் வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவாதம் எப்போது தொடங்கியது?

பட மூலாதாரம், ANI
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு தான் இது தொடர்பான விவாதம் எழத் தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் முதல் முறையாக பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு மே 13-ஆம் தேதி அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார்.
அப்போது வரை மேற்கு வங்கத்தில் பசு வதை குறித்த எந்த தடையும் இல்லை. எனினும் பசுக்கள், காளைகள், எருதுகள், எருமைகள் அல்லது கன்றுகளை உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் அரசு கால்நடை மருத்துவரின் ஒப்புதல் உடனே இறைச்சிக்காக வெட்ட முடியும் என்கிற விதிகளை சுவேந்து அதிகாரி அரசு பிறப்பித்துள்ளது.
தற்போது வரை அது போல எந்த விதியும் இல்லை. பக்ரீத்துக்கு முன்பாக இத்தகைய விதியைப் பிறப்பிப்பது விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த விதிக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் முடிவு சரி தான் எனக் கூறிய நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் நிராகரித்தது.

பட மூலாதாரம், Getty Images
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள பல முஸ்லிம் மதத் தலைவர்கள் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளனர்.
ஜாமியாத் உலெமா-இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி பசுவிற்கு தேசிய விலங்கு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
"பசுவில் பெயரில் நடைபெறும் கும்பல் கொலை (mob lynching) விளையாட்டு, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, வெறுப்பு அரசியல் மற்றும் முஸ்லிம்களை அவமதிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பசுவை 'தேசிய விலங்காக' அறிவிப்பதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைப்பதோடு, எந்த மனித உயிரும் இழக்கப்படாமல் மதத்தின் பெயரில் எந்த அரசியலும் செய்யப்படாமல் இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே," என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமித் அன்சாரி இந்தக் கோரிக்கையை ஆதரித்துள்ளார். பசுவுக்கு தேசிய விலங்கு அந்தஸ்து வழங்குவது பசுவதை தொடர்பாக உள்ள சமீபத்திய மோதல்களை தீர்க்க உதவும் என்றால் அதை பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
எந்தக் குறிப்பிட்ட விலங்கையும் பலியிடுவதை இஸ்லாம் கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறும் அவர் பக்ரீத் அன்று பசுக்களை பலியிட வேண்டாம் என முஸ்லிம்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
பாஜக தலைவர்களின் மௌனம்

பட மூலாதாரம், ANI
தற்போது எந்த முக்கிய பாஜக தலைவரும் இந்தக் கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. பசு விலங்குகள் வதைக்கு எதிராக பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
எனினும் சனிக்கிழமை பிடிஐ செய்தி முகமைக்கு பேட்டி அளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அத்தகைய எந்த முன்மொழிவையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
"பல அமைப்புகள் இந்தப் பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர், அவர்கள் எம்பிக்களையும் தொடர்பு கொள்கின்றனர். மனுக்களை அளிக்கும் மக்கள் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக எந்த முன்மொழிவும் மத்திய அமைச்சரவையின் முன் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பாக மேலும் கூறிய அவர், "தற்போதைய நிலையில் மத்திய அமைச்சரவை முன்பு எந்த விவகாரமும் நிலுவையில் இல்லை. ஏதேனும் முன்மொழிவுகள் அரசு அல்லது அமைச்சரவையின் தேவை என்கிற நிலையை அடைகிறபோது நாங்கள் உங்களுக்கு தெரிவிப்போம்." என்றார்.
மேற்கு வங்க பாஜக அரசு, பசுவதையை நிர்வகிக்கும் அந்த மாநிலத்தின் 1950 சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை திருத்தும் நகர்வு குறித்து பேசிய அவர், "தனிப்பட்ட மாநிலங்கள் அவர்களின் சூழல் மற்றும் நிலையைப் பொருத்து இத்தகைய விவகாரங்களில் முடிவு எடுக்கலாம்." என்றார்.
பிஜ்னோரில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசியிருந்தார்.
"நான் தற்போது ஒரு போக்கை பார்த்து வருகிறேன். பல மௌலவிக்களும் மௌலானாக்களும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றனர். பசு எங்களின் தாய், பல பிறவிகளாக அதனுடன் எங்களுக்கு உறவு இருக்கிறது என நாங்கள் கூறி வருகிறோம்.
ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே எதையும் அறிவிக்க வேண்டுமா? இது எங்களின் கலாச்சாரம். எங்களின் தாய் மீது நாங்கள் வைத்திருக்கும் மரியாதை என்பது எங்கள் மீதே நாங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு சமமானது. பசுவை எங்களின் தாயாக கருதுகிறோம்." என்றார்.
பசு தாய் தன்னைத்தானே தேசத்தின் தாயாக அறிவித்துக் கொண்டது என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
மேலும் அவர், "பசு எங்களின் தாய், பசு தாயை விலங்கு என அழைக்கும் உங்களின் சிந்தனை தான் மிருகத்தனமானது. எங்களின் தாய் பற்றி யாருக்கும் அறிவிக்க வேண்டும் என்கிற தேவை இல்லாததைப் போலவே பசுத்தாய் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிட வேண்டிய தேவை இல்லை." என்று தெரிவித்தார்.
பசுவை தேசிய விலங்காக அறிவித்தால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், ANI
இந்திய அரசமைப்பில் தேசிய விலங்கு பற்றிய எந்த நேரடி குறிப்பும் இல்லை. ஆனால் 1972-ஆம் ஆண்டு ராயல் வங்காளப் புலியை தேசிய விலங்காக இந்திய அரசு அறிவித்தது.
அதே ஆண்டு, அரிய புலிகளை அழிவிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'புராஜக்ட் டைகர்' திட்டத்தையும் இந்திய அரசு அறிவித்தது.
காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 1972 மற்றும் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டம், 1960 ஆகிய பல சட்டங்கள் விலங்குகளுக்கு சிறப்பு முக்கியத்துவத்தை வழங்குகின்றன.
இந்திய தேசிய விலங்கான புலி மற்றும் இதர ஆபத்தில் இருக்கும் விலங்குகளின் வேட்டை மற்றும் சட்டவிரோதமாக வர்த்தகத்தை காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 1972 தடை செய்கிறது. அந்தச் சட்டத்தின் முதல் அட்டவணையில் வைக்கப்பட்டிருப்பதன் மூலம் புலிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பசு மற்றும் இதர மாட்டினங்களை தேசிய விலங்குகளாக அறிவிப்பதன் மூலம் அவை வதை செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து அவற்றின் சட்டவிரோத வர்த்தகத்தை முழுவதுமாக தடை செய்ய முடியும். ஹிந்து அமைப்புகள் மற்றும் பாஜக ஏற்கெனவே இந்தக் கோரிக்கை முன்வைத்து வருகின்றன.
எனினும், பசுவிற்கு நாட்டின் 'தேசிய விலங்கு' என்கிற அந்தஸ்து கொடுக்கப்பட்டால் அதன் பாதுகாப்பிற்கு காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 1972 போன்ற விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என சட்ட நிபுணரும் மத்திய சட்ட அமைச்சகத்தின் முன்னாள் செயலாளருமான பிகே மல்ஹோத்ரா பாஷா செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
அத்தகைய சட்டத்தை உருவாக்குவதற்கு முன்பாக அதன் காரணங்கள் மற்றும் விளைவுகளை பரிசீலிக்க வேண்டியது அவசியம் என அவர் எச்சரிக்கிறார்.
இத்தகைய சட்டத்திற்கு எந்த நடைமுறை பயன்பாடும் இருக்காது அது வெறும் 'அடையாளகரமாகவே' இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்திய சட்ட சேவையின் முன்னாள் அதிகாரியான மல்ஹோத்ரா இது தொடர்பாக மேலும் கூறுகையில், "மத்திய அரசில் உள்ள அமைப்பை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால் மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகம் அதற்கான ஆதார முகமையாக (nodal agency) இருக்கும்.
அரசமைப்பின் பிரிவு 48-இன் படி சட்டம் இயற்றுவதன் மூலம், ஏற்கெனவே பல மாநிலங்கள் பசுவதையை தடை செய்துள்ளன. சில மாநிலங்கள் "வதைக்கு தகுதியானது" என்கிற கொள்கையின் அடிப்படையில் பசுவதையை அனுமதிக்கின்றன. அதன் கீழ் வயதான பசுக்கள் மற்றும் பால் உற்பத்தி செய்யாத பசுக்கள் வதைக்கு தகுதியானது எனக் கருதப்படுகின்றன." என்றார்.
அரசமைப்பின் பிரிவு 48, "வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றைத் தற்கால அறிவியல் முறைகளில் அமைப்பதற்கு அரசு முனைந்து முயலுதல் வேண்டும்; மேலும், குறிப்பாக, பசுக்கள், கன்றுகள், பிற கறவை மற்றும் இழுவைக் கால்நடை இனங்களைப் பேணிக்காப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவற்றை வன்கொலை செய்வதைத் தடை செய்வதற்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுதல் வேண்டும்." என்று தெரிவிக்கிறது.
இறைச்சி வர்த்தகம்

பட மூலாதாரம், ANI
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி குழுமத்தின் தரவுகளின்படி இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறைச்சி ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த அமைப்பின்படி, இந்தியாவின் மிகப்பெரிய விலங்கு ஏற்றுமதியாக எருமை இறைச்சி உள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் இந்தியா 4.06 பில்லியன் டாலர் மதிப்புள்ள எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இது பால் மற்றும் கோழி ஏற்றுமதியைவிட பல மடங்கு அதிகம்.
இறைச்சி உற்பத்தி ஐந்து மாநிலங்களில் அதிகமாக இருப்பதாகவும் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அவை 57.45% பங்கு வகிப்பதாகவும் இந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
மாநில வாரியாக
- மேற்கு வங்கம் (12.62%)
- உத்தரப் பிரதேசம் (12.29%)
- மகாராஷ்டிரா (11.28%)
- தெலங்கானா (10.85%)
- ஆந்திரப் பிரதேசம் (10.41%)
பசுவதை அல்லது பசு வர்த்தகம் தொடர்பான விதிகள் மாநிலத்தைப் பொருத்து அமைகின்றன. வட கிழக்கு இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் கேரளா மாட்டினங்களின் வதையை தடை செய்யவில்லை.
மாட்டிறைச்சி ஏற்றுமதி (மாடுகள், எருதுகள் மற்றும் கன்றுகளின் இறைச்சி மற்றும் உண்ணக்கூடிய உள்ளுறுப்புகள் உட்பட) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் முற்றிலுமாகத் தடை விதித்திருந்தாலும் எருமை இறைச்சி ஏற்றுமதி தொடர்பான பல அரசியல் விவாதங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா உத்தரப் பிரதேச மக் மேளாவில் நீராடியது தொடர்பாக சர்ச்சை எழுந்திருந்தது. அப்போது பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
ஒட்டுமொத்த இறைச்சி ஏற்றுமதியில் உத்தரப் பிரதேசம், 40 சதவிகிதத்துக்கும் மேல் பங்களிப்பு செய்வதாகக் கூறிய அவர், அனைத்து ஏற்றுமதி தரவுகளும் 'எருமை இறைச்சி' என்றே பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், டிஎன்ஏ பரிசோதனை இன்றி இறைச்சி என்கிற போர்வையில் பசுக்கள் வெட்டப்பட்டு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
மாநிலங்களின் பதிவு செய்யப்பட்டுள்ள எருமைகளின் எண்ணிக்கை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சியின் அளவு ஆகியவற்றுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































