பாக். - சீனா கூட்டறிக்கையில் காஷ்மீரை குறிப்பிட்டதற்கு இந்தியா எதிர்ப்பு - பின்னணியில் 63 ஆண்டு சர்ச்சை

பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTAN
- எழுதியவர், வக்கார் முஸ்தபா
- பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையிலான 1963-ஆம் ஆண்டு எல்லை ஒப்பந்தம் குறித்து இந்தியாவில் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம், பாகிஸ்தானும் சீனாவும் எல்லை கடந்த நீர் ஒத்துழைப்பு குறித்து பேசி வரும் வேளையில், மறுபுறம், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொதுவான எல்லை இருப்பதை இந்தியா முற்றிலும் ஏற்க மறுக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையைத் தொடர்ந்து இந்தியா தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளது.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் மற்றும் நீர் வளங்கள் தொடர்பான குறிப்புகளுக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மே 23 முதல் 26 வரை சீனாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் முடிவில், சீனாவும் பாகிஸ்தானும் ஒரு கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டன.
இந்த பிரகடனத்தின் ஒரு வரியில், இரு தரப்பும் (அதாவது பாகிஸ்தானும் சீனாவும்) சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை என்ற கோட்பாடுகளின் கீழ், எல்லை கடந்த நீர் ஆதாரங்களில் ஒத்துழைக்கத் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொதுவான எல்லை எதுவும் இல்லாததால், 'எல்லை கடந்த நீர் ஆதாரங்களில் ஒத்துழைப்பு' என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறியுள்ளது.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1963-இல் ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்றும், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக கூட்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதி குறித்த சர்ச்சை என்ன, இந்தியா ஏற்க மறுக்கும் சீனா-பாகிஸ்தான் இடையிலான 1963 ஒப்பந்தம் என்பது என்ன?
சீனா - பாகிஸ்தான் நட்புறவுக்கு அடித்தளமிட்ட ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images
1950-களில், "இந்தி-சீனி பாய் பாய்" (இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்) என்ற முழக்கம் ஒரு எழுச்சிக் குரலாக இருந்தது.
பனிப்போரின் உச்சக்கட்டத்தில், கம்யூனிஸ்ட் சீனாவான தற்போதைய மக்கள் சீனக் குடியரசு, அமெரிக்காவுடன் அணி சேர்ந்திருந்த பாகிஸ்தானை விட, சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிய இந்தியா மீதுதான் அதிக ஆர்வம் காட்டியது.
அடுத்த பத்தாண்டுகளிலேயே சீனா, பாகிஸ்தானுடன் இத்தகையதொரு ஒப்பந்தத்தைச் செய்து, இவ்விரு நாடுகளும் 'இரும்புச் சகோதரர்களாகவும்', ' இன்ப துன்பங்களிலும் பங்கெடுக்கும் நண்பர்களாகவும்' மாறும் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆண்ட்ரூ ஸ்மால் தனது 'தி சீனா-பாகிஸ்தான் ஆக்சிஸ்: ஆசியாஸ் நியூ ஜியோபாலிடிக்ஸ்' (The China-Pakistan Axis: Asia's New Geopolitics) என்ற புத்தகத்தில், '1950-களின் தொடக்கத்தில் சீனாவின் கூட்டாளியாக பாகிஸ்தான் இருக்கவில்லை, இந்தியா தான் இருந்தது' என்று எழுதியுள்ளார்.
"சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகள் குறைந்தபட்சம் சில ஆண்டுகளுக்காவது உச்சத்தில் இருந்தன, அப்போது 'இந்தி-சீனி பாய் பாய்' என்ற முழக்கமும் இருந்தது. சீனா தனது எல்லைப் பிரச்னையை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாகவும், ஒருவருக்கொருவர் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலமாகவும் தீர்க்க முன்வந்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சின் பகுதியை லடாக்கின் ஒரு பகுதியாக இந்தியா கருதுகிறது, இதனை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்தது.
அருணாச்சல பிரதேசத்தை இந்தியா தனது பகுதியாகக் கருதுகிறது, ஆனால் சீனா அதனை ஏற்பதில்லை. அதனை திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு அங்கமாகக் கருதி 'ஜாங்னான்' என்று சீனா அழைக்கிறது.
இமயமலைப் பகுதியான காஷ்மீருடன் ஓரளவு தொடர்புடைய இந்த எல்லைச் சர்ச்சை, பொதுவாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே மட்டுமே பதற்றத்திற்கும் போர்களுக்கும் காரணம் என்று கருதப்படுகிறது.
ஆனால் இந்தச் சர்ச்சை குறித்து, சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீஃப் சவுத்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், காஷ்மீர் என்பது பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான ஒரு சர்வதேசப் பிரச்னை என்று கூறினார்.
ரோங்சிங் குவோவின் 'பிரதேசத் தகராறுகளும் மோதல் மேலாண்மையும்' (Territorial Disputes and Conflict Management) என்ற புத்தகத்தின்படி, காஷ்மீரின் 45.62 சதவீதம் இந்தியாவிடமும், 35.15 சதவீதம் பாகிஸ்தானிடமும், 19.23 சதவீதம் சீனாவிடமும் உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட வரைபட சர்ச்சை
இந்தச் சர்ச்சை இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது உருவானது.
நவீன தெற்காசிய வரலாற்றாசிரியர் முனைவர் யாகூப் கான் பங்கஷ் கூற்றுப்படி, மகாராஜா ரஞ்சித் சிங்கின் மறைவுக்குப் பிறகு சீக்கிய பேரரசு பலவீனமடைந்த போது, பிரிட்டிஷார் அதற்கு எதிரான தங்களின் முதல் போருக்குப் பின், 1846 மார்ச் 16 அன்று அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் கீழ் காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்முவின் ராஜா குலாப் சிங்கிற்கு 75 லட்சம் ரூபாய்க்கு விற்றனர்.
முனைவர் பங்கஷ் பிபிசியிடம் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உருவாக்கப்பட்ட போது, அதன் கிழக்கு எல்லை தீர்மானிக்கப்படவில்லை என்று கூறினார்.
"திபெத் மற்றும் சின்ஜியாங் நோக்கிய இந்த எல்லைப் பகுதி வறண்டதாகவும், மக்கள் நடமாட்டமற்றதாகவும் இருந்ததால், அதைப் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை."
தெற்காசிய விவகாரங்கள் நிபுணரான மைரா மெக்டொனால்டு , இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயும், லடாக்கின் எல்லையில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயும் உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் குறித்து 'ஈமத்துணி போல் வெண்மை: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் எல்லைகளில் போர்' (White as the Shroud: India, Pakistan and War on the Frontiers of Kashmir) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த எல்லையை நிர்ணயிக்க முயன்றபோது, சீனப் பேரரசு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது என்று அவர் எழுதியுள்ளார்.
"பிரிட்டன் பல முன்மொழிவுகளைப் பரிசீலித்தது, அதில் 1865-ஆம் ஆண்டின் அர்டாக்-ஜான்சன் கோடும் ஒன்றாகும், இது அக்சாய் சின்னின் பெரும் பகுதிகளை லடாக்கிற்குள் உள்ளடக்கியிருந்தது."
"1899-ஆம் ஆண்டின் மெக்கார்ட்னி-மெக்டொனால்டு கோடும் இருந்தது, அது ஓரளவு எச்சரிக்கையான ஒரு முன்மொழிவாக இருந்தது. ஆனால் இந்த முன்மொழிவு சர்வதேச அளவில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை."
"எனவே பிரிட்டிஷார் இதில் தோல்வியடைந்து, ஒரு சிக்கலான பாரம்பரியத்தை விட்டுச் சென்றனர்," என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
லாகூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவர் முனைவர் பங்கஷ் கூறுகையில், 1865-ஆம் ஆண்டின் அர்டாக்-ஜான்சன் கோடு முதல் 1914-ஆம் ஆண்டின் மக்மோகன் கோடு வரை செய்யப்பட்ட அனைத்து எல்லை நிர்ணயங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருந்தன என்று குறிப்பிடுகிறார்.
"சில நேரங்களில் பிரிட்டிஷ் இந்திய அரசு ஒரு பகுதியை ஜம்மு காஷ்மீரின் பகுதியாக அறிவிக்கும், சில நேரங்களில் மற்றொரு பகுதியை அறிவிக்கும். இந்தச் செயல்பாட்டில் திபெத் பலமுறை சேர்க்கப்பட்டிருந்தாலும், எல்லை என்னவாக இருக்கும் என்பது குறித்து சின்ஜியாங்கில் உள்ள சீன அரசுடன் மிக அரிதாகவே விவாதிக்கப்பட்டது என்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியது".
இதன் காரணமாக, வடகிழக்கு காஷ்மீரில் பிரிட்டிஷ் காலத்து எல்லைக் கோடுகளை சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. 1949-இல் சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு அமைக்கப்பட்ட பின்னரும் இந்த நிலைப்பாடு மாறாமல் இருந்தது.
கிழக்கிலோ, மேற்கிலோ எல்லை என்னவாக இருக்கும் என்பது குறித்து சீனாவில் உள்ள தங்களது அரசு, இந்திய அரசின் எந்தவொரு அதிகாரியுடனும் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என சீனா கூறியதாக பங்கஷ் தெரிவிக்கிறார்.
"பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, பிரிட்டிஷ் வரைபடங்களில் அக்சாய் சின்னுக்கு தெளிவான எல்லை எதுவும் இருக்கவில்லை," என்று மெக்டொனால்டு எழுதியுள்ளார்.
கருத்து வேறுபாடுகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே அக்சாய் சின் பகுதிக்கு உரிமை கோரின, அது அந்த நேரத்தில் ஒரு 'நோ மேன்ஸ் லேண்ட்' , அதாவது உரிமையாளர் எவரும் இல்லாத ஒரு பகுதியாக இருந்தது.
பத்திரிகையாளர் நெவில் மேக்ஸ்வெல் தனது 'இந்தியாவின் சீன போர்' (India's China War) என்ற புத்தகத்தில், அக்சாய் சின் பல நூற்றாண்டுகளாக லடாக் பகுதியின் ஓர் அங்கமாகவே இருந்து வந்துள்ளது என்பதே இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நிலைப்பாடாக இருந்தது என்று எழுதியுள்ளார்.
"மேற்கு எல்லை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என்றும், சீன அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரே எல்லை முன்மொழிவு மெக்கார்ட்னி-மெக்டொனால்டு கோடு மட்டும்தான் என்றும் சீனப் பிரதமர் சூ என்லாய் தெரிவித்தார். இதன் கீழ், அக்சாய் சின்னின் ஒரு பகுதி சீனப் பகுதிக்குள் அமைந்திருந்தது."
"அக்சாய் சின் ஏற்கெனவே சீனாவின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்றும், பேச்சுவார்த்தைகளின் போது தற்போதைய கள யதார்த்தங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்."
ஆடம் ஜைடன் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவிற்கான தனது ஆய்வில், திபெத் மற்றும் சின்ஜியாங் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்திய பிறகு, லடாக்கின் வடகிழக்கு பிராந்தியங்களில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தியது என்று எழுதியுள்ளார்.
"இந்த நடவடிக்கையின் நோக்கம் அக்சாய் சின் பகுதி வழியாக ஒரு ராணுவச் சாலையை அமைப்பதாகும். இது 1956-57 இல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தச் சாலை சின்ஜியாங் மற்றும் மேற்கு திபெத் இடையேயான இணைப்பை மேம்படுத்தியதுடன், இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையிலான பல முக்கியமான கணவாய்களை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் வழிவகுத்தது."
ஜெர்மன் நிறுவனமான எஸ்டபுள்யூபி-இன் கிறிஸ்டியன் வாக்னர் மற்றும் ஏஞ்சலா ஸ்டான்சல் ஆகியோர் தங்களது 'காஷ்மீரில் வரைபடங்களை மறுவரையறை செய்தல்' (Redrawing the Maps in Kashmir) என்ற அறிக்கையில், 1959-ஆம் ஆண்டில் சீனப் பிரதமர் சூ என்லாய், இரு நாடுகளும் சில பகுதிகள் மீதான தங்களது உரிமைகளை விட்டுக்கொடுத்து, அவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்ததாக எழுதியுள்ளனர்.
அதாவது, சீனாவிற்கு அக்சாய் சின் வழங்கப்பட வேண்டும், அதற்குப் பதிலாக வடகிழக்கு இந்தியா (தற்போதைய அருணாச்சல பிரதேச மாநிலம்) மீதான தனது உரிமைகோரலை சீனா வாபஸ் திரும்பப் பெற வேண்டும். எனினும், இந்திய அரசு இந்த முன்மொழிவை நிராகரித்தது.
"இந்தச் சாலையைப் பற்றி இந்தியா தாமதமாகவே அறிந்தது" என்று ஜைடன் எழுதுகிறார்.
மேலும், "இது இரு நாடுகளுக்கும் இடையே எல்லை மோதல்களுக்கு வழிவகுத்தது, இது இறுதியில் அக்டோபர் 1962-இல் சீன-இந்தியப் போராக உருவெடுத்தது. இந்தப் போருக்குப் பிறகு, லடாக்கின் வடகிழக்கு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெர்மானிய நிறுவனத்தின் அறிக்கையின்படி, "1988-க்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவுகள் மேம்பட்ட போது, எல்லைப் பிரச்னை மீண்டும் மையப் புள்ளியாக மாறியது."
"1993-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் தற்போதுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை அங்கீகரித்தது. இது ஒரு 'கோடு' என்பதை விட, அடிப்படையில் இரு தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ரோந்து வழிகள் மற்றும் ராணுவ முகாம்களின் தொகுப்பாகும்."
பின்னர், ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இதற்குப் பதில் கொடுக்கும் விதமாக, ஆகஸ்ட் 4, 2020 அன்று, பாகிஸ்தான் ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டது, அதில் ஒட்டுமொத்த காஷ்மீரும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டிருந்தது.
அப்போது சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "சமீபத்தில், இந்தியா தனது உள்நாட்டுச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றியதன் மூலம் சீனாவின் பிராந்திய இறையாண்மையை பாதிப்படையச் செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இதற்கு எந்த சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை." என்று கூறியிருந்தார்.
ஜெர்மன் நிறுவனத்தின் அறிக்கை, செப்டம்பர் 2020-இன் இறுதியில், லடாக்/அக்சாய் சின் விவகாரத்தில் இந்தியாவுடனான 'தற்போதைய நிலையை' சீனாவும் முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் குறிப்பிடுகிறது.
"இந்த அனைத்து நடவடிக்கைகளும் காஷ்மீர் சர்ச்சை இப்போது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதை உணர்த்துகின்றன. இந்த புதிய கட்டத்தில் சீனாவும் பாகிஸ்தானும் ஒருவேளை இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்கக் கூடும்," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - சீனா எல்லை ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images
சில எல்லைப் பகுதிகள் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையேயும் சர்ச்சைகள் இருந்தன.
இந்திய அறிஞரும், சட்ட நிபுணரும் வரலாற்றாசிரியருமான ஏ.ஜி. நூரானி, 2006 அக்டோபர் 20 அன்று 'ஃப்ரண்ட்லைன்' இதழில் வெளியான ஒரு கட்டுரையில், நவம்பர் 1959-இல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தபோது, சீனாவிடமிருந்து அது ஒரு கடுமையான மற்றும் சந்தேகத்துடனான அணுகுமுறையை எதிர்கொண்டதாக எழுதியுள்ளார்.
"அமெரிக்காவின் கூட்டாளியான பாகிஸ்தானை விட இந்தியாவையே சீனா விரும்பியது. பாகிஸ்தானின் முன்மொழிவுக்குப் பதிலளிக்க சீனா ஒரு முழு வருடத்தை எடுத்துக் கொண்டதுடன், இறுதியாக 1960 டிசம்பர் 8 அன்றுதான் பதிலளித்தது."
'உண்மையை எதிர்கொள்ளுதல்' (Facing the Truth) என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையில், பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் அயூப் கான் தனது 'நண்பர்களே, எஜமானர்கள் அல்ல' (Friends Not Masters) என்ற சுயசரிதையில், 1961 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் இடத்திற்காக சீனத் தூதர் பாகிஸ்தானின் ஆதரவைக் கோரினார் என்று எழுதியுள்ளார் என நூரானி குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கேட்ட அயூப், அவருக்கு எல்லைப் பிரச்னையை நினைவூட்டினார்.
சீனத் தூதர் இப்பிரச்னையைச் சிக்கலானது என்று விவரித்தார். அதற்கு அயூப் கான், "நாம் இரு பிரச்னைகளையும் அவற்றின் தகுதியின் அடிப்படையில் பார்க்க வேண்டும்" என்று பதிலளித்தார்.
பேச்சுவார்த்தைகள் 1962-ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று தொடங்கின.
சீனர்கள் ஆரம்பத்தில் குஞ்செராப் பள்ளத்தாக்கு மற்றும் கே-2 சிகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு உரிமை கோரினர். ஆனால் இறுதியில் சிறு மாற்றங்களுடன் பாகிஸ்தானால் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டை ஏற்றுக்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே கே-2 சிகரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
ஹன்சா மக்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்த ஷிம்ஷால் கணவாய்க்கு அப்பால் உள்ள மேய்ச்சல் பகுதிகளுக்குப் பாகிஸ்தான் உரிமை கோரியது.
இந்த விஷயம் 'தகுதியின்' அடிப்படையில் தீர்க்கப்படும் என்று சீனப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டதையடுத்து, அந்தப் பகுதி பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு கொள்கை அளவிலான உடன்பாடு 1962 டிசம்பர் 27 அன்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் 1963 மார்ச் 2 அன்று பெய்ஜிங்கில் கையெழுத்தானது, நிலத்தை எல்லை நிர்ணயம் செய்வதற்கான நெறிமுறை 1965 மார்ச் 26 அன்று கையெழுத்தானது.
நூரானியின் கூற்றுப்படி, அந்த ஒப்பந்தம் 1897-ஆம் ஆண்டின் குன்லுன் அல்லது அர்தாக் கோட்டை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக காரகோரம் நீர்நிலைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டது.
இதில் 1899-ஆம் ஆண்டின் மெக்கார்ட்னி-மெக்டொனால்டு முன்மொழிவுகளும், 1905-ஆம் ஆண்டின் கர்சன் திருத்தங்களும் உள்ளடங்கியிருந்தன.
பாகிஸ்தான் ஒரு பெரிய பகுதியை சீனாவிற்கு வழங்கிவிட்டதாகக் கூறிய இந்தியா, இந்த ஒப்பந்தத்தை 'சட்டவிரோதமானது' என்று குறிப்பிட்டது.
இந்தியாவின் கூற்றுப்படி, 1947-ஆம் ஆண்டின் இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியாகும். இந்தியா இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் ஒரு கண்டனக் குறிப்பை அனுப்பியது.
பூட்டோவின் சீன சார்பு கொள்கை

பட மூலாதாரம், Getty Images
1963 மார்ச் 26 அன்று ஆற்றிய உரையில், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுல்பிகர் அலி பூட்டோ இந்த கண்டனக் கடிதத்தைக் குறிப்பிட்டு, ஜம்மு காஷ்மீர் பகுதி இந்திய யூனியனின் ஒரு பகுதியோ அல்லது அதன் 'பிரிக்க முடியாத அங்கமோ' அல்ல என்று கூறினார்.
"இந்தப் பகுதி ஜம்மு காஷ்மீரின் பொதுமக்களுக்குச் சொந்தமானது. இதன் எதிர்காலம் 1948 ஆகஸ்ட் 13 மற்றும் 1949 ஜனவரி 5 ஆகிய தேதிகளில் ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் தீர்மானங்களின்படி, அதாவது ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையின் கீழ் ஒரு நடுநிலையான பொது வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்."
"இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே இந்தத் தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டவை என்பதால், இரு தரப்பிலும் எவரேனும் ஒருவர் ஜம்மு காஷ்மீர் மீது இறையாண்மை கோருவது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் நியாயமற்றது."
"சீனாவின் சின்ஜியாங் மாகாணத்திற்கும், பாகிஸ்தான் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்றுள்ள அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இடையிலான எல்லையை நிர்ணயம் செய்வது தொடர்பான பகிரப்பட்ட புரிதலின் அடிப்படையிலேயே சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லை ஒப்பந்தம் அமைந்துள்ளது."
"இந்த ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் அந்தஸ்தை எந்த வகையிலும் பாதிக்காது."
பாகிஸ்தான் சீனாவிற்கு ஒரு அங்குல நிலத்தைக் கூட கொடுக்கவில்லை என்றும், மாறாக முன்னதாக சீனாவிடம் இருந்த 750 சதுர மைல் பரப்பளவை பாகிஸ்தான் பெற்றுள்ளது என்றும் பூட்டோ கூறினார்.
பின்னர் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய தூதரக அதிகாரி அப்துல் சத்தார், எல்லை நிர்ணயம் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், ஷிம்ஷால் கணவாய்க்கு அப்பால் உள்ள சில மேய்ச்சல் நிலங்கள் வரலாற்று ரீதியாக ஹன்சா மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததை பாகிஸ்தான் அரசு உணர்ந்ததாகவும் எழுதியுள்ளார்.
"எனவே பாகிஸ்தான் இதற்கு ஒரு விதிவிலக்கு கோரியது. சூ என்லாய் பெருந்தன்மையுடன் எல்லையைத் திருத்தி அமைக்க ஒப்புக்கொண்டார், இதனால் 750 சதுர மைல் பரப்பளவு பாகிஸ்தான் தரப்பில் சேர்க்கப்பட்டது."
இவை அனைத்தும் நள்ளிரவுக்குப் பிறகு நடந்தது.
அயூப் கான் எச்சரிக்கையுடன் ஆனால் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்று ஆண்ட்ரூ ஸ்மால் குறிப்பிட்டுள்ளார்.
"பாகிஸ்தானில் 'சீன ஆதரவு முகாமின்' தலைவரானவர் சுல்பிகர் அலி பூட்டோ. இந்தியா-சீனா சர்ச்சையை முற்றிலும் 'இந்தியாவின் பிரச்னை' என்று விவரித்த தனது அறிக்கையை அயூப் கான் வாபஸ் பெற வேண்டும் என்று பூட்டோ வற்புறுத்தினார்."
"அதற்குப் பதிலாக, இந்திய நிலைப்பாட்டின் அடிப்படையையே பாகிஸ்தான் சவாலுக்கு உட்படுத்துகிறது என்ற தெளிவான செய்தியை சீனாவுக்கு அனுப்ப வேண்டும் என்று பூட்டோ பரிந்துரைத்தார்."
"இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் சார்பாக, அயூப் கானின் மேற்பார்வையின் கீழ் பூட்டோவிற்கு முந்தையவரான மன்சூர் காதிரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பூட்டோவே நேரடியாக 1963 மார்ச் மாதம் பெய்ஜிங்கிற்குச் சென்றார். அங்கு அவர் சீனாவின் வெளியுறவு அமைச்சர் சென் யீயுடன் உடன்பாட்டை எட்டி, பெரும் பாராட்டுகளைப் பெற்றார்."
காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு சீனா ஆதரவு
பர்வேஸ் இக்பால் சீமா 'பாகிஸ்தான் ஹொரைசன்' இதழில் எழுதிய '1963-ஆம் ஆண்டின் பாகிஸ்தான்-சீனா எல்லை ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்' (The Significance of the 1963 Pak-China Border Agreement) என்ற தனது கட்டுரையில், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சீனா முழுமையாக ஆதரித்தது என்று எழுதியுள்ளார்.
"பாகிஸ்தான்-சீனா எல்லை ஒப்பந்தம் சீனாவின் தெற்கு எல்லையைத் தெளிவுபடுத்தியதுடன், 1962-ஆம் ஆண்டின் இந்தியா-சீனா போர் போன்ற மற்றொரு அர்த்தமற்ற மோதல் ஏற்படுவதற்கான ஆபத்தை முற்றிலுமாக நீக்கியது."
"பாகிஸ்தான் சீனாவுடனான தனது வடக்கு எல்லையைத் தீர்மானித்தது, காஷ்மீர் பிரச்னைக்கு இறுதித் தீர்வு எட்டப்படும் பட்சத்தில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒரு தற்காலிக ஏற்பாடாகவே சீனா இந்த எல்லையை ஏற்றுக்கொண்டது."
"இந்த ஒப்பந்தம் நிச்சயமாக பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே எதிர்கால நட்பு உறவுகளுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்தது."
"1963 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, மங்கோலியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், லாவோஸ், வடகொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இருந்த தனது எல்லைச் சர்ச்சைகளை சீனா தீர்த்துக் கொண்டது," என்று நூரானி எழுதியுள்ளார்.
ஆனால் நூரானியின் கூற்றுப்படி, "இந்தியா மற்றும் பூட்டானுடன் சீனாவுக்கு இருக்கும் எல்லைச் சர்ச்சைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்தச் சர்ச்சைகளை நாம் ஒருதலைப்பட்சமாகத் தீர்க்கப் போகிறோமா அல்லது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் ஒரு அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தின் மூலம் தீர்ப்போமா என்று நம்மை நாமே நேர்மையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்."
"இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமரசம் இல்லாதவரை எந்தவொரு தீர்வும் சாத்தியமில்லை. சமரசம் என்பது இரு தரப்பிலிருந்தும் விட்டுக் கொடுப்பதைக் குறிக்கிறது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































