'அதிமுகவை ஆதரிக்க ஸ்டாலின் வலியுறுத்தினார்': எம்.ஏ.பேபி பேட்டி பற்றி இடதுசாரி மாநில தலைவர்கள் கூறுவது என்ன?

திமுக - அதிமுக கூட்டணியா? தவெக, விஜய், தமிழ்நாடு, இடதுசாரிகள், விசிக

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி
    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அதிமுக ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் தங்களை வலியுறுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பேபி கூறியிருப்பது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதுரையில் பேசிய போதும் கூட, மக்கள் தீர்ப்புக்கு மாறாக அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

திமுக தரப்பில் நேரடியாக அவ்வாறு கூறப்பட்டதா என்ற பிபிசி தமிழ் கேட்ட போது, மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் உறுதியான பதில் தரவில்லை.

பொதுவெளியில் பரவிய இதுபோன்ற கருத்தை எங்களால் ஏற்கமுடியவில்லை என்று திமுகவிடம் தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.

அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று திமுக தரப்பு கூறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்துள்ளது.

தவெகவுக்கு இடதுசாரிகள் ஆதரவு

திமுக - அதிமுக கூட்டணியா? தவெக, விஜய், தமிழ்நாடு, இடதுசாரிகள், விசிக

பட மூலாதாரம், CPI(M)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுவரை 116 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் நிலையில் தவெக ஆட்சியமைக்க இன்னும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

'ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புகளுக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் தங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணை நிற்போம்," என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூறியுள்ளது.

விசிக இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கும் முடிவு சாதகமாக அமைந்தால், அவர்களின் 2 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று தவெக சிக்கலின்றி ஆட்சியமைக்க முடியும்.

திமுக - அதிமுக கூட்டணியா? தவெக, விஜய், தமிழ்நாடு, இடதுசாரிகள், விசிக
படக்குறிப்பு, திமுக தலைவர் முக ஸ்டாலின்

அதிமுகவுக்கு ஆதரவு தர திமுக வலியுறுத்தலா? எம்.ஏ.பேபி பேட்டி

தமிழ்நாட்டில் தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில், திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாயின. அதனை உறுதிப்படுத்துவது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி அமைந்தது.

தவெகவை ஆதரித்தது தொடர்பாக 'இந்தியா டுடே' ஆங்கில ஊடகத்திடம் பேசிய பேபி, "காங்கிரஸ் திமுகவுடன் எந்தவித ஆலோசனையும் இன்றி வெளியேறியது. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டணியின் தமிழ்நாடு தலைவரான ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம், அப்போது அதிமுக தலைமை தாங்கும் அரசை ஆதரிக்க போவதாக ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுகவை திமுக ஆதரிப்பதை இடதுசாரிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்." என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "நாங்கள் திமுகவை எதிர்க்கவில்லை, அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள, இந்தியா கூட்டணிக்கு எதிராக செயல்படும் அதிமுகவை ஆதரிக்க முடியாது என்று ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டோம்." என்றார்.

மார்க்சிஸ்ட் மாநில நிர்வாகிகள் கூறியது என்ன?

திமுக - அதிமுக கூட்டணியா? தவெக, விஜய், தமிழ்நாடு, இடதுசாரிகள், விசிக

பட மூலாதாரம், CPIM

படக்குறிப்பு, தவெக தலைவர் விஜயுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

எம்.ஏ.பேபி பேட்டியால் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகத்திடம் விளக்கம் பெற பிபிசி தமிழ் முயன்றது. அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

"அதிமுகவை, திமுக ஆதரிக்கப் போவதாக வரும் செய்திகள் ஏற்புடையதல்ல என திமுகவிடம் நாங்கள் தெரிவித்தோம்" என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திமுக - அதிமுக கூட்டணி என்று பரவலாக வந்த செய்திகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனையே கட்சி சார்பாக திமுக தலைமையிடம் தெரிவித்தோம்" என்று கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதும், அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி குற்றம்சாட்டினார்.

"பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக தலைமையிலான அரசை பின்வாசல் வழியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனவும் அதற்கு எங்களுடைய எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்றும் ஆளுநருக்கு தெரிவிக்க முடிவு செய்தோம்." என்றார்.

'கூட்டாக விளக்கம் அளிப்போம்'

திமுக - அதிமுக கூட்டணியா? தவெக, விஜய், தமிழ்நாடு, இடதுசாரிகள், விசிக
படக்குறிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்

அதிமுகவை ஆதரிக்க திமுக எந்தவித அழுத்தமும் தரவில்லை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது, அதே நேரத்தில் ஆளுநர் ஆட்சி அமையக்கூடாது என்று தவெகவை ஆதரிக்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார், அதுதான் எங்கள் நிலைப்பாடும்." என்று அவர் கூறினார்

"அதிமுகவை திமுக ஆதரிப்பதாக பொதுவெளியில் கருத்து வந்தது. ஆனால் அதிமுகவை ஆதரிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஸ்டாலின் எந்த அழுத்தமும் வழங்கவில்லை," என்று அவர் கூறினார்.

பேபி பேட்டி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம், இதற்கான விளக்கத்தை கூட்டாக தெரிவிப்போம்." என்று கூறினார்.

திமுக என்ன சொல்கிறது?

திமுக - அதிமுக கூட்டணியா? தவெக, விஜய், தமிழ்நாடு, இடதுசாரிகள், விசிக

பட மூலாதாரம், RSBharathi/X

படக்குறிப்பு, திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் ஆர் எஸ் பாரதி

அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்கிறார் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி.

பிபிசி தமிழிடம் இது குறித்து பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பேபி கூறியது போல எந்த அதிகாரப்பூர்வ பேச்சும் நடைபெறவில்லை. அப்படி நடந்ததிருந்தால் அதனை சொல்ல திமுகவுக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், ஆளுநர் ஆட்சி அமையக்கூடாது என்பதால் தவெக ஆதரிக்கிறோம் என்று தெளிவாக தெரிவித்து விட்டதாக"அவர் கூறினார்.

"தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு அதனையே எங்கள் தலைவரும் வெளிப்படுத்தியுள்ளார்," என்று அவர் தெரிவித்தார்.

'தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்' - பழனிசாமி

திமுக - அதிமுக கூட்டணியா? தவெக, விஜய், தமிழ்நாடு, இடதுசாரிகள், விசிக

பட மூலாதாரம், EPS Tamilnadu

இதற்கிடையே திமுக - அதிமுக கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக வெளியான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு