கோலி அடித்த பந்தை சுப்மன் கில் பிடித்த 16வது ஓவரில் என்ன நடந்தது? இது ஏன் பேசுபொருளானது?

பட மூலாதாரம், Reuters
ஞாயிற்றுக்கிழமையன்று (மே 31) நடைபெற்ற 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இப்போட்டியில், ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, தான் ஒரு 'சேஸ் மாஸ்டர்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து, அவர் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
விராட் கோலிக்கு 'ஆட்ட நாயகன்' விருதைப் பெற்றுத் தந்த இந்த சிறப்பான ஆட்டத்துடன் சேர்த்து, மற்றொரு காரணத்திற்காகவும் அவர் தற்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். களத்தில் அவருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் இடையே ஏற்பட்ட வாதம்தான் அதற்கு காரணம்.
பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, இருபது ஓவர்களில் மொத்தம் 155 ரன்களைச் சேர்த்திருந்தது. அடுத்து ஆடிய ஆர்சிபி அணியின் 16-வது ஓவரில் களத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியது.
விராட் கோலியும் சுப்மன் கில்லும் பரஸ்பரம் பேசிக்கொண்டதை கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் நேரலையில் பார்த்தார்கள்.

பட மூலாதாரம், ANI
கோலிக்கும் கில்லுக்கும் இடையே நடந்தது என்ன?
குஜராத் டைட்டன்ஸ் அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, அடுத்து ஆர்சிபி அணி ஆடியது. போட்டியின் 16-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டது, கோலியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றியது.
கோலி 63 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, குஜராத் டைடன்ஸ் அணியின் அர்ஷத் கானின் பந்தில் ஒரு ஷாட் அடித்தார். காற்றில் பறந்த அந்தப் பந்தை, சுப்மன் கில் முன்னோக்கி டைவ் அடித்து, தரையைத் தொடும் தருவாயில் இருந்தபோது கச்சிதமாகப் பிடித்தார்.
பந்து கையில் சிக்கிய அடுத்த கணமே, விராட் கோலி அவுட்டாகிவிட்டார் என சுப்மன் கில்லும் குஜராத் டைட்டன்ஸ் வீரர்களும் கொண்டாடத் தொடங்கினர்.
மறுபுறம், விராட் கோலி எதிர்முனையில் நின்றிருந்த ஜித்தேஷ் சர்மாவிடம் சென்று, தான் அவுட்டா இல்லையா என்று கேட்பது போல அந்த வீடியோவில் காட்சிகள் இருந்தன.
அம்பயர் நிதின் மேனனும் அதற்குள் 'அவுட்' என்று அறிவித்தார். ஆனால், கோலி இந்த முடிவில் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. பின்னர், கள நடுவர்கள் முடிவை டிவி நடுவரின் பரிசீலனைக்கு அனுப்பினர்.
மைதானத்தில் உள்ள பெரிய திரையில் வெவ்வேறு கோணங்களில் இருந்து ரீப்ளே காட்டப்பட்டபோது, கில் முன்னோக்கி டைவ் அடித்ததும், பந்தை விரல்களுக்குள் பிடிக்கும் வேளையில் பந்தின் ஒரு பகுதி தரையைத் தொட்டதும் தெளிவாகத் தெரிந்தது. அதாவது, பந்து கில்லின் கைகளுக்குள் முழுமையாக வரவில்லை.
டிவி நடுவர் 'நாட் அவுட்' என்று அறிவித்த அடுத்த கணமே, கோலி டிவி திரையை நோக்கி சைகை காட்டி, காற்றில் கையை ஓங்கி குத்தி கொண்டாடினார். பின்னர் கில்லின் அருகே சென்று அவரிடம் ஏதோ சொல்வதையும் பார்க்க முடிந்தது.

பட மூலாதாரம், ANI
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி பேசுகையில், "இப்படிப்பட்ட ரன் சேஸின் போது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
விராட் கோலி ஆட்டத்தின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, தனது அணிக்கு ஒரு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தார். கோலியின் அனுபவம் தொடர்ந்து அணிக்கு கைகொடுத்து வருகிறது. விராட் கோலி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 657 ரன்கள் குவித்திருந்தார், இந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக 675 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் கோலி ஒரு சீசனில் 600 ரன்களுக்கு மேல் எடுப்பது இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகும்.
வெற்றிக்குப் பிறகு விராட் கோலி, "ஐபிஎல் கோப்பையை வெல்லும் போது, அந்த வெற்றிக்கான கடைசி ஷாட்டை நான் அடிக்க வேண்டும் என்று பலமுறை கனவு கண்டிருக்கிறேன். இந்தப் போட்டியில் விளையாடும் போது நான் மிகவும் நிதானமாக இருந்தேன். எங்கள் அணியின் பலம், எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. சூழல் எப்படி இருந்தாலும், நாம் அதை முறியடித்து விடுவோம் என்று எனக்குத் தோன்றியது." என்றார்
"கோப்பையை வெல்வதற்கு நாங்கள் மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இம்முறை எங்கள் பந்துவீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஹேசில்வுட், புவி மற்றும் ரசிக் என அணியின் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். எந்தவொரு தருணத்திலும் முழுமையாக நம்பிச் சார்ந்திருக்கக்கூடிய வீரரான க்ருனால் பாண்ட்யா எங்களுடன் இருந்தார். இந்த சீசனில் ரசிக் தார் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் அணியின் வெற்றிக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கினர். அதனால்தான், இந்த அணியின் ஒரு அங்கமாக இருந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார் கோலி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































