மத்திய கிழக்கை மாற்ற நினைத்த டிரம்ப், நெதன்யாகு இப்போது எதிர்கொள்ளும் அபாயம் என்ன?

டிரம்ப், நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜெரமி போவென்
    • பதவி, சர்வதேச ஆசிரியர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரான் மீதான வெற்றி மத்திய கிழக்கை மறுவடிவமைக்கும் என்று டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்பினர்.

அந்தப் பிராந்தியம் மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வழியில் இல்லை. இரானிய இஸ்லாமியக் குடியரசு தோற்கடிக்கப்படவில்லை. மாறாக, இடையிடையே வெளிப்படையான மோதல்களாக வெடிக்கும் நீண்டகால பதற்ற நிலை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாகு கருதியதை விட, இரானிய ஆட்சிமுறை உடைப்பதற்கு மிகவும் கடினமான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கணிப்பு தவறிவிட்டது, மேலும் அதன் விளைவுகள் மீதான கட்டுப்பாட்டை அவர்கள் இழந்துவிட்டனர்.

அவற்றில் மிகச் சமீபத்தியது, அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை இரான் சுட்டு வீழ்த்தியதாகும். இரானின் ஆட்சியாளர்களால் இன்னும் அமெரிக்கர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதையும், இந்தப் போரில் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதையும் அது காட்டுவதாகக் கருதப்படுகிறது.

இரானை பொறுத்தவரை, இந்தப் போரில் பிழைத்து தனது தடுப்பு ஆற்றலை வலுப்படுத்திக் கொள்வதே வெற்றியாகும். குறிப்பாக, உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை மீது தங்களது செல்வாக்கு அங்கீகரிக்கப்படுவதை இரான் முக்கியமாகக் கருதுகிறது.

அமெரிக்க அதிபர் மற்றும் அவரது தளபதிகள் இந்த ஹெலிகாப்டர் இழப்புக்கான தங்களின் பதிலை அளவோடு கொடுக்கவே முயற்சிப்பார்கள். தங்களை யாரும் எளிதாகப் பணிய வைக்க முடியாது என்பதை ஆணித்தரமாகக் காட்டுவதற்கும், அதே நேரத்தில் மந்தமாகவும் இதுவரை எந்தப் பலனும் தராமலும் இருக்கும் ராஜ்ஜிய செயல்முறையைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அவர்கள் முயல்வார்கள்.

அப்பாச்சி ஹெலிகாப்டரின் குழுவினர் உயிர் பிழைத்தனர். அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், இன்னும் கடுமையான பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு மற்றும் அதன் பரந்த அணுசக்தித் திட்டங்கள் போன்ற பெரிய பிரச்னைகள் குறித்து நீண்டகால பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் இரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் டிரம்ப் செயல்பட்டு வந்தார்.

ஆனால், இந்தப் போர் அமெரிக்காவில் பெரும் ஆதரவைப் பெறவில்லை. எனவே, வெற்றியாகக் காட்டக்கூடிய ஒரு தீர்வை அவர் நாடி வருகிறார். ஆனால் அதை அடைவது எதிர்பார்த்ததைவிட மிகவும் கடினமான சவாலாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் உலகின் மிக பரபரப்பான நீர்வழிகளில் ஒன்றாக இருந்த ஹோர்மூஸ் நீரிணை, பிப்ரவரி முதல் முற்றிலும் முடங்கியுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒரு காலத்தில் உலகின் மிக பரபரப்பான நீர்வழிகளில் ஒன்றாக இருந்த ஹோர்மூஸ் நீரிணை, பிப்ரவரி முதல் முற்றிலும் முடங்கியுள்ளது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஒரு பழைய பாடத்தைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

மனிதர்கள் எப்போது போர்க் கலையையும் அதன் சாபத்தையும் கண்டறிந்தார்களோ, அன்றிலிருந்தே ஒரு போரைத் தொடங்குவது எளிது, ஆனால் தெளிவான வெற்றியோடு அதை முடிப்பது கடினம் என்பதைத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் அவர்கள் தங்கள் நாடுகளை இரானுக்கு எதிரான போருக்கு வழிநடத்தியபோது, இருவருமே வீடியோ அறிக்கைகளை வெளியிட்டனர். ஒரு வரலாற்று மாற்றத்தின் தருணம் வரப்போகிறது என்ற அனுமானத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளையே அவர்கள் தேர்ந்தெடுத்தனர். 1979-இல் ஷா தூக்கியெறியப்பட்டதிலிருந்து இரானை ஆண்டு வந்த ஆட்சிமுறை முடிவுக்கு வரப்போகிறது என்று கருதப்பட்டது.

புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ விடுதியில், அதிகாலை வேளையில் டொனால்ட் டிரம்ப், ஜனவரியில் இரானிய ஆட்சி எதிர்ப்பாளர்களுக்கு தான் அளித்த "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்ற வாக்கை நினைவு கூர்ந்தார்.

"பெருமைமிக்க இரானின் சிறந்த மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், உங்கள் சுதந்திரத்தின் மணிநேரம் நெருங்கிவிட்டது. பாதுகாப்பாக இருங்கள். உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். வெளியே மிகவும் ஆபத்தானது. எல்லா இடங்களிலும் குண்டுகள் விழும். நாங்கள் முடித்ததும், உங்கள் அரசை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுடையதாக இருக்கும். இது அநேகமாக தலைமுறைகளுக்கான உங்கள் ஒரே வாய்ப்பாக இருக்கலாம்." என்று கூறியிருந்தார்.

அடுத்த நாள், டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து உரையாற்றிய நெதன்யாகுவும், வெற்றி உறுதி செய்யப்பட்டதுபோல் பேசினார்.

"படைகளின் இந்த கூட்டணி, நான் 40 ஆண்டுகளாக எதற்காக ஏங்கினேனோ அதைச் செய்ய நமக்கு அனுமதிக்கிறது. பயங்கரவாத அரசை அடித்து நொறுக்குவது. இதைத்தான் நான் உறுதியளித்தேன். இதையே நாம் செய்வோம்." என்று தெரிவித்தார்.

நெதன்யாகு தனது அரசியல் வாழ்க்கை முழுவதும், இஸ்ரேலுக்கு உண்மையான அச்சுறுத்தல் பாலத்தீனியர்களிடமிருந்தோ அல்லது அவரது நாட்டின் அரபு அண்டை நாடுகளிடமிருந்தோ வரவில்லை, இரானிடமிருந்தே வருகிறது என்று வாதிட்டு வந்துள்ளார்.

இரானைத் தாக்குவதில் தன்னுடன் இணையுமாறு பிற அமெரிக்க அதிபர்களைப் பெற அவர் முயன்று தோற்றார். டொனால்ட் டிரம்ப் வித்தியாசமானவராக இருந்தார்.

2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேலின் ராணுவ வலிமை அதன் எதிரிகளைத் தோற்கடித்து, நாட்டுக்கு பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று இஸ்ரேலியர்களிடம் தொடர்ந்து கூறி வந்தார்.

அவரைப் பொறுத்தவரை, பிராந்திய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ராஜ்ஜியத்தை விட ராணுவ வலிமையே பதிலாக இருந்தது

நெதன்யாகு தன் தருணம் வந்துவிட்டது என்ற தோரணையில் இருந்தார்.

ஆனால், பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் தனது திட்டங்களை கைவிடுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்தபோது, அவர் உற்சாகம் இழந்தவரைப் போல் தோன்றியதாக இஸ்ரேலின் முன்னணி பத்திரிகை கட்டுரையாளரான பென் காஸ்பிட் கூறினார்.

நெதன்யாகுவின் கடுமையான விமர்சகர்களில் ஒருவரான பென் காஸ்பிட், அப்போது அவர் "காற்று வெளியேறிய பலூன் போல" தோன்றியதாக கூறியுள்ளார்.

அதேவேளையில், ராணுவ வலிமையைப் பயன்படுத்தி மத்திய கிழக்குப் பிராந்தியத்தை தனது விருப்பப்படி மாற்றியமைக்க முயன்ற நெதன்யாகுவின் உத்தி தோல்வியடைந்துள்ளது என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய கிழக்கை மாற்ற நினைத்த டிரம்ப், நெதன்யாகு கற்ற 'பழைய' பாடம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் எதிர்பார்த்தது என்ன?

டொனால்ட் டிரம்ப் விரைவான வெற்றியை எதிர்பார்த்தார். அமெரிக்க ராணுவம் வெனிசுவேலா அதிபரையும் அவரது மனைவியையும் சிறைபிடித்து, நியூயார்க்கில் உள்ள ஒரு சிறைக்கு அனுப்பி, கராகஸில் தங்களுக்கு இணக்கமான ஒரு தலைமையை நியமித்ததை அவர் மகிழ்ச்சியோடு பார்த்திருந்தார்.

இது பாடப்புத்தகத்தில் உள்ளதைப் போன்ற ஒரு சிறந்த ஆட்சி மாற்றம் என்று அவர் நம்பினார், இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அவரது முன்னோடிகள் நடத்திய முடிவற்ற போர்களை விட இது மிகவும் சிறந்தது என்று கருதினார். அடுத்ததாக இரான் அந்தப் பட்டியலில் இருந்தது.

எங்கு தவறு நடந்தது என்று இருவருமே யோசித்துக்கொண்டிருக்க வேண்டும். அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மத்திய கிழக்கின் வல்லரசு.

டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோர் தடைகள், நிர்வாகத் தவறுகள் மற்றும் ஊழலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தள்ளாடிக்கொண்டிருந்த இரான் ஆட்சியைப் பார்த்தனர்.

காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆகிய அதன் கூட்டாளிகளுக்கு இஸ்ரேல் பலத்த அடிகளைக் கொடுத்திருந்தது. அதன் மற்றொரு முக்கிய கூட்டாளியான பஷார் அல் அசாத் சிரியாவின் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மாஸ்கோவிற்கு தப்பியோடினார்.

ஜனவரியில், ஆயிரக்கணக்கான இரானிய குடிமக்களைக் கொன்றதன் மூலம் தனக்கு எதிரான பெரும் ஆர்ப்பாட்டங்களை இரான் ஆட்சி நசுக்கியது.

இஸ்லாமிய ஆட்சியின் மீள்தன்மை, இரக்கமற்ற தன்மை மற்றும் தந்திரத்தை அவர்கள் குறைத்து மதிப்பிட்டனர். அதன் உச்ச தலைவரையும் அவரது நெருங்கிய தளபதிகளையும் கொல்வது அந்த ஆட்சி உள்ளிருந்தே வீழ்வதற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட, ஒரு தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைக்கும் வகையில் தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்ட மற்றும் அதன் மத மற்றும் கருத்தியல் நம்பிக்கைகளால் ஆதரிக்கப்படும் தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை ஆழமாக வைத்திருந்த ஆட்சிக்கு எதிராக, ராணுவ பலத்தின் செயல்திறனை அவர்கள் மிகையாக மதிப்பிட்டனர்.

அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருக்கும் வளைகுடா நாடுகளும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் போன்ற இஸ்ரேலின் கூட்டாளிகளும் பலத்த அடிகளைச் சந்தித்துள்ளனர்.

இவற்றின் பாதிப்பு பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உரங்கள் போன்ற துணைப் பொருட்களின் வருவாய் இழப்புடன் மட்டுப்படவில்லை. பல பில்லியன் டாலர் முதலீடுகளையும், சுற்றுலாவையும் ஈர்க்கும் வகையில் நிலையான மற்றும் பாதுகாப்பான பிராந்தியமாக வளைகுடா பகுதியை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் ஈடுபட்டிருந்தன. ஆனால், தற்போதைய போர் அந்தக் கனவை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தியமான முதலீட்டாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் போர் அந்தத் தொலைநோக்குப் பார்வையை ஒரு கானல் நீராக மாற்றுவதைக் காண்கிறார்கள்.

மத்திய கிழக்கை மாற்ற நினைத்த டிரம்ப், நெதன்யாகு கற்ற 'பழைய' பாடம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இரான் நம்புவது என்ன?

இரானிய ஆட்சி ஹோர்மூஸ் நீரிணையை மூடி, தனது வளைகுடா அரபு அண்டை நாடுகளைத் தாக்கியதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை எவ்வளவு எளிதாகக் முடக்கியது என்பதையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான நீண்ட கால தடுப்புத்திறனாக மாற்ற முடியும் என்று நம்புகிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட பழைய தலைமுறையினருக்குப் பதிலாக வந்துள்ள இரானியத் தலைவர்கள், தங்களின் முன்னோடிகளைப் போலவே கருத்தியல் ரீதியானவர்கள், ஆனால் ஒரு இருப்புக்கான போராட்டத்தில் ஆபத்துக்களை எதிர்கொள்ள இன்னும் தயாராக இருக்கிறார்கள். அமெரிக்கா அல்லது இஸ்ரேலிடமிருந்து எதிர்காலத்தில் வரும் தாக்குதல்களை வார்த்தைகள் மட்டும் தடுத்து நிறுத்தாது என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்குப் பதிலாக, இரான் மீதான கூடுதல் தாக்குதல்கள் வலிமிகுந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் நிரூபிக்க விரும்புகிறார்கள்.

அவர்களின் உத்தியின் ஒரு முக்கிய பகுதி லெபனான் போரை வளைகுடா போருடன் இணைப்பதாகும். 1980-களிலிருந்து இஸ்ரேலுக்கு எதிரான தனது முன்னணி பாதுகாப்பு அமைப்பாக வளர்த்துவரும் ஹெஸ்பொலா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், எந்தவிதமான ஒப்பந்தத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பதே டிரம்புக்கு இரான் அனுப்பும் செய்தியாகும்.

லெபனான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்தை டிரம்ப் தடுக்க முயன்றதன் மூலம், லெபனானில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் வளைகுடா பிராந்தியத்தின் நிலைமைக்கும் இடையே தொடர்பு இருப்பதை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால், இந்த இணைப்பை தாம் ஏற்கப் போவதில்லை என்று நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். அதை அவர் "சகித்துக்கொள்ள முடியாதது, முற்றிலும் ஏற்க முடியாதது" என்று வர்ணித்தார்.

இரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி வீழ்ந்ததாக அறிவிக்கும் வரை போரைத் தொடர வேண்டும் என்ற நெதன்யாகுவின் நிலைப்பாடு முரணாக போருக்கு முடிவு காண வேண்டும் என்ற டிரம்பின் விருப்பம் உள்ளது என்பதுதான் அவரது பிரச்னை.

பெய்ரூட் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதலை நெதன்யாகு ரத்து செய்தபோதிலும், அதன் பின்னரும் இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் பகுதிகளில் தீவிர தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

மார்ச் மாதத்தில் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டபோது, அது ஜூன் மாதத்திலும் திறக்கப்படாமல் இருந்தால் உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரித்திருந்தனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானைத் தாக்கும் வரை திறந்திருந்த இந்த முக்கிய நீர்வழிப்பாதை இன்னும் மூடப்பட்டே இருக்கிறது. குறிப்பிடத்தக்க ராஜ்ஜிய முன்னேற்றங்கள் ஏதும் இல்லாமல், இது விரைவில் மீண்டும் திறக்கப்படுவதைக் காண்பது கடினம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு