தொகுதி மறுவரையறை: ஒரே வாரத்தில் முதல்வர் விஜயின் நிலைப்பாட்டில் மாற்றமா?

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் உண்மையான நிலைபாடு என்ன என அரசியல் கட்சிகள் கேள்வி?

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், ப.சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என தெரிவித்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்பதற்கான சட்டபூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் நிலைப்பாடு என்ன என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன

ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார்

தொகுதி மறுவரையறை தீர்மானத்தில் என்ன உள்ளது?

தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

முதலமைச்சர் விஜய் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அந்தத் தீர்மானத்தில், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென்மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே, நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாநிலங்களுக்கிடையேயான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை தற்போதுள்ள நிலையிலேயே நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31வது தென்மண்டலக்குழுக் கூட்டம்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31வது தென்மண்டலக்குழுக் கூட்டம்

அமித்ஷா தலைமையிலான கூட்டத்தில் என்ன பேசினார் விஜய்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மகாபலிபுரத்தில் இன்று நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் தென்மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், "மக்கள்தொகைக் கட்டுப்பாடு, மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தென்மாநிலங்கள் முன்னணியில் திகழ்ந்துள்ளன. இந்தச் சாதனைகள் தேசிய முன்னுரிமைகளின் வெற்றிகரமான செயலாக்கத்தையே பிரதிபலிக்கின்றனவே தவிர, பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான காரணமாக இருக்கக் கூடாது" என்று கூறினார்.

"தேசிய இலக்குகளை நிறைவேற்றியதற்காக எந்தவொரு மாநிலமும் பொதுக் கொள்கைகளால் பாதிக்கப்படக் கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் எந்தவொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்பதற்கான தெளிவான சட்டபூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று கோரினார்.

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

''காங்கிரஸ் கட்சிக்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜயின் உண்மையான நிலைப்பாடு என்ன?'' என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனால், முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் கட்சிக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார். அமித் ஷாவை பார்த்ததும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார்" என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் உண்மையான நிலைப்பாடு என்ன என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், '’மேகேதாட்டு கட்டப்படுவதால் தமிழ்நாட்டிற்கு அதிக தண்ணீர் தர முடியும் என்று சொல்லும் கர்நாடக முதலமைச்சரை கண்டிக்காமல், நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று சொல்கிறார்" என குறிப்பிட்டார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒரே வாரத்தில் நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரணாக இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், "தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அது குறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதலமைச்சரின் இன்றைய உரையின் மூலமாக அம்பலமாகியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை முதலமைச்சர் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசியலில் என்றும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இங்கே ஒரு நிலைப்பாடு, அங்கே ஒரு நிலைப்பாடு என்றால் மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள்" என்று கூறினார்.

'தவெக நிலைபாடு மாறியுள்ளது... ஆனால் தவறில்லை'

பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்
படக்குறிப்பு, பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்

"முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை குறித்து பேசியது தவறில்லை. ஆனால், அவர் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார்" என்றார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும். மாறாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தை தவெக கூட்டியது தவறு" என்று கூறினார்.

அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது என்ற திமுகவின் கருத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

அதேநேரம், இந்த விவகாரத்தில் திமுக செய்ததும் தவறு என்று அவர் குறிப்பிட்டார்.

"தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அப்படியே ஆதரிக்காமல், அதில் சில விவரங்களை இணைத்து நிறைவேற்றக் கோரியிருக்கலாம்" என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்னைகள் என்று வரும்போது, தேசியக் கட்சிகளை மாநிலக் கட்சிகள் நம்பக் கூடாது என்றும் கூறினார்.

தவெக பதில் என்ன?

தமிழ்நாடு சிறுபாண்மையினர் ஆணைய தலைவரும், தவெக தேசிய செய்தித்தொடர்பாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு

பட மூலாதாரம், FelixGerald/X

படக்குறிப்பு, தமிழ்நாடு சிறுபாண்மையினர் ஆணைய தலைவரும், தவெக தேசிய செய்தித்தொடர்பாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு

தவெகவின் நிலைப்பாட்டில் இருந்து சிறிதளவும் மாறவில்லை என்கிறார் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார்.

தென்மண்டலக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமாரிடம், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "எங்கள் நிலைப்பாட்டில் சிறிதளவும் மாற்றமில்லை. நாடாளுமன்றத்தில் 543 இடங்களையும், தமிழ்நாட்டில் 39 இடங்களையும் நிரந்தரமாக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவரும், தவெக தேசிய செய்தித் தொடர்பாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, "முதலமைச்சர் இன்று ஒட்டுமொத்த தென்மாநிலங்களுக்கான பிரதிநிதியாகவே பேசியிருக்கிறார். ஆனால், திமுக இதில் தவறான பரப்புரை செய்து வருகிறது" என்று கூறினார்.

மேகேதாட்டு குறித்து டி.கே. சிவக்குமார் பேசியதற்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "மேகேதாட்டு விவகாரத்தில் இதுவரை எந்த ஒப்புதலும் கர்நாடகாவுக்கு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் அவர்களால் ஒரு செங்கலையும் எடுத்து வைக்க முடியாது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு