கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ் பெருந்தொற்றின் தொடக்கமா?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஹண்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட, கவலைக்கிடமான நிலையில் உள்ள இருவர் சிகிச்சைக்காக நெதர்லாந்து சென்றடைந்துள்ளதாக கப்பல் நிறுவனமான ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ் தெரிவித்துள்ளது.
சீரான நிலையில் உள்ள மூன்றாவது பயணி ஒருவரை ஏற்றிச் செல்ல வேண்டிய விமானம் தாமதமாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் கூறியது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு கூட்ட நாடான கேப் வெர்டே அருகே மூன்று நாட்களாக நங்கூரமிட்டிருந்த எம்.வி ஹோண்டியஸ் கப்பல், தற்போது ஸ்பெயினின் கனாரி தீவுகளை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த தலா ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்ததை அடுத்து அவர்கள் மூவரும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 65 வயதுடைய ஜெர்மன் நாட்டு நபர், மே 2-ஆம் தேதி கப்பலில் உயிரிழந்த ஜெர்மன் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலும் பாதிப்பு
ஒரு மாதத்திற்கு முன்பு அர்ஜென்டினாவிலிருந்து கப்பல் புறப்பட்டதில் இருந்து அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கப்பலில் இருந்து முன்னதாகவே இறங்கி அமெரிக்கா திரும்பிய மூன்று பயணிகளைத் கண்காணித்து வருவதாக அமெரிக்காவின் இரண்டு மாகாணங்கள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளன. அவர்கள் யாருக்கும் தற்போது வரை நோய் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இருவர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமின்றி இருப்பதாகவும் ஜார்ஜியாவின் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அரிசோனா சுகாதாரத் துறை, ஒரு நபர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.
அதேபோல், கப்பலில் இருந்து இறங்கி சுவிட்சர்லாந்து திரும்பிய ஒரு நபருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
கப்பலில் தற்போது என்ன நிலை?
தற்போது 23 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 146 பேர் "கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்" கீழ் எம்.வி ஹோண்டியஸ் கப்பலில் இருப்பதாக கப்பல் நிறுவனம் கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தகவலின்படி, அந்தக் கப்பலில் உள்ளவர்களில் 3 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த கப்பல் பயணம் தொடங்கிய லத்தீன் அமெரிக்காவில் அதிகமாக காணப்படும் ஆண்டிஸ் வகை ஹண்டா வைரஸ், தொற்று உறுதி செய்யப்பட்ட இரு நபர்களிடம் கண்டறியப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனைகளின் மூலம் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஏற்பட்ட சில பரவல்களில், ஆண்டிஸ் வகை ஹண்டா வைரஸ் மனிதர்களிடையே பரவியிருந்தது என்று நிபுணர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்ததாகவும், மற்ற இருவரின் மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரில் ஒருவர் நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் ஆவார். எம்வி ஹோண்டியஸ் கப்பல் ஏப்ரல் 24ஆம் தேதி செயின்ட் ஹெலேனா தீவில் நின்றபோது அவர் கப்பலில் இருந்து வெளியேறினார். அவரது கணவர் ஏப்ரல் 11ஆம் தேதி கப்பலிலேயே உயிரிழந்திருந்தாலும், அவருக்கு ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
அந்த நெதர்லாந்து பெண் பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்த நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி உயிரிழந்தார். அவர் பயணம் செய்த விமானத்தில் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகளை சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவன அதிகாரி மரியா வான் கெர்கோவ் பிபிசியிடம் தெரிவித்தார்
ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி ஏப்ரல் 25ஆம் தேதி இயக்கப்பட்ட தங்களது விமானத்தில் அந்த பெண் சிறிது நேரம் இருந்ததாக கேஎல்எம் விமான நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், விமான ஊழியர்கள் அவரை தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மூன்றாவதாக உயிரிழந்த ஜெர்மன் பெண்ணுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது உடல் இன்னும் கப்பலிலேயே உள்ளது.
புதன்கிழமை வெளியேற்றப்பட்ட மூன்று பேரில் யாருக்கும் இதுவரை ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை, ஆனால் இருவருக்கு அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இதற்கிடையில், கப்பலில் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள சூழலில் இருந்த இரண்டு நபர்கள், பிரிட்டனில் உள்ள தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது
அவர்கள் கப்பல் பயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியிருந்ததுடன், எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Elton Monteiro / EPA
வைரஸ் எப்படி பரவும்
பொதுவாக ஹண்டா வைரஸ் எலிகள் போன்ற விலங்குகள் மூலம் பரவுகிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில், நெருங்கிய தொடர்பில் இருந்த மனிதர்களுக்கிடையே வைரஸ் பரவியிருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
கப்பலில் உள்ள மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்குத் தொற்று பரவும் அபாயம் மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் உறுதியுடன் தெரிவித்தனர்.
புதன்கிழமையன்று கனாரி தீவுகளை நோக்கிப் புறப்படுவதற்கு முன்பு, அந்தப் கப்பல் கேப் வெர்டே அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
ஸ்பெயின் அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்தனர். ஆனால், கனாரி தீவுகளின் தலைவர் இத்திட்டத்தை எதிர்த்துள்ளார்.
"அந்தக் கப்பல் கனாரி தீவுகளுக்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது," என்று ஃபெர்னாண்டோ கிளாவிஜோ ஸ்பெயினின் 'ஒண்டா செரோ' வானொலியிடம் தெரிவித்தார்.
"எங்களுக்குப் போதுமான தகவல்களும் வழங்கப்படவில்லை." என அவர் கூறினார்.
கப்பல் வந்தடைந்ததும், அதிலுள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா தெரிவித்துள்ளார். பயணம் செய்ய உடல்நிலை தகுதியாக இருப்பவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த நடவடிக்கைகள் கனாரி தீவுகளின் பொதுமக்களுடன் எந்தத் தொடர்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் என்றும், கப்பல் அடுத்த சில நாட்களில் டெனெரிஃபே வந்தடைந்தாலும் அங்குள்ள மக்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும் கார்சியா கூறினார்.
ஹண்டா வைரஸ் பரவும் முறை, கொரோனா மற்றும் காய்ச்சல் வைரஸ்களிலிருந்து மிகவும் மாறுபட்டது என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.
"மிகவும் நெருக்கமான உடல் தொடர்புகள் மூலமே பரவல் ஏற்படக்கூடும்," என்று அவர் கூறினார்.
கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பமா?
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், இந்த நோய்ப் பரவலின் போக்கு குறித்த ஆய்வுகள் இன்னும் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் சார்பில் ஹான்டா வைரஸ் குறித்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டது.
முதல் இரண்டு பாதிப்புக்குள்ளானவர்கள், "அர்ஜென்டினா, சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்குப் பறவைகளை பார்வையிடும் பயணமாகச் சென்றனர். அங்கு இந்த வைரஸைச் சுமந்து செல்லும் எலி இனங்கள் வாழும் பகுதிகளுக்கும் அவர்கள் சென்றிருந்தனர்," என்று அவர் கூறினார்.
அந்தத் தம்பதியினரின் நடமாட்டத்தைப் புரிந்துகொள்ள அர்ஜென்டினா அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ், கப்பலில் இருக்கும் "அனைவரும் முகக்கவசம் அணியுமாறு" அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"இது கோவிட் அல்ல, இது இன்ஃப்ளூயன்ஸா அல்ல. இது மிகவும் வித்தியாசமான முறையில் பரவுகிறது," என்று அவர் கூறினார்.
இந்த நோய்ப் பரவலுக்கும் கோவிட்-19 பெருந்தொற்றின் ஆரம்ப நாட்களுக்கும் இடையிலான வேறுபாடு குறித்து மரியா வான் கெர்கோவிடம் கேட்கப்பட்டது.
"நான் இங்கே மிகவும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இது கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பம் கிடையாது. இது ஒரு கப்பலில் நாம் காணும் நோய்ப் பரவல்," என்று அவர் கூறினார்.
மேலும், இது கொரோனா வைரஸ்களைப் போலப் பரவாது. மாறாக, "மிகவும் நெருக்கமான தொடர்பு" மூலமே பரவும் என்று வான் கெர்கோவ் விளக்கினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































