பறக்கும் தட்டில் ஏலியன்கள் பூமிக்கு வந்தனரா? அமெரிக்க அரசின் 162 ஆவணங்கள் வெளியீடு

டிரம்ப் வெளியிட்ட பறக்கும் தட்டு குறித்த ஆவணங்களில் என்ன இருக்கிறது? ஏலியன்கள் இருப்பது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'பறக்கும் தட்டு' அல்லது 'யூ.எஃப்.ஓ' என முதன்முதலில் அழைத்தது அமெரிக்க விமானப் படைதான்
    • எழுதியவர், ஷீலா ஃப்ளின்
    • பதவி,
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒரு பாட்டி, தனது தாய் ஒருமுறை துணிகளைக் காயப் போட்டுக் கொண்டிருக்கும்போது பறக்கும் தட்டு (UFO) ஒன்று வானில் மிதப்பதைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார். அவர் தான் சிறுவயது முதலே இதுதொடர்பான பதில்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

டெக்சாஸை சேர்ந்த ஓர் உளவியல் ஆலோசகர், தான் சிறு வயதில் இருந்தே அசாதாரணமான பறக்கும் தட்டுகள் தொடர்பான நிகழ்வுகளை "எதிர்கொண்டிருப்பதாக" கூறுகிறார். டெக்சாஸை சேர்ந்த 36 வயது இசைக்கலைஞர் ஒருவரும், தனது சொந்த ஊருக்கு அருகில் நடந்த ஒரு மர்மமான சம்பவத்தைப் பற்றி அறிந்த பிறகு, வேற்றுக்கிரகவாசிகள் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டார்.

பலரைப் போலவே, இவர்களும் மே 8ஆம் தேதி அமெரிக்க அரசாங்கம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று விவரித்த ஒன்றுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

யு.எஃப்.ஓ, அதாவது அடையாள தெரியாத பறக்கும் பொருள் என்று அழைக்கப்படும் பறக்கும் தட்டுகளுடன் தொடர்புடைய அசாதாரண நிகழ்வுகள் தொடர்பான, இதுவரை காணப்படாத கோப்புகளின் ஒரு பெரிய தொகுப்பை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இந்த வெளியீட்டில், விளக்கப்படாத காட்சிகள், சம்பவங்கள் தொடர்பான படங்கள் மற்றும் விவரங்களுடன் 162 ஆவணங்கள் அடங்கியிருந்தன.

பறக்கும் தட்டுகள் மீது ஆர்வம் கொண்டுள்ள மக்கள், இந்த ஆவணங்கள் அரசாங்கத்திடம் இருந்து அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் என்றும், பூமிக்கு அப்பால் அறியப்படாத உயிரினங்கள் அல்லது விளக்கப்படாத செயல்பாடுகள் உள்ளனவா என்பது குறித்த பதில்களை இவை வழங்கக்கூடும் என்றும் நம்புகின்றனர்.

இந்தக் கோப்புகள் வெளியிடப்பட்ட பிறகு, டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில், "முந்தைய நிர்வாகங்கள் இந்த விஷயத்தில் வெளிப்படையாக இருக்கத் தவறிய நிலையில், இந்த ஆவணங்கள் மற்றும் காணொளிகள் மூலம், 'என்னதான் நடக்கிறது?' என்பதை மக்கள் தாங்களாகவே முடிவு செய்துகொள்ளலாம். மகிழ்ந்து அனுபவியுங்கள்" என்று பதிவிட்டார்.

போர்த் துறை (The Department of War), கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புதிய பொது இணையதளத்தைத் தொடங்கியது. அதில் மக்கள் பறக்கும் தட்டுகள் தொடர்பான கோப்புகளையும் படங்களையும் பார்க்கலாம்.

இருப்பினும், அந்தப் பொருள்கள் குறித்துத் தெளிவான விளக்கங்களையோ அல்லது இறுதி முடிவுகளையோ போர்த் துறை வழங்கவில்லை. இந்தப் பணி "மிகப் பெரியதாக இருப்பதால்", மேலும் பல ஆவணங்கள் கண்டறியப்பட்டு, "பொது வெளியீட்டிற்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும் போதெல்லாம், அவை படிப்படியாகத் தொடர்ந்து வெளியிடப்படும்" என்றும் தெரிவித்துள்ளது.

அந்தத் துறை அளித்துள்ள விளக்கத்தில், "இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் தீர்வு காணப்படாத விஷயங்களாகும். அதாவது, கவனிக்கப்பட்ட நிகழ்வுகளின் தன்மை குறித்து அரசாங்கத்தால் ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளது.

தனியார் ஆய்வாளர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து வரும் பகுப்பாய்வுகளையும் நிபுணர் கருத்துகளையும் வரவேற்பதாகவும் போர்த் துறை கூறியது.

கடந்த 1969ஆம் ஆண்டில் அப்பல்லோ 12 பயணத்தின்போது நிலவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், அடையாளம் தெரியாத ஒரு ஒளிக்கீற்று சிறப்பித்துக் காட்டப்பட்டு பெரிதாக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம், US Department of Defense

படக்குறிப்பு, கடந்த 1969ஆம் ஆண்டில் அப்பல்லோ 12 பயணத்தின்போது நிலவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், அடையாளம் தெரியாத ஒரு ஒளிக்கீற்று சிறப்பித்துக் காட்டப்பட்டு பெரிதாக்கப்பட்டுள்ளது
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மியூச்சுவல் யு.எஃப்.ஓ நெட்வொர்க் (MUFON) டெக்சாஸின் பிராந்திய இயக்குநரான ஜான் எரிக் ஈஜ், அந்த வெளியீடு தனக்கு ஆர்வமூட்டுவதாக கூறினார். பொதுவெளியில் வெளியிடப்பட்ட இந்தத் தகவல்கள் குறித்துத் தான் மிகுந்த ஆர்வமும் ஆவலும் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அரசாங்கத்தால், வேற்றுக்கிரக விண்கலங்கள் எனக் கூறப்படும் பறக்கும் தட்டுகள் (UFO) தொடர்பான கோப்புகள் வெளியிடப்படுவது "சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை" என்று தான் நம்புவதாக ஜான் எரிக் ஈஜ் கூறினார்.

உளவியல் ஆலோசகராகப் பணிபுரியும், சிறுவயது முதலே வேற்றுக்கிரக விண்கலங்கள் தொடர்பான விஷயங்களைக் கவனித்து வரும் ஈஜ், "அவர்கள் எதையோ மறைக்க முயல்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் வெளியிடும் விஷயங்கள், கிட்டத்தட்ட ஏற்கெனவே நீண்ட காலமாக நமக்குத் தெரிந்தவைதான்" என்று கூறுகிறார்.

புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் அதிர்ச்சியூட்டும் புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை என்று அவர் விளக்கினார். அவரைப் பொறுத்தவரை, அரசாங்கத்திடம் வேற்றுக்கிரகவாசிகளின் உடல்கள் இருப்பதற்கோ அல்லது மனிதர்கள் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டதற்கோ தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை.

அதுகுறித்துப் பேசிய அவர் "புதிய விவரங்கள் எதுவும் இல்லை. அவர்களிடம் உடல்கள் இருப்பதற்கோ அல்லது அவர்கள் வேற்றுக்கிரகவாசிகளைத் தொடர்பு கொண்டதற்கோ தெளிவான ஆதாரம் இல்லை. இருப்பினும் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளேன்," என்று கூறினார்.

புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில், வகைப்படுத்தப்படாத பழைய ராணுவ ஆவணங்களில், அப்பல்லோ நிலவுப் பயணங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் வேற்றுக்கிரக வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தாங்கள் நம்பிய வேற்றுக்கிரக விண்கலங்கள் அல்லது பறக்கும் தட்டுகளைக் கண்டதாகக் கூறிய நபர்களின் வாக்குமூலங்கள் ஆகியவை உள்ளன.

அந்த ஆவணங்களில் பெரிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளோ அல்லது வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்று உறுதியாகக் கூறுவதற்கான ஆதாரங்களோ இல்லை. இருப்பினும், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படுவதை அமெரிக்க அரசாங்கம் பல ஆண்டுகளாக விசாரித்து வருகிறது என்பதை இந்த ஆவணங்களின் வெளியீடு தெளிவாகக் காட்டுவதால், இது முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜான் எரிக் எஜ் பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகளை இளம் பருவம் முதலே கவனித்து வருகிறார்

பட மூலாதாரம், Courtesy of John Erik Ege

படக்குறிப்பு, ஜான் எரிக் எஜ் பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகளை இளம் பருவம் முதலே கவனித்து வருகிறார்

பல பறக்கும் தட்டு ஆராய்ச்சியாளர்களும் ஆர்வலர்களும், இந்த வெளியீடு வியத்தகு எதையும் வெளிப்படுத்தாத காரணத்தால், அது தங்களுக்குச் சற்றே ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினர். ஆனால், இதுகுறித்த விவாதங்களைப் பற்றி அதிகம் அறியாத சாதாரண பொதுமக்கள் இதன்மூலம் இந்தத் தகவலை ஆச்சரியமாகவும் முக்கியமானதாகவும் கருதக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஈஜுடன் இணைந்து டெக்சாஸ் யு.எஃப்.ஓ நெட்வொர்க்கின் ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிக்க உதவும் 36 வயதான டேனியல் ஜோன்ஸும் இதேபோன்ற கருத்தைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பக்கத்தில் 25,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"இவை யு.எஃப்.ஓ ஆர்வலர் சமூகத்தில் (UFO community) உள்ளவர்களுக்காக மட்டுமல்ல, மாறாக, அமெரிக்க மக்களுக்கும் பொது மக்களுக்கும் வெளிப்படைத்தன்மை குறித்த ஒருவித உறுதியை அளிப்பதற்காக வெளியிடப்படுகின்றன," என்று ஜோன்ஸ் கூறினார்.

முதல் தொகுதி கோப்புகளில் மிகவும் முக்கியமான அல்லது புரட்சிகரமான எதுவும் இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய அவர், இருப்பினும், அரசின் எதிர்கால வெளியீடுகள் மேலும் விரிவான தகவல்களை வழங்கக்கூடும் என்று நம்புகிறார்.

கடந்த ஆண்டு யு.எஃப்.ஓ விழாவில் திருமண நிச்சயம் செய்துகொண்ட ஜோன்ஸ், எதிர்கால வெளியீடுகள் குறித்து அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்.

மற்றொரு வேற்றுக்கிரகவாசிகள் ஆர்வலரான எலைன் லோபரெனாவும் இந்த வெளியீடு தொடர்பாக எதிர்வினையாற்றியுள்ளார். 69 வயதான இவர், கலிஃபோர்னியாவில் உள்ள க்ளோவிஸில் வசிக்கிறார்.

வாழ்நாளின் பெரும்பகுதியை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான மர்மங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்வதிலேயே அவர் செலவிட்டுள்ளார். மே 8ஆம் தேதி காலை, அவர் தனது சமையலறையில் நின்று தனது டேப்லெட் சாதனத்தில் அந்த ஆவணங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கோப்புகளில் மிகவும் புதிதாக அல்லது அதிர்ச்சியூட்டக் கூடிய வகையிலான விஷயங்கள் எதையும் தான் கவனிக்கவில்லை என்கிறார் அவர்.

லோபரெனா சிறுவயதாக இருக்கும்போது, அவரது தாய் ஒரு வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலமான பறக்கும் தட்டு ஒன்றைப் பார்த்ததாகக் கூறியதில் இருந்து, அவர் இதுகுறித்த பதில்களைத் தேடி வருகிறார்.

பறக்கும் தட்டுகளைப் பற்றிய கதைகள் பரவலாக இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பறக்கும் தட்டுகளைப் பற்றிய கதைகள் பரவலாக இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன

புதிதாக எதுவும் இல்லை என்றாலும் அரசாங்கம் இந்தக் கோப்புகளைப் பொதுவெளியில் முடிவு செய்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்கிறார் அவர்.

"டிரம்ப் இதை அறிவிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். நான் இதை ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்," என்று கூறினார் அவர்.

மேலும் அவர், டொனால்ட் டிரம்ப் குறித்துப் பேசுகையில், "அவர் வரலாற்றில் இடம்பிடிக்க விரும்புகிறார். அவருக்கு தற்பெருமை உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், இந்தச் செயல்முறையைத் தொடங்கியுள்ளார்," என்று தெரிவித்தார்.

சமீப ஆண்டுகளில், வேற்றுக்கிரக விண்கலங்கள் (UFO) குறித்த பதில்களுக்கான தேவை, யு.எஃப்.ஓ ஆர்வலர் சமூகத்திற்குள் மிகவும் வலுவானதாகவும், வெளிப்படையானதாகவும் மாறியுள்ளதாக எலைன் லோபெரெனா தெரிவித்தார்.

அதோடு, பறக்கும் தட்டுகள் குறித்த விவாதங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஃபேஸ்புக் குழு ஒன்றின் நிர்வாகியாகப் பணியாற்றும் தான், இந்த மாற்றத்தை நேரடியாகக் கண்டிப்பதாக அவர் கூறினார்.

லோபெரெனாவின் கூற்றுப்படி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் அந்த ஃபேஸ்புக் குழுவில் இணைந்தபோது, அதில் ஏறக்குறைய 40,000 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாகக் கடந்த சில மாதங்களில், இந்த எண்ணிக்கை அதிகரிப்பு மிக விரைவாக நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பறக்கும் தட்டுகள் குறித்த தகவல்களை மறைப்பது கடினமாகி வருவதற்கான ஒரு காரணம், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் துறைசார்ந்த உள்விவரங்களை அறிந்தவர்களின் நேர்காணல்களும், கடந்த கால அறிக்கைகளும் இப்போது பொதுவெளியில் அதிகம் வெளியாகத் தொடங்கியிருப்பதே என்று லோபெரெனா விளக்கினார்.

பறக்கும் தட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

மேலும் அவர், "இப்போது விவரம் அறிந்தவர்களின், அதாவது ராணுவத்தில் பணியாற்றி, உண்மையை அறிந்திருந்தவர்களின், நேர்காணல்கள் வெளியாகின்றன. அவர்கள் தாங்கள் அறிந்தவற்றையும், நேரில் கண்டவற்றையும் பற்றிப் பேசுகின்றனர். அவ்வளவு ஏன், தங்கள் மரணப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர்கள் அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதுவே, இதில் தனித்துவமான, தகவல்களை மறைப்பதை மிகவும் கடினமாக்கும் அம்சம்" என்று கூறினார்.

அவரது கூற்றுப்படி, மேலும் பல தகவல்கள் மெல்லமெல்லப் பொதுவெளியில் வெளியாகத் தொடங்கியுள்ளன.

அதோடு, "தகவல்கள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதன் வேகம் மிகத் தீவிரமாக அதிகரிப்பதை நான் பார்க்கிறேன். இது ஒருபோதும் பின்னோக்கிச் செல்லாது, நிச்சயமாக முன்னோக்கி மட்டுமே செல்லும்," என்றார்.

"பனிப்பந்து உருண்டு பெரிதாவதைப் போல் இதுவும் பெரிதாகிக் கொண்டே செல்வதாக" கூறிய லோபெரெனா, இதன் மூலம், பறக்கும் தட்டுகள் குறித்த மக்களின் ஆர்வமும் விவாதங்களும் மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அவற்றை இனி தடுத்து நிறுத்துவது கடினம் என்றும் குறிப்பிட்டார்.

டெக்சாஸை சேர்ந்த டேனியல் ஜோன்ஸை போலவே, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்கள் ஒரு சிறிய தொடக்கமாக மட்டுமே இருக்கக்கூடும் என்றும், எதிர்காலத்தில் இன்னும் அதிகமான தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் லோபெரெனா நம்புகிறார்.

"இந்தத் தகவல்களை வெளியிடும் பணி முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார். அவரது கூற்றுப்படி, இதுவரை தகவல்கள் மிக மெதுவாகவும், மிகச் சிறிய அளவிலுமே வெளியிடப்பட்டு வந்தன. ஆனால், இந்த வாரத்தில் வெளியிடப்பட்ட தகவல்களை அவர் "ஒரு பெரிய அளவிலான வெளியீடு" என்று விவரித்தார். அதாவது, முன்னெப்போதையும்விட மிக அதிகமான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன என்பதை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டினார்.

பறக்கும் தட்டுகள் குறித்த முழுமையான உண்மை என்றாவது ஒரு நாள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுமானால், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் அது நிகழ வேண்டும் என்றும் லோபெரெனா தெரிவித்தார்.

"இது நிச்சயமாக இரு கட்சிகளின் ஆதரவுடன் நிகழ வேண்டும்," என்று கூறும் அவரைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் நிலவும் அரசியல் பிளவுகள் காரணமாக, அந்தத் தகவல்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திடம் இருந்து மட்டுமே வந்தால், அமெரிக்காவில் உள்ள பலரும் அவற்றை நம்பாமல் போகலாம்.

மக்கள் பறக்கும் தட்டுகளை நம்பினாலும் நம்பாவிட்டாலும், பறக்கும் தட்டுகளை ஆய்வு செய்பவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், புதிய ஆவணங்களின் வெளியீடு, மக்களிடையே பெரும் ஆர்வத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பறக்கும் தட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

எதிர்காலத்தில் மேலும் பல கோப்புகளை வெளியிடுவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி குறித்துத் தான் உற்சாகமாக இருப்பதாக ஜான் எரிக் ஈஜ் கூறினார்.

"பல முன்னாள் அமெரிக்க அதிபர்கள் இதுபோன்ற தகவல்களை முன்னரே வெளியிட விரும்பியிருக்கலாம். ஆனால் ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்வதில் இருந்து தடுக்கப்பட்டு இருக்கலாம் அல்லது ஊக்கமிழந்து இருக்கலாம்" என்று தான் நம்புவதாக ஈஜ் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் குறித்துப் பேசுகையில், இதுபோன்ற தகவல்களை வெளியிட்ட பிறகு வரக்கூடிய சாத்தியமான விமர்சனங்கள் அல்லது எதிர்ப்புகளைப் பற்றி டிரம்ப் "பயப்படவில்லை" அல்லது "கவலைப்படவில்லை" என்று தான் கருதுவதாக ஈஜ் கூறினார்.

அதேநேரத்தில், பறக்கும் தட்டு ஆர்வலர் சமூகத்தில் உள்ள சிலர் இன்னும் அரசு மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை.

பறக்கும் தட்டு ஆர்வலர்களிடையே கருத்து கேட்டால், சுமார் 20% பேர் இந்த வெளியீடு ஒரு "போலியானதாக" இருக்கலாம் அல்லது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சியாக இருக்கலாம் என்று நம்பக்கூடும் என்று ஈஜ் கூறினார்.

"முதலாவதாக அவர்கள் அரசாங்கத்தை நம்புவதாக நான் நினைக்கவில்லை" என்று அவர் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, வேற்றுக்கிரகவாசிகள் ஏற்கெனவே மனிதர்களிடையே ரகசியமாக வாழ்ந்து வருவதாகவும், அரசாங்கங்கள் வேற்றுக்கிரகவாசிகளுடன் ஒப்பந்தங்கள்கூட செய்திருக்கலாம் என்றும் சிலர் உறுதியாக நம்புகிறார்கள்.

இதற்கிடையில், பலர் வெள்ளிக்கிழமை இணையத்தில் புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளை உன்னிப்பாக ஆராய்ந்து விவாதித்தனர்.

ஒரு யு.எஃப்.ஓ விவாதக் குழுவில் நன்கு அறியப்பட்ட பங்றேக்பாளர் ஒருவர், வெளியிடப்பட்ட பல படங்கள் தெளிவற்றவையாகவும், அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வது கடினமாக இருந்ததாகவும் கூறினார்.

பறக்கும் தட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

"பல சந்தர்ப்பங்களில், வெளியிடப்பட்ட படங்கள் மிகவும் சுருக்கப்பட்டவையாக, கலை வேலைப்பாடுகள் நிறைந்தவையாக, அல்லது அளவு/சூழல் இல்லாதவையாக இருப்பதால், என்ன காட்டப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதுகூட கடினமாக உள்ளது," என்று அவர் எழுதினார்.

சில படங்கள் பறக்கும் தட்டுகளின் உண்மையான புகைப்படங்களாக இல்லாமல், நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படங்களாகத் தோன்றியதாகவும் அந்தப் பங்களிப்பாளர் கூறினார்.

மேலும் அவர், "அது வலுவான ஆதாரங்களை வெளியிடுவதற்குச் சமமானது இல்லை" என்றும் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, இந்த வெளியீடு "வெளிப்படுத்துவதைவிட ஒரு நாடகத்தைப் போலவே உணர்த்துகிறது." அதாவது, இது மறைக்கப்பட்ட உண்மைகளின் உண்மையான வெளிப்பாட்டைவிட ஒரு பொது நிகழ்ச்சியைப் போலவே தோன்றியதாக அவர் கூறினார்.

மறுபுறம், பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள்கூட சந்தேகம் எழுப்பும் சிலரைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இருக்காது என்று கூறுகிறார் லோபெரெனா.

பறக்கும் தட்டுகள் தொடர்பான கூற்றுகளை நம்ப மறுப்பவர்களைக் குறிப்பிட்டு, "எதிர்மறையாகப் பேசுபவர்கள் எப்போதும் இருக்கத்தான் போகிறார்கள்" என்றும், சிலருக்கு, "ஒரு வேற்றுக்கிரகவாசி தோன்றி, இரவு உணவு கேட்டால்தான் ஏற்றுக் கொள்வார்கள்" என்றும் லோபெரெனா நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இதன்மூலம், வேற்றுக்கிரகவாசிகளைத் தாங்களே நேரில் கண்டால் மட்டுமே, சிலர் அதை நம்புவார்கள் என்று தான் உணர்வதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், "முதலாவதாக, இந்த விஷயத்தை எந்த வகையிலும் புரிந்துகொள்ளவே முடியாத சிலர் இருக்கிறார்கள். இரண்டாவதாக, 'எனக்கு கூடுதல் ஆதாரம் தேவை' என்று கேட்கும் வேறு சிலரும் இருக்கிறார்கள்" என்றார்.

எதிர்காலத்தில், இன்னும் வலுவான மற்றும் தெளிவான ஆதாரங்கள் வெளியிடப்படக்கூடும் என்று லோபெரெனா உள்பட பறக்கும் தட்டு சமூகத்தைச் சேர்ந்த பலரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு