"உடலை தோண்டி எடுத்துவிட்டு புதைக்கும் சூழல்" - மயான நிலம் ஆக்கிரமிப்பு என தலித் மக்கள் புகார்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட சிக்கலாம்பாளையம், அண்ணாநகர் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதிகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானம், கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கிணத்துக்கடவு மேம்பாலத்துக்கு இடதுபுறத்தில் அமைந்துள்ளது.
மொத்தம் 84 சென்ட் இடம் ஹரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என்று, வருவாய்த்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான மயானத்தை 10 சென்ட் இடமாகக் குறுக்கி, சாலையை விரிவாக்கம் செய்து, பிற பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பதாக அருந்ததியர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் புதைத்த இடத்திலேயே மீண்டும் உடல்களைப் புதைக்க வேண்டியிருப்பதாகவும் தங்களுடைய மயான இடத்தை முழுமையாக மீட்டு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென்றும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கிணத்துக்கடவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



