மீண்டும் சாம்பியன் ஆகுமா ஆர்சிபி? - குஜராத்துக்கு எதிராக இலக்கு 156

பட மூலாதாரம், ANI
2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மே 31) ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. தங்களின் இரண்டாவது ஐபிஎல் பட்டத்தைக் குறிவைத்து நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் தற்போது கடைசி கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆர்சிபி, டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் புள்ளிப் பட்டியலில் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.
குவாலிஃபயர் 1 போட்டியில் டைட்டன்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி. எலிமினேட்டரில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல்ஸ் அணியை, குவாலிஃபயர் 2 போட்டியில் தோற்கடித்து குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதேசமயம், தான் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங் செய்யவே தீர்மானித்திருப்பேன் என்று டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் டாஸின்போது தெரிவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி பௌலர்களில் அதிகபட்சமாக ரசிக் தார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தடுமாறிய டைட்டன்ஸ் பேட்டர்கள்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் இருவரும் நல்லபடியாக தங்கள் இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரில் இருந்தே ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ஆர்சிபி.
இரண்டாவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மூன்றாவது ஓவரை வீச ஹேசில்வுட்டை அழைத்துவந்தார் ஆர்சிபி கேப்டன் பட்டிதார். முதல் பந்தில் இறங்கி வந்து பவுண்டரி அடித்த ஷுப்மன் கில், அடுத்த பந்திலேயே அவுட்டானார். அவர் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்ய, டாப் எட்ஜ் ஆகி பட்டிதாரால் கேட்ச் செய்யப்பட்டார். அவர் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் டைட்டன்ஸ் அணிக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீசிய பவுன்சரை சாய் சுதர்ஷன் சரியாக அடிக்காமல் போக, அதுவும் டாப் எட்ஜாகி கித்தேஷ் ஷர்மாவிடம் கேட்ச் ஆனது. சாய் சுதர்ஷன் 12 ரன்கள் எடுத்தார்.
இரண்டு முக்கிய விக்கெட்டுகளை விரைந்து இழந்துவிட்டதால் நிஷாந்த் சிந்து, ஜாஸ் பட்லர் இருவரும் நிதானமாக ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அந்த பார்ட்னர்ஷிப்பால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரசிக் தார் பந்துவீச்சில் வெளியேறினார் நிஷாந்த் சிந்து.
மிகவும் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த பட்லர், குருனால் பாண்டியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்தார். 23 பந்துகள் சந்தித்த அவரால் 19 ரன்களே எடுக்க முடிந்தது.
முக்கிய வீரர்களை விரைவாக இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணியால் விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தவே முடியவில்லை. அர்ஷத் கான் 15 ரன்கள், ராகுல் திவாதியா 7 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 7 ரன்கள், ரஷித் கான் 7 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இந்த விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனி ஆளாகப் போராடினார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய அவர், டெத் ஓவர்களில் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் வாஷிங்டன் அடிக்கும் 3வது அரைசதம் இது.
வாஷிங்டன் சுந்தரின் ஆட்டத்தின் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 155/8 என்று தங்கள் இன்னிங்ஸை முடித்தது. ஆர்சிபி பௌலர்களில் ரசிக் தார் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் & புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்தப் போட்டிக்கான ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெங்கடேஷ் ஐயர் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), குருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெபர்ட், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, ராசிக் தார், ஜாஷ் ஹேசில்வுட்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர், கனிஷ்க் சௌஹான், ஸ்வப்னில் சிங், அபிநந்தன் சிங், ஜோர்டன் காக்ஸ்.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் 1 மாற்றம் செய்யபப்ட்டிருக்கிறது. ஸ்பின்னர் சாய் கிஷோர் நீக்கப்பட்டு, இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷத் கான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ராகுல் திவாதியா, ரஷித் கான், அர்ஷத் கான், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ்,
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சாய் கிஷோர், அனுஜ் ராவத், கிளென் ஃபிலிப்ஸ், பிரசித் கிருஷ்ணா, குமார் குஷாக்ரா.
கடந்து வந்த பாதை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
லீக் சுற்றில் விளையாடிய 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றது ஆர்சிபி. கடந்த சீசன் அனைத்து 'அவே' ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி, இம்முறை ஹோம் மைதானங்களில் சிறப்பாக ஆடியது. சின்னசாமி மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்ற அந்த அணி, ராய்ப்பூரில் ஆடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது.
புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆர்சிபி, குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
குஜராத் டைட்டன்ஸ்
டைட்டன்ஸ் அணியுமே ஆர்சிபி போல் லீக் சுற்றில் 9 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்தது. முதல் 7 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்த அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்றது. அந்த அணியின் கடைசி 3 லீக் சுற்று வெற்றிகள் 75 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வந்தவை.
குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி-யிடம் படுதோல்வி அடைந்த டைட்டன்ஸ், குவாலிஃபயர் 2 போட்டியில் 215 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பட மூலாதாரம், ANI
இறுதிப் போட்டியில் இதுவரை
ஆர்சிபி, டைட்டன்ஸ் இரு அணிகளுமே இதுவரை பல இறுதிப் போட்டிகளில் மோதியிருக்கின்றன. இரு அணிகளுமே தலா 1 ஃபைனலில் வெற்றி பெற்றிருந்தாலும், தோல்விகளையும் சந்தித்திருக்கின்றன. இந்த அணிகள் பங்கேற்ற இறுதிப் போட்டியின் முடிவுகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
2009 - டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிராக 6 ரன்களில் தோல்வி
2011 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 58 ரன்களில் தோல்வி
2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக 8 ரன்களில் தோல்வி
2025 - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 6 ரன்களில் வெற்றி
இதுவரை விளையாடிய 4 இறுதிப் போட்டிகளில் 1 வெற்றியையும், 3 தோல்விகளையும் சந்தித்திருக்கிறது ஆர்சிபி. அந்த ஒரு வெற்றி முதலில் பேட்டிங் செய்தபோதும், 3 தோல்விகள் சேஸ் செய்தபோதும் வந்திருக்கின்றன.
குஜராத் டைட்டன்ஸ்
2022 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 7 விக்கெட்டுகளில் வெற்றி
2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 5 விக்கெட்டுகளில் தோல்வி (DLS முறைப்படி)
2 இறுதிப் போட்டிகளில் தலா 1 வெற்றியும் தோல்வியும் பெற்றிருக்கும் டைட்டன்ஸின் முடிவுகள் ஆர்சிபி அணிக்கு நேரெதிராக அமைந்திருக்கின்றன. அந்த அணி சேஸ் செய்தபோது வெற்றியும், முதலில் பேட்டிங் செய்தபோது தோல்வியும் சந்தித்திருக்கிறது.
இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்
கடந்த 18 ஐபிஎல் சீசன்களில் சாம்பியன் பட்டங்கள் வென்ற அணிகளின் பட்டியல்.
- 2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்
- 2009 - டெக்கான் சார்ஜர்ஸ்
- 2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2013 - மும்பை இந்தியன்ஸ்
- 2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2015 - மும்பை இந்தியன்ஸ்
- 2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- 2017 - மும்பை இந்தியன்ஸ்
- 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2019 - மும்பை இந்தியன்ஸ்
- 2020 - மும்பை இந்தியன்ஸ்
- 2021 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2022 - குஜராத் டைட்டன்ஸ்
- 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2024 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































