'நிலவின் மேற்பரப்பு போல தெரிகிறது': பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு - சுமார் 600 சுரங்க தொழிலாளர் கதி என்ன?

பட மூலாதாரம், Nepal Army/Reuters
- எழுதியவர், ஜேக் லேப்ஹாம்
- எழுதியவர், கெல்லி கண்ட்
- எழுதியவர், பிபிசி நேபாளி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது. திரிசூலி நதிக்கரையோரத்தில் சேறும் மண்ணும் நிரம்பியிருக்கும் பரந்த சுரங்க கட்டமைப்பில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களது குடும்பத்தினர் தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
உயிர் பிழைத்தவர்களை அடைவதற்கான முக்கியமான கால அவகாசம் முடிவடையக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், மீட்புப் பணியாளர்கள் திங்கள்கிழமையும் அவர்களை அடைய போராடிக் கொண்டிருந்தனர். இதற்காக மலைச்சரிவை வெடிபொருட்களால் உடைத்ததுடன், திரிசூலி-3ஏ தளத்திற்குள் காற்றும் செலுத்தப்பட்டது.
"அவரைக் கண்டுபிடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். அவர் வீடு திரும்பி வர வேண்டும் என்று விரும்புகிறேன்," என திட்டத் தளத்தில் காணாமல் போன 33 வயதான பொறியாளர் ஆரஸ் பண்டாரியின் மனைவி அனுஷிலா பண்டாரி, பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.
நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கையையும் அந்த அமைப்பு 3,925 ஆகத் திருத்தியுள்ளது. அவர்களில் 592 பேர் வெளிநாட்டினர்.
காணாமல் போனவர்களில் ஏழில் ஒருவர் அருகில் உள்ள நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் என நம்பப்படுகிறது. நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, திங்கள்கிழமை வரை அந்தத் திட்டத் தளங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளுக்கு சீன மற்றும் நேபாள இராணுவப் பணியாளர்களைக் கொண்ட சர்வதேசக் குழு தலைமை வகித்து வருகிறது. இந்தியா, கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
ஒவ்வொரு நீர்மின் திட்டத்திலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள், அதேபோல் உயர் திறன் கொண்ட பொறியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
"உள்ளே ஆக்சிஜன் அமைப்பு இருப்பதால் அவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இன்னும் 50% உள்ளது," என வெள்ளம் ஏற்பட்டபோது அந்தத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தனது கணவர் குறித்து சீதா பாண்டே, நேபாள நாளிதழான காந்திபூரிடம் தெரிவித்தார்.
நேபாளம் மின்சார உற்பத்திக்கு நீர்மின் சக்தியை பெரிதும் நம்பியுள்ளது. மலைப் பகுதி நதி அமைப்புகளில் நீர்மின் திட்டங்களை உருவாக்க பல ஆண்டுகளைச் செலவிட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டுமானத்தில் உள்ள குறைந்தபட்சம் 11 நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புக் குழுவினர் வார இறுதியில் ஒரு சுரங்கத்திற்குள் காற்றை செலுத்தத் தொடங்கினர். ஆனால் உள்ளே சிக்கியிருப்போரின் குடும்பத்தினர், இந்த நடவடிக்கை இன்னும் முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
ஒரு மீட்புக் குழுவால் திங்கள்கிழமை அதிகாலை ஒரு நீர்மின் நிலையத்துக்குச் செல்லும் சுரங்கத்திற்குள் நுழைய முடிந்தது. ஆனால் அங்கு யாரையும் கண்டுபிடிக்காததால் அவர்கள் பின்னர் வெளியேறினர்.
"நேரம் செல்லசெல்ல எங்களுடைய நம்பிக்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு நொடியும் முக்கியமானது, எனவே இந்த நடவடிக்கை இன்னும் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும்," என அந்த நிலையத்திற்குள் சிக்கியிருக்கும் மற்றொரு நபரின் உறவினரான ஜீவன் கட்கா, காந்திபூர் நாளிதழிடம் தெரிவித்தார்.
"இது மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் மெதுவாக நடைபெறும் நடவடிக்கையாக இருக்கிறது," என்றும் அவர் கூறினார்.
மீட்புப் பணிகள் "மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்று நேபாள பிரதமர் ஷா தெரிவித்தார். இதுவரை 11,379 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
செய்திக்காக பதற்றத்துடன் காத்திருக்கும் மற்றொரு குடும்ப உறுப்பினர் பிரியா கரேல். வெள்ளம் ஏற்பட்டபோது அவரது சகோதரர் மிலன், அப்பர் திரிசூலி-1 திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
"நீர்மின் நிலைய தளத்திலிருந்து திரும்பி வந்தவர்கள், சுரங்கத்திற்குள் மக்கள் இருப்பதாகக் கூறினர்," என்று அவர் பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.
"எனவே இராணுவம் அவர்களை விரைவாக அடைந்தால் அவர்களை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது."

பட மூலாதாரம், Reuters
சுரங்க மீட்புப் பணிகளில் நேபாள அதிகாரிகளுக்கு உதவி வரும் ஆஸ்திரேலிய பொறியாளர் அர்னால்ட் டிக்ஸ், மீட்புக் குழுவினர் சுரங்கங்களின் இருப்பிடத்தை கண்டறிவதில் சிரமப்படுவதாக கூறினார்.
"அவை இருந்ததற்கான அடையாளங்களே மறைந்துவிட்டன. எல்லாமே காணாமல் போய்விட்டது. அது நிலவின் மேற்பரப்பைப் போலத் தெரிகிறது," என்று அவர் பிபிசி ரேடியோ 4-இன் வோர்ல்ட் அட் ஒன் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
நீர்மின் நிலையங்கள் இருந்த இடங்கள் தெரியவந்த பிறகே, அவற்றை எவ்வாறு அடைவது என தீர்மானிக்க முடியும் என்று டிக்ஸ் கூறினார். அதற்கு பொதுவாக தோண்டுதல் மற்றும் "பெரிய பாறைகளை வெடிவைத்து உடைத்தல்" தேவைப்படும் என்றார்.
"வீடுகளை விட அளவில் பெரிய பாறைகள் உள்ளன. என் வாழ்க்கையில் இதுபோன்று ஒன்றையும் நான் பார்த்ததில்லை. இது உண்மையிலேயே அசாதாரணமான ஒரு நடவடிக்கை," என்று சர்வதேச சுரங்க அமைப்பின் முன்னாள் தலைவரான அர்னால்ட் டிக்ஸ் கூறினார்.
மேல்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலிருந்து நிலத்தடிப் பகுதி ஒரு அளவுக்கு பாதுகாப்பளித்திருக்கக்கூடும் என்பதால், உள்ளே சிக்கியிருப்போர் பற்றி தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், PMO
இதற்கிடையில், வெள்ளம் முதலில் தாக்கிய பகுதிக்கு மிகவும் தொலைவில் நதியின் கீழ்திசையில் உள்ள சித்வன் மாவட்டத்தில், நேபாளத்தின் நதிகளில் கரை ஒதுக்கிய சுமார் 300 உடல்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டன.
அங்கு உடல்கள் அழுகும் நாற்றம் காற்றில் பரவியிருந்தது. முகக்கவசம் உள்ளிட்ட வெள்ளை நிற தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்தவர்கள் அடையாளம் தெரியாத உடல்களை லாரிகளில் எடுத்துச் சென்றனர்.
வார இறுதியில் நகரத்திற்கு வெளியே உள்ள காடுகளில் பெரிய பகுதி தோண்டப்பட்டது. மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடையாளம் தெரியாத உடல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்தனர்.
"டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர்களின் உறவினர்கள் உடல்களைப் பெற்றுச் செல்ல முடியும்," என்று மாவட்ட தலைமை அதிகாரி கணேஷ் ஆர்யால் பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.
"எங்களிடம் போதுமான குளிர்சாதன வசதிகள் இல்லை. எனவே தற்காலிக அடக்க முறைதான் கடைசி மாற்று வழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிவிட்டது. நாங்கள் உண்மையிலேயே மிகுந்த அழுத்தத்தில் உள்ளோம்," என்றார்.

பட மூலாதாரம், Reuters
திபெத்தில், சீன அரசு ஊடகங்களின் தகவலின்படி அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆகும்; 546 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ளம் தொடர்பான காட்சிகள் சீனாவில் கடுமையாக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ தகவல்களை விட அதிகம் என இணையத்தில் ஊகித்தவர்களுக்கு "தண்டனைகள்" விதிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தண்டனைகளில் எச்சரிக்கைகள், அபராதங்கள் அல்லது குறுகிய காலக் காவல் அடங்கும்.
நேபாளத்திலும், வெள்ளம் குறித்து தவறான தகவலாக கருதப்படும் இணைய உள்ளடக்கங்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சித்வனில் இருந்து ஜுகல் புரோஹித் மற்றும் பிபிசி நேபாளியைச் சேர்ந்த பினிதா தஹால் ஆகியோர் தந்த கூடுதல் தகவல்கள் இந்த கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































