மீன் தொட்டி உள்பட உங்கள் வீட்டில் வைஃபை சிக்னலை பாதிக்கும் 4 விஷயங்கள்

மீன் தொட்டி உள்பட உங்கள் வீட்டில் வைஃபை சிக்னலை பாதிக்கும் 4 விஷயங்கள் மற்றும் எளிய தீர்வுகள்

பட மூலாதாரம், BBC/ Serenity Strull/ Getty Images

    • எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உலகம் வைஃபை மூலம் இயங்குகிறது, ஆனால் உங்கள் மதிய உணவு உட்பட விசித்திரமான சில விஷயங்கள் அதற்குத் தடையாக இருக்கக்கூடும்.

அலெக்ஸ் ஹில்ஸ் ஒரு முன்னோடி. பூமியில் தங்கள் வைஃபை இணைப்போடு முதன் முதலில் போராடிய மனிதர்களில் இவரும் ஒருவர்.

1993ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது, உலகின் முதல் பெரிய வைஃபை நெட்வொர்க்குகளில் ஒன்றை உருவாக்கிய குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.

ஹில்ஸ் இந்தக் கதையை தனது 'வைஃபை அண்ட் தி பேட் பாய்ஸ் ஆஃப் ரேடியோ' என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

ஆனால் "பேட் பாய்ஸ்" என்பது இணையத்தைக் கையாண்ட அவரது குழுவினரைக் குறிப்பதல்ல. வைஃபை சீராக இயங்குவதற்குத் தடையாக இருக்கும் பொருட்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அவர் வைத்த பெயர் தான் பேட் பாய்ஸ்.

உங்கள் மீம்ஸ்களை தடை செய்ய தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யும் இதுபோன்ற சொந்த 'பேட் பாய்ஸ்'களால் உங்கள் வீடும் நிறைந்திருக்கலாம்.

தடிமனான சுவர்கள் போன்ற சில இடையூறுகள் ஆச்சரியமளிப்பவை அல்ல. ஆனால் மற்றவை சற்று விசித்திரமானவை.

இந்தத் தடைகளைக் கண்டறிவது உங்கள் இணைப்பைச் சரிசெய்ய உதவக்கூடும். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்றைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் விதத்தைக் கூட இது மாற்றக்கூடும்.

மைக்ரோவேவ்

வைஃபையை பாதிக்கும் விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Cris Canton/Getty images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

17 ஆண்டுகளாக, ஆஸ்திரேலியாவில் உள்ள வானியலாளர்களை மர்மமான ரேடியோ சமிக்ஞைகள் குழப்பத்தில் ஆழ்த்தின. சிலர் சூரிய கதிர்களே காரணம் என கருதினர். பொதுமக்களோ ஏலியனாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

இறுதியில், குற்றவாளி தங்களுக்கு அருகிலேயே இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். மதிய உணவு நேரத்தில் அலுவலக மைக்ரோவேவ் ஓவனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் அலைகளை அவர்களது தொலைநோக்கி உள்வாங்கிக் கொண்டிருந்தது.

தொல்லை தரும் மைக்ரோவேவ் அலைகளால் பாதிக்கப்படக்கூடிய ஒரே தொழில்நுட்பம் தொலைநோக்கிகள் மட்டுமல்ல. அவை உங்கள் வைஃபையையும் சீர்குலைக்கக் கூடும்.

பெரும்பாலான வயர்லெஸ் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் போலவே, வைஃபையும் ரேடியோ அலைகள் மூலம் தகவல்களை அனுப்புகிறது.

சட்ட அமலாக்கம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் ஏஎம் மற்றும் எஃப்எம் ரேடியோ நிலையங்கள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பெரும்பாலான ரேடியோ அலைவரிசைகளை அரசாங்கங்கள் ஒதுக்குகின்றன. ஆனால் சில அலைவரிசைகள் உரிமம் இல்லாத பொதுப் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கின்றன.

உதாரணமாக, வைஃபை நெட்வொர்க்குகள் மற்றும் புளூடூத் சாதனங்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான அலைவரிசைகளில் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் என்பதும் ஒன்றாகும்.

உங்கள் மைக்ரோவேவ் ஓவன் மீதமான உணவுகளை சூடாக்கப் பயன்படுத்தும் அலைவரிசையும் அது தான்.

மைக்ரோவேவ் ஓவன், உணவைச் சூடாக்கும் அலைகளை எந்திரத்திற்குள்ளேயே வைத்திருக்கும்படி பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கும்.

ஆனால் உங்களிடம் பழைய, பழுதடைந்த மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் அல்லது சமையல் முடிவதற்குள் அதன் கதவைத் திறந்தால், அது உங்கள் வைஃபை சிக்னலுடன் மோதக்கூடும் என்று ஹில்ஸ் கூறுகிறார்.

"மக்கள் பேசும் மிக முக்கியமான குறுக்கீடுகளில் இதுவும் ஒன்று" என்கிறார் ஹில்ஸ்.

ஃப்ளோரசன்ட் விளக்குகள் அல்லது காரின் இக்னிஷன் அமைப்புகளில் இருந்து கசியும் அலைவரிசைகளாலும் உங்களுக்கு இதேபோன்ற பிரச்னை ஏற்படலாம்.

"இப்போதெல்லாம், மைக்ரோவேவ்களால் பெரிய அளவில் பிரச்னை இல்லை" என்கிறார் ஹில்ஸ்.

அவை இப்போது சிறப்பாக உருவாக்கப்படுகின்றன மற்றும் வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ்க்கு பதிலாக 5 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் இயங்கக்கூடியதாக உள்ளது. ஆனால் உங்களிடம் பழைய வைஃபை அமைப்போ அல்லது பழமையான மைக்ரோவேவ் ஓவனோ இருந்தால், உணவை டிஃப்ராஸ்ட் செய்வது உங்கள் மீம்ஸ்களை இடைமறிக்கக்கூடும்.

மீன் தொட்டிகள்

வைஃபையை பாதிக்கும் விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Chen Zhongqiu/VCG via Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

உங்கள் வீட்டில் நீரில் வாழும் செல்லப்பிராணிகள் இருந்தால், அது பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

"ஒரு ரேடியோ சிக்னல் தூரம் அதிகரிக்க அதிகரிக்க இயல்பாகவே வலுவிழந்துவிடும்," என்று கூறும் ஹில்ஸ், "ஆனால் சில நேரங்களில் அது ஒரு பொருளை ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் பொருள் சிக்னலை பலவீனப்படுத்துகிறது. இதை நாம் 'ஷாடோயிங்' என்று அழைக்கிறோம்"என்கிறார்.

வைஃபையும் தண்ணீரும் ஒத்துப்போவதில்லை.

மற்ற சிக்கல்களுடன் சேர்த்து, நீர் மூலக்கூறுகள் சிறிய காந்தங்களைப் போல செயல்பட்டு ரேடியோ சிக்னலின் ஆற்றலை உறிஞ்சிவிடும். உங்களுக்கும் உங்கள் ரௌட்டருக்கும் இடையே ஒரு மீன் தொட்டி இருந்தால், அது வைஃபை கிடைக்காத ஒரு பகுதியை உருவாக்கலாம்.

வைஃபை நெட்வொர்க்குகளில் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை 'ஷாடோயிங்' தான் என்று ஹில்ஸ் கூறுகிறார். அது மீன் தொட்டிகளால் மட்டுமே ஏற்படுவதில்லை.

ரேடியோ அலைகளால் மரம் மற்றும் உலர்ந்த சுவர் போன்ற சில பொருட்கள் வழியே ஓரளவுக்கு எளிதாகக் கடந்து செல்ல முடியும்.

ஆனால் செங்கல் அல்லது கான்கிரீட் போன்ற அடர்த்தியான பொருட்களால் ஆன சுவர்கள் இருந்தால், அதை எதிர்கொள்வது கடினம்.

"உங்கள் ரௌட்டருக்கும் நீங்கள் பயன்படுத்த நினைக்கும் சாதனத்திற்கும் இடையே உள்ள ஒரு நேர்க்கோட்டுப் பாதையை நினைத்துப் பாருங்கள்," என்கிறார் ஹில்ஸ்.

சிக்னல் ஒரு அறைக்குள் எதிரொலித்து, பொருட்களுக்கு இடையே உள்ள மற்ற வழிகளைக் கண்டறிய முடியும். ஆனால் அது பாதையில் எவ்வளவு அதிகமான தடைகள் இருக்கிறதோ, அவ்வளவு கடினமாக மாறும்.

குறைந்த தூரம் என்பதும் வைஃபைக்கு விஷயங்களை எளிதாக்குகிறது. உங்கள் ரௌட்டரை வீட்டின் நடுப்பகுதியில் வைப்பதும், அதை முடிந்தவரை உயரத்தில் வைப்பதும் நல்ல முடிவாகும்.

அதுவும் பலன் தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வைஃபை எக்ஸ்டெண்டரைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம், இது உங்கள் சிக்னல் பரவலை அதிகரிக்கும். அல்லது உங்கள் ரௌட்டருக்குப் பதிலாக ஒரு மெஷ் நெட்வொர்க்கை அமைக்கலாம்.

இது சிறிய சாதனங்களின் வரிசை மூலம் உங்கள் இடத்தைச் சுற்றிலும் வை-பையை விநியோகிக்கிறது. இதன் மூலம் நீங்கள் அந்த பாவப்பட்ட மீன்களுக்குத் தொந்தரவு தர வேண்டியிருக்காது.

கண்ணாடிகள்

மைக்ரோவேவ் ஓவன் வைஃபை சிக்னல்களில் குறுக்கிடலாம், மீன் தொட்டிகள் அவற்றை உள்வாங்கிக் கொள்ளலாம். ஆனால், எதிரொலிப்பு என்ற மற்றொரு பொதுவான பிரச்சனையும் உள்ளது.

ரேடியோ என்பது ஒளியின் மற்றொரு வடிவம் தான்.

கண்ணாடிகள் போன்ற எதிரொலிக்கும் பரப்புகளில் ஒளி பட்டு எவ்வாறு சிதறுகிறதோ, அதேபோல் உங்கள் வைஃபை சிக்னலும் எதிரொலிக்கக்கூடும்.

தொலைக்காட்சி போன்ற தட்டையான, எதிரொலிக்கும் எந்தவொரு பரப்பும் இதேபோன்ற பிரச்னையை ஏற்படுத்தலாம். உங்கள் சுவர்களில் கட்டுமானப் பொருட்களாக உலோகத் தகடுகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் உங்களுக்கு இதே பிரச்னை ஏற்படலாம்.

உங்கள் வீட்டில் வைஃபை சிக்னல் பகுதி இருந்தால், உங்களுக்கும் ரௌட்டருக்கும் இடையே ஒரு கோடு இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.

அங்கு சிக்னலை வேறு பக்கமாகத் திருப்பிவிடக்கூடிய ஒரு கண்ணாடியோ அல்லது பெரிய டிவியோ இருக்கிறதா என்று யோசியுங்கள்.

அத்தகைய எதிரொலிக்கும் பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம் அல்லது உங்கள் வீட்டின் அமைப்பை மாற்ற நீங்கள் விரும்பவில்லை என்றால், வைஃபை எக்ஸ்டெண்டர்கள் இப்பிரச்னையைத் தீர்க்க உதவலாம்.

குளிர்காலம்

வைஃபையை பாதிக்கும் விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Bonnie Jo Mount/The Washington Post via Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

திறந்தவெளியால் பிரிக்கப்பட்ட மற்றொரு கட்டடத்தில் உள்ள நெட்வொர்க்கை நீங்கள் பயன்படுத்தினால் தவிர, மழை உங்கள் வைஃபையைத் தடை செய்யாது.

ஆனால் வானிலை மிகவும் மோசமடையும் போது, விஷயங்கள் தலைகீழாக மாறலாம்.

பனிப்பொழிவு ஒரு வீடு, சுற்றுப்புறம் அல்லது ஒரு முழு நகரத்திற்கே சேவை செய்யும் உள்கட்டமைப்பை முடக்கலாம். அது கேபிள்களுக்குள் இருக்கும் உலோகத்தை கடுமையான குளிர் சேதப்படுத்துவதாக இருக்கலாம் அல்லது பனி குவிந்து செயற்கைக்கோள் சமிக்ஞைகளைத் தடுப்பதாக இருக்கலாம்.

வெப்பமும் இதே போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

வானிலை மட்டுமே பிரச்னையை ஏற்படுத்தவில்லை என்றாலும், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் வீட்டிற்குள் முடங்கி யூடியூப் பார்க்கும்போது நெட்வொர்க் வேகம் குறையலாம்.

அதாவது, மீம்கள் தடைபடுவது பருவநிலை மாற்றத்தின் மற்றொரு விளைவாகவும் இருக்கலாம் என்பது தான் இதன் பொருள்.

இதற்கான தீர்வு?

பூமிக்காக உங்களால் முடிந்ததைச் செய்வதைத் தவிர, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்குமாறு நீங்கள் வலியுறுத்தலாம்.

அலெக்ஸ் ஹில்ஸைப் பொறுத்தவரை, அவர் இப்போது அலாஸ்காவில் வசிக்கிறார், அங்கு அவர் தனது பணிவாழ்வின் பெரும்பகுதியை தொலைதூர நகரங்கள் மற்றும் கிராமங்கள் இணைய வசதி பெற உதவுவதற்காகச் செலவிட்டுள்ளார்.

செயற்கைக்கோள் இணைய சேவைகள் அந்தத் திட்டத்தை மிகவும் எளிதாக்கியுள்ளன, ஆனால் அவை தங்களுக்கே உரிய வைஃபை "பேட் பாய்ஸ்"களைக் கொண்டுள்ளன.

சில நேரங்களில், ஒரு பனிப்புயல் உங்கள் செயற்கைக்கோள் டிஷ்ஷை பனியால் மூடிவிடும்போது, நீங்கள் மண்வெட்டியை எடுத்து அதைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு